இறை வழிபாட்டுக்கான படையலில் தேங்காய் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தேங்காய் உடைக்கும் விதம், உடைந்த விதம் போன்றவைகளுக்கான பலன்கள் குறித்து ஸ்ரீகாமியம், பெரிய சோதிட சில்லரைக்கோவை, சிற்ப நூல் சிற்ப சாஸ்திர களஞ்சியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி ஆகியவை குறிப்பிடுகின்றன.
தேங்காய் இது தேவர்க்கு நிவேதிக்கும் நைவேத்தியம், படையல் பொருள்களுள் விசேஷமான ஒன்றாகும். தேங்காயை ராசிகளினின்று சுத்தமானதாகப் பார்த்து அதில் பால்யம், விருத்தம் என்கிற மிக இளசும், அதிமுற்றலும் நீக்கி யௌவனம் என்கிற நடுத்திறமானதைக் கொள்ள வேண்டும். கொள்ளுமிடத்துத் (துர்க்கந்தமானதும்) தீயமணம், கோணலுள்ளதும், அதி நீளமானதையும், பின்னமானதையும், அதி சூட்சுமமமானதையும், குடுமியில்லாததையும், அழுகினதையும், நீர் வற்றினதையும், மற்றுமுள்ள குற்றம் உள்ளவைகளையும் நீக்கிவிட வேண்டும்.
தேங்காயைக் கனிஷ்டாங்குலம் உள்ள சிகை உள்ளதாய்க் கொண்டு அதன் சிகையுடன் முகத்தின் பாகமாய்த் தேங்காயைப் பிடித்துக் கொண்டு அருகிலிருக்கிற கல்லின் மேல் காயைச் சாணளவு உயரத் தூக்கி மந்திரஞ் (செபித்து) சொல்லி ஒரே அடியில் இரண்டு பாகமாகும்படி உடைக்க வேண்டும். அப்படி உடைப்பின் அக்காரியம் சுபத்தைத் தருவதும், தன தான்ய விருத்தியும் தருவதாம். முகத்தின் பாகத்தின் முக்கால் பங்கும், அடிப்பாகத்தில் காற்பங்குமாகவும் அல்லது அடிப்புறம் முக்கால் பாகமாகவும், மேற்புறம் கால் பாகமாகவும், உடையின் (புருஷர் ஸ்திரீகளாகிய) ஆண் பெண் ஆகிய இருவருக்கும் அந்யோன்ய கலகம் விளையும். தேங்காய் பொடிப் பொடியாய் உடையின் தாம் கொண்ட கார்யம் நாசமாம். கண்ணின் புறமாக உடையின் (எஜமானன்) முதலாளி கெடுபில் உடையின் ஆசாரியன் கெடுவன். தென் புறமாயுள்ள கண்ணின் நரம்பில் உடையின் கிராமமும், தன்னிருக்கையும் கெடும். வட புறத்தின் கண்ணை அடுத்த நரம்பில் உடையின் தன்னூரையாலும் அரசன் வேறாவன். தேங்காயின் முகம் உடைந்தால் (க்ஷோபம்) நன்மை உண்டாம். நீண்டு இடையின் பயமுண்டாம். தேங்காய் உடைக்கத் தொடங்குகையில் கை விட்டு நழுவி அப்பால் வீழின் கர்ப்பத்திலுள்ள கருச்சிதையும், பல சுக்கல்களாய் உடையின் கிராமவாசிகள் பசியால் வருந்துவர். தேங்காய் உடைகையில் உள்ளிடத்தில் நீரில்லாதிருப்பின் மழை நீங்கும். குடுமியில்லாதிருக்கின் தனக்ஷயம். தேங்காயிலுள்ள நீர் துர்க்கந்தமாயிருக்கின் தீயமணம் இராஜ்யச் செல்வமாயினும் கெடும். தேங்காய் அழுகி நாறு மேல் மகாமாரியால் வருத்தமுண்டாம்.
இவ்வகை நேருமேல் அவ்வகைத் தேங்காயை நீக்கி வேறொரு யௌவனமாகிய தேங்காயை மூன்று கண்ணுள்ளதாய் இரண்டு பாகம் மூல பாகத்திலும், ஒரு பாகம் முதற் பக்கத்திலும், முக பாகத்தில் மூன்று பாகமும், பின் புறத்தில் இரண்டு பாகமும் அல்லது இரண்டு பாகமும் சமமாகவேனும் உடைக்கின் சர்வ சித்திகளும் உண்டாம் என்று ஸ்ரீகாமியம் குறிப்பிடுகின்றது.
பெரிய சோதிடச் சில்லரைக் கோவையினுள், தேங்காய் உடைக்கும் விதம் பற்றியும், உடைந்த விதம் பற்றியும் கணேசர் துதி முதலான மூன்று பாடல்கள் எண்சீரடி விருத்த யாப்பில் பொருளுடன் இடம் பெற்றுள்ளன. இப்பகுதியில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பெறவில்லை. முதல் பாடல் ஆதிகசான மூர்த்தியை வணங்கி இவ்வாரூடத்தை அனைவருக்கும் உணர்த்த இறைவனை வேண்டும் பாடலாய் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேங்காயை எப்படி இறைவனுக்கு வணங்கி வேண்டி உடைக்க வேண்டும் என்பது பற்றியும், பலன்கள் பற்றியும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இச்சகுன பலனைக் கவனிப்பது மக்கள் கடமை என்றும் குறிப்பிடுகின்றது.
ஆதி கஜான மூர்த்தியின் திருவருளால் தேங்காய்க்குறி ஆரூடம் எல்லோரும் ஏற்கும் வண்ணம் உண்மையைத் தெரிவிக்கும்படி வேண்டி எனும் வேண்டுதலோடு தொடங்குகின்றது. இந்நூலில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
“அம்பிகை பாலா கௌரி புத்ராஞான
ஆதிகஜானனமூர்த்தி அன்பர்மித்ரா”
எனும் பாடலால் இதனை அறியலாம்.
(பெரிய சோதிட சில்லரைக் கோவை, தேங்காய்க்குறி ஆரூடபலன், பா.எ.1, ப.187)
மனிதர்கள் தமது வேண்டுதல் நிறைவேறுந் தன்மையான நோன்பு முதலியன புரிந்து விருப்ப தெய்வத்தை வழிபாடு செய்து, சாம்பிராணிப் புகை காட்டிய பிறகு தேங்காயைத் தூய்மையாகக் கழுவிச் சாம்பிராணிப் புகையில் காட்டி தமது மனக்கோரிக்கை எவ்வகை ஆகுமோவென்று மனதில் நினைத்துக் கொண்டு விருப்ப தேவதைக்கு அர்ப்பணம் என்று தேங்காயை உடைத்தால், அது இரண்டு பிளவு சரியாய் உடைந்தால் தான் நினைத்த செயல் வெற்றியாகும். அந்தத் தேங்காய் அழுகியதாய் இருந்தால் தாம் நினைத்த செயல் குறைவாகும். சுக்கல், சுக்கலாயுடைந்தாலும் பலவித கட்டம் ஏற்படும். தேங்காயை உடைக்கும் போது கை நழுவிச் சிதறி விழுந்தாலும் பகைவரால் களங்கம் உண்டு. அச்சமயம் படையல் கலையாமுன்னம் வேறு நல்ல தேங்காய் ஒன்றை வாங்கி வந்து விருப்பத் தேவதையைப் பக்தியாய்ப் பூசித்து, வழிபாடு செய்து கொண்டு தான் நாடிய செயல் வெற்றியாகும்படியாய் அருள்புரிவீர் என்று தேங்காய் உடைத்துக் கற்பூர வழிபாடு செய்து பிரசாதம் உண்டு மனமகிழ வேண்டும். என்பதற்கு,
“அன்புடனேவிரதா னுஷ்டானஞ்செய்து
ஆண்டவனுக்காரா தனையும்செய்ய”
(மேலது, பா.எ.2, ப.187)
“இன்னவிதம்மனித வகுப்பார்களெல்லாம்
இசைந்தஆரூடகுறி கவனித்தன்பாய்”
(மேலது, பா.எ.3, ப.188)
எனும் இப்பாடல்களும் உரையும் கோவை நூல் தெரிவிப்பதால் அறியலாம்.
இச்சகுனம் பற்றி மயனாரின் சிற்ப நூல் பெரிய சிற்ப சாஸ்திர களஞ்சியம் என்பதில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உரையுடன் காணப்பெறுகின்றன. முடிப்பெருத்து அடி சிறுத்தால் இலட்சுமி அமைப்புண்டு. மூன்று பங்கு தலைப்பகுதியிலும், ஒரு பங்கு அடிப்பகுதியிலும் அமைந்தால் குறைவற்ற வாழ்வுண்டாகும். நெடிய பங்கு ஐந்தில் இரண்டுமானால் செல்வமுண்டு. நரம்பு பிடித்தால் நிதான வாழ்வாம். கடுகுப்பிரமாணமாவது தேங்காய்த்துண்டு தேங்காயினுள் விழுந்தால் ஒன்பது வகை நவரத்தினங்களுஞ் சேரும். கைத்தவறித் தேங்காயைக் கீழே விட்டு விட்டால் சண்டை, சச்சரவு, துன்பம் உண்டாகும். என்பதனை,
“முடிபெருத்து வட்டமிடத் திருவே சேரும்
மூன்றிலொரு பங்குடைந்தால் முசியாவாழ்வு
நெடியபங்கி லைந்திரண்டு குறையாச் செல்வம்
நீங்குநரம் பேபிடித்தால் நிதான வாழ்வு
கடுகளவே வுள்ளானால் ரத்னஞ் சேரும்
கைதவறிக் கீழ்விழவே கனத்த பூசல்
அடியவருக் கருள்புரியும் வடிவேல் முன்னோன்
ஆனைமுகன் தேங்காயி னளவி தாமே”
(சிற்பநூல் பெரிய சிற்ப சாஸ்திரக் களஞ்சியம், பா.எ.312, ப.131)
என்னும் பாடல் சான்று பகர்கின்றது.
நடுமத்தியாயுடைந்தால் நன்மை, நாலு சுக்கல், ஆறு சுக்கலாய் உடைந்தால் வெகு துன்பம், தேங்காய்க்கண் தெரித்தால் எசமானன் மரணமாவான். ஓடு விட்டால் புசிப்பதற்கு அன்னங் கிடைக்க மாட்டாது. ஓடு நெறித்தால் உடலிற் பிணி யுண்டாகும். கைதவறிப் பூமியிலே விழுந்தால் எசமானன் தலைவன் விலையாய்ப் போய் விடுவான் என்பதனை,
“உண்டிரண்டு தனக்கு நன்மையோர் நாலாறாய்
உடையவெகு துன்பமது வோதக் கேளு
கண்டுமெய்யிற் கண்தெறித்தால் மரண மாவன்
கனத்தநல் லோடுவிட்டா லசனம் வெல்லம்
விண்டோடு தெரித்திடுமேற் பிணியாம் மெய்யில்
மேதினியி லேவிழுந்தால் விலையாங் கண்டீர்
பண்டுதமி ழறிந்தோதும் மயனார் சொன்ன
பாடற்றேங் காய்ச்சகுனம் பகரக் கேளே”
(மேலது, பா.எ.313, ப.132)
எனும் இப்பாடலும்,
“வாங்கிய தேங்காய் தன்னை மகிழ்வொடு சிற்பன் றானுந்
தாங்கியே யுடைக்கும்போது தவறியே வீழு மாகிற்
பூங்கொடி மரணமாவள் பூமகள் தானும் நில்லாள்
பாங்கொடு மயனார; சொன்ன பண்டுநூ லிதுவு மாமே”
(மேலது, பா.எ.314, ப.132)
எனும் இப்பாடலும்,
“உற்றிடு முகூர்த்தத் தேங்கா யுடைத்திடும் பலனைக்கேளு
மற்றது தெரிக்கச் சாவன் வளரும் பெண்முடி பெருக்கிற்
கற்றறி புதல்வ ருண்டாங் கண்விடில் வாழ்வு குன்றும்
சற்றதி லழுக லாகிற் றான்செயுங் கருமந் தீதே”
(மேலது, பா.எ.315, ப.132)
எனும் இப்பாடலும் மேற்கருத்துகளைப் புலப்படுத்துகின்றன. கோவை நூலினுள் தேங்காய்ச் சகுனம் பற்றி, பிளவு சரியாய் உடைதல், சுக்கலாய் உடைதல், கை நழுவி தேங்காய் விழுந்து உடைதல், பரிகாரமாக நல்ல தேங்காய் வாங்கி உடைத்தல் ஆகிய செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளது. சிற்ப நூலினுள் இச்சகுனம் பற்றி முடிபெருத்து அடி சிறுத்தல், மூன்று பங்கு தலைப்பாகம், பாதப்பாகம், நெடியப்பங்கு ஐந்தில் இரண்டு, நரம்புப்பிடித்தல், கடுகுப்பிரமாணம் உள்விழுதல், கைத்தவறி விழுதல் ஆகிய செய்திகள் மிகச்சிறப்பாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன. கைத்தவறி கீழே விழுந்தால் பகைவரால் களங்கம், வீட்டுத் தலைவன் விலையாய்ப் போய் விடுதல் ஆகியன தீயபலன்களாகக் குறிப்பிடப்பெறுவதை இரு நூல்களிலும் நாம் அறியலாம்.
சர்வார்த்த சிற்ப சிந்தாமணியினுள் தேங்காய்ச் சகுனமறிய எனும் உட்தலைப்பினுள், “முகூர்த்தஞ் செய்யுங்காலத்தில் தேங்காயுடைக்கில் முடிபெருத்து அடி சிறுத்து வட்டமாயுடையில் இலட்சுமி விலாசமுண்டு; மூன்று பங்கு சிரசிலும், ஒரு பங்கு அடியிலும் உடைந்தால் சந்தோஷமுண்டாம்; ஜயமுண்டாம்; ஐந்து அல்லது இரண்டாகில் மாறாத செல்வமுண்டாம்; உடைந்து நரம்பு பிடித்தால் வாழ்வுண்டாகும், கடுகளவுப் பிரமாணம் சிறிது உள்ளே விழுந்தால் ரத்தினஞ்சேரும்; நடுவிற் பிளந்தால் சண்டையுண்டாம். நடுமத்தியிலுடைந்தால் விசேஷ நன்மை. 6 - 4 ஆக உடைந்தால் விசேஷ துன்பம் கண்கள் தெரிந்தால் மரணம் உண்டாம்; ஓடு விட்டால் வறுமையுண்டாம்; ஓடு கசங்கிடப் பிணியுண்டாம். அழுகலானால் குற்றம், அது மனஸ்தாபம் விளைவிக்கும்” என்றும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றது.
(வீராசாமி முதலியார், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, ப.26)
இந்நூலில் மட்டும் எண்ணிக்கை அடிப்படையிலும் தேங்காய் உடைதலின் பலன்களானது 5 - 2 - 6 - 4 என மாறுபாடாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. கடுகுப்பிரமாணம் உள் விழுந்தால் மூன்று நூல்களிலும் சிறந்த பலன்களையே குறிப்பிடுகின்றது. ஓடு விடல், கசங்கல், அழுகல் பற்றி இந்நூலில் மட்டுமே குறிப்பிடப் பெற்றுள்ளது.
நவகோள்களைப் போற்றுவோம்!