நவாம்சம் - நவாம்சத்தின் பயன்பாடு
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
முன்னுரை
இக்கட்டுரையில் நவாம்சம், நவாம்சம் கணக்கிடுதல், நவாம்சத்தின் பயன், பன்னிரு நவாம்சத்தின் பலன்களைக் காண்போம்.
நவாம்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து அறிவது நவாம்சமாகும். ஒரு ராசியின் 30 டிகிரிகளில் ஒவ்வொரு பாகத்திற்கும் 3 1 3 பாகம் உட்பட்டிருக்கும். கிரகங்களுடன் நவாம்சத்தைக் காட்டும் சக்கரத்திற்கு நவாம்சச் சக்கரம் அல்லது நவாம்சக் கட்டம் என்று பெயர் . (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.15.)
நவாம்சம் கணக்கிடுதல்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், நவாம்சம் கணக்கிடும் போது அந்த ராசிகளின் தன்மைகளைக் கவனிக்க வேண்டும். சர ராசியாக இருந்தால் அந்த ராசி முதலாகவும், ஸ்திர ராசியாக இருந்தால் அந்த ராசியின் ஐந்தாவது ராசியை முதலாகவும், உபய ராசியாக இருந்தால் அந்த ராசியின் ஒன்பதாவது ராசியை முதலாகவும் கொண்டு ஒன்பது ராசிகளைக் காணுதல் வேண்டும். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் அதனுள் அடங்கியுள்ள நட்சத்திரப் பாதங்களைக் கொண்டு தான் நவாம்சம் கணக்கிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.30)
நவாம்சத்தின் பயன்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், கிரகங்களின் பலம் அறியவும், பலன்கள் கூறவும், நவாம்சம் மிக முக்கியமானதாகும். களத்திர பாவத்தின் வலிமை அறிய மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. இராசிக்கட்டத்தில் பலம் குன்றி இருந்து நவாம்சத்தில் வலுப்பெற்று இருந்தால் போதும். அந்தக் கிரகங்கள் வலுப்பெற்றதாகவேக் கொள்ளலாம். ஆனால் ராசியில் கிரகங்கள் வலிமைப் பெற்று இருந்து நவாம்சத்தில் வலிமை குன்றி இருக்குமானால், அந்தக் கிரகங்கள் வலிமை குன்றியதாகவேக் கொள்ள வேண்டும். ஆகவே நவாம்சம் மிக முக்கியமானதாகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.47)
பன்னிரு நவாம்சத்தின் பயன்கள்
மேட நவாம்சம்
மேட நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் மிகவும் கொடியவர்களாய் இருப்பர். திருடு, களவு போன்ற காரியங்கள் புரியத் துணிந்தவராகவும், பேராசை மிகுந்தவராகவும் இருப்பர். எப்போதும் ஊர் சுற்றித் திரிவர். நிலையான மனமில்லாதவர். கட்டமான நிலையில் பிழைக்க நேரும். உடலில் காயப்பட நேரும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.137)
ரிடப நவாம்சம்
ரிடபம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி அறிவு பெற்றவர். சுகம் அனுபவிக்க வல்லவர். நற்காரியங்களைப் புரிபவராக இருப்பர். முன் கோபக்காரர். தாராளக் குணம் உள்ளவர். தான் சம்பாதிக்கும் பொருளைத் தானேச் செலவழிக்கக் கூடியவர். பிற பெண்களிடம் மோகம் கொண்டவராய் இருப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.140)
மிதுன நவாம்சம்
மிதுன நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றவராயும், பல தொழில்களை அறிந்தவராயும் இருப்பவர். அழகும், கவர்ச்சியும் மிக்கவர். தயாள குணம் உள்ளவராக இருப்பர். எக்காரியத்திலும் வெற்றி காண்பவராக இருப்பர். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை பெற்றவராய் இருப்பர். ஆசாரம் மிகுந்தவராய் இருப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.143)
கடக நவாம்சம்
கடக நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றவராயும், புத்திக் கூர்மையுள்ளவராயும் இருப்பர். அழகிய தோற்றம், இனிய பேச்சு பேசுபவர். இவர்களிடம் செல்வம் இருக்கும். கால்நடை பாக்கியம் உள்ளவராக இருப்பர். பிற பெண்களிடம் ஆசை கொண்டிருப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.145)
சிம்மம் நவாம்சம்
சிம்மம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் முன்கோபம் உள்ளவராக இருப்பர். தீய எண்ணம் தீயச் செயல் புரிவர். முரட்டுத்தனமானவர்கள். சுதந்திரப்பிரியர். காம விருப்பம் கொண்டவர். பித்தத் தொடர்பான நோய் தொல்லை கொடுக்கும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.151)
கன்னி நவாம்சம்
கன்னி நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றவராக இருப்பர். அழகும், தாராள குணமும் உள்ளவர். இருப்பினும் திருநங்கையாக இருக்கக் கூடும். எடுக்கும் காரியத்தை விடாமுயற்சியுடன் வெற்றியுடன் முடிப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.155)
துலாம் நவாம்சம்
துலாம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றிருப்பர். போர் புரிவதில் வல்லவர். வீரதீலமானவர். தாராள குணமும் இருக்கும். உணவுப்பிரியராக இருப்பர். பெண் விருப்பம் உடையவராக இருப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.161)
விருச்சிகம் நவாம்சம்
விருச்சிகம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர். கடினமான தொழில் புரிந்து வாழ்பவராக இருப்பர். முரடர். தீயகாரியங்களைச் செய்ய அஞ்சாதவர். நிலையான புத்தி இருக்காது. பேராசை மிகுந்து இருக்கும். எப்போதும் ஊர் சுற்றித் திரிந்தவராக இருப்பர். பித்தம் தொடர்பான வியாதி தொல்லை கொடுக்கும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.164)
தனுசு நவாம்சம்
தனுசு நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் அழகுள்ளவர். கல்வியும், வேத சாஸ்திரங்களும் அறிந்திருப்பர். திறமை மிக்கவர். தைரியமும் இருக்கும். அரசாங்கத்தின் ஆதரவுடன் பணிபுரிபவராக இருப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.169)
மகரம் நவாம்சம்
மகரம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கோபமும், கடின இயல்பும் உள்ளவர். வறுமையில் நாளும் வாட நேரும். கெட்ட எண்ணமும், செயலும் புரிபவர்களாக இருப்பர். பிறருக்கு துரோகம் புரிய அஞ்ச மாட்டார;கள்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.173)
கும்பம் நவாம்சம்
கும்பம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் முன் கோபியாகவும், பஞசமாபாதகச் செயல் புரிய அஞ்சாதவராயும் இருப்பர். வாழ்க்கையில் வறுமை மிகுந்து இருக்கும். முன்னேற்றம் இருப்பது கடினம். தீயவர்களின் தொடர்பு கொண்டிருப்பர். பிடிவாதக் குணம் உள்ளவர். ஆரோக்கியம் குன்றிய நிலையில் அடிக்கடி வருந்த நேரும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.176)
மீனம் நவாம்சம்
மீனம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் அழகு கவர்ச்சி மிகுந்தவராக இருப்பவர். கடவுள் பக்தி உள்ளவர். வேத சாஸ்திரம் அறிந்தவராயும், ஆன்மீகத் துறையில் ஈடுபாடு அதிகம் கொண்டவராயும் இருப்பர். அரசாங்கச் செல்வாக்கும், மதிப்பும் பெற்றிருப்பர். உயர்ந்த பதவி வகிப்பவராயும் பேரும், புகழும் பெற்றுத் திகழக் கூடியவராயும் இருப்பர்
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.178)
நவகோள்களைப் போற்றுவோம்!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.