பரிவருத்தம் - உலக முடிவு, சதுர்யுக முடிவு. பரிவருத்தனம், பரிவர்த்தனம் - சுற்று, கிரகங்கள் வீடு மாறி நிற்றல், பிரபவ முதல் அட்சய வரை அறுபது வருடம் கொண்ட ஒரு சுற்றுமாகும் என்று அகராதி தெரிவிக்கின்றது.
பரிவர்த்தனம் (அ) பரிவர்த்தனை
இராசிச் சக்கரத்திலோ அல்லது எந்த விதமான சக்கரமாக இருந்தாலும் சரி, இரண்டு கிரகங்கள் ஒன்றின் வீட்டில் ஒன்று என மாறி இருப்பதற்குப் பரிவர்த்தனம் அல்லது பரிவர்த்தனை என்று பெயர். எடுத்துக்காட்டாக, மிதுன இராசிக்கு உண்டான புதன் தனுர் இராசியிலும், தனுர் இராசிக்கு உண்டான குரு மிதுன இராசியிலும் இருந்தால் புதன், குரு ஆகிய இவ்விரு கிரகங்களும் பரிவர்த்தனை அடைந்துள்ளன என்று கொள்ள வேண்டும். இவ்வாறே மற்றக் கிரகங்களுக்கும் காண வேண்டும்.
பரிவர்த்தன யோகம்
ஒரு நல்ல யோகம். ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி நிற்பதால் வரும் யோகம். இதில் பன்னிரண்டு, ஆறு, எட்டு, இந்த அதிபர்களால் உண்டாகும் யோகம் முப்பது, மூன்றாம் அதிபதியினால் வரும் யோகம் எட்டு. ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து இந்த அதிபர்களால் உண்டாகும் யோகம் இருபத்தெட்டு. ஆக மொத்தம் அறுபத்தாறு வகையாகும். விவரம்: தைந்ய யோகம், கல யோகம், மகா யோகம் இவைகளில் காண்க.
தைன்ய யோகம்
பரிவர்த்தன யோகம், கிரகமாற்று யோகம். ஆறு, எட்டு, பன்னிரண்டு பற்றி குறிப்பிடுகின்றது. அது விரைய அதிபன் ஒன்று முதல் பதினொன்று வரை எந்த வீட்டிலாவது இருந்து, அவ்வீட்டதிபர் பன்னிரண்டில் நிற்பது. இந்த ஸ்தான மாறுதல் பதினொரு வகையாகும். ஆறுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து இவைகளில் எவ்வீட்டிலாவது இருந்து அவ்வீட்டதிபர்கள் ஆறில் நிற்பதாகும். இந்த ஸ்தான மாறுதல் பத்து வகையாகும்.
எட்டுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இவ்விடங்களில் எவ்வீட்டிலாவது இருந்து, அவ்வீட்டதிபர்கள் எட்டில் நிற்பதாகும். இந்த ஸ்தான மாறுதல் ஒன்பது வகையாகும். பொதுவாய் இவை நல்ல யோகம் அல்ல.
கல யோகம்
பரிவர்த்தன யோகத்துள் ஒன்று. அவை மூன்றுக்கு உடையவன், நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று, ஒன்று, இரண்டு, இவ்விடங்களில் இருக்க, அவ்வீட்டு அதிபர்கள் மூன்றில் நிற்றலாகும்.
மகாயோகம் - பரிவர்த்தன யோகம்
1. அது இலக்கின அதிபன் இரண்டு, நான்கு ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் இலக்கினத்தில் நிற்பது.
2. இரண்டுக்கு உடையவன் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் இரண்டில் நிற்பது.
3. நாலுக்கு உடையவன் ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டு அதிபர் நாலில் நிற்பது.
4. ஐந்துக்கு உடையவன் ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் ஐந்தில் நிற்பது.
5. ஏழுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் ஏழில் நிற்பது.
6. பாக்கிய அதிபன் பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் பாக்கியத்தில் இருப்பது.
7. பத்தோன் பதினொன்றில் இருக்க, பதினொன்றோன் பத்தில் நிற்பது.
குறிப்பு:
மேற்காட்டியுள்ள ஏழு பிரிவுகளில் முதலாவது பிரிவில் கண்டவை ஏழு வகையாய்க் கிரகங்கள் மாறி நிற்கும். இரண்டாவதில் ஆறு வகையாய் மாறி நிற்கும். மூன்றாவதில் ஐந்து வகையாய் மாறி நிற்கும். நான்காவதில் நான்கு வகையாய் மாறி நிற்கும். ஐந்தாவதில் மூன்று வகையாய் மாறி நிற்கும். ஆறாவதில் இரண்டு வகையாய் மாறி நிற்கும். ஆறாவதில் இரண்டு வகையாய் மாறி நிற்கும். ஏழாவதில் ஒரே வகையாய் நிற்கும். இவைகள் இருபத்தெட்டு வகையாய் மாறி நிற்கும். இவை விசேட நல்ல யோகமாகும்.
பரிவர்த்தனை
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று இருப்பது பரிவர்த்தனை என்று அழைக்கப் பெறும். இது லக்னத்தில் எந்த பாவம் என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த பாவத்திற்கு கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்ததாக அறிய வேண்டும். பரிவர்த்தனை பெற்றுள்ள கிரகத்திற்கு வேறு ஆதிபத்யம் இருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளக் கூடாது.
சான்றாக, மேட லக்ன சாதகத்தில் செவ்வாய் மிதுனத்திலும், புதன் விருச்சிகத்திலும் இருப்பதாகக் கொள்வோம். இந்த லக்னத்துக்கு லக்னாதிபதியும் செவ்வாய் தான். எட்டிற்கும் உரியவன் இவனே. இவன் லக்னத்திற்கு மூன்றாமிடமான மிதுனத்தில் இருக்க அந்த மூன்றுக்கு உரிய புதன் விருச்சிகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கின்றான். அதனால் மூன்றுக்கும், எட்டுக்கும் உரியவர். பரிவர்த்தனை பெற்றதாகக் கொள்ள வேண்டும். இதில் செவ்வாயின் லக்னாதிபத்யத்தையோ புதனின் ஆறுக்கு உரிய ஆதிபத்தியத்தையோ தொடர்பு படுத்தக்கூடாது.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.25)
பரிவர்த்தனை யோகம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது ஒரு வகை யோகம் ஆகும். பரிவர்த்தனை பெறுவதால் இரண்டு கிரகமும் ஸ்தான பலம் பெறுவதோடு அவற்றின் பலனும் அதிகமாகின்றது. அதனால் சாதகரின் மேலான பலன்களுக்கு பரிவர்த்தனை துணைபுரியும். ஆனால், அந்தப் பலனைப் பெற பரிவர்த்தனைப் பெற்றுள்ள கிரகங்களின் திசை நடைமுறைக்கு வர வேண்டும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.109)
சுப ஸ்தான பரிவர்த்தனை
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் பரிவர்த்தனை யோகமானதாக இருக்க சாதகத்தில் சுப இடங்களுக்குரிய கோள்கள் பரிவர்த்தனை பெற்றிருக்க வேண்டும். பிறந்த இலக்னத்திற்கு 1, 2, 3, 4, 5, 7, 9, 10, 11 இடங்களுக்குரிய கோள்கள் பரிவர்த்தனை பெறுவது யோகம் ஆனது. சுப இடங்களுக்குரிய கோள்கள் 6, 8,12 க்குரிய இடங்களில் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது கெடுதலானது. இதனால், அந்தச் சாதகருக்கு நன்மை செய்ய வல்ல கிரகம் கூட நன்மை செய்யாமல் போக நேரும். எனவே சுப இடங்களுக்குரிய கிரகம் சுப இடங்களிலும், அசுப இடங்களுக்குரியவர்கள் அசுப இடங்களிலும் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது யோகம் ஆக அமையும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.119)
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் இலக்னத்திற்கு இரண்டிற்குரியவனும், குருவும், பத்துக்குரியவனும், பதினொன்றுக்குரியவனும் ஆக நால்வரும் பரிவர்த்தனை பெற்று இருப்பது ஒரு வித யோகம் ஆகும். ஏராளமான சொத்துக்கு அதிபதியாகத் திகழ்வர். ஆனால், இவர்களுடன் பகை கிரகம் ஏதேனும் ஒன்று சேர்ந்தாலும் யோகம் பாழ்பட்டு யாசகம் - பிச்சை எடுக்க நேரும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.121)
ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ஒரு ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் சுப இடங்களில் பரிவர்த்தனை பெற்று இருந்தால் அரசியலில் ஈடுபாடும், ஒரு பெரிய நாட்டை ஆளும் தகுதி பெற்றவராயும் பெயரும், புகழும் பெற்றுத் திகழ்வர். அசுப இடங்களின் தொடர்பு இருக்குமானால் நாட்டை ஆளும் யோகம் இருந்தாலும் ஏதேனும் விபரீத முடிவுக்கு ஆளாக நேரும்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.122)
பலர் போற்ற வாழும் நிலை
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் லக்னாதிபதி உச்சம் பெற்று இருந்து நான்கு, பத்திற்குரியவர்கள் பரிவர்த்தனை அடைந்திருந்தால் ஜாதகர் அனைத்து வித வசதிகளுடன் வாகன யோகமும் பெற்று பலர் போற்ற வாழக் கூடியவராக இருப்பர்.
(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.189)
ஆறாம் இடத்து அதிபதி எட்டில் இருந்தாலோ, அல்லது எட்டாம் இடத்து அதிபதி ஆறிலிருந்தாலோ அல்லது அந்த இரண்டு ஸ்தானாதிபதிகளும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ கணவனும் மனைவியும் பிரிந்து வாழ வேண்டி வரும். இவ்வமைப்பு பெண்ணின் சாதகத்தில் இருந்தால் விவாகரத்து ஏற்படும் என ஜோதிடபலன் எனும் நுால் குறிப்பிடுகின்றது.
(வே.சங்கர், ஜோதிட பலன், ப.160)
இவ்விதமாகக் கிரகங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டன பரிவர்த்தனை பெற்றிருந்தால், அவை அவ்விடத்திற்கு ஏற்ப சுப அல்லது அசுப பலனினைத் தருகின்றன. ஆறு எட்டு பன்னிரண்டிலும் அவை தீய பலன் தருகின்றன என்பதை நாம் அறியலாம்.