சந்திராஷ்டமம்
சந்திரன் + அஷ்டமம் (எட்டு) = சந்திராஷ்டமம்
பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும். சந்திரன் பூமியை 27.322 நாட்களில் வலம் வரும் சுழற்சிக் காலத்தில் 12 இராசி மண்டலங்களையும் கடக்கும். சந்திரன் சஞ்சரிக்கும் மண்டலத்தில் இருந்து பின்புறத்தில் எட்டாம் இராசி மண்டலத்தில் பிறந்தவர்களுக்குத் தொல்லை தரும் காலமாகும்.
சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் பிறந்த இராசியான “ஜென்ம ராசிக்கு”எட்டாம் இராசி (210 பாகைமுதல் 240 பாகைகோணஅளவு) மண்டலத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமான இரண்டே கால் நாட்களாகும். இங்கே கோசார சந்திரனை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.
இராசிக் கட்டத்தில் உள்ள சந்திரநிலை
ஒரு இராசி என்றால் 30 பாகை கோணஅளவு, 2 ¼ நட்சத்திரங்கள், 9 பாதங்கள்உள்ளடக்கிய மண்டலமாகும்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
ஒருவரின் ஜன்ம நட்சத்திரத்திற்கு 17ம் நட்சத்திர (213 20 முதல் 226 40 வரை) காலம் சந்திராஷ்டம உச்ச காலமாகும்.
1. இராசிக்கு எட்டாம் இடம் ஒருவரின் பிறந்த இராசிக்கு எட்டாம் இராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இந்தமுறை தான் நாள்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் இடம்பெறுகிறது. இதை மிக எளிதாகக் கணக்கிட முடியும்.
2. ஜன்மசந்திரபாகை - பிறந்த காலத்தில் சந்திரன் நின்ற பாகையைத் துவக்கப் புள்ளியாக வைத்து 210 முதல் 40 வரை சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இது மிகச் சரியான மற்றும் துல்லியமானதாகும். ஆயினும் 360 பாகைக்குத் தனித்தனியாக அச்சிடவும் முடியாது என்பது இந்தமுறையின் பின்னடைவாகும்.
மிக முக்கியமுடிவுகள், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்திட தினம் குறிக்க “இரண்டாம்முறை”யில்மட்டுமே ஜோதிடர்களின் துணைக் கொண்டு கணக்கிட வேண்டும். இதுவே சரியான முறையாகும்.
சந்திரனின் காரகத்துவம்
வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு அதிகப் பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமாரசாமியம் (கோசாரபடலம்), கோசாரதீபிகை, உத்திரகாலமிருதம் மற்றும் பலசோதிஷ மூலக் கிரந்த நூல்கள்கூறுகின்றன.
மறைவு ஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாகக் கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த தகராறுகள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிகக் கவனம் தேவை.
தீர்வுகள்
இக்காலத்தில் அமைதியை நாடிப் பொறுமையுடன் இருக்க வேண்டும். மன அமைதிக்குச் சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று.
மனதை ஒருமுகப்படுத்தும் யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளைக் கடைப் பிடித்து“இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிக முக்கியப் பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிர்க்கலாம்.
தானம்
இக்காலத்தில் ந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யலாம். வெண்ணிற ஆடையை சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களுக்குத் தரலாம்.
- ஆர். எஸ். பாலகுமார்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.