வாரங்கள் - பழமொழி பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
வாரம் என்பது ஒரு நாள், ஒரு கிழமை, ஏழு நாட்கள் கொண்டது எனப் பொருள்படும். கிழமைகள் ஏழு. அவை ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியன ஆகும். பெரிய சோதிட சில்லரைக் கோவையினுள் பஞ்ச அங்கங்கள் - சோதிடவியலின் ஐந்து அங்கங்கள், வாரங்கள் - சப்த வாரங்கள், கிழமை பிறந்த நாள் - புலிப்பாணி ஜோதிடம் 300 தரும் செய்தி, கிழமை பிறந்த நாள் விதானமாலை எனும் நுால் தரும் செய்தி, சுபகர்மங்கட்கு விலக்கப்பட்டன, கிழமைப் பழமொழிகள் ஆகியவை பற்றிய செய்திகள், விளக்கங்கள், பழமொழிகளைக் காண்போம்.
பெரிய சோதிட சில்லரைக் கோவையினுள் பஞ்ச அங்கங்கள் - சோதிடவியலின் ஐந்து அங்கங்கள்
பெரிய சோதிட சில்லரைக்கோவை எனும் பழம்பெரும் சோதிட நூலினுள் 21 சிறு நூல்கள் அடங்கியதில், காலக்கிரம நிர்ணயம் என்னும் சோதிடக் கணிதாமிர்தம் எனும் நூல் பகுதியில் சோதிட அடிப்படைச் செய்திகளுக்குரிய பஞ்சாங்கச் செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். இவை அடிப்படை விதிகள் ஆகும்.
பஞ்சாங்கம் பஞ்சம் + அங்கம். 5 எனும் எண் சிறப்புப் பொருந்தியது. நமசிவாய, சிவாயநம, பஞ்சவடி இன்னும் இது போன்ற சில இன்றியமையாதனவற்றில் 5 என்னும் எண் சிறப்பிடம் பெறுகின்றது.
பஞ்சம் - ஐந்து அங்கம் - உறுப்பு. சோதிடவியலின் ஐந்து உறுப்புகளாக விளங்குவன வாரங்கள், திதிகள், கரணங்கள், நட்சத்திரங்கள், யோகங்கள் ஆகிய இவையே. இவை இல்லை எனில் பஞ்சாங்கம் இல்லை. சோதிடம் இல்லை. இவை பற்றிய செய்திகள் சோதிடக் கணிதாமிர்தப் பகுதியினுள் இடம் பெற்றுள்ளது. இவையே சோதிடவியலுக்கு அடிப்படை இலக்கண விதி எனலாம்.
சோதிடவியலின் பஞ்ச அங்கங்கள்
1. வாரங்கள் - சப்த வாரங்கள் - 7
2. திதிகள் - 30 (வளர்பிறை 15, தேய்பிறை 15)
3. கரணங்கள் - 11
4. நட்சத்திரங்கள் - 27
5. யோகங்கள் -27
வாரங்கள் - சப்த வாரங்கள்
உண்மை கோள்கள் ஏழு - நவகோள்களில் இராகு, கேது தவிர்த்த மற்ற ஏழு கோள்களின் அடிப்படையிலேயே நாட்கள் (அ) கிழமைகள் ஏழும் வகுக்கப் பெற்றுள்ளன. அவ்வேழு கிழமைகள்;
ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய் - செவ்வாய்
புதன் - புதன்
வியாழன் - குரு
வௌ்ளி - சுக்கிரன்
சனி - சனி
இந்த ஏழு கோள்களின் அமைப்பிலேயே வகுக்கப் பெற்றுள்ளன. இந்த உண்மைக் கோள்கட்குரிய கிழமைகளை, வாரங்களின் விபரம் எனும் பகுதியினுள்,
ஞாயிற்றுக் கிழமை - பானுவாரம்
திங்கட்கிழமை - இந்துவாரம்
செவ்வாய் கிழமை - பவ்ம வாரம்
புதன் கிழமையை - சௌமிய வாரம்
வியாழக்கிழமை - குரு வாரம்
வௌ்ளிக்கிழமை - பிருகுவாரம்
சனிக்கிழமையை - மந்தவாரம்
என்றும், ஸ்திரவாரம் என்றும் இந்நூலில் குறிப்பிடப் பெற்றுள்ளது.
கிழமை பிறந்த நாள் - புலிப்பாணி ஜோதிடம் 300 எனும் நுாலில் புலிப்பாணி சித்தர்
ஞாயிறு - பாணி
திங்கள் - சித்திரை
செவ்வாய் - உத்திராடம்
புதன் - அவிட்டம்
வியாழன் - கேட்டை
வௌ்ளி - பூராடம்
சனி - ரேவதி
வருவன.
புலிப்பாணி சித்தர் தம் நுாலில்
”பாடினே னின்னமொன்று சொல்லக்கேளு பரமனுட பதியேகுநாளே தென்றால்
வாடினேன் அருக்கநாள் பரணியாகா வளமான திங்கள் சித்திரையுமாகா
சாடினேன்செவ்வாய்க் குத்திராடஞ் சாந்தமுடன் புதனுக்கு அவிட்டமாகா
கூடினேன் குருநாள் தான் கேட்டையாகா கொற்றவனே புகர்க்குப் பூராடம் தீதே!”
”தீதான சனிநாள் ரேவதியுமாகா தீங்குவரு மின்னாளில் ஜெனனமானால்
சூதான யெமனுக்கே அருதியாவார் சொல்லிவிட்டேன் நுணுக்கமுட னேசல்துாது
வயதான சோதிடரே யென்னுால் பாருவளமையுடன் கோள்நிலையுஞ் குணமும்பாரு
மாதான போகருட கடாட்சத்தாலே மனமுவந்து புலிப்பாணி பாடினேனே”
என்று கிழமை பிறந்த நாளினைப் பற்றி பாடல் இயம்புகின்றது.
(வளர்மதி, புலிப்பாணி ஜோதிடம் 300, பாடல் எண். 19 - 20, பக்கம்.188)
கிழமை பிறந்த நாள் விதானமாலை எனும் நுால்
ஞாயிற்றுக்கிழமை - பரணி
திங்கட்கிழமை - சித்திரை
செவ்வாய்க்கிழமை - உத்திராடம்
புதன் - அவிட்டம்
வியாழக்கிழமை - உத்திரம்
வெள்ளிக்கிழமை - பூராடம்
சனிக்கிழமை - ரேவதி
ஆகிய இவை கிழமை பிறந்த நாட்கள். இவை ஒரு காரியத்திற்கும் ஆகாது.
”வந்திக்கும் கதிர்க்கும் கங்குல் மதிக்குச்சித் திரைசேய்க் காடி
புந்திக்கும் அவிட்டம் பொன்னுக் குத்திரம் புகர்பூ ராடம்
கெந்திக்கும் சனிக்குத் தோணி கிழமைகள் பிறந்த நாளாம்
சிந்திக்கும் கருமம் எல்லாம் தீமையாய் விளையும் மாதே.”
என்று கிழமை பிறந்த நாளினைப் பற்றிப் பாடல் இயம்புகின்றது.
(விதானமாலை, பாடல்.41, பக்கம்.17)
மேலும் மாதாந்தம் மூன்று நாளும், பங்குனி மாதம் பிறந்த தினம் ஐந்து நாளும், கிராணம் தீண்டும் நாளும், அதற்கு முன் மூன்று நாளும், பின் மூன்று நாளும் ஆக ஏழு நாளும் நாள் அந்தம் இரண்டு நாழிகையும் சுபகர்மங்கட்கு விலக்கப்பட்டன ஆகும் என்றும் இந்நுால் தெரிவிக்கின்றது.
”மாதாந்தம் மூன்று நாளும் வருடாந்தம் ஒருபத் தஞ்சு
தீதாந்த கிராணம் தீண்டும் தினமுன்பின் சேர்ந்த ஏழும்
காதார்ந்த கண்ணாய்! நாளின் கடையிரு கடிகை தானும்
வேதாந்தம் உணர்ந்தோர் தீதென் றுரைத்தனர் மிகவும் மென்மேல்”
என்று கிழமை பிறந்த நாளினைப் பற்றி இரு பாடல்கள் இயம்புகின்றது.
(விதானமாலை, பாடல்.42, பக்கம்.17)
கிழமைப் பழமொழிகள்
நாள். நாள் - அறிவு. நாளின் ஆரம்பம் அறிவுடைமை; நாளின் முடிவு அனுபவம். (இன்டுங்கா பழமொழி ப.24, (5)
வாரம்
என் மகள் வாரத்தோடு வாரம் முழுகுவாள். என் மருமகள் தீபாவளிக்குத் தீபாவளி தலை முழுகுவாள். (துர்காதாஸ், எஸ்.கே.சாமி தமிழ்நாட்டுப் பழமொழி ப.65)
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை. (பு.நோ.ப, )
சடங்கு - எண்ணெய் முழுக்கு - மாமியார் - மருமகள் (தமிழ்நாடு, எல். லீலா, பு.பெ.உ.ப, ) நூலில், தலைப்பில், “என்மகளுக்கு வாரத்துக்கு ரெண்டு வாட்டி தலைக்கு ஊத்துவேன். என் மருமகளுக்குத் தீபாவளிக்குத் தீபாவளி தலைக்கு ஊத்துவேன்”, “என் மகள் வாரத்தோடு வாரம் முழுகுவாள். என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள்.” (மேலது, ப.44.)
எண்ணெய் சடங்கு:
“மகளுக்கு எட்டோடு எட்டு எண்ணெய்; மருமகளுக்குத் தீவிளிக்குத் தீவளி.” (மேலது, ப.46.)
சடங்கு - எண்ணெய் முழுக்கு - மாமியார் - மருமகள் (தமிழ்நாடு, எல். லீலா, பு.பெ.உ.ப, )மேலது, நூலில், தலைப்பில், “என்மகளுக்கு வாரத்துக்கு ரெண்டு வாட்டி தலைக்கு ஊத்துவேன். என் மருமகளுக்குத் தீபாவளிக்குத் தீபாவளி தலைக்கு ஊத்துவேன்”, “என் மகள் வாரத்தோடு வாரம் முழுகுவாள். என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள்” (மேலது, ப.44.)
ஞாயிறு - ஞாயிற்றுக் கிழமை
ஆதிவாரம் - ஞாயிற்றுக்கிழமை. ஆதி வாரம் தலைக்கெண்ணெய் ஆகாது. (அறப்பளீ.சத.50.)
நிகரில் ஆதி வாரத்தில் ஆடிப் பணிந்தோம். (கும்மிப்பா. சீரணி.67.)
ஆதி வாரம் தனில் கருடனைத் தரிசித்தால் அரிய பிணி யாவும் அகலும். (கயிலாச. சத.39)
நன்மையும், தின்மையும் வாரந்தோறும் ஞாயிறு உண்டு, அத்துடன் வௌ்ளியும் உண்டு. (போலந்து பழமொழி)
ஞாயிறு ஓய்வு நாள், வௌ்ளி உபவாச நாள். (ப.ராமஸ்வாமி, உலகப்பழமொழிகள், ப.124)
ஞாயிற்றுக் கிழமை ஒரு பொழுது நண்டு வேண்டாம், சாறு விடு (மேலது.159)
ஞானிக்கில்லை ஞாயிறும், திங்களும் (துர்காதாஸ், எஸ்.கே.சாமி தமிழ்நாட்டுப் பழமொழி துர்க்காதாஸ், த.நா.ப, ப..160)
“ஞாயிறு நாய் படாத பாடு ஆனால் ஆதித்த வாரம், ஆகாத(து) போனால் சோமவாரம். ஆனால் பிரம்மரி ஆகாவிட்டால் தெருப்பிச்சை” (மேலது, ப.44)
ஆனால் ஆதி வாரம். ஆகாவிட்டால் சோமவாரம் கூடுமானவரை பலரும் ஏற்கக் கூடிய நேரம் பார். முடியா விட்டால் ஏதோ ஒரு நேரத்தில் எடுத்த காரியத்தை முடி. (பு.நோ.ப, ப.67)
ஞாயிற்றுக் கிழமையில் சென்றால் நாய் படாத பாடு. ஞாயிற்றுக் கிழமை நாய் கூட எள்ளுக் காட்டில் நுழையாது. (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.133)
“ஞாயிற்றுக் கிழமையை மறைப்பார் இல்லை
சூரியவிளக்கு இருக்கசுடர் விளக்கு எதற்கு?”
‘ஆதி’ என்பதற்கு ‘தொடக்கம்’, ‘அந்தம்’ என்பதற்கு ‘முடிவு’ என்றும் பொருள் கொண்டு, ஆதி வாரத்தில் எந்த ஒரு விடயத்தைப் பேசினாலும் அல்லது தொடங்கினாலும் அது நன்மையிலேயே முடியும். அப்படி ஞாயிறு கிடைக்கவில்லை எனில் திங்கட்கிழமை தொடங்கலாம் என்று ம.த.ஜோதிடர் குறிப்பிடுகின்றார். (ம.த.ஜோதிடர், சு.ப.மொ, வி, கிழமைப் பழமொழிகள், ப.88.)
திங்கள் - திங்கள்கிழமை
திங்கள்: இழப்பு
திங்கட்கிழமையை வாரம் முழுதும் இழக்கிறான். (உலகப் பழமொழிகள், ப.ராமஸ்சுவாமி, ப.50 (10.)
மெய் மூன்றாம் பிறை; பொய் பூரணச் சந்திரன். (துர்காதாஸ், எஸ்.கே.சாமி தமிழ்நாட்டுப் பழமொழி, ப.249.)
திங்கள் துக்கம் திரும்பி வரும். (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.143.)
திங்களில் கேட்பார் திரும்பக் கேட்பார். திங்களில் குழந்தை பிறந்தால், மறு குழந்தை உண்டு. திங்களில் பள்ளியில் சேர்த்தால் இரண்டாம் முறை சேர்க்க வேண்டி வரும். திங்கட்கிழமை ஒருவருக்கு கடன் கொடுத்தால், அவர் மீண்டும், மீண்டும் கடன் கேட்டுக் கொண்டே இருப்பார். நம் கடனை அடைக்க மாட்டார். பொதுவாக திங்கட்கிழமை அன்று ஒரு காரியத்தைச் செய்தால் அதை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டி வரும். ஆகவே திங்கள் அன்று செய்யும் காரியங்களுக்கு நட்சத்திரம், திதி, கரணம், யோகம், எல்லாரும் பார்த்துச் செய்தாலும் அந்த நாள் எல்லாருக்குமே பொருந்தாது என்றும் சொல்ல முடியாது. மிகச் சிலருக்கே பொருந்தும் என்றும் ம.த. ஜோதிடர் குறிப்பிடுகின்றார். (மனோதத்துவ ஜோதிடம் கேசவ ஷர்மா, சுராவின் பழமொழிகளும், விளக்கங்களும், கிழமை பழமொழிகள், ப.88,89.)
செவ்வாய் - செவ்வாய்க்கிழமை
வௌ்ளி, செவ்வாயில் புறப்படவும் வேண்டாம். போய்ச் சேரவும் வேண்டாம். (ப.ரா, உ.ப, ப.38)
எட்டு செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைவலி போம். (பிரம்மபுத்திரன், த.த.ப.மொ, ப.54) , (மனோதத்துவ ஜோதிடம் கேசவ ஷர்மா, சுராவின் பழமொழிகளும், விளக்கங்களும், ப.89)
ஆடிச் செவ்வாய் தேடிக் குளி. செவ்வாய், வௌ்ளி செலவிடாதே. (மனோதத்துவ ஜோதிடம் கேசவ ஷர்மா, சுராவின் பழமொழிகளும், விளக்கங்களும், ப.89)
இவை மருத்துவ, ஆன்மீகப் பழமொழிகள் ஆகும். எட்டுச் செவ்வாய்க் கிழமைகள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி, காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் தீராத தலைவலியும் தீர்ந்து போகும், மற்றும் உடலில் நரம்பு சம்பந்தமான, தோல் சம்பந்தமான கோளாறுகள் அணுகாது. ஆடி மாதச் செவ்வாய் என்பதை ஆன்மீக சிந்தனையோடு பார்த்தால், அம்மனுக்கு கூழ் வார்க்கும் மாதம். செவ்வாய், வௌ்ளி இவ்விரு கிழமைகளும் பெண் தெய்வங்களுக்குரிய சிறப்பான நாட்கள். செல்வத்தைத் தருபவள் இலட்சுமி ஆகையால், அவளது அருள் என்றும் நம்மை விட்டு செல்லக் கூடாது என்பதால் அன்றைய தினம் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல், யாருக்கும் கடன் கொடுக்காமல் இருத்தல் நலம் பயக்கும் என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளதை நுால் ஆசிரியர் ஜோதிடர் குறிப்பிடுகின்றார். (மேலது, ப.89)
புதன் - புதன் கிழமை
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” (கோ. அருட்கலை, தமிழர் பண்பாட்டியல் நம்பிக்கை, ப.60)
மதி புதன் மயிர் களை - சடங்கு
உடற்கூற்றுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பழமொழி. மதி என்பதற்கு திங்கள் என்று பொருள் கொண்டு ‘மதி புதன்’, ‘மாதத்திற்கு ஒரு முறை’ அதுவும் புதன்கிழமை அன்று முகச்சவரம் செய்து கொள்ளுதல், தலைமுடி வெட்டிக் கொள்ளுதல் போன்றவைகளை செய்தல் நலம் பயக்கும். அடிக்கடி முகச்சவரம் செய்தல் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். புதன் கிழமையன்று பிறந்தவர்கள் அன்று மேற் கூறிய செயல்களைச் செய்து கொள்ளுதல் தவறு என்று நம் சாஸ்திரங்கள் கூறுவதால் இவர்கள் மட்டும் திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் செய்து கொள்ளலாம் என்று மருத்துவப் பழமொழிகளில் ம.த. ஜோதிடர் குறிப்பிடுகின்றார். (மனோதத்துவ ஜோதிடம் கேசவ ஷர்மா, சுராவின் பழமொழிகளும், விளக்கங்களும், ப.80)
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
போன அன்றைக்குப் போய் புதன் அன்றைக்கு வா”
புதன் பொன்னான நாள். புதன் கிழமையில் பயணம் புறப்பட்டுச் செல்லக் கூடாது. முற்றக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ளலாம். புதன் கிழமை அங்கிருந்து புறப்பட்டு நம் ஊர் வந்து சேரலாம். பயணத்தை தவிர மற்ற எல்லாக் காரியங்களுக்கும் உகந்த நாள் என்கின்றார். (மேலது, ப.90)
வியாழன் - வியாழன் கிழமை
“தங்கின வியாழன் தன்னோடு மூன்று பேர்” (துர்காதாஸ், எஸ்.கே.சாமி தமிழ்நாட்டுப் பழமொழி, ப.161.)
“தங்கின வியாழன் தன்னோடு மூன்று.
வியாழக் கிழமை பிணமும் துணை தேடும்” (ப.மு, பு.நோ.ப, ப.66.)
“வெண்கலக் குகையில் வைத்து வியாழம் முப்பதும் ஊதினால் மற்ற நாள் வௌ்ளியாமே.” (துர்காதாஸ், எஸ்.கே.சாமி தமிழ்நாட்டுப் பழமொழி, ப.273.)
“வேதம் பொய்த்தாலும் வியாழம் செய்யாது.” (மேலது, ப.278)
பேச்சு வழக்கு:
“வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்க்காது”
குரு வாரம், மங்கள வாரமாகக் கருதப்படுகின்றது. இந்நாளில் திருமணம் செய்து வைத்தல் சிறப்பு என்று குறிப்பிடுகின்றது.
நாள் பலன் குறித்த ஜோதிடப்பாடல், இதற்கு சான்று. (பெரிய ஜோதிட சில்லரைக்கோவை)
“தங்கின வியாழன் தன்னோடு மூணுபேர்”, இது குறித்து ஜோதிடர் இக்கிழமையில் எந்தவொரு நல்ல காரியமும் செய்யலாம். ஆனால் வியாழன் அன்று மட்டும் யார் வீட்டிலும் தங்குதல் கூடாது. அப்படி அங்கே தங்க நேரிட்டால் உங்களோடு சேர்ந்து மூன்று பேர்கள் தங்க வேண்டும். அப்படி இல்லை எனில் அங்கே தங்குவதைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது என்று, ம.த. ஜோதிடர் குறிப்பிடுவது தவறு ஏற்புடையது அல்ல. (மனோதத்துவ ஜோதிடம் கேசவ ஷர்மா, சுராவின் பழமொழிகளும், விளக்கங்களும், ப.90)
பிணம்: இதன் சரியான பொருள்
சடங்கு சார்ந்த பழமொழி இது, வியாழன் அன்று பிணம் ஏற்பட்டு விட்டால் தொடர்ந்து 3 பிணங்களைத் தேடும் என்பதே இதன் பொருள்.
வௌ்ளி - வெள்ளிக்கிழமை
“வௌ்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது”. (துர்காதாஸ் எஸ்.கே.சாமி, தமிழ்நாட்டுப் பழமொழி, ப.275)
வௌ்ளியில் விதை பிடி; சனியில் கதிர் பிடி. (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.233)
“செவ்வாய், வௌ்ளி செலவிடாதே
அகதி பெறுவது பெண் பிள்ளை
அதுவும் வௌ்ளி பூராடம்”
வௌ்ளி என்பது சுக்கிரனைக் குறிக்கின்றது. இந்நாளில் ஒரு செயலைத் துவங்கினால் அது முழு வெற்றியைத் தேடித் தருவதோடு பன்மடங்கு இலாபத்தையும் ஈட்டித் தரும். ஆகவே இத்தினத்தில் பணத்தைக் கொடுக்கக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு.
மேலும், வாழ்க்கையில் யாரும் அற்ற அதுவும் அகதியாய்ப் போனவள் பெண்பிள்ளையை, அதுவும் வௌ்ளிக் கிழமையில் பூராடம் நட்சத்திரத்தில் பெற்றாளானால் அவள் அக்குழந்தையால் மேன்மை அடைவாள் என்பது உறுதி. காரணம் பரணி, பூரம், பூராடம் சுக்கிரனின் நட்சத்திரங்கள். அது மட்டுமில்லாமல் வௌ்ளிக் கிழமைக்கு அதிபதியும் அவனே என்பதால் அந்நாளில் அவர் நட்சத்திரத்தில் பிறந்தால் அவர் அக்குடும்பத்தை வாழ வைப்பார் என்பது உறுதியான ஒன்று. (மனோதத்துவ ஜோதிடம் கேசவ ஷர்மா, சுராவின் பழமொழிகளும், விளக்கங்களும், ப.91.) இது ஏற்புடையது அல்ல தவறு.
சனி - சனிக்கிழமை
உலக அனுபவம்:
இரண்டு சனிக் கிழமைகளுக்கு இடையிலே எத்தனையோ அற்புதங்கள் நிகழ்கின்றன. (ஃபிரான்ஸ் பழமொழி, ப.ராமஸ்சுவாமி, உலகப் பழமொழிகள், ப.128.)
“கொசுவே கொசுவே தலைமுழுகு; நான் மாட்டேன் சனிக் கிழமை.” (துர்காதாஸ், எஸ்.கே.சாமி தமிழ்நாட்டுப் பழமொழி, ப.122)
“கொடும்பாவி சாகாதா? கோடை மழை பெய்யாதா? (மேலது, ப.123)
பிணம்:
“சனிப் பிணம் துணை தேடும்”
“ஓர் நாள் ஏழ் நாள் போல் செல்லும்” (புதிய நோக்கில் பழமொழி, ப.109)
சனி நீராடு :
சனிக்கிழமையில் நீராடினால் மிகுந்த நன்மை ஏற்படும். இது குறித்த பழம்பாடல் ஒன்று உள்ளது.
சனியும், புதனும் தங்கும் வழி போகக் கூடாது! இது குறித்து சனிக்கிழமை என்பது பலருக்கும் ஒத்து வராத நாள், சனியும், புதனும் ஒவ்வாத நாள் என்பதால் வெளியூர் பயணம் செல்லக் கூடாது என்றும், கட்டாயமாகச் செல்ல வேண்டும் எனில் உரிய பரிகாரத்தைச் செய்து விட்டுச் செல்லுதல் நலம் என்றும் குறிப்பிடுகின்றார்.(ம.த.ஜோ, கிழமைப் பழமொழிகள், சு.ப.மொ,வி, ப.91)
பெண்களைப் பற்றிய பழமொழிகள் சரளா இராசகோபாலன் தம் நூலில், மனைவி எனும் தலைப்பில் ‘சம்பளம் சனிக்கிழமை’, பெண்டாட்டி பேர் புதன் கிழமை. (முனைவர். சரளா இராசகோபாலன், பெண்களைப் பற்றிய பழமொழிகள், ப.15)
மேலும் வறுமை: சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருடன் அகப்பட மாட்டான். (முனைவர். சரளா இராசகோபாலன், பெண்களைப் பற்றிய பழமொழிகள், ப.127)
பொதுவாக நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை எனும் பழமொழி நலிவுற்றவர்களுக்கு நாள், கோள் நிலை பார்க்க வேண்டியது இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது.
இவ்விதம் கிழமைகளின் மூலம் பயன்படுத்தப் பெற்ற பழமொழிகளின் இன்றியமையாமையை நாம் அறியலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.