நாட்காட்டி மற்றும் பஞ்சாங்களில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு திசையில் சூலம் எனப் போட்டிருக்கும். இதற்கு வார சூலை என்ற பெயரும் உண்டு.
ஒரு செயலுக்காக, வெளியில் செல்வது என்றால், அன்று நாம் செல்லும் திசையில் சூலம் உள்ளதா? என்பதைப் பார்த்துச் செயல்படும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
இதற்கான அடிப்படை காரணம் என்னவெனில், இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வு கொடுக்க, ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார். அப்போது, நாம் அதை எதிர் கொண்டு போகக் கூடாது எனபதால் தான் வார (தினம்) சூலம் வார சூலை உருவானது.
வார நாட்களில் சூலமானது,
1. ஞாயிறு - மேற்கு, வடமேற்கு (12 நாழிகை)
2. திங்கள் - கிழக்கு, தென்மேற்கு (8 நாழிகை)
3. செவ்வாய் - வடக்கு, வடமேற்கு (12 நாழிகை)
4. புதன் - வடக்கு, வடகிழக்கு (16 நாழிகை)
5. வியாழன் - தெற்கு, தென்கிழக்கு (20 நாழிகை)
6. வெள்ளி - மேற்கு, தென்மேற்கு (12 நாழிகை)
7. சனி - கிழக்கு, தென்கிழக்கு (8 நாழிகை)
என்ற திசையில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்ட நாழிகை அளவில் இருக்கும்.
சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை நேரம் தான் பூமி மீது வைப்பார். இரண்டு மணி நேரம் மட்டுமே காலையில் வார சூலை கணக்கிடவும், பின் 2 மணி நேரத்திற்கு மேல் மேற்கொண்டு அந்தத் திசையில் பயணிக்கலாம் என்பதேப் பொருள் ஆகும் என்று சிலர் சொல்கின்றனர்.
சிலர் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்ட நாழிகையைக் கொண்டு கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கின்றனர். அதாவது,
60 நாடிகள் (நாடித் துடிப்பு) சேர்ந்தது ஒரு நாழிகை. 1 நாழிகை என்பது 24 நிமிடங்களுக்கு சமம். இரண்டரைநாழிகை என்பது ஒரு மணியாகும். இக்கணக்கின்படி,
8 நாழிகை என்பது 8 x 24 = 192 நிமிடங்கள் (192/60 = 3 மணி நேரம் 12 நிமிடங்கள்)
12 நாழிகை என்பது 12 x 24 = 248 நிமிடங்கள் (248/60 = 4 மணி நேரம் எட்டு நிமிடங்கள்)
16 நாழிகை என்பது 16 x 24 = 384 நிமிடங்கள் (384/60 = 6 மணி நேரம் 24 நிமிடங்கள்)
20 நாழிகை என்பது 20 x 24 = 480 நிமிடங்கள் (480/60 = 8 மணி நேரம்)
சூரிய உதயமாகும் நேரத்திலிருந்து கணக்கிட்டுக் கொண்டு, அக்கால அளவு கடந்த பின்பு செல்லலாம்.
அப்படி அந்தத் திசை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியமேற்படின், ஒவ்வொரு கிழமைக்கும் பரிகாரமான பொருளைச் சாப்பிட்டுச் செல்லலாம் என்றும் கூறுகின்றனர். அவை;
1. ஞாயிறு - வெல்லம்
2. திங்கள் - தயிர்
3. செவ்வாய் பால்
4. புதன் - பால்
5. வியாழன் - தைலம்
6. வெள்ளி - வெல்லம்
7. சனி - தயிர்