சில சமயம் நாம் திடீரென்று தும்முவதுண்டு. இப்படித் தும்மல் வந்து தும்முதலுக்கும் பலனுண்டு என்கின்றன சில ஜோதிட நூல்கள். அது குறித்த சில செய்திகளை இங்கு காணலாம்.
பல முறை தும்மினால் காரிய சித்தி, தும்மின பிறகு இருமின் லாபம், ஒரு தும்மல் தீமை, தும்மின பிறகு மூக்குச் சிந்தினால் மரணம், ஒரே தும்மல் தும்மின போதுடன் சிந்தின போதும், எடுத்த காரியத்தைச் செய்யாமல் காலம் போக்கிப், பிறகு செய்யின் தோடமில்லை.
தாம்பூலம் தரித்துக் கொளப் போகும் போதும், போஜனம் - உணவு செயத் தொடங்குகையிலும், படுக்கைக்குப் போகும் போதும் தும்முதல் நலமாம்.
ஒரு காரியத்தை ஆலோசிக்கும் போதாயினும், காரியத்திற்குக் பிரயாணம் - பயணம் செய்யும் போதாயினும், நான்கு கால்களை உடைய உயிர்களில் ஏதேனும் தும்மினால் மரணமாயினும், மரணத்தை ஒத்த தீமையாயினும் விளையும்.
தும்மிக் கொண்டே படுக்கை விட்டெழுதல் நல்லது, தும்மிக்கொண்டு உட்கார்ந்திருத்தல் காரியாலசியம்.
போராடிக் கொண்டே தும்முதல் காரிய ஆனி, தாம்பூலம் தரித்துக் கொண்டு தும்முதல் நல்லது. தும்முங் காலையில் செம்பு, பித்தளை முதலியவைகளைத் தொட்டுக் கொண்டிருக்கில் காரிய நலமாம், இரும்பு, வௌ்ளிகளைப் பிடித்துக் கொண்டிருக்கில் காரியங் கெடும்.
இளம் பிள்ளைகள், குழந்தைகள், தாசிகள், பறையர் தும்மின் காரிய சித்தி. கர்ப்ப ஸ்திரீ, மலடி, துாரமானவள், விதவை, கண்ணில்லாள், ஊமை, மொண்டி, வண்ணாத்தி, வாணிச்சி, சக்கிலிச்சி, சுமை தூக்கிக் கொண்டிருப்பவள் இவர்களில் எவர் தும்மினாலும் கட்டங்கள் உண்டாம்.
நெடியினாலும் மூக்குத்தூள் போடுவதனாலும் உண்டாகும் தும்மல் பலனில்லை என்று தும்மலுக்குப் பலனினைக் குறிப்பிடுகின்றது. இவை யாவும் அக்கால வழக்கில் இருந்த முறையை ஒட்டி குறிப்பிடப்பெற்றுள்ளது.
(அபிதான சிந்தாமணி பக்கம், 1055)
தும்முதல்
தும்முதல் என்பது ஒரு செயல் அப்படியே நிறைவேறும் என்றும், அவரை யாரோ விரும்புகின்றனர் என்றும், மேலும் வளர்க, பெருகுக எனும் பொருளிலும் உள்ளதாய் பழந்தமிழர் நம்பினர். இன்றும் இது நடைமுறையில் உள்ளது. குழந்தை தும்முகின்ற போது ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை என தும்முவதற்கு ஏற்ப நுாறு, இருநுாறு, முந்நுாறு என்று அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயுள் வளர்க எனும் பொருளில் இன்றும் நாம் சொல்லுகின்ற வழக்கம் உள்ளது.
சீவக சிந்தாமணியில் சுடுகாட்டில் சீவகன் பிறந்த போது, அவன் தும்மியதால் சீவ என விசயைக்கு பிரசவம் பார்த்த அக்குலதெய்வம் வாழ்த்தியமையால் சீவித்து வாழ்வாயாக எனும் பொருள்படி அமைந்ததே சீவகன் எனும் பெயர் என்று பெயர் சூட்டியதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தலைவன் தலைவியை நினைக்கத் தலைவிக்குத் தும்மல் வரும் எனும் நம்பிக்கை இருந்ததை,
”உள்ளிய தன்மையர் போலும் அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்”
(ஐந்திணை எழுபது பாடல், 40 - 3 - 4)
எனும் ஐந்திணை எழுபது பாடல் அடிகள் சான்று பகர்கின்றது.
ஒருவர் தும்மினால் தும்மியவரை அவருக்கு வேண்டியவர்கள் நினைக்கிறார்கள் என்பதனை,
”தும்முச் செறுப்ப அழுதால் நுல்மருள்ள
எம்மை மறைத்திரோ வென்று”
(குறள் - 1317)
”வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீரென்று”
(குறள் - 1318)
எனும் வள்ளுவரின் குறட்பாக்களின் வழி தும்முதல் எனும் செயல் மூலம் தன்னை விரும்புபவர்கள் நினைக்கிறார்கள் எனும் கருத்தும் நிலவி வந்ததை இவை சான்று பகர்கின்றதன் மூலம் நாம் அறியலாம்.
இவ்விதமாக முதலியவற்றிற்குப் பலன் தமிழ், சோதிட இலக்கியத்திலும் சான்றுடன் குறிப்பிடப்பெற்றுள்ளது.