ஒருவர் பிறந்த நட்சத்திரம், ராசி போல அவர்கள் பிறந்த நேரத்தின் இலக்கினத்திற்கும் பலன்கள் உண்டு. இங்கு பன்னிரண்டு வகையான இலக்கினங்களுக்கும் தனித்தனியாகப் பலன்கள் தரப்பட்டுள்ளன.
மேஷம்
இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். அது, தீயைப்போல உக்ரமானது. இந்த இலக்கினத்தில் பிறந்தவருக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு தோல் நோய்கள் இருக்கக் கூடும். காதல் விவகாரங்களில் சிறிது கூட ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக இருக்கக் கூடியவர். நல்ல சுபாவமும், வலிமையும் படைத்தவர். பிறருடன் சண்டை பிடிப்பவர், நாசூக்கு அற்றவர், அவசரப்படக் கூடியவர், கோபக்காரர், செவ்வாயினால் ஆளப்படுபவர் என்று சொல்லலாம். மகிழ்ச்சியுடனிருந்தாலும் மன உணர்ச்சி வெறி கொண்டவரல்ல, காமவெறி உடையவரல்ல. நீங்கள் கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக் கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்ட இவர்கள், துணிவு மிக்கவர். உள்ளத்து உணர்ச்சிகளின் திடீர் உந்தலில் செயல்படுபவர். உயரிய விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் இருக்கும். எப்போதும் மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர். மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்கு மிகவும் ஏற்றவர். தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக் கூடியவர். கர்வமானவர், சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்கியத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, குறைத்து மதிப்பிடுபவர். இது உக்ரமான ராசியாதலால், எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவராக இருப்பர். இதற்குச் செவ்வாயின் ஆதிக்கம் இருப்பதால், அவ்வப்போது சிறிய காயங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷபம், நிலம் சார்ந்த நிலையான இரண்டாவது ராசியாகும். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே நல்ல சிவந்த மேனியும், பெரிய மூக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கரிய கண்களும், தலைமுடியும் இருக்கும். சுருட்டை முடி இருக்கலாம். கோபக்காரராக இருப்பதுடன் தீய குணமுடையவராகவும் இருப்பர். வாழ்க்கையில், சுகபோகங்களை அடைவதற்கு விருப்பம் கொண்டவர். மதுபானத்தில் மிகுந்த விருப்பமுடையவர். எதிர்பாலைச் சேர்ந்தவர்களின் நட்பை விரும்புபவர்கள், தாங்களாகவே ரசித்து, அனுபவித்து இன்பம் காணக்கூடியவர். மிகவும் மோசமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் மிகவும் பொறுமையாக இருப்பவர். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக இருக்கக் கூடியவர். நேர்மையான சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்கள் இவர்களின் கருத்துக்களைச் சார்ந்திருக்கிறார்கள். ராஜ தந்திரம் படைத்தவர், இவர்களின் மனதைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. தோட்டங்கள், மனைகள் போன்ற பல வசதிகளையும் அனுபவிப்பார்கள். கலையில் ஆர்வம் கொண்ட இவர்கள், கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றியைக் காண்பார்கள். மென்மையான சருமம் இருக்கும். அழகையும் ஆடம்பரத்தையும் விரும்பும் இவர்கள் இல்லத்தில் ஆசை கொண்டவர். குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். மனைவி / கணவர் - உயரிய பணியில் இருக்கக்கூடும். பதட்டப்படாமல், மென்மையாக பேசக்கூடியவர். இவர்கள் சுபாவத்தில், பெண்மை குடி கொண்டிருக்கும். இளகிய, கருணை நெஞ்சம் படைத்த இவர்கள், நல்ல மனிதர்களுடன் தொடர்புடையவர். இவர்களுக்கு நீண்ட பற்கள் இருக்கும். சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள். ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண்ட இவர்கள் அமைதியை விரும்புகிறவர். சமுக மற்றும் குடும்ப ரீதியிலான கடமைப் பொறுப்புக்களை, எப்போதும் நிறைவேற்றி வைத்திட முயலுவார்கள். காதல் விவகாரங்களில், எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்வார்கள். குடும்ப ரீதியில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிக்கும் இவர்கள், எப்போதுமே குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் மிக்க ஆர்வம் கொண்டவர். நல்ல ஆடைகளை விரும்பும் இவர்கள் வாழ்க்கையில், பல சுகபோகங்களையும் ரசித்து அனுபவிக்கக் கூடியவர். 36 வயதில், இவர்களுக்கு சில தொல்லைகளும் பிரச்னைகளும் ஏற்படலாம்.
மிதுனம்
ராசி மண்டலத்தில் முன்றாவது ராசி. எனவே, கோதுமை நிறத்தை ஒத்த மாநிறமாக இருப்பார்கள். எப்போதும் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்கும் இவர்கள் கலைகளிலும் பாடல்களிலும் அதிக ஆசை, உடல் இன்பங்கள் (சிற்றின்பங்கள்) காண்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். நல்ல காம உணர்ச்சி கொண்டவர். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராக இருப்பார்கள். சூது நிறைந்தவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய இவர்கள், கவிதையுள்ளம் கொண்டவர். பல சமயத் தலங்களுக்கும் பயணம் செல்லும் இவர்கள், விஞ்ஞான ரீதியில் எதையும் அணுகும் மனப்போக்குடையவர். வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில், இவர்களுக்குச் சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 32, 35 ஆம் வயதிலிருந்து அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் பிரவேசிப்பார்கள். பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்ட இவர்கள், புகழை எட்டிவிடத் துடிப்பார்கள். ஓயாமல் ஏங்குவார்கள். இவர்களுக்கு நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும். நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர்களாகவும், அரசு மற்றும் சமுதாயத்திடமிருந்து, நல்ல மதிப்பும், மரியாதையும் புகழும் இவர்களுக்குக் கிடைக்கும். கலைகள் மற்றும் விஞ்ஞான அறிவைப் பெற்று விளங்குவார்கள். இவர்கள், ஜலதோஷம், இன்ப்ளூயன்சா காய்ச்சல், மார்புச்சளி போன்ற நோய்கள் பீடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். முலநோய், காய்ச்சல், போன்றவற்றால் இவர்கள் அவ்வப்போது பாதிக்கப்படலாம். வாழ்க்கையில், பெருமளவிலான மாற்றங்களை உணருவார்கள், இவர்களுக்குக் குடும்பத் தொல்லைகள் இருக்கலாம். சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் படைத்த இவர்கள், எதையும் கற்பதில் விருப்பம் கொண்டவர். ஒரே சமயத்தில் பலதரப்பட்ட வேலைகளையும் மேற்க்கொண்டு விடுவதுதான் இவர்களிடமிருக்கும் குறைபாடு. நன்கு உறங்கினால், நல்ல உடல் ஆரோக்கியத்தை இவர்களால் பராமரிக்க முடியும். எதிலுமே குறுக்கு வழி, அதிலும் சுருக்கு வழியை விரும்புவார்கள், இது இவர்களின் ஒரு விநோதமான மனப்போக்கு. மிகவும் திறமை வாய்ந்த இவர்கள் பல்வேறு வழிகளையும் கடைபிடிப்பதன் முலம், பல திட்டங்களை மிகவும் விரைவாக நிறைவேற்ற முடியும். நல்ல சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் இவர்களிடமிருக்கும்.
கடகம்
ராசி மண்டலத்தில் நீர் சார்ந்த நான்காவது ராசி. ராஜ தந்திரத்துடன் செயல்படக்கூடியவர். இவர்களுக்கு உடல் அமைப்பின் மேல்பகுதி பெரியதாக இருக்கும். எதிர்பாலைச் சேர்ந்தவர்களை விரும்புபவர், செல்வ வளத்தை அனுபவிப்பவர். தண்ணீரில் விருப்பம் கொண்டவர். நண்பர்களின் எதிர்ப்பு இருந்து வரும். மிதமான ஒரு உடல்வாகுடைய இவர்கள், சாம்பல் நிறத்தவராய், பழுப்பு நிற முகமும், லேசான மற்றும் பழுப்பு நிற முடியும் கொண்டவராக இருப்பர். சற்று பலவீனமான உடல் அமைப்புடன் இருப்பதுடன், கண்களின் நிறம், வழக்கத்துக்கு சற்று மாறுபட்டதாய் இருக்கும். சில நேரங்களில், கோழையாகவும், பயந்தாங்கொள்ளியாகவும், மந்தமாகவும், கவனமற்றும் இருப்பர். வாழ்க்கையில், சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். செல்வ வளத்தையும் சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். மிகுந்த புத்திசாலி, விவேகி. கலையிலும் இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். மற்றவர்களின் சுபாவத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அவர்களின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தி உண்டு. உணர்ச்சி மனோபாவம் அதிகமாக இருப்பதால், நரம்புத் தளர்ச்சிக்கு உட்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில் துணிச்சலானவர். ஆனால், மாறக்கூடிய மனநிலை உடையவர், நல்ல கற்பனை வளம் படைத்த இவர்கள் எப்போதும் அலைந்து திரியும் நிம்மதியற்ற வாழ்க்கை நடத்துவார்கள். விருந்தோம்பலுக்கு நன்கு பெயர் பெற்றவர். ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட இவர்கள், விசுவாசமான, கடமைப் பொறுப்புணர்ச்சியுடையவராக இருப்பர். ஒரு திட்டத்தை வகுத்து, அதனை மிகுந்த மன உறுதியுடன் நிறைவேற்றி, வெற்றி காண்பார்கள். பல இடங்களிலிருந்தும் இவர்களுக்குப் பணவசதி கிடைக்கும். சுயநலவாதி, தாராள சிந்தை கொண்டவர். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பலவீனமான உடல் நிலையைக் கொண்டிருந்தாலும், வயதாக வயதாக நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். மிகப் பெருமளவில் உணர்ச்சிப் பாதிப்புக்கு உட்பட்டவர். சொந்த நலன்பற்றியே, நினைப்பவர், மாற்றத்தை விரும்புபவர். மார்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் அடிக்கடிப் பாதிக்கப்படலாம்.
சிம்மம்
உக்கிரமான ஐந்தாவது ராசி சிம்மம். கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றம் இருக்கும். லேசான கேசமும், பெரிய மற்றும் உருண்டையான முகமும் கொண்ட இவர்களின் சரும நிறம், சிவந்ததாய் இருக்கும். விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த நன்னம்பிக்கையுடன் விறுவிறுப்பாகப் போட்டியிடக் கூடியவர். பிறரிடம் மரியாதை காட்டி, பணிவுடனும், லட்சியப் பேராசை கொண்டவராகவும் இருப்பவர். முன்கோபியாக இருப்பவர்கள். தாயாரிடமிருந்து வெகு தொலைவில், வசிப்பார்கள். பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிரதானமான, எடுப்பான முன்தலை இருக்கும். மிகவும் எடுப்பான, கம்பீரமான மற்றும் ராஜ தோற்றம் இருக்கும். பெரும் எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள். ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர். எதிலும் ஒளிவு மறைவற்றவர். எண்ணத்தில் மிகவும் உறுதியானவர், கோபக்காரர். கலையிலும் இசையிலும் மிகவும் நாட்டம் கொண்டவர். தனது திறமையில், மிகப் பெருமளவு நம்பிக்கை கொண்டவர். ஒரு சில குழந்தைகளே இருக்கும். பெற்றோர்களை விரும்புகிற இவர்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர். அரசிலும், சமுதாயத்திலும் நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க இவர்கள், எண்ணங்களில் அசையா உறுதி படைத்தவர். காதல் ஈடுபாடு கொண்ட இவர்கள், காதலரை மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விப்பார்கள். லட்சியக் காதலரான இவர்கள் காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட இவர்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர். இவர்களின் இல்லம் மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும். மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையை நடத்துவார்கள். ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும் இவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மிக உயரிய அளவில் அரசு சலுகைகளையும் ஆதரவுகளையும் பெறுவார்கள்.
கன்னி
ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில் இருப்பது கன்னி ராசி. இவர்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற் போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் இவர்கள், மிகவும் சுறுசுறுப்பானவர். லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், மிகுந்த விருப்பம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல தகுதியும், திறமையும் இருக்கும். மென்மையாகப் பேசுபவர், அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். மனைவி /கணவனிடம் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். சகோதரர்களிடமிருந்து இவர்களுக்குச் சில எதிர்ப்புகள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர்களுக்குப் பல புதல்விகள் இருப்பார்கள். சமயப் பணிகளில் நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கும் இவர்கள் பல அயல் நாடுகளுக்கும் சென்று வருவார்கள். மன உறுதியும் ஆழ்ந்த உள்ளத்து உணர்வுகளும் இவர்களுக்கு உண்டு. குழந்தைப் பருவத்தில் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், வாழ்க்கையின் பிற்பகுதியில் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவார்கள். சில நேரங்களில், இவர்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். இவர்கள் செயல்களில், சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவார்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், இவர்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். இவர்கள் பொதுவாக, மனதில் இருப்பதையெல்லாம், பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை, மனம் திறந்து பேசுவதுமில்லை.
துலாம்
ராசி மண்டலத்தில் ஏழாவது இடத்தில் இருப்பது. அதன் அதிபதி சுக்ரன். எடுப்பான, கவர்ச்சியான தோற்றமிருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். பெரிய - பிரதானமாகத் தெரியும் மூக்கு இருக்கும். நல்ல தகுதி வாய்ந்த ஒரு வர்த்தகர், ஜோசியத்தில் விருப்பமுடையவர். குரல் இனிமையானது, கவர்ச்சியானது. பேராசை பிடித்தவர் அல்ல. பல இடங்களுக்கும் பயணம் செல்வார்கள். குடும்பத்திலிருந்து விலகி, வெகு தொலைவில் போய் வசிப்பார்கள். குழந்தைப் பருவத்தில், சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகுந்த சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு, வழக்கமான ஒரு வாழ்க்கை அமையும். 31, 32 வயதுக்குப் பின்னர், வாழ்க்கையில் முன்னேற்றமடைவார்கள். பல நண்பர்கள் இருப்பார்கள். கண்யமான தோற்றமுடையவர். அடிக்கடி இருமல் வந்துவிடும். நல்ல கவர்ச்சியான தோற்றமுடைய இவர்கள், விவேகம் நிறைந்த புத்திசாலி. எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படும் இவர்கள், கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். கடமை தவறாதவர், சாமர்த்தியசாலி, மற்றவர்களின் எண்ணத்தை எளிதில் எடை போட்டிடுவர். எதனையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வதில் பெயர் பெற்றவர். ஒரு நல்ல தகுதி வாய்ந்த நிர்வாகி. அமைதியை விரும்பும் இவர்கள் கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டவர். பெரிய தொழில் முயற்சிகளில் வெற்றியடைவார்கள். சிற்றின்பங்களிலும் ஆடம்பரமான சொகுசுப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்களிலும் மிகுந்த ஆசை கொண்டவர். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் வாழ்க்கையில் நன்கு முன்னேறுவார்கள். அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் மகத்தான வெற்றி காண்பார்கள். சில தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள். அகலமான முகத்தையுடைய இவர்கள், நல்ல அழகிய, கவர்ச்சியான, வசீகரத் தோற்றமுடையவர். லட்சியப் பேரவா கொண்டவரான இவர்கள், பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். பல நாடுகளுக்குப் பயணம் செல்வார்கள். உண்மை விரும்பி, சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர்.
விருச்சிகம்
ராசி மண்டலத்தில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் இவர்களுக்குண்டு. மிகப் பெரும் புத்திசாலி, சாமர்த்தியசாலி. சகோதரர்களிடமிருந்து இவர்களுக்கு எதிர்ப்பு வரலாம். கருணை உணர்வற்ற கல்நெஞ்சக்காரர். காரியம் ஆகவேண்டும் என்று ஏற்பட்டால், உண்மையைப் பேசமாட்டார்கள். மற்றவர்களின் எண்ணத்தை மதிப்பிடக் கூடியவர். ஜோதிடத்தில் ஈடுபாடு உண்டு. வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை அனுபவித்தாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவார்கள். நீண்ட ஆயுட்பலம் இருக்கும். மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர், கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட இவர்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவார்கள். சந்தேக புத்தி கொண்டவர், முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர். பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் முன்னுக்கு வரக்கூடியவர். எப்போதுமே சுறுசுறுப்பானவர், சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது இவர்களுக்குப் பிடிக்காது. குறிக்கோள் எட்டப்படும் வரை கடுமையாக உழைப்பார்கள். நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர், வெற்றிக் கொள்ளத்தக்கவர். இவர்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம். மூளை நோயினால் பாதிக்கப்படலாம். வீக்கம், காயங்கள், தீப்புண்கள், உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது அல்லது விபத்துக்கள் போன்றவை இவர்களுக்கு நேரிடலாம். அழகை ரசிப்பவர், சிற்றின்பப்பிரியர், நடைமுறை ரீதியில் செயல்படுபவர், எதுவுமே நிரூபிக்கப்படாதவரை அதனை இவர்கள் நம்புவதில்லை. பரந்த மனப்பான்மை உடையவர். எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர். குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். எப்போதுமே காரியங்களைக் கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர். கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும் தொழில் முயற்சிகளில் முன்னேறுவார்கள். திறமை வாய்ந்த ஒரு விளையாட்டு வீரராகவும் இருப்பர்.
தனுசு
ராசி மண்டலத்தில் ஒன்பதாமிடத்தில் இருப்பது. அதன் அதிபதி குரு. ஒரு நல்ல குணவான், அழகிய பல்வரிசை உள்ளது. மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர், மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். நன்கு படித்தவர், அறிவாளி, விவேகமிக்கவர். தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுவார்கள். அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வார்கள். படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான இவர்களுக்கு ஒரு சில குழந்தைகளே இருக்கும். குழந்தைப் பருவத்தில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பார்கள். வாழ்க்கையின் பின் பகுதியில், செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவார்கள். 22 வயதுக்குப் பின்னர், நன்கு முன்னேறுவார்கள். நீண்ட முகத்துடன், மிகுந்த அழகிய தோற்றத்துடன் விளங்குவார்கள். முன்தலை, பிரதானமாகத் தெரியும். இவர்களுக்கு பளிச்சென்று ஒளிவிடும் கண்கள் உள்ளன. தாராள சிந்தை கொண்டவர். மிக சுறுசுறுப்பானவர், துணிச்சல் மிக்கவர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்புவார்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு , எப்போதுமே பேராவல் கொண்டவர். அதிகம் உயரமாக இருக்கமாட்டார்கள், நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பார்கள். சுய நலனுக்கு, மிகுந்த முக்கியத்துவம் தருபவர். சமய ஈடுபாடு உடையவர், பொது நிறுவனங்களுக்குத் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், ஆர்வம் இருக்கும். கவர்ச்சியான தோற்றமுடைய இவர்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர், உண்மையை விரும்புபவர். இளகிய, கனிவுமனம் படைத்தவர். மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் மிகவும் திறமைசாலி. பல விஷயங்களைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளவல்ல இவர்கள், கடவுளிடம் பக்தியுடையவர், நன்கு உழைக்கக் கூடியவர்.
மகரம்
ராசி மண்டலத்தில் பத்தாவது ராசி. பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும், கவர்ச்சியான கண்களை உடைய இவர்கள், மிகவும் தந்திரமானவர், சாமர்த்தியசாலி, புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும் கூட. பணத்தை அதிகமாகச் செலவு செய்வார்கள். மதத்தில், அதிக ஆர்வம் காட்டுவதில்லை, கவிதையை ரசிப்பவர்கள். குழந்தைப் பருவம் சாதாரணமாக இருந்திருந்தாலும், 32 வயதுக்குப் பின்னர் பெருமளவிற்கு சுகபோகங்களைப் பெறுவார்கள். மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பார்கள். ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது. உயரமாகவும் சிவந்த மேனியுடனும் தோற்றம் கொண்டிருப்பார்கள். திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய இவர்கள், அறிவாற்றல் முலம் வெற்றி காண்பார்கள். ஓயாமல் பேசும் இவர்கள், கலைகளில் ஆர்வம் மிக்கவர். கலை சார்ந்த வழிகளில் வெற்றி காண்பார்கள். இவர்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வார்கள். குழந்தைப் பருவத்தில், மிகவும் பலவீனமாகவும், ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவார்கள். மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம். அனுபவ ரீதியில் செயல்படுபவர், அரசியலில் வெற்றி காண்பார்கள். இடர்ப்பாடுகளைக் கண்டு அஞ்சுவதில்லை. முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். ஆழ்ந்த சிந்தனையாளர், பல இயல்களைக் கற்றறிந்தவர். திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி நிறைவேற்றக் கூடியவர். நல்ல நினைவாற்றலுடன் இருக்கும் இவர் மரியாதைக்குரியவராகவும் இருப்பார்.
கும்பம்
சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப லக்னம் ராசி மண்டலத்தில் 11 வது ராசி. இவர்களுக்குத் தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கும். தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம் மிகவும் குறைவாக இருக்கலாம். குழந்தைப் பருவத்தில் சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில் மகிழ்ச்சி காண்பார்கள். அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்கள், வசதியும் கிடைக்கும். சகோதரர்களின் கெட்ட சகவாசம் இவர்களைப் பாதிக்கும். 25 வயதில் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவார்கள். இவர்கள் ஒரு தத்துவஞானியைப் போல், எந்த ஒரு விஷயத்தையும், துருவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். அமைதி விரும்புபவர், நன்கு படித்தவர். பல விஷயங்களைப் பற்றியும், சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவிட விரும்புவார்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட இவர்கள், எண்ணங்களில் விரைவாகச் செயல்படுவார்கள். ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர், வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் இவர்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். இவர்களுக்குப் பல கஷ்டங்கள் இருந்தாலும் அச்சமின்றி செயல்படுபவர். சமயோசிதமாகச் செயல்படக் கூடியவர், அரசியலில் ஆர்வம் கொள்வார்கள். பொது நிறுவனங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். விளையாட்டுத் துறையில் விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய இவர்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வார்கள். எண்ணங்களிலும் செயல்களிலும், மிகுந்த உறுதியுடன் இருப்பவர். பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கேளிக்கைகளுக்கும் போய் வர விரும்புவார்கள். அதன் விளைவாய் இவர்களுக்கு அவப்பெயரும் ஏற்படும். உணர்ச்சிகளையோ, காதலையோ வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதில்லை. மிகவும் தந்திரம் மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ள விரும்புவார்கள்.
மீனம்
ராசி மண்டலத்தில் 12 வது இடம். மீனத்தின் அதிபதி குரு. இவர்களுக்குப் பெரிய, கவர்ச்சியான கண்கள் இருக்கும். மிகவும் கவர்ச்சியான தனித் தோற்றமும் இருக்கும். மிகவும் அன்பும் கனிவும் கொண்டவர். மனைவியிடம்/கணவனிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டவர், காதல் கொண்டவர். இவர்களுக்குத் தலை பெரியதாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து மனமகிழ்ச்சி பெறுவார்கள். சில நேரங்களில், ஆரோக்கியம் குன்றியவராய் உணருவார்கள். சிற்றின்பங்களில் பிரியம் கொண்டவர், காம உணர்ச்சி உடையவர். உடல் இன்பங்களை விரும்புபவர். திடீரென்று இவர்களுக்குச் சில பாதிப்புக்கள் அல்லது தோல்விகள் ஏற்படலாம். குழந்தைப் பருவத்தில், சாதாரணமான வெற்றிகளே கிடைத்திருக்கலாம். வாழ்க்கையின் நடுவயதுக் காலத்தில், சில இடர்ப்பாடுகள் தோன்றலாம். ஆனால், பிற்பகுதியில் பெருமளவிற்கு சந்தோஷங்கள் கிடைக்கும். 21 வயதுக்குப் பின்னர், மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவார்கள். நல்ல சதைப்பற்று மிக்க கொழுகொழு கன்னங்களும், சாம்பல் வெளுப்பு நிறமும் கொண்ட இவர்கள், எப்போதும் தூங்கி வழியும், மந்தமான கண்களை உடையவர். இவர்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக் கூடிய விபத்துக்கள் குறித்து இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடவுளிடம் பக்தியுடையவர், விருந்தோம்பல் இயல்புடையவர். குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் இவர்கள், விறுவிறுவென்று, தங்கு தடையின்றி பேசும் திறன் படைத்தவர், படித்த விவேகியாக இருப்பவர். அதிக உயரமாக இருக்கமாட்டார்கள். நல்ல அழகிய தோற்றமுடைய இவர்களுக்கு, எடுப்பான முக்கும், அழகிய பல்வரிசையும், சுருட்டை முடியும் இருக்கும். குடும்பத்தில் அதிகம் மகிழ்ச்சி காண்பார்கள். பணம் சம்பாதிப்பதில், இவர்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். நிறைய பணம் சம்பாதித்தாலும், பெருமளவிற்குச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். சமய ஈடுபாடு உடையவர். எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர். விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். கவிதையிலும் இலக்கியத்திலும் கூட மிகுந்த விருப்பமுடையவர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.