கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
ஜென்மம் (அ) பிறவி (அ) பிறப்பு
சாதக அலங்காரம் எனும் நூல் 2வது பாவகப் படலம், “எண் ஜாண் உடம்பிற்குச் சிரசே பிரதானமாவது” போல, பன்னிரண்டு பாவகங்களுக்கும் இலக்கின பாவகமே பிரதானமாகையாலும், இந்த இலக்கின பாவகத்தைக் கொண்டே மற்றைய பாவாதிபதிகள் இருக்கும் இடம் - சம்பந்தம் - நோக்க முதலியவற்றால் பலாபலன்களை வரையறுத்து நிச்சயித்தல் நியதியாகையாலும் “சீர் பெறும் ஜென்ம லக்கினம்” எனச் சிறப்பித்தார் ஆசிரியர். (நடராசர், சாதக அலங்காரம், ப.36.)
குழந்தை பிறக்கின்ற போது கொடி அல்லது மாலை போன்ற அமைப்பில் தாயின் தொப்புள் கொடி ஆனது சுற்றி இருக்கும். இந்த அமைப்பே கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல் என்று வழங்கப் பெறுகின்றது.
ஜாதக கணித விளக்கம் என்னும், பெரிய ஜோதிட சில்லரைக் கோவையில் ஜம்பு மகரிஷியின் கொடி சுற்றல் சோதிடச் செய்தியினைக் கந்தசாமி பிள்ளையாசிரியர் இங்கு குறிப்பிடுகின்றார். இலக்கினத்தில் இராகுவும், லக்கினாதிபதியும் கூடியிருந்தால் தாய் ஜனன காலத்தில் முக்கிப் பெறுவாள், எட்டாமிடத்திற்குடையவனும் லக்கினத்திலிருந்தால் கொடி சுற்றிப் பிறப்பான் என்றும் ஜம்பு மகரிரிஷி வாக்கியம் எனும் நூல் தெரிவிக்கின்றது. (கந்தசாமிப்பிள்ளை, பெரிய ஜோதிடச் சில்லரைக் கோவை, ப.9.)
சாதக அலங்காரம் எனும் நூல் ஜனன சந்திர லக்கினத்திற்கு மத்தியில் சனியிருந்தாலும், பார்த்தாலும் தலை நரைத்த கறுத்த தேக காந்தி உடைய விருத்தப் பெண்ணும், செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும் சிவப்பு நிறமான தேககாந்தியை உடைய இளமை வயதுடைய விதவைப் பெண்ணும், சூரியன் - சந்திரன் - குரு இவர்களில் ஒருவர் இருந்தாலும், பார்த்தாலும் விருத்தை வயதும், சுக்கிரன் இளமை வயதும், புதன் நடுவயதும் உடைய சுமங்கலைப் பெண்களும், இராகு கேதுக்கள் இருந்தாலும், பார்த்தாலும் ஆசாரமற்று அனாசாரம் மிகுந்த பெண்ணும் பிரசவப் பெண்ணுடன் இருப்பார்கள். இராகு கேதுக்கள் இருந்தால் குழந்தை கொடி அல்லது மாலை சுற்றிப் பிறக்கும்.
கொடி சுற்றல்
1. சந்திரன் செவ்வாய் திரிகோணத்திலிருக்க, இலக்கினத்திற்கு 2 - 11 ஆமிடங்களில் சுபர்கள் இருந்தால் சர்ப்பம் ஜனனமாகும்.
2. இலக்கினம் செவ்வாய் திரிகோணத்திலிருக்க, அந்த இலக்கினத்திற்கு 2 - 11 ல் சுபக்கிரகங்கள் இருந்தால் சர்ப்பத்தினால் - பாம்பினால் சுற்றப்பட்ட சிசு பிறக்கும்.
மேஷம் 1-வது, கடகம் 2-வது, சிங்கம் 3-வது, விருச்சிகம் 1-வது, தனுசு 2-வது, மீனம் 3-வது திரேகாணங்கள் செவ்வாய் திரிகோணங்களாகும். கொடி மாலை என்பது நாளவேஷ்டனம் என்பதாகும்.
“தானருகே இருந்தமட வார்பருவங் கூறில்
சனிஇருந்து கண்டக்கால் தலைநரைத்த கறுப்பி
ஈனம்இலாக் குஜன்இருந்து காணின் இளம்வயதே
இசையும்நிறம் சிவப்புஆக இருப்பள் சுமங்கலை ஆம்
ஆனகதிர் குருமதியம் விருத்தைபுகர் இளமை
அருணன்நடுப் பருவமுடைச் சுமங்கலைகள் ஆவர்
மானிலமேல் பாம்பு இருந்தால் அனாசார மடந்தை
மகவுநூ லேதரித்து வந்திடுங் கண்டீரே”
என்றும் தெரிவிக்கின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ஜனன காலப்படலம், செ.63, ப.173.)
வசிஷ்டசம்மிதை தரும் செய்தி
மேலும் இந்நூல் வியதீபாத யோகத்தில் சிசு ஜனனமானால் அங்கஹீனமும், பரிகயோகத்தில் மிருத்தியுவும், வைதிருதி யோகத்தில் பிதுருஹானியும், நஷ்டசந்திரனில் அந்த கத்வமும், மூலத்தில் வம்சநாசமும், திருதியோகத்தில் குலநாசமும், இரண்டு சந்தி காலங்களில் அங்க விகாரமும், அல்லது அங்கஹீனமும், பருவங்களில் ஜனனமானால் சகல ஹானியும், பயமும் உண்டாம். இந்தப்படி பல்லுடன் பிறந்தாலும், கால் முன்னாகப் பிறந்தாலும், அசுபத்தையுண்டாக்கும், மற்றும் விபரீத ஜனனமானாலும், குறைந்த அங்கம், அதிக அங்கம், விகார ஜனனம் கொடி சுற்றிப் பிறந்தாலும் (இராச்சியத்திற்கும்) அரசாங்கத்திற்கும், (இராஜனுக்கும்) அரசனுக்கும், குடும்பத்திற்கும் ஆகாது. ஆதலால் அவசியம் சாந்தி செய்து கொள்க என்று குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.212.)
கொடி சுற்றிப் பிறத்தல் - இலக்கின பாவகம்
இக்கருத்து சாதகலங்காரத்தில், வசிஷ்டசம்மிதையில் மேற்கோள் பாடலில் வடமொழிக் குறிப்புள்ளதால் அறியலாம். வடநூலார் நாளவேஷ்டணம் என்று கூறுவர். இச்செய்தியை இந்நூலில், பெண்கள் பிரசவிக்கும் போது சில சமயங்களில் பிறந்த குழந்தைகள் உடம்பில் கொடி போலவும், மாலை போலவும் சுற்றிக் கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் பிறப்பது கொடி சுற்றிப் பிறத்தல் என்றும், மாலை சுற்றிப் பிறத்தல் என்றும் கூறப்படுகின்றது. அதைக் கண்டவுடன் நம் தேசத்து மக்கள் திடுக்கிட்டு மனங்கலங்கி உடனே சோதிடர்களிடம் விசாரித்தறிவது தொன்று தொட்டு வரும் வழக்கமாக இருக்கின்றது. அநேகமாய் இது அனுபவ சித்தமாயும் இருக்கின்றது. சோதிட சாஸ்திரத்தில் அதன் காரணம் கெட்ட கிரகங்கள் லக்கினத்தைப் பார்ப்பதனாலும் வேறு சில காரணங்களாலும் உண்டாகின்றது என்று கூறப்பட்டிருக்கின்றது.
ஜாதக சிந்தாமணி நூலுடைய ஆசிரியர் தில்லை நாயகனாரவர்கள் கூறிய செய்தி
இலக்கினத்தில் ராகு குளிகன் இருந்து, லக்கினாதிபனும், எட்டாம் வீட்டிற்கதிபனும் கூடி, குரூரமான திரேக்காணத்தில் இருந்தால் கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.
“குறித்த லக்கினத்தில் ராகுகுளிகனுங் கூடிநிற்க
எறித்தலக் கினத்தோன் எட்டாமிடத் துடையவனுங்கூடிச்
செறிப்புறு குரூரராசித் திரேக்காணந் தன்னில்நிற்க
புறப்படுங் கொடியேசுற்றிப் பிறந்திடுமென்று சொல்வார்”
“மேஷம் குரூரம் சிங்கம் குரூரம் தனுசு குரூரம்
ரிஷபம் சௌமியம் கன்னி சௌமியம் மகரம் சௌமியம்
மிதுனம் குரூரம் துலாம் குரூரம் கும்பம் குரூரம்
கடகம் சௌமியம் விருச்சிகம் சௌமியம் மீனம் சௌமியம்”
“அனைய சர்ப்பத் திரேகாணம் ஆனலக்கினத் திரேகாணம்
புனையிலக் னேசன்றானே பொருந்திய திரேகாணந்தான்
தனையிலக் கினமதாக தகும் நல்லோர் பாராராயின்
வனையுறு கொடியேசுற்றி மன்னின்மேற் பிறக்கு மென்னே”
(நடராசர், சாதக அலங்காரம், ப.494.)
இலக்கினம் சர்ப்பத்திரேகாணமாக லக்கினாதிபன் இருக்கும் திரேகாணமும் அப்படியேயாக, நல்லோர் (சுபர்கள்) பார்வையில்லாது இருந்தால் கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.
“சிந்தைகூ றிடபமேடஞ் சிங்கமே யுதயமாகப்
புந்தியுஞ் சனியுங்கூடப் பொருந்திடு மகவேதோன்றில்
கொந்தவிழ் உடலிற்பின்னிக் கொடிசுற்றிப் பிறக்குமென்பர்
அந்தர மின்னைப்போலும் அழகிய இடையினாளே”
இடபம் - மேடம் - சிங்கம் - லக்கினமாகி, புதனுஞ், சனியுங் கூடி அதிலிருக்க குழந்தை கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.
“விரவுலக் கினத்திற்பாவர் மேவிடக் கொடியோர் பார்க்கக்
கரியராகு கேதுகூடிக் கடியகோள் வீடுதானே
பரவிலக் கினமதாகிற் பண்புறு தேகமீதில்
தரணியின் மாலையிட்டுத் தான்கொடி சுற்றுந்தானே”
இலக்கினத்தில் பாபக்கிரகங்கள் இருக்க, பாவர்கள் பார்க்க அல்லது ராகு கேதுக்களில் ஒருவர் லக்கினத்திலிருக்க பாபக்கிரகங்களுடைய வீடு லக்கினமாகில் தேகத்தில் மாலை சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.
“நடக்கும்லக் கினந்தீக்கோட்கு நடுவாகப் பாம்புநிற்கத்
தொடுத்தலக் கினத்தைச் செவ்வாய் சூரியன் பார்க்கிற்றானும்
வடுத்தவிர் உதயந்தன்னை மந்தன்சேய் பார்க்குமேனும்
தடுத்திடாக் கொடியேசுற்றித் தரணியிற் பிறப்பன் மாதே”
இலக்கினம் பாவர் மத்தியமாய் அதில் பாம்பிருக்க (ராகு கேது) லக்கினத்தை அங்காரகன் சூரியன் பார்த்தாலும், அல்லது சனி செவ்வாய் பார்த்தாலும் கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும்.
இப்படிக் கிரகங்கள் நின்றால் கொடியோ, மாலையோ சுற்றிப் பிறக்கும்.
சோதிடப் பரிகாரம்
கொடி சுற்றிப் பிறந்தால் அல்லது மாலை சுற்றிப் பிறந்தால் அதற்குச் செய்ய வேண்டிய பரிகார முறைகள்
1. கொடிசுற்றல் பரிகாரமுறை
சோதிட விதிகள் இவ்வாறு ஏற்படின் - கிரக விதிப்படி நின்றால் கொடியோ மாலையோ சுற்றிப் பிறக்கும். “கொடி சுற்றிப் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது; மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது” என்று உலகோர் வழங்கி வருகின்றனர். சிலர் கொடி சுற்றிப் பிறக்குமாயின் சிசுவின் சரீரத்தில் - தேகத்தில் எப்படிச் சுற்றிக் கொண்டிருந்ததோ அப்படியே வெள்ளியில் ஓர் கம்பி செய்து போட்டுத் திரை ஒன்று கட்டி அதன் ஒரு புறம் தாயினிடம் சிசுவைக் கொடுத்து நிற்கச் செய்து இரும்புப் பாத்திரத்தின் நிரம்ப எண்ணெய் பூரித்து அதில் தோன்றும் சிசுவின் உருவைத் திரையின் மற்றொரு புறம் நிற்கும் தோடமுடையவர்களைப் பார்க்கச் செய்து பின்பு அந்த வெள்ளிக் கம்பியையும், எண்ணெய்ப் பாத்திரத்தையும் சத்புருஷர்களுக்குத் தானஞ் செய்து வருகின்றனர்.
2. மாலை சுற்றல் பரிகாரமுறை
இரண்டாவது முறையாகச் சிலர் மாலை சுற்றி வந்தால் உடனே தாய்மாமன் கையில் ஓர் கத்தியைக் கொடுத்து படர்ந்துள்ள ஓர் கொடியின் அடி வேரினை அறுத்து விடும்படி செய்கின்றனர் என்றும் உள்ளதால் அறியலாம். மேலும் பிரசவக் காலத்தில் குழந்தையின் தேகத்தில் மூன்று தரம் கொடியானது சுற்றி இருந்தால், அக்குழந்தைக்கும், இரண்டு தரம் சுற்றியிருந்தால் தாய்க்கும், ஒரு தரம் சுற்றியிருந்தால் தாய்மாமனுக்கும், பக்கங்களில் சுற்றியிருந்தால் தகப்பனுக்கும், வலக்கையில் சுற்றியிருந்தால் சகோதரர்கட்கும், இடக்கையில் சுற்றியிருந்தால் குழந்தைக்கும் தோஷம் உண்டாகும் என்று ‘சாந்திரத்னாகரம்’ எனும் நூல் குறிப்பிடுகின்றதை சாதகலங்காரம் தெரிவிப்பதால் அறியலாம். (மேலது, செய்யுள் 448, பக்கம் 495 - 496)
மேடம் - ரிடபம் - சிங்கம் இவை ஜெனன ராசியாகயிருந்து அந்த லக்கினத்தில் சனி - குஜன் இருவரும் கூடி நோக்கினாலும் அந்த குழவி இரண்டு கொடிகள் சுற்றிப் பிறப்பான். குஜன் மாத்திரம் பார்த்தால் செம்மை நிறமான கொடியொன்று சுற்றிப் பிறப்பான். சனி மாத்திரம் பார்த்தால் கருமை நிறமுள்ள கொடி சுற்றிப் பிறப்பான்.
விளக்கவுரையில் மேலே சொன்ன சனி - குஜன் பார்த்தால் கொடி சுற்றிப் பிறப்பான் என்பதை மற்ற கிரகங்களுக்குச் சொல்ல வேண்டுமாயின் லக்கினத்தில் இராகுவும், குளிகனும் நின்றும் அஷ்டமத்ததிபதி திரிகோண ராசியிலிருந்தாலும், மேற்படி கொடி சுற்றியேப் பிறப்பான்.
மேடம் - ரிடபம் - சிங்கம் இவை ஜெனை லக்கினமாக சனியும் புதனும் கூடினாலும் கொடி சுற்றியே பிறப்பான். ஜெனை லக்கினத்தில் ராகு நின்று 10-ல் குரு நின்றால் கால் முன்னாகப் பிறப்பான்.
“கண்ணாரிடபந் தகர்சிங்கங் கண்டசன்ம லக்கினமாய்ப்
பண்ணார் சனிசெவ்வாய் கூடிப்பார்க்கிற் கொடி ரண்டுளதாகும்
தண்ணார் செவ்வாய்கண் பார்வைதான் செங்கொடியொன்றே சுற்றும்
எண்ணார்சவுரி பார்வைக்கே யிருக்குங் கரியகொடி யொன்றே” (மேலது, செ.எ.449, ப.496.)
கொடுமையான இராகு, கேதுவோடு சூரியன் கூடியிருக்கப் பிறந்தவன் மேற்சொன்ன கொடி தலையில் சுற்றிப் பிறப்பவனாவான்.
“கொடியபாம்பி னுடனிரவி கூடியிருக்கிற் கொடி தலையாம்.” என்கின்றது. (மேலது, செ.எ.450, ப.496.)
இரண்டாம் பாவகம் - நேத்திர பலன்
நேத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனாக இருந்து அவர் 8ல் நிற்க ரோகஸ்தானத்தில் சூரியனிருக்க அந்த ஜாதகனுக்கு தன் அந்திய வயதில் நேத்திர ரோகங் காட்டும். சனி அங்காரகன் இவர்கள் சிங்கம் - ரிஷபம் - மேஷம் இவ்விடங்களில் நின்றால் மேன்மையான கொடுமை விளைவிக்கக் கூடிய கொடி சுற்றிப் பிறப்பான்.
“சுக்கிரநேத்திராதி பதியெனத் தோன்றியெட்டில்
நிற்கவோ ராறில்வெய்யோ னிற்கிற்கண்ணோய்பிற்காலம்
துக்கவேறரி மேஷத்திற் சனிகுசன்றானுற்றாலும்
மிக்கதாமதரத்தூன மெழிற் கொடி சுற்றித் தோன்றும்”
என்று சான்று பகர்கின்றது சாதக அலங்காரம் நூல். (நடராசர், சாதக அலங்காரம், செ.எண். 463, ப.501.)
“மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது” என்று பழமொழியும் வழக்கினில் உள்ளது. எனவே உரிய பரிகார முறையின்படி பயன்பெறுவோம்!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.