புகை - தூமம், இது தென் கீழ்த்திசைப்பாலன் குறி, நீராவி, பனிப்படலம், புகை என்னேவல், யோசனை தூரம் என்று தமிழ் மொழி அகராதி (த.அ. ப.1040), இது தீக்கு அறிகுறியாய் அது கொண்ட பொருளிடம் உண்டாகும் பொருள் என்றும் அபிதானசிந்தாமணி கலைக்களஞ்சியம் (அ.சி, ப. 1407) குறிப்பிடுகின்றது .
சாம்பிராணி புகை கொண்டு மழையின் வரவை முன்கூட்டியே அறிய முடியும் என்பதுடன், விவசாய வளம் குறித்தும் அறிந்து கொள்ள முடியும் என்று மழைக்குறி சாஸ்திரம் எனும் நூல் தெரிவிக்கிறது.
மழைக்குறி சாஸ்திரம் குறித்த செய்திகள் பரமசிவன் பார்வதிக்கு அருளியது என்று சொல்லப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசையிலாகிலும், பௌரணையாகிலும் சோதிடராக இருப்பவர்கள், ஊருக்கு வெளியில் சுத்தமான நிலத்தில் இருந்து கொண்டு நெருப்பில் விருப்பமாகச் சாம்பிராணியைப் போட்டுப் பார்க்க வேண்டும்.
அவ்விதம் போட்டுப் பார்க்கும் காலத்தில் அப்புகையானது கிழக்குத் திசையை நோக்கிச் செல்லுமாகில், அவ்வருடத்தில் உற்பத்தியாகும் பயிர்களெல்லாம் ஓங்கி வளர்ந்து, இரட்டிப்பானப் பலன்களைத் தரும்படியாக அதிகமான மழை பெய்யும். இதனை;
“அற்பங் கடக மதியம்மா வாசை யதிலும் பூரணையிற்
பொற்பா நகர்க்குப் புறம்பேகிப் பொருந்த வனலிற் றூபமிடில்
நற்பல மறியத் தூம நாடிடச் சுரேசன் றிக்கி
லுற்பவப் பயிர்களெல்லா மோங்கியே விளையு மென்னே”
என்ற பாடல் வழியாக மழை நூல் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அவ்விதமாக இட்டப் புகையானது தென் கிழக்குத் திசையை நோக்கிச் செல்லுமாகில் பூமியில் அதிக நன்மை உண்டாகும். தெற்குத் திசையில் போகுமாகில் மழையில்லை. தென்மேற்குத் திசையில் போகுமாகில் சுகமும், மழையும் குறைவாகும். மேற்குப் பக்கத் திசையில் போகுமாகில் நஞ்சை புஞ்சைகளில் இட்ட பயிர்கள் நல்ல விளைவு உண்டாகும். இதனை;
“என்னவக் கினியின் றிக்கி லேகிடிற் புவியிற் சேமம்
நன்னய வியமன் றிக்கில் நாடிடி லுதக மில்லை
சொன்னதோர் நிருதி திக்கிற் சுகமிலை யாலி யற்பம்
இன்னமும் வருணன்றிக்கி லியங்கிடில்விளைவுண்டாமே”
என்ற பாடல் வழியாக மழை நூல் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
வடமேற்குத் திசையிற் செல்லுமாகில் அவ்வருடத்தில் விட்டில், கிளி, கொசுக்களால் விளையும் பயிர்கள் சேதத்தை அடையும். வடக்குத் திசையில் செல்லும் எனில் புவியில் நன்மை பொருந்தி வாழ்வார். ஈசானியத் திசையில் செல்லுமாகில் வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய பெண்ணே! நல்ல மழை பெய்து செந்நெல் மிக்கச் செழிப்பாக விளையும். இதனை;
“உண்டாம் வாயு திக்கதனி லோங்கும் விட்டிற் கிளிகொசுவாற்
பண்டாம் பயிர்கள் சேதமுறும் பகரு மளகைப் பதிதிக்கிற்
கண்டாங் கெய்திற் சுபிட்சமுறுங் கருதி யீசா னியத் திசையில்
வண்டார் குழலே சென்றாக்கால் மழைபெய்தோங்குஞ் செந்நெல்லே”
என்ற பாடல் வழியாக மழை நூல் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.