இருபத்தியேழு நட்சத்திரங்களில் சுரம் ஏற்பட்டால் மருந்து இல்லாமல் அவற்றின் பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
சோதிடத்தில் நட்சத்திரம் பற்றியும், நம் உடலினுள் ஏற்படும் சுரம் பற்றியும் அதற்கான காரணம் முதலியனவும் இவைகள் மருத்துவ நூலினுள் மருந்தில்லா முறையில் சோதிடத்தின் நெருங்கிய முறையினுள் எவ்விதம் தொடர்பு கொண்டுள்ளன என்பதைப் பற்றியும் நாம் இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவத்திற்கும், சோதிடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு
அசுவிணி முதல் ரேவதி முடிய உள்ள நட்சத்திரங்களில் நான்கு பாதங்களில் சுரம் ஏற்பட்டால் அவை எந்த நாளில் எப்போது குணமடையும் என்பதைப் பழந்தமிழ் நூலான அகத்தியர் இரண்டாயிரம் எனும் நூலில் மூன்றாம் பாதத்தில் சுர கண்டிகை எனும் பகுதியில் இச்செய்திகள் பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றது. திருவாதிரை, விசாகம் நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்பெறவில்லை. இவை சுருக்கமாக அட்டவணை நோக்கினில் இங்கே தரப்பெறுகின்றது.
சோதிடவியலின் பஞ்ச அங்கங்கள்
சோதிடவியலின் ஐந்து உறுப்புகளாக விளங்குவன வாரங்கள், திதிகள், கரணங்கள், நட்சத்திரங்கள், யோகங்கள் ஆகிய இவையே. இவை இல்லை எனில் பஞ்சாங்கம் இல்லை. சோதிடம் இல்லை. இவையே சோதிடவியலுக்கு அடிப்படை இலக்கண விதி எனலாம்.
1. வாரங்கள் - சப்த வாரங்கள் - 7
2. திதிகள் - 30 (வளர்பிறை 15, தேய்பிறை 15)
3. கரணங்கள் - 11
4. நட்சத்திரங்கள் - 27
5. யோகங்கள் - 27
நட்சத்திரங்கள்
இறைவனால் பூமியினில் பிறந்து வாழும் மனிதர்களின் வாழ்நாட்களில் சந்திரன் நடக்கும் நட்சத்திரங்கள் இருபத்தியேழு என்று சோதிட நுால்கள் குறிப்பிடுகின்றன. 28வது நட்சத்திரமாக அபிஜித் குறிப்பிடப்பெறுகின்றது.
நட்சத்திரங்கள் எண்ணிக்கை
சோதிடவியலில் மொத்த நட்சத்திரங்கள் 28 ஆகும். அவற்றுள் அபிஜித் எனும் நட்சத்திரம் தற்பொழுது வழக்கினில் இல்லை. தற்போது வான மண்டலத்தினில் 27 நட்சத்திரங்கள் காணப்பெறுகின்றன. அவை அசுவதி முதல் ரேவதி முடிய உள்ளவைகள். 360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தில் ஒவ்வொரு இராசியிலும் 27 நட்சத்திரம் ஆக ஒன்பது பாதமாக இவை மேடம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு இராசியிலும் இடம் பெற்றுள்ளன. இவ்விதமாகவே நட்சத்திரங்கள் இவற்றில் பயணம் செய்கின்றன. சந்திரன் பயணம் செய்வது கோட்சாரப்பலன் பார்க்கப் பெறும் முறை பெருமளவில் கணக்கினில் எடுத்துக் கொள்ளப் பெறுகின்றது. இவற்றின் அடிப்படையில் சொல்லப் பெற்ற சுரம் பற்றிய செய்திகளை இங்குக் காண்போம். இங்கு எந்தக் கோள் என்று குறிக்கப் பெறவில்லை. நாம் சந்திரன் என்று கொள்வது சரியாகப் பொருந்தும்.
நட்சத்திரங்கள் பெயர்ப் பட்டியல்
1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
|
15. சுவாதி
16. விசாகம்
17. அனுடம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
|
ஆக நட்சத்திரங்கள் 27 என்றும் தினந்தோறும் வருகின்ற இந்த நட்சத்திரங்களில் சந்திரன் பயணிப்பதையே இராசி என்கின்றனர்.
நட்சத்திரங்களும் - சுரமும்
ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சோதிடத்தினுள் - பஞ்ச அங்கங்கள் - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தனுள், நட்சத்திரங்கள் பற்றிய மருத்துவத்துடன், சோதிடத்துடன் நெருங்கிய தொடர்புடைய செய்திகளை பழம் நூலான அகத்தியர் இரண்டாயிரம் மூன்றாம் பாகம் எனும் நூலினுள் ”நட்சத்திரப் பொதுப்படலம்”, ”நட்சத்திர பாத பலப் படலம்” எனும் பகுதியில் அகத்தியர் சித்தர் சுரகண்டிகை எனும் வைத்தியப் பிரிவில் குறிப்பிட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
சோதிடத்திற்கு இலக்கணமாக வகுக்கப் பெற்றவைகள் 27 நட்சத்திரங்கள், ஏன் எனில் இவை என்றும் மாறாதது. இன்றியமையாதது. பலன்கள் இதை வைத்தே பார்க்கப் பெறுகின்றது.
நோய்களின் எண்ணிக்கை - சுரம் - முதல் நோய் ஆகக் கருதப்பெறுகின்றது. உருத்திரன் கோபம் சுரமாக ஏற்படும் என்று இப்பழம் நுால் தெரிவிக்கின்றது.
நோய்களின் எண்ணிக்கை - சுரம் - முதல் நோய்
நம் உடலில் தோன்றும் வியாதிகள் மொத்தம் 4448 என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் முதலாவது சுரம் என்கின்றது. முனிவர்கள் வடநூலிலிருந்து திரட்டி எடுத்தெழுதிய சுரநோயின் நிதானம், உற்பத்தி இவைகளைத் தமிழ் தெரிந்த பகுதிகட்கு பயன்படுத்த, தமிழில் செய்ய விட்டுணுவின் மாபாதங்களைத் துதிக்கின்றேன் என்றும், ஆகாய வழியினில் சஞ்சரிக்கின்ற தேவர்கட்கு கணபதி எப்படியோ அப்படியே இம்மண்ணில் வாசம் செய்யும் மனிதர்கட்கு வரும் நோய்களில் சுரம் முதலாவதாகும் என்றும் இதனை,
“சீரான முனிவோர்கள் … … … கணபதிக் காப்பதாமே.”
என்று குறிப்பிடுவதால் முதல் நோய் சுரம் என அறியலாம்.
ரோகோற்பத்தி
1. சுரரோகம் பெயர்க்காரணம்
2. உருத்ரன் கோபம் - சுரம்
3. சுரரோகத்தின் வேறு பெயர்கள்
பெயர்க்காரணம்
தட்சன் யாகத்தைப் பரமசிவன் நெற்றிக் கண்ணால் அழித்த போது ஏற்பட்ட கோப அக்னியே “சுரரோகம்” எனப் பெயர் பெற்றது என்றும்,
உருத்ரன் கோபம்
உருத்ரன் கோபமே சுரம் என்றும், இதனை,
“உரமுறு தக்கன் யாகத் துருத்திர னெற்றிக் கண்ணாற்
சுரனுய ரோகம் பற்றி … … … பத்தே.”
என்ற பாடல் தெரிவிக்கிறது.
சுரரோகத்தின் வேறு பெயர்கள்
பாபம், மிருத்யு, சோசன், கோபம், மந்தன், மயன், தருதம், அபசாரம் என்ற வேறு பெயர்களும் உண்டு என்றும் குறிப்பிடுகின்றது.
சுரம் ஏற்படக் காரனம் - சுரநிதானம்
தேகத்தில் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல், வயிற்றிலுள்ள அதிக வெப்பத்தை வெளியே வீசச் செய்யும். அப்போது தொட்டால் சுரம் காயும். மேலும் கோபத்தினாலும், வெயிலில் நடப்பதாலும், படுத்திருப்பதாலும், பசித்திருப்பதாலும், பசித்த போது, சாப்பிடாமல் இருப்பதாலும், அதிகமாகத் தலையில் சுமையைத் தூக்குவதாலும், புகையிலையைப் போடுவதாலும், மலச்சிக்கலாலும், சுர நோய்உண்டாகும். நீடித்த மலச்சிக்கல், பழயமுது சாப்பிடுதல், ஆகாரம் சரியாக இல்லாமலிருந்து, அதிகமான வருத்தம் தூங்காமலிப்பது, தண்ணீரில் அதிகமாகக் குளிப்பது, பாரத்தைச் சுமப்பது ஆகிய இவைகளினாலும் சுரம் ஏற்படும். இச்செய்தியினை மூன்று பாடல்கள் தெரிவிக்கின்றது.
நாழிகை
நட்சத்திர பாதங்களை நான்காகப் பிரித்தால் ஒரு நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை 4 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாதமாகக் கணக்கிடுகிறார்கள். நட்சத்திரத்தின் மொத்த நாழிகை 60 என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பாதமும் 15 நாழிகை அதாவது 6 மணி நேரங்கள் ஆகும்.
ஒரு நாழிகை 24 நிமிடம், இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம் ஆகும். இவ்விதமாக அன்றைய நட்சத்திரம் பாதம் கணக்கிட்டு அதன் அடிப்படையில் சுரம் வரும் நாளையும், அது குணமாகும் நாளையும் அறிந்ததைக் குறிப்பிடுகின்றது. நட்சத்திர பாத அடிப்படையில் சுரம் மருந்தில்லாமல் தீரும் முறையினைக் காண்போம்.
நட்சத்திரங்களின் பலன்கள்
அசுவினி நட்சத்திரம் முதல் ரேவதி முடிய உள்ள நட்சத்திரங்கள் (திருவாதிரை, விசாகம் கொடுக்கப் பெறவில்லை.) எந்ததெந்தப் பாதங்களில் சுரம் ஏற்பட்டால் அவை எவ்வித மருத்துவமும் இல்லாமல் எந்நாளில் எப்போது குணமடையும் என்று பழந்தமிழ் நூலான அகத்தியர் இரண்டாயிரம் எனும் நூலின் மூன்றாம் பாகத்தில் சுரகண்டிகை எனும் பகுதியினில் நட்சத்திர பாதம் அடிப்படையினில் செய்திகள் கூறப்பெற்றுள்ளன.
அசுவினி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் 9 நாட்கள் கழித்து குணமாகும். இரண்டாம் பாதத்தில் ஆரம்பித்தால் 10 நாட்களில் தீரும். மூன்றாம் பாதமாகில் 15 நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நோயாளி இறப்பான்.
“குதிரை தன்னைச் சேர்முதற்கால் குறித்த ஒன்பது நாட்செல்லும்
முதிரவிரண்டாம் பக்கத்தில் முதவாய்ப் பத்தா னாளாகும்
பதிசேர் மூன்றாங் காலுக்கே பகரும் பதினைந்தானாளே
நிதிசேர் நாலாங்காலுக்கு நில்லா துயிரும் நில்லாதே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
பரணி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் மூன்றாம் நாள் தீரும். இரண்டாம் பாதத்தில் ஆரம்பித்தால் ஏழாவது நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் 15 நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் முப்பத்திரண்டு நாட்களில் குணமாகும்.
“சுரத்தார் பரணி நாளுக்குத் தோன்றுங்காலே மூன்றாநாள்
உரைத்த விரண்டாங் காலுக்கே முளதேயேழா நாள் சொல்லும்
நிரைத்த மூன்றாங் காலுக்கு நேராய் பக்கம் பதினைந்தாம்
சுரத்தீர் நாலாங் கால்மாதந் தனினாளிரண்டுஞ் சுகமாமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
கார்த்திகை நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் அப்படி தான். மூன்றாம் பாதமாகில் பதினைந்து நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் பதினெட்டு நாட்களில் குணமாகும்
“கார்த்திகை முதற்காலொன்பதுநாட் காட்டுமீழக்கு மிரண்டாங்கால்
மாற்று மூன்றாங் கால்தானே மருவு பதினைந்தாய் நலமே
பார்த்து நாலா வதுகாலே பதித்ததிங்கள் பதினெட்டாம்
போற்று மிதுநற் குணமாகும் பொருந்துமிதுவே பொருந்தீரே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
ரோகிணி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஆயுளைப் போக்கும். இரண்டாம் பாதத்தில் ஆரம்பித்தால் பதினெட்டு நாள் கழித்துக் குணமாகும். மூன்றாம் பாதமாகில் இருபத்திரண்டு நாட்கள் கழித்துத் தான் குணமாகும். நாலாம் பாதத்தில் இரண்டு மாதத்தில் தீரும்.
“ரோகிணி மரிக்கு முதற்காலே தம்மிலிரண்டா வதுவென்னில்
ரோகம் பதினெட்டாம் சுகமே லொருவாமூன்று காலுக்கு
மாதமிருபது ரெண்டுகுண மாமே னாலாங்காலுக்கு
போகவிரண்டு திங்களு நாள் பொருந்திருபத்தஞ் சாய்விடுமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
மிருசீரிடம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒரு மாதத்தில் தீரும். இரண்டாம் பாதத்தில் எட்டு நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் இருபது நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தைந்தாம் நாளில் குணமாகும்.
“மிருகந்தீரர் முதற்காலே விடுமோதிங்க ளொன்றானால்
மறகு மிரண்டாங் காலாகில் மாறவெட்டு நாளாமே
குறுகு மூன்றாங்காலுக்கே குறித்து யிருபது மாகிவிடு
தறுகா நாலா வதுதானே தானேயிருபத் தஞ்சென்றே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
புனர்பூசம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஏழாவது நாளில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினைந்தாவது நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் பத்தொன்பது நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நோயாளி பிழைக்க மாட்டான்.
“புணரி பூச முதலதுவே பொருத்த சுரம்நா ளேழாகும்
மரண ரண்டாவது தனக்கு மாறல் பதினஞ் சாகுமென
குணமிக் கதுமூன் றானதுவே குறித்த பத்து மொன்பதும்
துணவே கொடுத்த னாலாங்கா லுளமே மரிக்குங் கண்டிரே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
பூசம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஏழாவது நாளில் தீரும். இரண்டாம் பாதத்தில் பனிரெண்டாவது நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் பத்தொன்பது நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தியேழாவது நாளில் தான் இறங்கும்.
“பூசநாட்சுர மேழுநாட் முதற் பொருக்குமே யிருகாலினில்
நேசநாளீராறு காண்விடு நீதியாமிகில் மூன்றுமே
பாசமாய்விடும் பத்துமொன்பது பகர நாலுஞ் சொல்லுகவே
தொகைகேளி ருபத்தேழு சுத்தமாய் வரு தேகமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.