கூப சாஸ்திரம்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
கூபம், கிணறு வெட்ட கூப ஆரூடம், அவையாவன: பலன்கள், கூபவிதி, திசைகளில் கிணறுகளின் பலன்கள், கூபச்சக்கர பலன், கீழூற்றுகள், மேலுாற்றுகள் அறிதல், ஊற்றுகட்குப் புறநடை, மடங்கா நீர், கீழ்நீர் அறிதல், மடங்கா நீரை வேறொரு வகையால் உணர்த்துதல், பழங்கிணறு உணர்த்துதல், மடங்கா நீரை வேறொரு வகையால் உணர்த்துதல், பழங்குழிகளும், ஓடைகளும் உணர்த்துதல், உப்பு வரி, கரைவலிவு நீர்த்தெளிவு ஆகிய இவைகளை அறிதல், வெள்ளுவரி, கரையழிவு, இடையூற்று, கீழ் மோனை இவைகளை அறிதல், பெருநீர், மோளை, கல், எலும்பு ஆகிய இவைகளை அறிதல், நீர் முழுவதும் அறிதல், கிணற்றின் ஆழமறிதல், கீழ் நீர் வினவின் நிலத்தின் கண் உணர்த்தும் என்றறிதல், கிணற்றின் அனுபவம் அறிதல், கிணறிருக்கும் திசையின் பலனை அறிதல், வினாவினான் நிலம் கீறுதலின் பலன், கிணறு வெட்டத் தொடங்கும் மாதங்களின் பலன்கள், கிணறு மூடும் போது நாம் செய்ய வேண்டியவை ஆகிய உட்தலைப்புகளின் வழி இந்த சாஸ்திரத்தைப் பற்றிக் காண்போம்.
தமிழ் மொழி அகராதி தரும் பொருள்
கூபம் - கிணறு, கூவல் - கிணறு, பள்ளம்.
கேணி - அகழி, கிணறு, குளம். என்று பதிவிடுகின்றது.
கூபம்
ஜோதிடக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி, கூவ நூல் - கூப சாஸ்திரம். இது கீழ் நீர்க்குறி அறிவிக்கும் நூல் என்று குறிப்பிடுகின்றது. (ஜோதிட கலைச்சொல் பொருள் விளக்க அகராதி, ப.68)
கிணறு வெட்ட கூப ஆரூடம்
மேலும் இந்நுால் நீர் வளம் நிலைகள் அறிய உதவும் சாத்திரம் கூப சாத்திரம். கிணறு, கேணி முதலிய நீர் நிலைகள் வெட்டுவதற்குப் பூமிக்குக் கீழ் உள்ளவற்றை ஆரூட முறையாகக் காண்பது. விவரம் - கிணறு முதலியவை வெட்ட உத்தேசித்த இடத்தை சுத்தம் செய்து, குல தேவதையைத் தொழுது, அவ்விடத்தில் ஒருவனைக் கிழக்கு முகமாக வைத்து அவன் அங்கத்தில் மற்றொருவனைக் கொண்டு தொடச் செய்து, தொட்ட அங்கத்தைக் கொண்டு அறிதலாகும்.
அவையாவன: (பலன்கள் உடலின் உறுப்புகளை வைத்து குறிப்பிடுகின்றது)
1. தலையைத் தொட்டால் - நாலு முழத்துக்குக் கீழ் வடமேல் மூலையில் அதிக நீரூற்றும், தவளையும், அதன் கீழ் மூன்று முழத்தில் வெகு நீர் ஊற்றும் உண்டாகும்.
2. நெற்றியைத் தொட்டால் - கற்பாறையும், பதினொரு முழத்தில் குறைந்த ஊற்றும் உண்டாகும்.
3. கன்னத்தைத் தொட்டால் - ஆறு முழத்தில் நல்ல தண்ணீர் ஊறும்.
4. வாயைத் தொட்டால் - ஏழு முழத்தில் நீரூற்றும் கல்லும் உண்டாகும்.
5. முகத்தைத் தொட்டால் - ஆறு முழத்தில் நீரூற்று உண்டாகும்.
6. கழுத்தைத் தொட்டால் - பதினொரு முழத்தில் நீரூற்று உண்டாகும்.
7. தோளைத் தொட்டால் - ஏழு முழத்தில் பெரு மடையான நீரூற்று உண்டாகும்.
8. மார்பைத் தொட்டால் - கற்பாறையும் அதன் கீழ் மூன்று முழத்தில், தென் கீழ் மூலையில் நல்ல ஊற்றும் உண்டாகும்.
9. கையைத் தொட்டால் - வெகு சமீபத்தில் ஊற்று உண்டாகும்.
10. விரலைத் தொட்டால் - ஒன்பது முழத்தில் பெருமழை உண்டாகும்.
11. நகத்தைத் தொட்டால் - பழைய கிணறு, பத்து முழத்திற்குக் கிழக்கில் சிறு ஊற்று உண்டு.
12. இடுப்பைத் தொட்டால் - ஊற்று இல்லை.
13. தொடையைத் தொட்டால் - ஆறு முழத்தில் ஊற்று உண்டு.
14. முழங்காலைத் தொட்டால் - ஐந்து முழத்தில் பெருமழை உண்டு.
15. கணுக்காலைத் தொட்டால் - பெருமழை உண்டாகும்.
16. பாதத்தைத் தொட்டால் - நீர் இல்லையாகும்.
என்று இந்த சாஸ்திர நுால் கூபம் பற்றித் தெரிவிக்கின்றது. (மேலது, பக்கம் 58)
கூபவிதி
கூபவிதியும், பசுக்களைக் கட்டும் விதியும், கூபச் சக்கரபலன் பற்றியும், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி எனும் நுால் தரும் செய்திகளைக் காண்போம்.
வீடுகளுள் வருண பாகத்தில் தானே கிணறுகள் அமைய வேண்டியது பொதுவாயினும், திசைகளின் அமையும் பலன் பற்றி குறிப்பிட்டுள்ளது.
திசைகளில் கிணறுகளின் பலன்கள்
இந்நுால் வடக்கு முகம், கிழக்கு முகம் ஆகி இருக்கின்ற வீட்டில் நிருதி மூலையிலும், தெற்கு முகம், மேற்கு முகமான வீட்டில் ஈசானியத்திலும் இருப்பது ஒரு பட்சம். மற்றும் வாயு மூலையிலும் தெற்கிலும் கிணறுகளிருப்பது மத்திம பட்சம். எந்த முகமாயிருக்கின்ற வீடுகளிலேயும், அக்கினி மூலையில் இருப்பது அதமம். அதனால் கொடிய தீங்கு உண்டாம் என்று குறிப்பிடுகின்றது. (வீராசாமி, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி ப.32)
கூபச்சக்கர பலன்
நீர் உண்டென்பது பொதுவிதியாக உணர்த்தி உடனே மடங்காநீர் உண்டென்றும், கீழ்நீர் உண்டென்றும் சொல்லப்படும்.
உதயம், ஆரூடம், நீர்க்கீழ் ஆனவை, ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் இவைகளாகில் நீர் உண்டென்றும், அவற்றிற் சந்திரன், சுக்கிரன் இவை நிற்பினும், அவற்றை நோக்கினும் மடங்காநீர் உண்டென்றும், புதன், குரு இவர்கள் நிற்கினும் அவற்றை நோக்கினும் கீழ்நீர் உண்டென்றும் சொல்லப்படும்.
“நீர்காட்டுந் தலமதனைப் பன்னிருகூறாக்கி
நிகழ்த்துகின்ற ராசிதனைப் பிரமமேல்வைத்து
வார்காட்டும் வனமுலையாய் வலமிடமா யெண்ணி
மதிவெள்ளி யெவ்விடமோ வவ்விடத்தில் நீராம்
பார்காட்டும் பாம்பாகிற் பழங்கிணறாமென்க
பரிதிசனி செவ்வாயேல் நீரில்லை யென்க
சீர்காட்டும் புதனாகிற் கல்லென்று சொல்க
சொம்பொன்னே லற்பசல மென்கமடமயிலே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கும்.
கீழூற்றுகள், மேலுாற்றுகள் அறிதல்
மேல் உணர்த்திய மடங்காநீரை வேறொரு வகையினால் எடுத்துணர்த்தி நீரின்மையும் கீழூற்று மேலுாற்றுகளையும் அறிதல்
உதயம், ஆரூடம், நீர்க்கீழ் ஆனவை இராசிகளிற் பாம்பு நிற்கினும் அவற்றை நோக்கினும், மடங்கா நீருண்டென்றும், சூரியன், அங்காரகன், சனி ஆகிய இவர்கள் நிற்கினும், அவற்றை நோக்கினும் நீர் இல்லையென்றும், நீர்கோட்கள் ஆரூடத்தில் நின்று நீரில்லாத கோட்கள் கவிப்பில் நிற்கில் கீழூற்று என்றும், நீர்க்கோட்கள் கவிப்பில் நின்று நீரில்லாத கோட்கள் ஆரூடத்தில் நிற்கில் மேலுாற்று என்றும் சொல்லப்படும்.
பாம்பு உதயத்தில் நின்றவிடத்து நீர்க்கோட்கள் ஆரூடத்தில் நின்று நீரில்லாத கோட்கள் கவிப்பில் நிற்கில் மேலுாற்று என்றும், நீர்க்கோட்கள் கவிப்பில் நின்று நீரில்லாத கோட்கள் ஆரூடத்தில் நிற்கில் கீழூற்று என்றும், இங்ஙனம் மாறுபடுத்திச் சொல்லப்படும் என்று இந்நுால் குறிப்பிடுகின்றது.
ஊற்றுகட்குப் புறநடை
உதயம், ஆரூடம், நீர்க்கீழ் ஆனவை நீரிராசிகளாய் அவற்றில் நீர்க்கோட்கள் நிற்கில் மேலுாற்று என்றும், நீரில்லாத கோட்கள் நிற்கில் கீழூற்று என்றும் சொல்லப்படும்.
மடங்கா நீர், கீழ்நீர் அறிதல்
கண்டங்களிலே நின்ற சந்திரனைக் குரு கூடி நிற்கினும், நோக்கினும், மடங்காநீர் உண்டென்றும், சுக்கிரன் கூ நிற்கினும், நோக்கினும் கீழ்நீர் உண்டென்றும் சொல்லப்படும்.
மடங்கா நீரை வேறொரு வகையால் உணர்த்துதல், பழங்கிணறு உணர்த்துதல்
கண்டங்களிலே நின்ற சந்திரனைப் பரிவேடங் கூடி நிற்கினும், நோக்கினும், மடங்கா நீர் உண்டென்றும், புதன், குரு ஆகிய இவர்கள் கூடி நிற்கினும், நோக்கினும் பழங்கிணறு உண்டென்றுஞ் சொல்லப்படும்.
மடங்கா நீரை வேறொரு வகையால் உணர்த்துதல், பழங்குழிகளும், ஓடைகளும் உணர்த்துதல்
கண்டங்களிலே சந்திரனாவது, சுக்கிரனாவது நிற்கினும் அவற்றை நோக்கினும், மடங்காநீர் உண்டென்று என்றும், இந்திர தனுசு, பரிவேடம், துாமம், நுட்பம் ஆகிய இவர்கள் நிற்பினும், நோக்கினும் பழம் குழிகளாதல், ஓடையாதல் உண்டென்று சொல்லப்படும்.
உப்புவரி, கரைவலிவு நீர்த்தெளிவு ஆகிய இவைகளை அறிதல்
கண்டங்களிலே சூரியன் நிற்கினும், நோக்கினும் உப்பு வரி என்றும், பரிவேடம் நிற்கினும், நோக்கினும் கரை வலிவு என்றும், சந்திரன், சுக்கிரன் ஆகிய இவைகள் நிற்கினும், நோக்கினும் நீர்த்தெளிவு என்றும், சந்திரன், சுக்கிரன் அல்லாத மற்றைய கோட்கள் நிற்கினும், நோக்கினும் நீர்த்தெளிவு இன்மை என்றும் சொல்லப்படும்.
வெள்ளுவரி, கரையழிவு, இடையூற்று, கீழ்மோனை இவைகளை அறிதல்
கண்டங்களிலே அங்காரகன் நிற்கினும், நோக்கினும் வெள் உவரி என்றும், புதன் நிற்கினும், நோக்கினும் கரையழிவு என்றும், அக்கண்டம் மிதுனம், கன்னி, சிம்மம் ஆகிய இவைகளாகில் இடையூற்று என்றும், கீழ் மோளை என்றுஞ் சொல்லப்படும்.
பெருநீர், மோளை, கல், எலும்பு ஆகிய இவைகளை அறிதல்
கண்டங்களிலே சனி, பாம்பு ஆகிய இவைகள் நிற்கினும், நோக்கினும் பெருநீர் மோளை என்றும், குரு நிற்கினும், நோக்கினும் எலும்பு உண்டென்றுஞ் சொல்லப்படும்.
நீர் முழுவதும் அறிதல்
கிணற்றின் ஆழக்குறியின் முதற்பங்கில் நீரும், நடுப்பங்கில் நீரும், கடைப்பங்கில் நீரும் உணர்த்தி எட்டு முழுத்திலே நீரும் பாறையடியில் நீரும் திப்பையடியில் நீரும் ஆகிய இவைகள் என்று அறிதல்.
கிணற்று ஆழக்குறிப்பின் சந்திரனுக்கு முதற்பங்கில் நீரும், சந்திரனுக்கு புதனுமல்லாத கோட்களுக்கு நடுப்பங்கில் நீரும், புதனுக்கு கடைப்பங்கில் நீரும், சூரியனுக்கு எட்டு முழத்தில் நீரும், கன்னியில் நின்ற பாம்பிற்குப் பாறையடியில் நீரும், சனிக்குத் திப்பையடியில் நீரும் என்றுஞ் சொல்லப்படும்.
கிணற்றின் ஆழமறிதல்
கீழ் நீரை எவ்வெவ்கோட்களால் நியமிக்கப்பட்டனவோ அவ்வவ் கோட்களின் கதிர்களும், மேற்படி கோட்கள் நின்றுள்ளனவோ எந்த இராசிகளோ அந்தந்த இராசிகளின் கதிர்களும், எத்தனையோ அத்தனையும் சாண்களாதலால் சாண்களை முழமாக்கி நின்றதைச் சாணாகக் கொண்டு இத்தனை முழம் இத்தனை சாண் என்று கிணற்றின் ஆழம், அத்தாட்சிகளையும் குறிக்க வேண்டும்.
கீழ்நீர்வினவின் நிலத்தின் கண் உணர்த்தும் என்றறிதல்
சூரியனுக்குக் காடாம், அங்காரகன், சனி ஆகிய இவர்கட்கு முட்களாம். பாம்பிற்றுத் தாழை புதர் புற்று ஆகிய இவைகளாம். சந்திரனுக்கு வாழை மரம், புதனுக்குப் பலாவாம். குருவுக்குத் தென்னை, பனை, கமுகு, மா ஆகிய இவைகளாம். சுக்கிரனுக்குக் கொடிகளாம்.
கிணற்றின் அனுபவம் அறிதல்
கீழ் நீர்க்காக இது வரையிற் கூறிய இடங்களில் எல்லாம் சுபக்கோட்கள் நட்பாட்சி, உச்சக் கோட்களாக நிற்கினும், நோக்கினும் கிணற்றை உடையான் அனுபவிப்பன். பாவக்கோட்கள் பகை நீச்சக்கோளாய் நிற்கினும், அவற்றை நோக்கினும் பிறர் அனுபவிப்பர். மேல் உணர்த்திய இடங்கள் சர இராசிகளும், உபய ராசிகளுமாக நிற்கினும், அவற்றை நட்பாட்சி, உச்சம் பெற்ற சுபக் கோட்களது நோக்கம் உள்ளவிடத்து உடையான் நன்மை அடைகுவன் என்றும், கிணற்றைத் தானே அனுபவிப்பன் என்றும், நோக்கம் இல்லாத இடத்து தீமை அடைகுவன் என்றும், கிணற்றைப் பிறர் அனுபவிப்பர் என்றும் சொல்லப்படும்.
கிணறிருக்கும் திசையின் பலனை அறிதல்
உடையவன் இருக்கும் ஊருக்கும், மனைக்கும் கிணறானது கிழக்கு, தென்கிழக்கு, தெற்காகில் மக்கள் அழிவாகும். தென்மேற்காகில் அடிமைகள் உண்டாம். மேற்காகில் பயிர்கள் நோய் கொள்ளும். வட மேற்காகில் குடும்ப விர்த்தியாம். வடக்காகில் தானிய விருத்தியாம். வட கிழக்காகில் தனப்பிராப்தி உண்டாம். பிரமத்தானமாகில் இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
வினாவினான் நிலம் கீறுதலின் பலன்
கீழ்நீர் வினாவினானை அந்நிலத்தைக் கீறிக் காட்டு என்றளவில் சிறு விரலால் கீறின் பெண்பேறு உண்டாம். அணி விரலால் கீறின் சம்பத்து உண்டாம். நடுவிரலால் கீறின் தேச சஞ்சாரம் வரும். சுட்டு விரல், பெருவிரல் ஆகிய இவ்விரல்களில் கீறினால் பொல்லாங்கு விளையும்.
கிணறு வெட்டத் தொடங்கும் மாதங்களின் பலன்கள்
கிணறெடுக்க மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய இம்மாதங்களாகில் பெரு நீண்டாகும். உத்தமமாகும். ஆடி, ஆவணி ஆகிய இம்மாதங்களாகில் அற்ப நீருண்டாகும். மற்றைய மாதங்களாகில் நீரின்மையாம். அதமமாகும். இப்படியே கோட்களின் அமைவும் உண்டாகுதல் கண்டு உறுதி சொல்லப்படும் என்று சர்வார்த்த சிற்ப சிந்தாமணி நுால் தெரிவிக்கின்றது. (வீராசாமி, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, ப.297 - 300)
வடகிழக்கு மூலையில் கிணறு இருக்க வேண்டும். இல்லை எனில் வடக்குச் சார்ந்த கிழக்கு வடகிழக்கு, கிழக்குச் சார்ந்த வடக்கு இத்திசையிலும் கிணறு இருக்கலாம். பிற திசைகளில் கிணறு இருப்பின் தீமையான பலனே விளையும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சிற்பரத்நாகரம் எனும் நுால் பின்வரும் பாடலைத் தெரிவிக்கின்றது.
“மேலைத் தென்கீழ் கிணறு ஆகில் மக்கள் போம்
மிளிரும் தெற்கு தென்மேற்கு மரணமாம்
கோலமேற்கு நோய் மத்திபம் வாயுவே
குறைவு இலாவடக்கு ஈசன் கிழக்குமே
பால்பாக்கியம் ஆகும் பசுக்களும்
பவிசு சுற்றம் பதியும் அதிகம் ஆம்
சீலமாக இப்பாப்பயன் யாவையும்
சிந்தையில் வைத்துச் செப்புவார் சித்தரே” (பாடல் எண். 1208)
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கும்.
* முழுக்கிணறுமே உள்ளேயும் வட்டமாக இல்லாமல் சம சதுரமாக இருப்பது சிறந்தது. வீட்டின் பிரதான வாயிலுக்கு எதிரேயும், வெளி வாசலுக்கு எதிரேயும் கிணறு அமையக் கூடாது. கட்டடத்தின் நடுவிலும் கிணறு இருக்கக் கூடாது. இரண்டு வீடுகளுக்கு இடையே பொதுக்கிணறும் ஆகாது.
”இரண்டு மனை நடுவில் கூவல் இருந்தால்
புரண்டுவிடும் வாழ்வு பொதுவாய்”
என்று மேலும் இந்நுால் தெரிவிக்கின்றது.
* வீடு, வாணிபம், தொழில் வளர்க்கும் வாஸ்து சாஸ்திரம் எனும் நுால் குழாய்க்கிணறு எனினும் மேற் சொன்ன திசைகளில் இருப்பதே சிறந்தது. வடகிழக்கில் நீரூற்றே இல்லை என்ற நிலை ஏற்பட்டால் தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்குச் சார்ந்த தென்கிழக்கு, மேற்குச் சார்ந்த வடமேற்கைத் தவிர்த்து வேறு திசையில் குழாய் அமைத்துக் கொள்ளலாம்.
* அந்நிலையில் அந்தக் குழாய்க் கிணற்றினை தரை மட்டத்துக்குக் கீழேயே மூடி வைத்து அதிலிருந்து மூடிய குழாய் வழியாக வடகிழக்கில் உள்ள நிலமட்டத் தொட்டிக்குக் கொண்டு வந்து நிரப்பி அதிலிருந்து மேல் நிலைத் தொட்டிக்குக் கொண்டு செல்லலாம்.
* கிணறு அல்லது குழாய்க்கிணறு அல்லது நிலமட்டத் தொட்டியின் தென்மேற்கு அல்லது வடமேற்கு அல்லது தென்கிழக்கில் வடக்கு, கிழக்குச் சுவர்களைத் தொடாமல் மோட்டார் கம்ப்ரெசரை வைத்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கில் இவற்றை வைக்கக் கூடாது.
* நகராட்சி, மாநகராட்சி வழங்கும் நீரைப் பயன்படுத்துவோரும் அந்த நீர் வடி முனையை மனையின் அல்லது வீட்டின் வடகிழக்கு மூலைக்குக் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும்.
* கிணறோ, குழாய்க்கிணறோ வாய்க்காத நிலையில் மனையின் அல்லது வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு நிலமட்டத் தொட்டியாவது கட்டி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பக்கத்து வீட்டுக் கிணறு திசை நமக்குப் பாதிப்பு தருமே எனில் அக்கிணறு நம் பார்வையில் படாதபடி மறை சுவர் எழுப்பி எழுப்பி விடலாம்.
கிணறு மூடும் போது நாம் செய்ய வேண்டியவை
மேலே குறிப்பிட்ட திசைகளுக்கு மாறான திசைகளில் கிணறு இருந்தால் அதனை மூடி விடலாம். ஊற்றுக் கண்ணை மூடாதே. சுரக்கும் கங்கையைத் துார்க்காதே என்பது இத்திசைகளுக்குப் பொருந்தாது. மண் கொட்டி மூடும் போது மண் மட்டம் மேலே வந்ததும் எள் நீக்கிய தானியங்களை விதைத்துத் தண்ணீர் ஊற்றி வந்தால் 15 நாட்களில் முளைத்துச் செடியாக வளர்ந்து விடும். அச்செடிகளைப் பசு மாட்டை விட்டு மேய விடுங்கள். அல்லது அவற்றைப் பிடுங்கிப் பசு மாட்டுக்குக் கொடுத்துத் தின்னச் செய்வதால் மிகுந்த நன்மை விளையும் என்று குறிப்பிடுகின்றது. வீடு, வாணிபம், தொழில் வளர்க்கும் (வாஸ்து சாஸ்திரம், பக்கம். 90 - 91)
அபிதான சிந்தாமணி எனும் நுால் கிணறு பற்றி உலகத்தில் உள்ள தேசங்களில் சில கிணறுகளில் இரு வகை நீர், ஊறுகின்றது. அமெரிக்கா நாட்டு பிட்ஸ்பெர்க் எனும் பிரதேசத்திற்குத் சற்றுத் துாரத்தில் உள்ள கிணற்றில் கீழ் நீர் உஷ்ணம், மேல் நீர் குளிர்ந்தது. அந்த நாட்டு நியூபர்லிங்கடனில் உள்ள ஒரு கிணற்றில் அடியில் உள்ள ஜலம் உப்பு, மேல் உள்ள ஜலம் நல்ல ஜலம். அந்த நாட்டு பார்டோ எனும் ஊரில் ஒரு கிணறு உண்டு. அக்கிணற்றினுள் பிள்ளைக்கிணறு ஒன்று இருக்கின்றது. அப்பிள்ளைக் கிணற்று நீர் கந்தக நீர் வெளிக்கிணற்றில் நல்ல நீர், கள்ளூறுங் கிணறு என்று தெரிவிக்கின்றது. (அபிதான சிந்தாமணி, ப.522)
நீர் வளம் வீட்டிற்கு சிறப்பாய் அமைதல் வேண்டும். இவ்விதம் கிணறு பற்றியும், அவற்றிற்கான விதிகளையும், அதன் பயன்பாட்டினையும் ஜோதிடப் பழம் நுால்கள் தெரிவிக்கும் செய்திகளின் வழி அவற்றிற்றும் விதிகள் உண்டு என்பதை நாம் அறிந்து பயன் பெறுவோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.