கிரகங்களின் உச்ச பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
முன்னுரை
கிரக உச்ச நீச அளவு, உச்சம் நீசம் பெறாத ராசிகள், உச்ச நீச பலன், கிரகங்களும் உச்சமும், சூரியன் உச்சம், சந்திரன் உச்சம், செவ்வாய் உச்சம், புதன் உச்சம், இரு கோள்கள் உச்சம், குரு உச்சம், சுக்கிரன் உச்சம், சனி உச்சம், இராகு உச்சம், கேது உச்சம் ஆகியவற்றினைப் பற்றி வானியல் நூல்களின் வழி இங்கு காண்போம்.
கிரக உச்ச நீச அளவு
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியன் மேஷத்தில் 30 உச்சமும் துலாத்தில் 30 நீசமும் பெறுகிறது. சந்திரன் ரிஷபத்தில் 3 உச்சமும் விருச்சகத்தில் 3 நீசமும், செவ்வாய் மகரத்தில் 28 உச்சமும், கடகத்தில் 28 நீசமும், புதன் கன்னியில் 15 உச்சமும் மீனத்தில் 15 நீசமும், குரு கடகத்தில் 5 உச்சமும், மகரத்தில் 5 நீசமும், சுக்கிரன் மீனத்தில் 27 உச்சமும், கன்னியில் 27 நீசமும், சனி துலாத்தில் 20 உச்சமும் மேஷத்தில் 20 நீசமும் பெறுகின்றன என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.104)
உச்சம் நீசம் பெறாத ராசிகள்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ராசி வீடுகளில் மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் நவக்கிரகங்களில் எதுவுமே உச்சம். நீசம், பெறவில்லை. அங்கெல்லாம் உபகிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பரிவேடன், மிதுனத்தில் உச்சமும் தனுசில் நீசமும் பெறுகின்றன. இந்திர தனுசு தனுசில் உச்சமும் மிதுனத்தில் நீசமும் பெறுகின்றது. தூமன், தூமக்கேது இருவரும் சிம்மத்தில் உச்சமும், கும்பத்தில் நீச்சமும் சிம்மத்தில் நீசமும் பெறுகின்றன என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.104)
உச்ச நீச பலன்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ஒரு ஜாதகத்தல் உச்ச நிலையில் இருக்கும் கிரகம் நன்மையான பலன்களையும், நீச நிலையில் இருக்கும் கிரகம் பாதகமான பலன்களையும் வழங்கும் என்பது பொதுவிதி என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.70)
கிரகங்களும் உச்சமும்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியனுக்கு மேஷமும், சந்திரனுக்கு ரிஷபமும், செவ்வாய்க்கு மகரமும், புதனுக்கு ஆட்சி வீடான கன்னியும், குருவிற்கு கடகமும், சுக்கிரனுக்கு மீனமும், சனிக்குத் துலாமும் உச்ச இராசிகளாகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.91)
சூரியன் உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியன் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தகப்பனாரின் ஆரோக்கியமும் நன்கு இருக்கும். ஆயுள் பாவமும் பலத்திருக்கும் தகப்பனாருடனான உறவு முறை சுமூகமாக இருக்கும். மதப்பற்று மிக்கவராக இருப்பர். அரசுத்துறையில் பணி புரிவர். ஆசிரியர், மருத்துவர், காவல் மற்றும் இராணுவத் துறையில் பணியாற்றுவர் என்று குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.52)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரக மாலை மேட ராசியில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் அதிக யோக பலனையும், வித்யா செல்வமும், கீர்த்தியும், பெருமையும், உத்தியோகப் பலனும், வியாபார லாபமும், புகழும், செல்வமும், மேன்மேலும் பெருகி தனந்தான்யத்துடனே வாழ்ந்திருக்கச் செய்வார். ஆனால் சனி பகவான் சுக்கிரன், இராகு, கேது, சூரியனுடன் சேர்ந்திருந்தால் கெட்டப் பலனையேச் செய்வார் என்பதனை,
“சூரியனும்மேஷத்தி லுச்சமானால்
சொல்லொணாயோகத்தை மிகவேதந்து...”
என்ற பாடல் சான்று பகர்கின்றது.
சந்திரன் உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சந்திரன் உச்சம் பெற்றிருந்தால் தாயாரின் ஆரோக்கியம் ஆயுளுக்கு நல்லது. ஜாதகர் பெண்களுக்குப் பிரியமானவராக இருப்பர். அறிவும் ஆற்றலும் மிக்கவர். பொறுமைசாலி. கலைஞராக இருப்பர். செயல் திறன் மிக்கவராக இருப்பர். செல்வந்தராக இருப்பர். பெண் மோகம் கொண்டிருப்பர். புத்திர பாக்கியத்திற்கு குறை இருக்காது என்று குறிப்பிடுகின்றது.(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.56)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சந்திரன் ரிடபத்தில் உச்சம் பெற்று இருந்தால் சகலவித செல்வமும் பெருகி, தேக ஆரோக்கியமும், ஒளியும், சுகபோக யோக போக்கியமும், வித்தையும், புத்தியும், உத்தியோக செல்வமும், வியாபார லாபமும், புகழும் வெகுவாகத் தந்து வாழ்ந்திருக்கச் செய்வர். ஆனால், இராகு கேது சேர்ந்திருந்தால் மனத்துன்பமும், கவலையும் நேரிடச் செய்து, எப்போதும் கவலையும், துன்பமும் உண்டாகச் செய்து, பரிதவித்திடச் செய்யும். எனவே மற்றக் கிரகங்களின் பார்வை நோக்கமும் கவனித்துத்தான் பலன் ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (ப.114)
செவ்வாய் உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் செவ்வாய் உச்சம் பெற்றவர் மன உறுதி, தைரியம் மிக்கவராக இருப்பர். முன் கோபி. சகோதரர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பர். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். அரசியலில் ஈடுபாடும் இருக்கும். வீடு, நிலம் போன்ற சொத்து இருக்கும். சண்டை போடுவதில் வல்லவராக இருப்பர். கடவுள் பக்தி உள்ளவர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.64)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் பூமி லாபமும், காணி, கழனி பெருக்கமும் கிடைத்து, திரவிய லாபத்துடன் புகழுடன், உறவினர்கள், நண்பர்கள் சேர்க்கையும் பொருந்தி நலமாய் வாழ்ந்திருக்கச் செய்யும். ஆனால் சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் கொடிய இரணகளத்தில் சண்டை சச்சரவு நேரிடும் போது எத்தகையதான சித்தப்பிரமையும், பயங்கரமும், சஞ்சலமும், திகிலும் ஏற்பட்டு எவ்விதம் கலங்கச் செய்யுமோ அவ்விதமாயிருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது. (மே,ப.114)
புதன் உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் புதன் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் திறமை மிக்கவராக இருப்பர். விரோதிகளை வெல்லக் கூடியவர். கல்வி, அறிவு மிக்கவர், சங்கீதத்தில் நாட்டமுள்ளவராக இருப்பர். குடும்பத்தை மேன்மை படுத்தக் கூடியவர். சிறந்த தலைவராக இருப்பர் என்று குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.67)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை கன்னியில் புதன் உச்சம் பெற்று இருந்தால் பொன், பொருள், சேர்க்கை, வித்யாலாபம், உத்தியோக மேன்மை, வியாபார லாபம். கீர்த்தி, பெருமை, புத்திரமித்திராதி, களத்திரலாபம் அனைத்தும் உண்டாகும். ஆனால் புதனுடன் சனி, ராகு, கேது சேர்ந்தால் பல துன்பமும், துயரமும், நேரிடும் என்றாலும், சுபக்கிரகங்கள் பார்வையானால் மத்திம பலனாய் இருக்கும் என்று குறிப்பிடுகின்றது. (மேலது, ப.114) மேலும், கன்னியில் புதனுடன், சந்திரனும், சூரியனும் சேர்ந்திருந்தால் வித்யாபிவிருத்தியும், சங்கீத ஞானமும், சாஸ்திர ஆராய்ச்ச்சியிலும், சிறந்த வித்வானாக விளங்கி காண்போர் புகழ்ந்துரைக்கும்படி மிக மகிழ்வுடன் மிகுந்த செல்வத்துடன் வாழ்ந்திருந்து பொன், பொருள் ஆகிய யாவற்றுடனும் நன்மையான அனைத்து வித உறவுகளுடனும் மகிழ்வாய் வாழ்ந்திருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றது. (மே.ப.121)
இரு கோள்கள் உச்சம் - புதன், சந்திரன் உச்சம் - கோவை நூலினுள் ஸ்திரீகள் ருது ஜாதக நிர்ணயம் பகுதியில் உதய லக்னம் கன்னியாக அதில் புதனும், சூரியனும் இருக்க பாக்கிய ஸ்தானமாகிய ரிடபத்தில் இலாபாதிபதியாகிய சந்திரன் உச்சம் பெற்றிருக்க இராகு, சனி இவ்விருவரும் கும்பத்தில் இருந்தால் அந்த ஜாதகி வெகு சாமார்த்தியமாய் அனைவரும் ஆச்சரியப்படும் படியாக வெகு பொருள் தேடி வெள்ளி, பொன் ஆபரணாதிகளுடன் அரச வாழ்க்கை வாழ்வர் என்றும் குறிப்பிடுகின்றது. (மே, ப.361)
குரு உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் குரு உச்சம் பெற்றிருந்தால் கல்வி அறிவு நுட்பமுள்ளவராக இருப்பர். நல்ல குணமுள்ளவர். பெருமையாக வாழக் கூடியவராக இருப்பர். அஷ்டமா சித்துக்களையும் வென்றவராக இருப்பர். புத்திர பாக்கியம் இருக்கும். பிறருக்கு உபதேசம் செய்பவராகவோ அல்லது தலைமை ஸ்தானம் பெற்றவராகவோ இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.70)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை குரு கடகத்தில் உச்சம் பெற்றால் அரசயோகமாய், வாழ்ந்திருக்கும் படியான நன்மையையும், பொன், பொருள், ஆகிய அனைத்து வகைச் செல்வமும், புத்திர லாபமும், வித்யாபி விருத்தியும், உத்தியோக வளர்ச்சியும், பெற்று நலமாய் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் சூரியன், சனி, ராகு, கேது இவர்கள் பார்த்தாலும், சேர்ந்தாலும், பலவிதமாகிய மனத்துன்பமும், கவலையும் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றது. (மே.ப. 115) மேலும், மேடத்திலாவது, விருச்சிகத்திலாவது செவ்வாய் இருந்தால் மிகவும் மேன்மையான தனலாப யோகம் இருக்கும். ஆனால் கடகத்தில் குரு உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக விருச்சிகச் செவ்வாயைப் பார்த்தால் பொன், பொருள், பூமி இலாபம், புகழ், தனம் தான்யம், செல்வம் விசேடமாய் பெருகி உறவு, நட்பு, மனைவி, மைந்தருடன் எப்போதும் மகிழ்வாய் வாழ்ந்திருப்பார்கள். இலக்கினக் கணிதத்தைப் பார்த்துக் கணக்கெடுத்து இராசி கணிதமும் ஆராய்ந்து நட்சத்திர பாகத்தின்படியே திசாபுத்தி பிரித்து பலன் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (மேலது, ப.121)
சுக்கிரன் உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பர். வசதி நிறைந்த வாழ்க்கையும் மதிப்பும் கௌரவமும் இருக்கும். பெண்களால் நேசிக்கப்படுவர். களத்திரம் நல்ல முறையில் அமையும். ஆடை ஆபரண சேர்க்கை மிகும். அயல் நாட்டுப் பயணம் ஏற்படும். தெய்வ வழிபாடும் செய்வர். வாகன யோகம் உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.74)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைந்திருந்தால் சுகபோகமும், செல்வமும், புகழும் பெற்றிருப்பதுடன், உத்தியோக செல்வத்தினாலும், வியாபார செல்வத்தினாலும், பொருள் சேகரஞ் செய்து மேன்மை அடைந்திருக்கும்படிச் செய்வார். ஆனால் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்திருந்தால் துன்பமும், கவலையும், வறுமையும், வியாதியும், எதிரிகளின் கலகமும், பயங்கரமும் பொருந்தி துன்புறச் செய்யும் என்று குறிப்பிடுகின்றது. (மே. ப.116) மேலும் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கும் போது, குரு ஆட்சியாய் சேர்ந்திருந்தாரானால் அந்த சாதகன் வித்யாபிவிருத்தி அடைந்தவனாய் நான்கு வேதம் உணர்ந்த சிறந்த சாஸ்திர ஞானியாய் உவகத்தில் உள்ள மாணாக்கர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் குருவாய் விளங்கி மிகுந்த புகழுடன் வெகு பொருள் தேடி செல்வந்தனாய் ஆசாரக் குணத்துடன் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் சூரியனும், செவ்வாயும், சுக்கிரனுடனே சேர்ந்து இருந்தால் மந்தப் புத்தியும், கெட்டக் குணமும் பொருந்திய உலுத்தனாய் எல்லோருக்கும் பகையாகி வறுமையாளனாய் இருப்பதற்காகும் என்றும் குறிப்பிடுகின்றது. (மே, ப.123)
சனி உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சனி உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பேச்சு வன்மை மிக்கவராக இருப்பர். வசதியுடன் வாழ்வார். தீர்க்காயுள் உள்ளவர். வாழ்க்கையில் முன்னேற்றம், மதிப்பு இருக்கும். தைரியம் மிக்கவர். இரும்பு எந்திரம் தொடர்பான தொழிலில் சிறப்பு உண்டு. கன்னிப் பெண்களிடம் ஆசை மிகக் கொண்டவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.79)
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சனி துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் மகா திறமையும், மன தைரியமும், உற்சாகமும் பொருந்தி வித்யாபி விருத்தியும், உத்தியோக மேன்மையும், புகழும், தனந்தான்ய செல்வமும், பெருமையும், பொருள் சேர்க்கையும் புத்திர மித்திராதி களத்திராதி லாபமும் கிடைத்து ஆனந்தமாய் இருக்கச் செய்யும். ஆனால், அந்தச் சனியுடன் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்தாலும், பார்த்தாலும் பலவிதமாகிய துன்பமும், கவலையும் உண்டாவதுடன் வியாதியும், துயரமும் உண்டாகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ப.116)
ராகு உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ராகு உச்சம் பெற்றிருந்தால் கல்வியில் சிறப்பு உண்டு. தைரியம் மிக்கவராகவும் இருப்பர். செல்வம், செல்வாக்கு பெற்றிருப்பர். தந்தை வழி உறவினர் சுபீட்சமாகவும் உதவிகரமமாகவும் இருப்பர். விளை நிலங்களால் நன்மை உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.83)
இராகு - கேது உச்சம்
இராகு - விருச்சிக இராசியில் பலன்- இராகு- சூரியன் - சந்திரன் தொடர்பானால் பலன்:
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை நவக்கிரக மாலை இராகு விருச்சிகத்தில் உச்சமாய் இருப்பின் மிகு திறமை, கல்வி வளர்ச்சி, மனமகிழ்ச்சி, பணி வளர்ச்சி, வியாபார இலாபம், தனந்தான்யம் முதலியன பெற்று புகழுடன் வாழ்வர். இராகுவுடன் சூரியனும், சந்திரனும் தொடர்பானால் பலவகையான மன சஞ்சலமும், அதிர்ச்சியும் பயங்கரமும், கொடிய துன்பமும், நோயும் அடைவர் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. (நவக்கிரக மாலை, பா.எ.8, ப.116)
கேது உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் கேது உச்சம் பெற்றவர் சுயநம்பிக்கை மிக்கவராக இருப்பர். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவர். வைராக்கியம் மிக்கவர். ஆன்மீகத் துறையில் அதிக நாட்டம் கொள்வர். அதனால் மேன்மையும் பெறுவர் என்றும் குறிப்பிடுகின்றது.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.92)
உச்சம் - கேது - விருச்சிக இராசியில் பலன் - கேது, சூரியன், சந்திரன் தொடர்பானால் பலன்:
பெரிய சோதிடச் சில்லரைக் கோவை நவக்கிரக மாலை மேலும் இந்நூலில் கேது விருச்சிகத்தில் உச்சமாய் இருப்பின் கல்வியும், ஞானமும், புகழும், பெருமையும் பொருந்திக் கல்வி வளர்ச்சியும், பணி மேன்மையும், வியாபார இலாபமும் பெற்று, அனைத்து வகைச் செல்வமும், சுற்றமும், நட்பும் பெற்று மேன்மையாய் வாழ்வர். கேதுவுடன் சூரியன், சந்திரன் சேர்ந்திருந்தால் மனக்கலக்கமும், கவலையும் சோம்பலும், மனச்சோர்வும் பொருந்தி மன வெறுப்பாய் இருப்பார்கள். என்பதனை,
“கேதுபகவான் விருச்சிகராசி தன்னில்
கெம்பீரமாகவே உச்சமானால்” (நவக்கிரகமாலை, பா.எ.9, ப.117)
இப்பாடல் தெரிவிக்கின்றதால் அறியலாம்.
விருச்சிக இராசியில் இராகுவாகிலும் கேதுவாகிலும் உச்சமாய் இருக்கும் போது செவ்வாய் ஆட்சியாய் இருந்தால் மிகுந்த செல்வமும், பூமி ஆதாயமும், பொன், பொருள் முதலானவையும் பெற்றுப் புகழுடன் நலமாய் வாழ்வர்.
சூரியனும், சனியும் இராகு கேதுவுடன் சேர்ந்தால் பலவிதமான வம்பும், பகையும், சண்டை சச்சரவும், வழக்கும் துன்பமும், பிறவும் நேரிட்டுக் கலங்குவர். (நவக்கிரகமாலை, பா.எ.24, பக்.123-124)
கோவை நூலினுள் ஜெயமுனி சோதிட சூத்திரம் இராகு விருச்சிகம் இராசியில் உச்சம் என்றும் இடபம் இராசியில் நீசம் என்றும் குறிப்பிடுகின்றது.
“பாம்பது கன்னி செட்டி பார்தனுமகர கும்பம்
கோம்பிலா மீனம் நட்பு சோர்விலா மிதுன மாட்சி” (ஜெ.மு.சோ.சூ, பா.எ.8, ப.377)
“கேதுயாழ் விடையுங்கூட கெட்டியாஞ் செட்டி நட்பாம்
வாதைசெய் தேளு மீனம் மகர்தனு கன்னி ஆட்சி” (மேலது, பா.எ.9, ப.377)
எனும் பாடல்கள் சான்று பகர்கின்றன.
உச்சபங்க நீச யோகம் - ஆறு எட்டுப் பன்னிரண்டில் உச்சர் இருந்து, சத்துருவினால் பார்க்கப் பெற்று, சராங்கிசம் ஏறி இருந்தாலும், அல்லது சத்துருவைக் கூடி, உச்சமாயிருந்தாலும் இந்த யோகமாகும்.
இவ்விதம் கிரகங்களின் உச்சத்தினால் விளையும் பலன்களைப் பற்றி அறிந்தோம்.
நவகோள்களைப் போற்றுவோம்!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.