அபிதான சிந்தாமணி துடி, துடிநுால், துடியின் குணாகுணங்கள் பற்றி பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
துடி
கால தசப் பிரமாணத்துள் ஒன்று. இது நிமிடம் எட்டுக் கொண்டது, கால நுட்பம். இது பழைய கால அளவு.
துடிநூல்
தேக அங்கத் துடிப்பினால் வரும் சுக துக்கம் அறிவிக்கும் ஓர் சாஸ்திரம். உடலின் துடித்தலையும் அதன் பலத்தையும் பற்றிக் கூறும் நூல். சோதிட சாத்திரத்தில் இதுவும் ஒன்று.
துடியின் குணாகுணங்கள்
இது மனித தேகத்தில் உண்டாம் உறுப்புகள் துடிப்பதனால் உண்டாகும் நன்மை தீமைகளைத் தெரிவிப்பது.
* உச்சித் துடிக்கில் இடர் நீங்கும். அதன் வலப்பாகம் துடித்தால் அச்சம். அதன் இடப்பாகம் துடித்தால் பெருமை. பின் தலை துடித்தால் சத்துருக்கள் உண்டாம். தலை முழுவதுந் துடித்தால் சம்பத்து உண்டாம். இடது நெற்றி துடித்தால் சம்பத்து, வலது நெற்றி துடித்தால் பிணி நீங்கும்.
* வலப்புருவம் துடித்தால் பெருமை. இடப்புருவம் துடித்தால் தீய வார்த்தை, இரண்டு புருவங்கள் துடித்தால் பெருமை. வலதிமை துடித்தால் வழக்கு நேர்ந்து விலகும். இடக்கண்ணின் மேல் இமை துடித்தால் விசனம் வந்து மாறும். கண்ணின் முன் குவளை துடித்தால் புகழும் செல்வமும் உண்டாம், வலக்கண்ணின் கீழிமை துடித்தால் துணைவனுக்குத் துன்பம். வலது கண் முழுதும் துடித்தால் பிணி வந்து மாறும், இடக்கண் முழுதும் துடித்தால் செல்வம் மிகும்.
* கழுத்து முழுதும் துடித்தால் மரணந் தெரிவிக்கும்.
* வலது மூக்கு முழுதும் துடித்தால் சம்பத்து உண்டாம், இடது மூக்கு துடித்தால் சர்வம் எய்தும்.
* மேலிதழ் துடித்தால் இனிய வார்த்தை, கீழிதழ் துடித்தால் தின்பண்டங்கள் உண்டாம்.
* பிடரி வலம் துடித்தால் நன்மை, இடம் துடித்தால் பெருமை உண்டாம்.
* முதுகு துடித்தால் செல்வந் தரும், வலது புஜம் துடித்தால் வழக்கு ஜெயிக்கும்.
* இடது புஜம் துடித்தால் தூரச் செய்தி, இடது மார்பும் புஜமும் துடித்தால் சாச்செய்தி.
* வலது கண்டக்கை துடித்தால் தோடந் தீரும், வலது முழங்கை துடித்தால் தவப்பயனாம். இட முழங்கை துடித்தால் தனஞ்சேரும். அகங்கை வலம் துடித்தால் ஈனம், இட அகங்கை துடித்தால் இலாபம், வலப்புறங்கை துடித்தால் வழக்கு, இடப்புறங்கை துடித்தால் துன்பம், கையில் பெருவிரல் சுட்டு விரல் இலாபம் துடித்தால் நடுவிரல் துடித்தால் நல்ல செய்தி, மோதிர விரல் துடித்தால் பெருமை, சிறு விரல் துடித்தால் மரணம், வலக்கை அடி துடித்தால் எடுத்த காரியம் முடியும், இடக்கையின் பெரு விரல் துடித்தால் நிறையுண்டாம், சுட்டு விரல் துடித்தால் இராஜ நோக்காம், நடுவிரல் துடித்தால் பெருமை உண்டாம், மோதிர விரல் துடித்தால் நன்மை சாரும், சிறு விரலாயின் சாவில்லை.
* நெஞ்சு துடித்தால் நோக்காடு, வலது முலை துடித்தால் சா, இடது முலை துடித்தால் பிரியம்.
* தொப்புள் துடித்தால் விசனம், வயிறு துடித்தால் நோய் வந்து நீங்கும்.
* வலப்புற முதுகு துடித்தால் நோய் வந்து தீரும். இடதுபுறம் துடித்தால் குடியிருந்த வீட்டை விட்டு நீங்குவான், முதுகு துடித்தால் நோய் நீங்காது, வலது செட்டை துடித்தால் புது வஸ்திரம் கிடைக்கும், இடது துடித்தால் பிரிய வார்த்தை, செட்டைகள் இரண்டும் துடித்தால் துன்பம்.
* வலவிலா துடித்தால் விசனம், இடவிலா துடித்தால் மனை இழப்பாம்.
* இடை துடித்தால் புகழுண்டாம், கோசம் துடித்தால் தூரத்தாரால் விசனம், கீழ்க்கோசந் துடித்தால் நன்மை.
* வலது பீஜம் துடித்தால் யானை, குதிரையேறுவான், இடது பீஜம் துடித்தால் நோயாகும், இரண்டும் துடித்தால் வழக்கு.
* வலத்தொடை துடித்தால் வழக்குண்டாகி வெல்லும், இடைத்தொடை துடித்தால் இனிய வார்த்தை, இரு தொடைகளும் துடித்தால் செம்பொனுண்டு.
* வல முழந்தாள் துடித்தால் கோபம், இடமுழந்தாள் துடித்தால் பந்து சேரும், இரண்டு முழந்தாள்களும் துடித்தால் சம்பத்து உண்டாம்.
* வலது கணைக்கால் துடித்தால் சம்பத்து, இடது கணைக்கால் துடித்தால் சாவார்த்தை.
* வலது கண்டைக்கால் துடித்தால் அடிமையாவான், இடது கண்டைக்கால் துடித்தால் நோய் - துன்பமும் உண்டாம், இரண்டு கணைக்காலும் துடித்தால் பிரயாணம்.
* வலப்புறவடி துடித்தால் நோய், இடப்புறவடி துடித்தால் வழக்காகி வெல்லும்.
* வலது உள்ளங்கால் துடித்தால் பொருள் கை கூடும், இடது உள்ளங்கால் துடித்தால் பிணி வந்து நீங்கும், கால் விரல்கள் துடித்தால் செல்வமும் நன்மையும் உண்டாம்
என்று துடித்தலுக்குப் பலனினைக் குறிப்பிடுகின்றது.
(அபிதான சிந்தாமணி பக்கங்கள், 1051 -1052)
கண்துடித்தல்
கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையைத் தரும். இடக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், பொதுவாக இடப்பாகம் பெண்களுக்கு நன்மை தரும் என்றும், ஆண்களுக்கு வலப்பாகம் நன்மை தரும் என்றும் சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதனைப் பறை சாற்றும் வகையில் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
இடந்துடித்தல்
பெண்டிர்க்கு நன்மையும், ஆடவர்க்குத் தீமையும் எனக் கருதும் வகையில் இடக்கண் அல்லது இடத்தோள் துடித்தல். ஈண்டு தாம் இடந்துடிக்குமால் அஞ்சல் (கம்பரா. 5,3,35.) இடந்துடித்த காரணம் சொல். (தெய்வச். விறலி. தூது 126.) என்று தமிழ் இலக்கியம் பறை சாற்றுகின்றது.
கலித்தொகைப் பாடலில், பிரிவுத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி என்று நிமித்தம் கூறி ஆற்றுவித்ததை, நன்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின. நல்ல அழகையுடைய மையுண் கண்ணும் இடந்துடித்து நின்று நன்மை பயப்பதை,
”பல்லியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி லுண்கணு மாடுமாலிடனே”
(நச்சினார்க்கினியர், கலித்தொகை, பாடல்.11, அடிகள் 20 - 22)
என்று சான்று தெரிவிக்கின்றது.
மாதவிக்குப் பிரிவும், கண்ணகிக்குக் கூட்டமும் நிகழும் என்பதை,
”கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
எண்ணுமுறை இடத்திலும், வலத்தினும் துடித்தன”
(சிலப்பதிகாரம், கா.5. 237 -239)
என்று சிலம்பின் அடிகள் நன்மையும், தீமையும் மாறி விளைந்ததை சான்று பகர்கின்றன.
இவ்விதம் துடித்தல் பலன் பார்க்கப் பெறுகின்றது.