ஒரு நாளில் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருகின்றது. நன்மை தரும் நேரங்களைத் தெரிந்து கொண்டு, அந்த வேளைகளில் சுபசெயல்களைச் செய்தால் வெற்றி கிட்டும். தீமை செய்யும் நேரங்களைத் தெரிந்து கொண்டால், அந்த வேளைகளில் சுப செயல்கள் செய்வதைத் தவிர்த்து விடலாம். நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் அட்டவணையேக் கௌரிப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப்பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். அதில் பகலில் 8 முகூர்த்தமும், இரவில் 8 முகூர்த்தங்களும் அடங்கும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது. இனி ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று மேலிருக்கும் படத்திலுள்ள அட்டவணையில் நீங்கள் பார்க்கலாம். இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்த்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்த்தங்களாகும்.
இலாபம்
இந்தச் சுபமுகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுபச்செயல்கள், முக்கியச் செயல்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். எல்லாம் இலாபகரமாக முடியும்.
அமிர்தம்
இந்தச் சுபமுகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுபச்செயல்கள், முக்கியச் செயல்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.
சுகம்
இந்தச் சுபமுகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுபச்செயல்கள், முக்கியச் செயல்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.
தனம்
இந்தச் சுபமுகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் கிட்டும்.
உத்தியோகம்
இந்தச் சுபமுகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் தொடர்புடைய செயல்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு தொடர்பான முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.
விஷம்
இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்தச் செயலைத் தொடங்கினாலும் தோல்விதான் கிட்டும். தேவையற்ற செயல்களும், விரோதங்களும் ஏற்படும்.
சோரம்
இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்தச் செயலைச் செய்தாலும், ஏதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.
ரோகம்
இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்தச் சுபச்செயலையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.
இந்த கெளரி நல்ல நேரத்தோடு, ஓரையும் அறிந்து செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம்.