இரேகைகளுக்கான பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
மனிதன் உடலில் நெற்றி, கை உள்ளிட்ட சில பகுத்களில் காணப்படும் இரேகைகளுக்கேற்றபடி அவர்களது வாழ்நாளில் சில பலன்கள் ஏற்படும் என்று அபிதான சிந்தாமணி எனும் சோதிட நூல் தெரிவிக்கின்றது.
நெற்றி இரேகை
நெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் இருந்தால் அவனுக்குத் தாரம் இரண்டு. பிதா - தந்தை வியாதியால் துன்புறுவன்.
நெற்றியில் 3, கழுத்தில் 2, ரேகைகள் இருந்து முதுகின் வலப்புறம் மறுவொன்று காணப்படின் ஒரு தாரம் கெடும். மறு தாரம் நிலைக்கும். வறுமை அடைவன்.
நெற்றியில் 2, ரேகைகளிருக்க இடப் பக்கம் மறுவுண்டாயின் மனைவி மக்கள் பகைமை கொண்டிருப்பர். பொருள் நட்டமாய் உதவியின்றி இருப்பன்.
நெற்றியில் ஐந்து வரைகள் இருக்கின் விசனம், பொருள் நில்லாது. நெற்றியிலும், கழுத்திலும் மும்மூன்று ரேகைகள் இருப்பின் பொருள் உண்டாகிக் கெடும். வேளாண்மையில் அவை பலன், நெற்றியில் மூன்று, ரேகைகளும் கழுத்தில் ஒன்றும் இருக்கின் ஜலபயம், (நீரினால்) பொருள் சேரும், இடரில்லை, அதியோகம், குழந்தைகள் உண்டாம். நெற்றியில் மூன்று, ரேகைகளிருக்கக் கண்கள் கறுத்து மூக்கு நீண்டிருக்கின், இரண்டு தாரம் உடையவன். சமர்த்தன் - திறமைசாலி. இவனுக்கு முப்பத்தொன்றாவது வயதில் நெற்றியில் மூன்று இரேகைகளும் இடது புறத்தில் மங்கு மறுவிருக்கின் பெருந்துயர், பொருள் நில்லாது, உயிர்ச்சேதம், மனைவி சேதம்,
நெற்றியில் நான்கு இரேகைகளும் வலப்புறத்தில் மங்கிருக்கின் துன்பம் நீங்கும். நெற்றியில் ஐந்து வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் மத்தகத்தில் மாலை போல் மூன்று வரைகளும் உள்ளனவாய்க் கன்னத்தில் மறுவுள்ளவன் விசனமும் அலைச்சலும் உள்ளவன் ஆவான். நெற்றியில் நான்கு மற்றும் இரண்டு வரைகள் துண்டித்து நிற்க உட்கழுத்தில் மூன்று வரைகள் உள்ளவன் பொருளற்றவன் ஆவான். நெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் ஒரு வரையும் உள்ளவன் கல்வி, பொருள் அற்றவனாய்க் கடனுள்ளவன் ஆவன். நெற்றியில் பொன் போன்றவரை நான்கில், ஒன்று துண்டாக நிற்கக் கழுத்தில் இரண்டு ரேகைகள் உள்ளவன் செல்வன், யோகவான், உபகாரி, சிறு வயதில் கண்டம். நெற்றியில் இரண்டு வரைகள் நிலை குலைந்து தோன்றில் பொருள் அற்றவனாவன்.
கைரேகைகள்
கையில் அன்னவரை மேலேறி அதனருகில் கறுத்தது போல் ஒரு ரேகை இருந்தாலும், இரண்டு வரைகள் இருந்தாலும், சிறு விரலில் நான்கு வரைகள் இருந்தாலும், ஓரங்குலத்தில் இரண்டு வரைகளிருந்தாலும் வறுமையால் வீட்டை விட்டு விலகுவன். முதலிற் பெண் பிறந்து மாயும். பிறகு செல்வம் உண்டாம்.
கையில் அன்ன வரை கீழ் நோக்க அதன் அருகில் இரண்டு வரைகளிருந்தால் பொருள் அற்றவன், கடனுண்டாம், விசனமுண்டு. மணிக்கட்டில் இரேகைகள் இரண்டு இருக்கின்றவன் இராஜ போகம் உள்ளவன். மூன்று இருக்கப் பெற்றவன் ஸ்திரிலோலன், நான்கு இருக்கப் பெற்றவன் பிரபுவாயிருப்பான். இவை கங்கண ரேகைகள் எனப்படும்.
அங்கை விரிவாய் ரேகைகள் அதிகமின்றி இருப்பின் தீர்க்காயுள் உள்ளவனும் போகியாயும் இருப்பன். அங்கை சிவக்கின் தனவான். பசந்திருப்பின் பெண் போகி. சுண்டு விரற்குச் சற்று இறக்கத்தில் உண்டாய் மேல் நோக்கும் இரேகை ஆயுட்ய ரேகை. அது சுட்டு விரலைத் தாண்டிச் செல்லின் அவனுக்குத் தீர்க்காயுள், அது எந்த விரல்களின் அடியில் நிற்கிறதோ அவ்விரல்களுக்கு 25வயதுகளாகக் கணித்துக் கொள்க. ஆயுட்யரேகை சிதறித் தடையுண்டு நிற்கில் வியாதி முதலானவற்றால் கண்டம்.
ஆயுட்ய ரேகையை அடுத்த ரேகை ஸ்திரி ரேகை - பெண்ரேகை. பெருவிரற்குக் கீழ் மணிக்கட்டிற்கு நடுவிற் பிறந்து மேலேறும் ரேகை புருடரேகை என்று பெயர். புருடரேகை, பெண் ரேகை இரண்டும் கலந்திருப்பின் தம்பதிகள் சிநேக பான்மையாய்க் கலந்திருப்பர். கலவாது இருப்பின் வியோகம் உண்டாம். புருட ரேகை அதிகமாகப் பெருகியிருக்கின் புருட சந்ததியாம். பெண்ரேகை, வளர்ந்திருப்பின் பெண்களுண்டாம். இப்புருட ரேகை பெண் ரேகைகள் இரண்டும் கலவாதிருப்பின் மணமாகாது. விவாகமாயினும் பலனில்லை. அங்கையில் ஆயுட்யரேகை புருடரேகை பெண் ரேகைகள் மூன்று மாத்திரம் இருக்கின் சம்பத்து உண்டாம். பல ரேகைகள் இருக்கின் வறுமை.
மணிக்கட்டின் நடுவிடத்திற் பிறந்து ஸ்திரீ புருட ரேகைகளுக்கு நடுவாக நீண்டு ஆயுட்ய ரேகைக்குக் குறுக்கில் செல்லும் ரேகை தனரேகையாம். அது செவ்வையாக மேற்சென்றிருக்கின் அவன் சீமானாய்ச் செல்வனாயிருப்பன். அது முதலில் வளைந்து புருட ரேகையுடன் கலந்திருப்பின் செல்வம் சுயார்ஜிதம். (பூர்வீகம் - பழமை) தனரேகையின் இடையில் தடையுள்ள ரேகைகள் வரின் செல்வம் கள்வராலும் செலவாலும் அழியும். நான்கு கத்திரி ரேகைகள் இருக்கின் தரித்திரனாவன். தனரேகை சிதறித் தோன்றின் அப்போதைக்கப் போது தன வருவாயுண்டாம். தனரேகை இல்லாதிருக்கின் வறியனாவன். சிறிதிருக்கின் கொஞ்சம் சம்பாதிப்பன்.
ஆயுட்ய ரேகைக்கு மேலாய்த் தனரேகைக்கு இடப்பக்கமாய் நீண்டிருக்கும் ரேகை வித்தியா ரேகையாம். அது எவ்வளவு பிரபலமாய் இருக்கிறதோ அவ்வளவிற்கு வித்வானாம். அங்கையின் விளிம்பில் ஆயுட்ய ரேகைக்கு மேலும் சுண்டு விரற்குக் கீழ்ப்பாகத்தில் நடுவிலுள்ள குறுக்கு ரேகைகளுக்குப் பத்தினி ரேகைகள் என்று பெயர். அவை ஒன்றுக்கு அதிகமாக இருக்கின் பத்னிகளே அன்றி விலைமாதரும் பலரிருக்கலாம். குதிரை, யானை சவாரி, குடை, கிரீடம், சங்கு, தாமரை, துவசம் இவை அங்கையில் இருக்கப் பெற்றவன் பிரபு ஆவன். சூர்யரேகை, சந்திர ரேகை இருக்கப் பெற்றவன் தெய்வ பக்தி உள்ளவனாய் லோக பூஜ்யனாவன்.
மச்ச ரேகையுள்ளவன் செல்வமுள்ளவனாய்ப் பலர்க்கு அன்னம் அளித்துப் புண்யவானாய்ப் புத்திர சந்ததி உள்ளவனாவன். தராசின் ரேகை உள்ளவன் பாக்யவான் ஆவன். விரல்களின் நுனியில் ஒரு சக்கரம் இருக்கப் பெற்றவன் போகியாவன். இரண்டு உள்ளவன் ராஜ பூஜிதனாவன். மூன்று சக்கரம் உள்ளவன் லோகம் - உலகம் சஞ்சாரியாவன். நான்கிருக்கப் பெற்றவன் பண்டிதனாவன்.
அங்கையின் பெரு விரலின் மேற்கணுவில் அரிசி போலவும், கோதுமை போலவும், உள்ள ரேகை யவரேகை என்று பெயர். அது பெற்றவன் தான்ய சம்பத்துள்ளவனாய்ப் போகத்தை அனுபவிப்பன். பெருவிரலின் நுனி சுட்டு விரலின் நடுக்கணுவைப் பொருத்தியிருப்பவன் சில்பம், சஸ்திரம், எழுத்து இவற்றில் பெயர் பெற்றவன் ஆவன். பெருவிரலின் புறத்தின் கணுவில் உள்ள ரேகைகள் புத்திர ரேகைகளாம். அவற்றில் கீறுள்ளவை பெண்கள். பின்னல் போன்றவை குமாரர்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுளுள்ளவை. பின்னல் போன்றவை குமாரர்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுள்ளவை. குறியவை அற்பாயுள் உற்றவை. அந்த ரேகைகள் இல்லா விடின் சந்தானம் இல்லை.
சுட்டு விரலின் அடியில் குறுக்காக இரண்டு ரேகைகளுள்ளவன் கார்ய சித்தியடைவன். நடு விரலடியில் அவ்வாறு பெற்றவன் தனம், ஸ்திரீ போகம், சந்தானம், செல்வம் உள்ளவனாவன். மோதிர விரலில் அவ்வாறு பெற்றவன் வித்வான் ஆவன். சுட்டு விரலடியிற் பெற்றவன் இளமையில் விளையாட்டால் சுகம் அடைந்தவன்.
(அபிதானசிந்தாமணி, பக்கம், 247 - 249)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.