சயனம் பலன் அறிதல்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
இலக்கினத்திற்கு பன்னிரண்டாம் இடம் அயன சயன போக இடம் என்பர். ஒரு மனிதனின் இவ்விடம் ஆனது விரயத்தானம் என்றழைக்கப் பெறுகின்றது. பன்னிரண்டாம் பாவகம், இதன் மூலம்
1. பாபச்செலவு
2. பரதேசத்தொழில்
3. பணச்செலவால் பெறும் சுகம்
4. சயன சுகம்
5. வியாச்சியத்தொழில்
6. மறுமைப்பேறு
7. தனம்
8. புண்ணியம்
9. தியாகம்
10. யாகம்
முதலியவைகளை அறியலாம்.
சயனக்கிரமம், சயனக்கிரமம் - உறங்கும் ஒழுங்கு முறை, சயனம் - உறக்கம், சயன ஸ்தானம் - உறங்கும் இடம், சயனிக்குந் திசையறிதல் - உறங்கும் திசையறிதல், சாதக அலங்காரம் தரும் செய்திகள், ஜோதிட சிகாமணி தரும் செய்திகள் ஆகியவற்றின் வழி பலனைக் காண்போம்.
சயனக்கிரமம் - உறங்கும் ஒழுங்கு முறை
அபிதான சிந்தாமணி வட திசையிலும், இரு மூலைகள் கூடும் கோண திசையிலும் தலை வையாது கை கூப்பித் தெய்வந் தொழுது உடம்பின் மேல் போர்வை ஒன்று போர்த்துச் சயனித்தல் வேண்டும். (ஆசாரக்கோவை)
சயனம் - உறக்கம்
சாதகத்தில் இது பன்னிரண்டாம் இடம். எப்படி உறக்கம் அமைய வேண்டும் எதில் உறங்க வேண்டும் என்பது பற்றி காணலாம்.
இஃது இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிர், அன்னத்தூவி இவற்றாற் செய்யப்பட்ட ஐவகை அணைகளாம். இவைகளுள் இலவம் பஞ்சு மெத்தையாலுட் சூடு நீங்கும். வெண்பஞ்சு, செம்பஞ்சு மெத்தைகள் இரத்த விருத்தி செய்யும். தூவிகள் உடற்கினிமை. தாழம் பாயிற் சயனிக்கின் தலை சுழற்றல், பாண்டு, பித்த தோடம், நீராமைக்கட்டி, வெகு மூத்திரம் விலகும். கோரைப்பாய் அக்கினி மந்தம், சுர தோடம் இவைகளை நீக்கும். பிரப்பம்பாய் மூல ரோகத்தை யுண்டாக்கும். பேரிச்சம்பாய் வாதகுன்மம், சோபை நீக்கும். உட்டணாதிக்கம் உண்டாக்கும். பனையோலைப்பாய் அதி உட்டணத்தையும் வாத நிக்ரகத்தையும் உண்டாக்கும். சயனிக்கையில் இடது கையிற் சயனித்து இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு நித்திரை செய்யின் பஞ்சேந்திரிய வயர்வு சரீர வருத்தம் நீங்கும். மனத்திற்கு உற்சாகமும் ஆயுள் விருத்தியையுந் தரும். கிழக்கில் தலையை வைத்துக் கொண்டு சயனிக்கின் பொருள் சேரும். தெற்கு ஆயுள் விருத்தி. மேற்குப் பிரபலமுங் கீர்த்தியும் உண்டாம். வடக்குப் பல வித நோய்களைத் தரும். சயனிக்கையில் நிர்வாணமாயும் கௌபீனம் இன்றியும் சயனிக்கல் ஆகாது. முக்காடிட்டு நித்திரை செய்யில் இரண்டு நேத்திரங்களுக்கும் புஜங்களுக்கும் வன்மை உண்டாகும். அன்றிக் குளிர், பனி, வெயில், தூசு, மேகம் இவற்றாலுறுங் குற்றங்களும் அணுகாது. தலையணை கழுத்திற்குந் தோளிற்கும் உள்ள உயரவளவாய் இலவு முதலிய மெல்லிய பஞ்சுகளாற் செய்தது சிரசிலும் வேண்டிய விடங்களினும் வைத்துச் சயனிக்கின் பாதாதி கேசபர்யந்தமுள்ள நரம்புகள் பிசகாது. சிரசைப் பற்றிய ஆவர்த்த நோய் முதலிய நீங்கும். மனத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும். இரா நித்திரை பங்கமாயின் சித்த மயக்கமும் தெளிவின்மையும் ஐம்புலச் சோர்வும் சுட்கமும், பயமும் அக்நி மந்தமும் உண்டாம். அன்றியும் நோய்கள் கவ்வும். பகல் நித்திரை ஊருத்தம்ப முதலிய 18 வாத ரோகங்களை உண்டாக்கும்.
சயன ஸ்தானம் - உறங்கும் இடம்
ஏழாம் பன்னிரண்டாம் இடங்கள். இலக்கினத்திற்கு நாலாமிடம், பன்னிரண்டாமிடம்.
சயனிக்குந் திசையறிதல் - உறங்கும் திசையறிதல்
கிழக்குச் சிரசு வைத்துப் படுத்தால் ஐஸ்வரியம், தெற்கு ஆயுள், தனவிருத்தி, மேற்குப் பிரபல விருத்தி, வடக்கு வியாதி, மிருத்தியுமாகும். தான் இருக்கும் இடம் தெற்கும், மாமியார் வீட்டிற்குக் கிழக்கும், யாத்திரைக்கு மேற்கும் சிரசு வைத்துப் படுத்தல் சுபம் என்று அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது. (அபிதான சிந்தாமணி, பக்கம் 719 -720)
சாதக அலங்காரம் தரும் செய்திகள்
சாதக அலங்காரம் எனும் நுால் சயன பலன் பற்றி பன்னிரண்டாம் பாவகத்தில் பன்னிரண்டாம் இடம் என்னும் விரய ஸ்தானத்தில் சனி, சந்திரன், அங்காரகன், குரு, சுக்கிரன், சூரியன் ஆகிய இவர்கள் ஒன்று கூடி இருக்கில் அந்த ஜாதகனின் தந்தை, தாய், சகோதிரம், களத்திரம், புத்திரன் ஆகிய இவ்வாறு வகை வர்க்கத்தாருக்கும் அரிட்டம் உண்டு. 12ஆம் ராசியானது சர ராசிகளில் ஒன்றாக இருந்து மேற் சொன்ன ஆறு கிரகங்களும் இருக்கில் வெகு கொடியது என்றே கூறுவர். அவர்கள் உச்சம் பெற நன்மை உண்டாகும் என்று சொல்வார்கள். 12 ஆம் ராசியில் மேற்சொன்ன கிரகங்கள் கூட்டம் கூடி இருந்தாலும், தனித்திருந்தாலும, அந்தந்த வர்க்கத்தாருக்குத் தோஷமே ஆயினும் அந்த இராசியில் அவர்கள் இருக்கும் திறத்தாலேயே அதனை நிலை கூற வேண்டும்.
12 ஆம் ராசி சம்மந்தக் கிரகம் பகை நீச்சம் சமமாயும், மூடமாகவும் இருக்க, நற்கோள்கள் தன பாக்கியங்களில் இருக்க, அந்த 12 ல் பகை நீசம் பெற்ற கோட்கள் இருக்க, அவன் செல்வம், பொருள் எல்லாம் எதிரிகள் கொண்டு போவார்கள். திருடராலும் அழிவுண்டு. சுபகிரகம் நீசவுச்சராக நிற்கில் நன்மையும், தீமையும் சரியாய் வரும் என்று வீமேசுர உள்ளமுடையான் நுால் தெரிவிப்பதையும்,12 இல் செவ்வாய் இருக்க அவன் பூமியாலும், சகோதரராலும், திருடர் ஆக்கினையாலும் அவன் தனம் நாசமாம் என்றும், 12 இல் புதனிருக்க கணக்கு வழக்காலும் அந்த விரோதத்தாலும் வியாபாரத்தாலும் தனம் நாசமாகும் சாதக சிந்தாமணியார் உரைத்ததை ஆராய்ந்து கூறுதல் நலம். (சாதக அலங்காரம், பாடல்.835, பக்கம்.696)
விரய ஸ்தானமான 12 ஆம் ராசியதிபன் நற்கோட்களில் ஒருவனாக இருந்து, சிறப்பு பொருந்திய உச்சமாவது கேந்திரங்களிலாவது இருக்க, 12 ஆம் ராசியில் சுபகிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் நல்ல மேன்மையை உடைய குதிரை மீது ஏறுவதும், பூச்சக்கிரங்குடைகளுடனும் வாழ்ந்திருப்பான்.
12 ஆம் ராசிநாதன் நற்கோட்களில் ஒருவனாக இராமலும் உச்சம், கேந்திரம் பெறாமலும், சுபகிரகங்களில் ஒன்றான குரு மட்டும் 12 இல் இருந்தால் சோம்பேறியும், அந்நிய தேச சஞ்சாரனும், இரு வித வித்தையும், அந்தணர்களின் பொருள் மீது ஆசையுள்ளவனும், அவை கைக்கூடாமையும், சேவகாவிருத்தியும், சயன சுகம் உள்ளவனும், மகாசபையில் பேச வல்லவனும் ஆவான் என்று சோதிடத்தார் சொல்வார் என சாதகசிந்தாமணியில் சொல்லியபடி 12 ஆம் வீட்டோன் சுபகிரகமாக இருந்து உச்ச கேந்திரங்களில் இருக்கின் ஏற்படும் பலனினை, (சாதக அலங்காரம், பாடல்.836, பக்கம்.696) மேற்சொன்னபடி கிரகமிருக்கப் பிறந்தவன் சிவப்பு வண்ணப் பட்டாடைகளை அணிந்து அடுக்கு நிறைந்த மெத்தை மேடைகளில் உறங்குபவனும், மெத்தைகளில் அமைந்துள்ள சங்கிலிகளால் கோர்க்கப்பட்ட சப்ர மஞ்சக்கட்டிலின் மீது 7 விதமான இனிய யாழ் முதலிய கருவிகளோடு பெண்கள் பாடவும், உபசரிக்கவும், அரசனாகி வாழ்வான் உன்று சாஸ்திர வல்லோர் கூறுவர்.
“சூழுஞ்செம்பட்டு மெத்தை துாக்கமேற்கட்டி துாபம்
தாழுஞ்சங்கிலியிற்றொங்குஞ் சப்பிரமஞ்சமீது
ஏழுநல்லிசையாழ்கொண்டே யேந்திழைமாரிசைப்ப
வாழுமன்னவனாமென்று வழுத்துவர்மறைவல்லோரே”
இவ்விதம் குறிப்பிடுகின்றது. (சாதக அலங்காரம், பாடல்.837, பக்கம்.696)
வல்லமை பொருந்திய விரய இடத்தின் அதிபதி பிறந்த இலக்கினத்திற்கு 6 - 8 ஆம் ராசிகளில் நிற்க சனி, ராகு இவர்கள் சேர்ந்து 12 ஆம் ராசியில் இருக்க அவர்களைச் சுபர்கள் பாராதிருக்க அந்த சாதகன் இப்பூமியில் புல் நிறைந்த இடத்தையே மெத்தை என்று தன் இரண்டு கண்களையும் மூடி உறங்குவான் என்றும் இதனை கொடிய யோகம் என்றும் அந்த சாதகன் ஒறங்கவும் இடம் கிடைக்காது என்பதும் இதன் கருத்தாகும். பொதுவாக 12 ஆம் இராசியதிபதி கெடுவான் ஆகில் எவ்விதமும் அவனுக்கு நித்திரை குறைவு என்றே சொல்ல வேண்டும் என்பதனை,
”வல்லதோர்வியத்தானாதி மற்றுமெட்டாறில்நிற்க
சொல்லியசனியும்பாம்புஞ் சூழ்ந்துபன்னிரண்டில்நிற்க
நல்லவர்பார்வைசற்று நயந்திடாதிருக்கிற்பாரில்
புல்லதுமெத்தையாக விருவிழிதுயில்வன்போந்தே.”
என்று சாதக அலங்காரம் நுால் தெரிவிக்கின்றது. (சாதக அலங்காரம், பாடல். 838, பக்கம்.697)
ஜோதிடசிகாமணி தரும் செய்திகள்
* சயன யோகம் குறித்து இந்நுால் 4க்கு உடையவரோடும், 4ஆம் இடத்திலேனும், சுபர்கள் நிற்கவும். அவர்களைச் சுபர்கள் பார்க்கவும், 4 க்குடையவர் வைசேடிகாங்கிசமேறி திரிகோண, கேந்திரங்களில் வலிமையடைந்து நிற்கப் பெற்ற சாதகர் சயனத்தழகு உள்ளவராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 558, பக்கம், 644)
* 4 ஆம் இடம் சுபர் வீடாக அதில் சுபர்கள் நிற்கவும், அச்சுபர்கள் உச்சம் அடையவும், 4க்கு உடையவர் சுக்கிரனோடு கூடி உச்சாங்கிசத்தில் வர்க்க பலம் ஏறி திரிகோணம் அடையவும், பெற்ற சாதகன் பெண்கள் மோகிக்கத்தக்க சயன சுகம் உடையவனாம். (ஜோதிடசிகாமணி, பாடல், 559, பக்கம், 644)
* 4 ஆம் இடம் சுபர் வீடாக அதில் குரு கோபுராங்கிசம் ஏறி நிற்கவும், 4 க்குடையவர் சுக்கிரனோடு கூடி 9 ல் நிற்கவும், அவரைச் சந்திரன் பார்க்கவும் பெற்ற சாதகர் பஞ்ச சயனம் இன்றித் துயில் உறாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 560, பக்கம், 645)
* 4ஆம் இடத்தில் சந்திரன், சுக்கிரனோடு கூடி உச்சம் பெற்று சுபர்கள் பார்க்கவும், 7 ஆம் இடத்தில் இராகு நின்று வைசேடிகாங்கிசம் அடையப் பெற்ற சாதகர் இந்திரன் மாளிகையைப் போல சயனஞ் செய்வாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 561, பக்கம், 645)
* 4 க்கு உடையவரும் சந்திரனும் உச்சம் அடையவும், 4 ஆம் இடத்தில் கேது நிற்கவும், சுக்கிரன் 4 க்கு உடையவரைப் பார்க்கவும் பெற்ற சாதகர் வெள்ளைப் பஞ்சு மெத்தையில் சயனம் செய்வாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 562, பக்கம், 645)
* 4க்கு உடையவர் 5 ஆம் இடத்தில் இராகுவுடன் கூடி நிற்கவும், 2,3,12 க்குடையவர்களாகிய மூவரும் கூடி சந்திரனுக்குக் கேந்திரம் அடையவும் பெற்ற சாதகர் மிருதுவாகிய சயனஞ் செய்பவராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 563, பக்கம், 645)
* 4 ஆம் இடம் சுபர் வீடாக அதற்குரியவர் லக்கினத்தில் நிற்கவும், 5 ஆம் இடத்தில் 9க்குடையவர் 5க்குடையவரைக் கூடி நிற்கவும், அவர்களோடு சந்திரன் கூடவும், சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் நிற்கவும் பெற்ற சாதகர் பஞ்சணை மெத்தையில் துயில்வாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 564, பக்கம், 646)
* சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூவரும் இலக்கினத்தில் நிற்கவும், இதில் சந்திரன் தேவ வர்க்க பலம் முழுவதும் பெற்று நிற்கவும், 4க்குடையவர், 12 ல் அமரவும் பெற்ற சாதகர் மனையாளுடன் பஞ்ச சயனத்தில் துயில்வாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 565, பக்கம், 646)
* 4க்குடையவர் 11 ல் நிற்கவும், சுக்கிரன் 12 க்குடையவராகி 4க்குடையவருக்கு 8 ல் நிற்கவும், 9 க்குடையவர் சந்திரனாகி புதனோடு கூடி 7 ல் நிற்கவும் பெற்ற சாதகர் மூன்றடுக்கு மாளிகையிலும், ஐந்தடுக்கு சயனத்திலும் இருப்பவராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 566, பக்கம், 646)
* 4 ஆம் இடத்தில் குரு நிற்கவும், 4 க்குடையவர் குருவுக்கு 5 ல் அமரவும், அல்லது இலக்கினாதிபதி வீடுகளில் நிற்கவும், சந்திரன் மூன்றில் நிற்கவும், புதன், கேதுவோடு கூடி இலக்கினத்தில் நிற்கவும் பெற்ற சாதகர் இரண்டடுக்கு மெத்தை வீட்டிலும், மூன்றடுக்கு பஞ்சணையிலும் சுகித்திருப்பாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 567, பக்கம், 646)
* 12 ஆம் இடம் சுபர் வீடாக அதற்குடையவர் ஐந்தில் நிற்கவும், நான்காம் இடத்தில் சுக்கிரன் நிற்கவும், ஏழில் குரு பலம் பெற்று நிற்கவும். இரண்டாம் இடம் சந்திரன் வீடாகி அச்சந்திரன் 11க்குடையவரோடு கூடி நிற்கவும் பெற்ற சாதகர் இலட்சுமி வாசம் பொருந்திய மனையில் பஞ்சணையில் துயில்வாராம். (ஜோதிடசிகாமணி, பாடல், 568, பக்கம், 647)
* நான்காம் இடம் சுக்கிரன் வீடாகி அச்சுக்கிரன் 11 ஆம் இடத்தில் நிற்கவும். சந்திரன் 7 ல் அமரவும் 7 க்குடையவர் புதனோடு கூடி கேந்திர திரிகோணம் அடையவும் பெற்ற சாதகர் பூமெத்தையில் மனைவியுடன் அனுபவிப்பவராம். (ஜோதிட சிகாமணி, பாடல், 569, பக்கம், 647)
* சந்திரன் 4 ஆம் இடத்தில் நிற்கவும், 12 க்குடையவர் 2 ல் அமரவும், குரு கேந்திரம் அடையவும், 11 க்குடையவர் 12 ல் நிற்கவும், புதனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் நிற்கவும், பெற்ற சாதகர் இந்திர அம்சமாய் பஞ்ச சயனத்தில் மனையாளுடன் வாழ்பவராம். (ஜோதிட சிகாமணி, பாடல், 570, பக்கம், 647)
* 4 ஆம் இடம் குரு வீடாக அந்நாலுக்கு 7 ல் 7க்குடையவர் நிற்கவும், அல்லது சந்திரனுக்கு 2 ல் அமரவும், சுக்கிரன், புதன் 12 க்குடையவர் ஆகிய மூவரும் லக்கினத்தில் நிற்கவும் பெற்ற சாதகன் இந்திர சுகம் அடைந்து வாழ்பவனாம். (ஜோதிட சிகாமணி, பாடல், 571, பக்கம், 647)
* 4 ஆம் இடத்தில் சுபர்கள் கூடி நிற்கவும், 4 க்குடையவர் சுக்கிரனோடு கூடி திரிகோண கேந்திரங்களில் நின்றாலும், சூரியன் தன் வலியோடு தேவ வர்க்கபலம் பெற்று நின்றாலும், இவ்விரண்டு சாதகர்களும் அஸ்வயோகம் உடையவர்களாயும் கனக விமானத்திலும் துயில்வாராம். (ஜோதிட சிகாமணி, பாடல், 572, பக்கம், 648)
இவ்விதம் மேற்குறிப்பிட்ட கிரகங்களின் நல்ல அமைவு இல்லை எனில் உறக்கம் இன்றித் தவிப்பர் என்பதை நாம் இதன் மூலம் அறியலாம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|