பித்ரு பட்சம் என்பதைத் தமிழில் "முன்னோர்களின் பதினாறு நாட்கள்" எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று தொடங்கி, அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது) வரை கடைப்பிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த 16 சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில், இந்து சமயத்தினர் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு சடங்குகள் நிகழ்த்தப்படுவதால் மற்றப் பணிகளுக்கு நல்ல நாட்களாகக் கருதப்படுவதில்லை. இந்நாட்களில் மங்கல நிகழ்வுகளான திருமணம் போன்றவைக் கொண்டாடப்படுவதில்லை. மேலும், புதிய வணிக முயற்சிகளைத் தொடங்குதல், வீடு, வாகனங்கள் வாங்குதல் போன்றவையும் தவிர்க்கப்படுகின்றன.