நாட்டில் பஞ்சம் வரப்போவது குறித்து, ஜோதிட நூல்கள் மூலம் அறிந்திட முடியும். பஞ்சம் வருவதற்கான சில ஜோதிடக் குறிப்புகள் இவை.
ஆனி, ஆடி, ஆவணி - கிழக்கு வில்
ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஓர் மாதத்திற்குக் கிழக்குத் திசையில் இந்திர தனுசு உண்டானால் உலகில் மிக்கப் பஞ்சமாம். ஆடி மாதம் பதினைந்தாம் தேதி பதினைந்து நாழிகைக்குள் சூரியனை மேகமானது மறைக்குமாகில் (அவனியில்) உலகினில் அதிக நன்மைகள் உண்டாகும்.
“அதுவுந் தண்டு நண்டுசிம்ம மான மதியிற் குணதிசையிற்
சதுரா மிந்திர தனுசுமுறத் தானே பஞ்ச முண்டாகும்
விதுவின் கடக மதிபாதி மேவுங் கடிகை மூவைந்திற்
பதுமத் திறைவன் றனைமேகம் பாங்காய் மறைக்கி லுத்தமமே” (மழை, செ.எ.111, ப.38.)
என்று மேற்காணும் பாடல் குறிப்பிடுகின்றது.
துர்விடய இலட்சணம்
இடபம், சிங்கம் விருட்சிகம், மீனம், தனுசு, சனியாதல், செவ்வாயாதல் வக்கரிக்கில் அரசர்களுக்குக் கேடு. அல்லாத இடங்களில் வக்கரிக்கில் நாட்டுக்குக் கேடு. வௌ்ளிக்கு ஏழாம் இடத்தில், வியாழன் நிற்கின் சம சத்தயோகம் என்று பெயர். வௌ்ளி தெற்கேப் போதல், புதன் வடக்கேப் போதல், இவர்களுக்கு இடையே சூரியன் நிற்க மத்திமம். இவர்களுக்கு முன்னே சனி, செவ்வாய் நிற்க பஞ்சம் என்று குறிப்பிடுகிறது.
“ மனுவோர் அரிதேள் கயல்தனுவில் மந்தன் செவ்வாய் வக்கரிக்கில்
வினையே பெருகும் வேந்தர்க்கு வௌ்ளிக் கேழில் பொன்மேவில்
துனியாம் சுங்கன் படிநடத்தல் புகர்மால் கிடையே கதிர்நிற்கில்
சனிசேர் கதிக்கு முன்சனிசேய் நடத்தல் பஞ்சம் நாடெல்லாம்” (சூரிய உதயம், செ.எ.264)
எனும் செய்யுள் மெய்ப்பிக்கின்றது.
பரிவேடல்
சனியைப் பரிவேடமிடல், சூரியனுக்குச் சமீபமாகப் பரிவேடம் தோன்றல், பரிவேட நிறங்களின் தன்மைகள் சனியைப் பரிவேடமிடல், சனியைப் பரிவேடங் கவிக்கில் வேந்தர் தமது நாட்டை விட்டு விலகி நிற்பார். சூரியனுக்குச் சமீபமாகப் பரிவேடம் தோன்றினால் மனிதர்கள் துன்புறுவார்கள்.
“ஆகா மந்தன் றனைக்கவிக்கி லரசர் பதியை விட்டிடுவர்
வாகாமிரவிக் கடுத்திருக்கில் மாந்தர்க் கதிகவிபத் துண்டாம்
பாகாம் புகையைப் போலிருக்கிற் பலவாம் பொருளுஞ் சேதமுறும்
போகாக் கறுப்பு வருணமெனிற் புவியிற் பஞ்ச முற்றிடுமே” (மழை, செ.எண்.30, ப.11.)
என்ற செய்யுள் குறிப்பிடுகின்றது.
புரட்டாசி ஆண்டு
வியாழன் மீனராசியில் இருக்கும் காலத்தின் போது புரட்டாசி என்னும் ஆண்டு. அவ்வாண்டில் மிகுதியான மழை பெய்யாமல் தானியங்கள் ஒன்றும் விளையாது. குதிரை, யானை, மாடு, கன்றுகள் முதலிய நாற்கால் சீவன்களும், மனிதர்களும் அவ்வருடத்தில் ஏற்படும் கொடிய பஞ்சத்தினால் பசிப்பிணியை மாற்றிக் கொள்ளும் வழியின்றி துன்பப்படும் படியான நிலைமை உண்டாகும்.
“சேலதிற் குருவும் நிற்கத் தெரிவையாண்ட வ்வாண்டத்திற்
சாலவுந் தாரை யின்றித் தானிய விளைவு குன்றிச்
சீலமாங் குதிரை யானை செப்பிடுங் கன்று காலி
காலத்தின் கொடுமை தன்னாற் கடும்ப மிகவுண் டாமே” (மழை, செ.எ.181, ப. 64.)
என்ற செய்யுள் குறிப்பிடுகின்றது.
மாறிச் செல்லும் கோள்கள்
சூரியனுக்குப் புதனானவன், முன் போகிற காலத்தில் பின்னும், பின் போகிற காலத்தில் முன்னும், சேர்ந்து போகிற காலத்தில் பிரிந்தும், ஏட்டிக்குப் போட்டியாகச் செல்வான் ஆனாலும், இவ்விதம் மாறுபட்டு செல்லும் காலத்தில் சூரியனுடன் சுக்கிரன் கூடுவானாகில் அதுவே கொடிய பஞ்சத்தைக் காட்டும் கருவியாகும்.
“படியின் மேதை குடமாதி பகர்நா லிரவி தனக்குமுன்
நெடிய தண்டு முதல்நான்கும் நெருங்கிச் சண்டன் பின்செல்வன்
கடியதுாக்கு முதல்நான்குங் கதிரைச் சேர்ந்து நடந்திடுவன்
கொடிதா மாறிற் கதிர்புகருந் கூடிற் பஞ்சக் குறியாமே” (மழை, செ.எ.186, ப.65.)
என்ற பாடல் குறிப்பிடுகின்றது.
சூரியனுக்கு முன் சில கோள்கள் செல்லல்
சூரியனுக்கு முன்னும், பின்னும் சுக்கிரன் மற்றும் புதன் சென்றாலும், சூரியனுக்கு முன்பு சனி மற்றும் செவ்வாய் சென்றாலும், மழை பெய்யாமல், பயிர்கள் ஒன்றும் விளையாமல், உண்ணும் உணவுக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் துன்பப்படுவார்கள்.
“கதிரவன் றனக்கு முன்பின் கவிபுதன் றானுஞ் செல்லத்
ததியினி லிரவி முன்னஞ் சனிசெவ்வாய் நடப்பா ராகில்
மதித்திடு முதக மின்றி மாபயிர் விளைவு குன்றி
கதித்திடு மாந்தர் பஞ்சக் கலக்கமுற் றிடுவ ரென்னே” (மழை, செ.எ.193, ப.68.)
என்ற பாடல் குறிப்பிடுகின்றது.
சனிக்கு 3-11-ல் குரு, சுக்கிரன் நிற்றல்
சனிக்கு மூன்று அல்லது பதினோறாமிடத்தில் குருவும், சுக்கிரனும் இருப்பார்கள். அப்படியிருந்தால் அரசர்களுக்கும், மக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் (பீடை) துன்பமும், உணவுப் பொருள் பற்றாக்குறையிலான துன்பமும் உண்டாகும்.
“நோய்முகன் றனக்கு மூன்று நுவலும்பன் னொன்றிற் றானும்
வாய்மைசேர் குருவுஞ் சுங்கன் வந்திட வரச ருக்கும்
தூய்மையா மாந்த ருக்குந் துன்பமாங் காலி கட்குந்
தோய்ந்திடும் பீடை யன்றிச் சொல்லிடும் பஞ்ச மென்றே” (மழை, செ.எ.194, ப.68.)
என்ற பாடல் குறிப்பிடுகின்றது.