காக சாஸ்திரம் என்ன சொல்கிறது?
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
நம் பழந்தமிழ் இலக்கியங்கள் காகம் பற்றியச் செய்தியினை மிகுதியாய்த் தெரிவிக்கின்றன. காகங்களின் வகைப்பாடுகள், அவற்றின் செயல்பாடுகள், காகம் கரைதலினால் ஏற்படும் பலன்கள், காக சாஸ்திரம் சொல்லும் செய்திகள் ஆகியவற்றினைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
காகங்களின் வகைப்பாடுகள்
காகம் கருநிறமான உருவமும் நீண்டு வலுத்த அலகும் உடைய பறவை. இதில் மணிக்காக்கை, அண்டங்காக்கை என இரு வகை உண்டு. ஊர்ப்பகுதிகளில் வசித்து வரும் காகம், அவ்வூரில் சிந்திக் கிடக்கும் உணவுப் பொருட்களைச் சாப்பிடும். ஊரில் நாற்றமாய் அழுகிய இறைச்சிகளையும், மற்றவைகளையும் தின்பதால் இதனை ஊர்த்தோட்டி (ஊர் சுத்தப்படுத்துபவர்) என்பர். இப்பறவை பறவைகளில் தந்திரம் மிக்கது. சிறு குழந்தைகள் வைத்துள்ள தின்பண்டங்களையும் கவர்ந்து செல்லும். இதனிடத்தில் காலையெழுதல், காணாமல் புணர்தல். மாலை குளித்தல், மனைக்கேகல், உற்றாரோடு உண்ணல், உறவோம்பல் போன்ற சில நற்குணங்களும் உண்டு.
இவ்வினத்தில் வெள்ளைக்காக்கை என்பதும் உண்டு. இவ்வினத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடங்களில் ஒரு வகை காக்கை உண்டு. அவை சாம்பல் நிறங் கொண்டவை. அவற்றின் இறகுகளிலும், வயிற்றிலும் வெண்மை கலந்திருக்கிறது. அதன் வால் நீளம். இதனை மக்பீ, பைப்கா, கித்தா எனப் பெயரிட்டு முறையே ஆங்கிலேயர், இத்தாலியர், கரீஸ் ஜாதியார் அழைப்பர். இது இந்தியக் காக்கையின் தொழிலையேச் செய்கிறது. இக்காக்கை பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளைத் திருடிக் குடித்து விடுதலால் மற்றப் பறவைகள் இதனை விரோதிக்கும்.
இது போல் அமெரிக்கா நாட்டில் ஒரு வகைக் காக்கையுண்டு. அதனைக் காரியன் என்பர். இவை ஐந்திரம். வாருணம், வாயவ்யம், யாம்யம் என நான்கு வகை. இவற்றிற்குப் பலியிட்டோர் யம தண்டனையினின்று நீங்குவர். காணப்படாத பிதுரர் வாயசரூபமடைந்து கிரகத்தனை ஆச்ரயித்தலின் பலியிட வேண்டும்.
கள்ளிக்காக்கை
இது உடல் சிவந்த கறுப்பு நிறம் ஆதலால் இதனைச் செம்போத்து என்பர். இதன் கண்கள் மிக்க சிந்த நிறங் கொண்டவை. இது பூச்சிகளையும் மற்றவற்றையும் தின்னும். இதன் மூக்கு. காக்கை போல் நீண்டதன்று.
நீர்க்காக்கை
இது நீரிலுள்ள மீன்களைப் பிடித்து தின்பது. காக்கையின் உருவில் சிறிது வேறுபாடு உடையது. இதன் அலகு நீண்டிருக்கிறது. பாதம் நீந்துவதற்கான தோற்பாதம். நிறம் கருமை, நீரில் நீந்தும் வன்மையுடையது. இதனை ஜைனர், ஜப்பானியர் பிடித்து மீனைப் பிடித்துத் தம்மிடங் கொடுக்கப் பழக்கியிருக்கின்றனர். அவ்வாறே அவை மீன்களைப் பிடித்துத் தலைவனிடத்தில் (எஜமானரிடத்தில்) கொடுக்கின்றன.
கத்திரி மூக்குக் காக்கை
இது நீர்க்காக்கை இனத்தைச் சேர்ந்தது. இது அமெரிக்கக் கடற்கரையில் வசித்துக் கடல் மீனை வேட்டையாடுகிறது. இதனை (சிசர் ஸ்பில்பர்ட்) என்பர். இதன் அடி மூக்குப் பருத்து அகன்று நீண்டதாயும், மேல் மூக்குக் கத்திரிக்கோல் போலிருப்பதால் இதற்கு இப்பெயரிட்டிருக்கின்றனர். இதன் மூக்கு செந்நிறம். மூக்கின் முனை சிறிது கருமை. பாதம் நீரில் நீந்தத்தக்க தோலடியுடையது. இதன் குரல் கேட்க விருப்பமற்ற ஒலி தரும்.
கோட்சக்கர் காக்கை
இஃது இந்து தேசத்துக் காக்கை உருவம் போன்றது. இது இராப் பறவையினத்தைச் சேர்ந்தது. இது காலை மாலைகளில் சத்தமிடும். இதன் அலகு பறவைகளின் அலகு போலில்லாது தசை உதடு போல் இருக்கிறது. இதன் மூக்கு முகத்தின் முன்புறத்தில் ஆந்தையின் மூக்குப் போல் வளைந்து கூர்மையாயிருக்கிறது. இதன் மீசை மயிர் கீழ்வாய்ப் பக்கம் மடிந்து பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது.
இரப் காக்கை
இது ஐரோப்பியக் காக்கை. இதனிறகுகள் மேக நிறமானவை. இதன் மூக்கு நீளம். கால்கள் நீண்டவை. இதன் கழுத்தில் வெண்மையான இறகுகள் பிடரி மயிர் போல் வளர்ந்துள்ளன. அவற்றை இது வேண்டிய போது விரித்துக் குவித்துக் கொள்ளும். இதன் பேட்டிற்குப் பிடரியில் இவ்வகை இறகுகள் கிடையாது. இது மீன்களைப் பிடித்துத் தின்னும். இவ்வினத்தில் கடற்காக்கையும் உண்டு.
மாட்டுப்புழு எடுக்கும் காக்கை
இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளது. அக்கண்டத்து மாடுகளுக்கு உண்டாகும் புழுக்களைத் தனது முனை வளைந்த அலகினால் கொத்தி அப்புண்ணிலுள்ள புழுக்களைத் தின்கிறது. இது நம் நாட்டுக் காக்கையின் உருவில் சற்றுச் சிறிது.
காகங்கரைதல்
பகல் வேளையில் எட்டு முகூர்த்தங்களில் காகம் கரையும் போது;
1. முதல் முகூர்த்தம் - லாபம்
2. இரண்டாம் முகூர்த்தம் - சேதம்
3. மூன்றாம் முகூர்த்தம் - வரவு
4. நான்காம் முகூர்த்தம் - தனம்
5. ஐந்தாம் முகூர்த்தம் - மழை
6. ஆறாம் முகூர்த்தம் - யுத்தம்
7. ஏழாம் முகூர்த்தம் - மரணம்
8. எட்டாம் முகூர்த்தம் - அச்சம்.
எட்டு திசைகளில் காகம் கரையும் போது;
1. கிழக்கு - ஆலஸ்யம்
2. தென் கிழக்கு - மரணம்
3. தெற்கு - தனலாபம்
4. தென் மேற்கு - சந்தோஷம்
5. மேற்கு - கலகம்
6. வடமேற்கு - அபயம்
7. வடக்கு - விருந்து
8. வடகிழக்கு - பொல்லாங்கு
இது போல், தனக்கு முன்னும், படுக்கை விட்டு எழுகையினும் கத்தினால் நினைத்துச் செல்லும் செயல் வெற்றியடையும் என்று அபிதானசிந்தாமணி குறிப்பிடுகின்றது. (அ. சி., பக். 478 - 479)
ஜோதிடக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி
ஜோதிடக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி காக சாஸ்திரம் குறித்து கீழ்க்காணும் செய்திகளைத் தெரிவிக்கிறது.
காகம் கரைதலைக் கொண்டு நன்மை தீமை அறிவித்தல்
காகம் கரைதல் நாழிகை எனும் அளவில் கணக்கிடப்படுகிறது. ஒரு நாழிகைக்கு - 24 நிமிடம், இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம் - 60 நிமிடம் என்கிற அளவில் ஒரு நாளுக்கான 24 மணி நேரத்தில் பகல் வேளையான 12 மணி நேரத்துக்கு 30 நாழிகைகள் இருக்கின்றன.
* காகமானது முதல் நாழிகையின் முதல் பாகத்தில் 'அய அய” என்று சப்திக்குமாயின் அப்பொழுது நகரத்தில் உள்ள மனிதர்களுக்கு அத்தியந்த சுகத்தை வெளிப்படுத்துவதாகும்.
* இரண்டாவது நாழிகையில் காகம் அக்கினி மூலையில் 'அய அய” என்று சப்திக்குமாயின் சோகம் உண்டாகின்றது. ஆனால் இது மேல் நோக்கிச் சப்தித்தால் வேறு சோக செய்தி வரும். அதோமுகமாக (கீழ் நோக்கி) அப்படிச் சப்தித்தால் சந்தானத்தின் சோகம் உண்டாகும்.
* மூன்றாவது நாழிகையில் காகம், தென் திசையில், 'மூய மூய” என்று சப்திக்குமாயின், அகஸ்மாத்தாக தன இலாபத்தைச் சொல்வதாகும்.
* நான்காவது நாழிகையில் காகமானது நிருதி மூலையில், 'மூயமூய” என்று சப்திக்குமாயின், அக்கினி அல்லது திருடர் பயம் உண்டாகும்.
* ஐந்தாவது நாழிகையில் காகம் மேற்குத் திசையில் 'ஆஹா ஆஹா” என்று சப்திக்குமாயின் தன லாபத்தைச் சூசனை செய்கின்றது. அது ஊர்த்துவ (மேல்) முகமானால் தனப் பிராப்தியும், கீழ் முகமானால் பிராப்தியுமாகும்.
* ஆறாவது நாழிகையில் காகம் மேற்குத் திக்கில் 'காஹா காஹா” என்று சப்திக்குமாயின் காரிய சித்தியைச் சூசனை செய்வதாகும்.
* ஏழாவது நாழிகையில் காகம் 'ஆஹே ஆஹே” என்று சப்திக்குமாயின், ரோகத்தையும், மிருத்தியுவையும் அறிவிப்பதாகும். வடக்குத் திக்கில் 'யாயா” என்று சப்திக்குமாயின், பிற தேசத்தினின்றும் சமாசாரம் வரும்.
* எட்டாவது நாழிகையில் காகம் ஈசானிய மூலையில் 'ஹாஹா” என்று சப்திக்குமாயின் மிருத்யு சமாசாரம் அறிவிப்பதாகும்.
* ஒன்பதாவது நாழிகையில் காகம் தலைக்கு மேல் 'ஹாஹா” என்று சப்திக்குமாயின் அதற்கு முந்திய தினத்தில் செய்யப்பட்ட பிரார்த்தனை சித்திப்பதாகும்.
* பத்தாவது நாழிகையில் காகம் தனக்கு நேராக 'ஆவா ஆவா” என்று சப்திக்குமாயின் சுப வார்த்தையைத் தெரிவிப்பதாகும்.
* பதினொன்றாவது நாழிகையில் காகம் அக்கினி மூலையில் 'பஜ பஜ” என்று சப்திக்குமாயின், தனக்குப் புத்திர உற்பத்தி உண்டாகும்.
* பன்னிரண்டாவது நாழிகையில் காகம் வாயு மூலையில் 'ஜய ஜய” என்று சப்திக்குமாயின் அன்று அவனுக்கு ஒரு சோகம் உண்டாகும்.
* பதின்மூன்றாவது நாழிகையில் காகம் நிருதி மூலையில் 'காகா” என்று சப்திக்குமாயின் அன்று மகாதுக்கத்தை அறிவிப்பதாகும்.
* பதினான்காவது நாழிகையில் காகம் வடக்குத் திக்கில் 'கோவா கோவா” என்று சப்திக்குமாயின் எதிரி பயம் உண்டாகும்.
* பதினைந்தாவது நாழிகையில் காகம் ஈசானிய மூலையில் 'யா யா” என்று சப்திக்குமாயின், மிகுந்த துக்கத்தைத் தெரிவிப்பதாகும்.
* பதினாறாவது நாழிகையில் காகம் கிழக்குத் திக்கில் 'கோவா கோவா” என்று சப்திக்குமாயின் மனிதர்களின் பொருட்டு மித்திர லாபம் உண்டாகும்.
* பதினேழாவது நாழிகையில் காகம் தெற்குத் திக்கில் 'ஆய ஆய” என்று சப்திக்குமாயின் அத்தியந்த துக்கம் உண்டாகும்.
* பதினெட்டாவது நாழிகையில் காகம் வாயு மூலையில் 'காவா காவா” என்று சப்திக்குமாயின், நிச்சயமாகச் செயலில் வெற்றி கிடைக்கும்.
* பத்தொன்பதாவது நாழிகையில் காகம் மேற்குத் திக்கில் 'மக மக” என்று சப்திக்குமாயின் அவனுக்குப் பிற நாட்டுக்குப் பயணம் உண்டாகும்.
* இருபதாவது நாழிகையில் காகம் வடக்குத் திக்காக முகம் செய்து 'அய அய” என்று சப்திக்குமாயின் தன லாபத்தை அறிவிப்பதாகும்.
* இருபத்தொன்றாவது நாழிகையில் காகம் தலைக்கு மேல் 'ஸாஸா” என்று சப்திக்குமாயின் பூமி லாபம் உண்டாகும்.
* இருபத்திரண்டாவது நாழிகையில் காகம் கிழக்குத் திக்கில் 'ஆகா ஆகா” என்று சப்திக்குமாயின் இருப்பிட லாபம் உண்டாகும்.
* இருபத்தி மூன்றாவது நாழிகையில் காகம் அக்கினி மூலையில் 'அத்வை அத்வை” என்று சப்திக்குமாயின் சகல லாபமும் உண்டாகும்.
* இருபத்தி நான்காவது நாழிகையில் காகம் தெற்குத் திக்கில், 'வயா வயா” என்று சப்திக்குமாயின் காரணமின்றியே நிச்சயமாகப் பூ சஞ்சாரம் உண்டாகும்.
* இருபத்தைந்தாவது நாழிகையில் காகம் நிருதி மூலையில் 'காய காய” என்று சப்திக்குமாயின் நாற்புறமும் பயம் உண்டாகும்.
* இருபத்தாறாவது நாழிகையில் காகம் மேற்குத் திசையில் 'ஆஹா ஆஹா” என்று சப்திக்குமாயின் சகல லாபத்தையும் அறிவிப்பதாகும்.
* இருபத்தேழாவது நாழிகையில் காகம் வடக்குத் திக்கில் 'ஆகா ஆகா” என்று சப்திக்குமாயின் பிரயத்தனம் இல்லாத சகல சுகம் உண்டாகும்.
* இருபத்தெட்டாவது நாழிகையில் காகம் ஈசானியத் திக்கில், 'ஸா ஸா” என்று சப்திக்குமாயின் மனோரதம் சித்தியாகும்.
* இருபத்தொன்பதாவது நாழிகையில் காகம் தலைக்கு மேல் 'ஆகா ஆகா” என்று சப்திக்குமாயின் அகஸ்தமாத்தாக சுகம் உண்டாகும்.
மற்றொரு விதம்
காகம் தானே சப்திக்குமாயின் எச்சமயம் அது பேசினதோ, அச்சமயத்தின் சாயையை அங்குலமாக அளவிட்டு, அதில் எவ்வளவு அங்குலம் இருக்கின்றதோ, அதை இரு மடங்காக்கி, அதில் கூடிய தொகையை ஏழில் கழித்து எஞ்சியிருப்பதில் பயனைத் தெரிந்து கொள்ள வேண்டும். எஞ்சிய தொகை;
* ஒன்றில் போஜனம் கிடைக்கும்.
* இரண்டில் ஜீவ சஞ்சாரம் உண்டாகும்.
* மூன்றில் யாத்திரை மிருத்தியுவைத் தருகின்றது.
* நான்கில் கிலேசம் உண்டாகும் அல்லது வீட்டில் தீப்பிடிக்கும்.
* ஐந்தில் எங்கேனுமிருந்து நலச் செய்தி வரும் .
* ஆறில் காகம் தனது வார்த்தையைப் பேசுகிறது. பயன் ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு : இது நாகார்ச்சுன வாக்கியப் படிக்கு உள்ளது.
இதுவன்றி, வேறாரு விதமாகக் காண்பதும் உண்டு. அவையாவன:
எந்தத் திசையில் காகம் கத்துகிறதோ அதை அறிந்து பலாபலன் காண்பது.
* மேற்குத் திசை - சண்டை
* இடபத் திசை - இடம் பெயர்தல்
* மிதுனத் திசை - நன்மை
* கடகத் திசை - விருந்து, சந்தோசம்
* சிங்கத் திசை - தன நட்டம்
* கன்னித் திசை - நன்மை
* துலாத் திசை - அடுத்தவர் வரவு
* விருச்சிகத் திசை - திருமணம், தன லாபம்
* தனுத்திசை - விருந்து உணவு
* மகரத் திசை - வெகு நன்மை
* கும்பத் திசை - நன்மை
* மீனத்திசை - சந்தோசம்
என்பவையாகும். (ஜோ. க. சொ. பொ. வி. அகராதி , பக். 52 - 54)
இவ்விதம் கலைக்களஞ்சியம் அபிதான சிந்தாமணி, ஜோதிட கலைச்சொல் பொருள் விளக்க அகராதி ஆகியவை காகம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றதால் காகங்கள் என்பது சகுனம் அறிவிக்கும் பறவைகள் என்பதை நாம் அறியலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.