திதிகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை

திதி - பஞ்சாங்க உறுப்பில் ஒன்று. இது சந்திர நாள். திதி, கிரகம், திசை, திசையை உடையது. சந்திரனாள், அது பஞ்சாங்க உறுப்பின் ஒன்று, சிராத்தம். நாள். திதி - 15 - பிரதமை -1, துவிதியை -2, திரிதியை -3, சதுர்த்தி - 4, பஞ்சமி -5 , சட்டி - 6, சத்தமி - 7, அட்டமி - 8, நவமி - 9, தசமி - 10, ஏகாதசி - 11, துவாதசி - 12, திரயோதசி -13, சதுர்த்தசி - 14, இவற்றிற் சுக்கில பக்கத்திற் சுத்தமென்றுங் கிருட்டின பக்கத்திற் பகுளம் என்றுங் கூட்டுக. பதினைந்தாம் திதியாவது சுக்கில பக்கத்திற்குப் பௌர்ணமி, கிருட்டிணபக்கத்திற்கு அமாவாசியை. பக்கம். சந்திரனாள் அஃது பஞ்சாங்க உறுப்பின் ஒன்று சிராத்தம், திதியென்னேவல் ஆகும்.
பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசியை ஆக 15. பதினைந்தாம் திதி கிருஷ்ண பலத்தின் இறுதியாயின் அமாவாசையும் சுக்கில பலத்தின் இறுதியாயின் பௌர்ணமியும் வரும். இதில் சந்திரன் தோன்றும் முதல் பலம் சுக்கில பலம் என்றும், சிநிவாலி என்றும் பெயர். சந்திரன் குறையும் பிற்பக்கம் கிருஷ்ண பலம் எனவும் குகு எனவும் பெயர் பெறும்.
இவற்றில்;
பிரதமை, சஷ்டி, ஏகாதசி மூன்றும் நந்தை எனப்படும்.
துவிதியை, சப்தமி, துவாதசி மூன்றும் பத்திரை எனப்படும்.
திரிதியை, அஷ்டமி, திரயோதசி மூன்றும் சயை எனப்படும்.
சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி மூன்றும் இருத்தை எனப்படும்.
பஞ்சமி, தசமி, பௌர்ணமி மூன்றும் பூரணை எனப்படும்.
இவற்றுள் நந்தையும், பத்திரையும் சுப காரியங்கள் செய்ய ஆகாது.
சிநிவாலி, குகு, சயை, நந்தை, பத்தரை, இருத்தை, பக்கச்சித்தரை ஆகியனவும் திதிகளினைத்தான் குறிக்கும்.
இருத்தை
இருத்தை - இருபத்து நாலு நிமிடங் கொண்ட ஓர் நாழிகை, சந்திரன் நாலு, ஒன்பது, பதினோராம் பக்கம். இருபத்து நாலு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை, சந்திரன் நான்காம் பக்கம், ஒன்பதாம் பக்கம், பதினான்காம் பக்கம். ஒரு பெண் தேவதை இவள். சுபங்கள் எல்லாவற்றையும் கெடுப்பவளும் காலதூதியும், நெஞ்சில் சற்றேனும் இரக்கமில்லாதவளும் ஆவாள். இவள் சிறப்பில்லாத துகிலையும், சிவந்த கண்ணையும், நெருங்கிய வலிய வெண் பல்லினையும், முழு அளவு கண்ட நகத்தினையும் உடையவள். இவள் காலம் இரண்டு பலங்களிலும் உள்ள சதுர்த்தி, சஷ்டி, நவமி, துவாதசி, சதுர்த்தசியுமாம். இவை சுப கருமங்களுக்கு ஆகாவாம். இவற்றைப் பக்கச்சித்தரை என நீக்கினார்கள். ஆகாது என்ற பட்சங்களில் தோடமான நாழிகை சதுர்த்தி 9, நவமி 25, சஷ்டி 9, அஷ்டமி 14, துவாதசி 10, சதுர்த்தசி 5, இந்நாழிகைகளைக் கழித்தால் இத்திதி நன்றென்க. சந்திரன் சிங்கத்தினின்று, குரு உதயத்தினிற்க உச்சம் எய்தில் சுப கருமஞ் செய்யலாம். (அ.சி, ப.244) இருபத்து நாலு நிமிடம் கொண்ட ஒரு நாழிகை. இரு பட்சங்களிலும் வரும் சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகளாம். நாழிகை வட்டிலுக்கும் பெயர்.
இருத்தை (இரித்தை) -1.நாழிகை. இருத்தை --- நாழிகையாகும். (பிங்.நி.282.) கடிகை நாழிகையாம் கன்னல் இருத்தையுமதுவே காட்டும் (சூடா.நி.1,79.) கடிகை பதமுட னிருத்தை கன்னலோர் ஐந்துமே நாழிகை (ஆசி.நி.31.) ஏது இலாநிசிக்கு இருத்தை மூவைந்தாய் (தேம்பா.1.10.96.) 2.நாழிகை வட்டில் (மதுரை.அக.) 3. சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி என்னும் திதிகள் (செ.ப.அக.)
நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை
சூடாமணி உள்ளமுடையான் எனும் நுால் இவை குறித்து நந்தை - பிரதமையும், சட்டியும், ஏகாதசியும் என்றும், பத்திரை - துவிதிகை, சப்தமி, துவாதசி என்றும், சயை - திரிதிகையும், அட்டமியும், திரயோதசியும் என்றும், இருத்தை - சதுர்த்தியும், நவமியும், சதுர்த்தசியும் என்றும், பூரணை -பஞ்சமியும், தசமியும், உவாவும் என்றும் குறிப்பிடுகின்றது.
”வினவின்முதல் திதியாறு பதினொன்றும் நந்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கியபத் திரையாம்
மினியவொரு மூன்றெட்டுப் பதிமூன்று சயையாம்
இருத்தையென்பர் நான்கினுடன் நவமிபதி னான்கை
புனைகுழலாய்! பஞ்சமியும் பத்துமூவர் தானும்
பூரணமென மறியலவன் கோல்மகரம் சரமாம்
தனிவிடைதேள் குடம்சிங்கம் நிலைராசிதானும்
தனுமிதுனங் கன்னிமீனம் உபயமெனத்தகுமே”
சான்று பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (சத்தியபாமா காமேஸ்வரன், சூடாமணி உள்ளமுடையான், பாடல்.58, பக்கம்.26)
பக்கச்சித்தரை
பக்கச்சித்தரை குறித்து விதானமாலை பஞ்சாங்கப்படலம் திதிகளிற் பூருவபக்கம் உத்தமம். அபரபக்கம் மத்திமம், அதமம், அதமாஅதமம் என்று சொல்லப்படும். இவ்விரண்டு பக்கத்தில் பக்கத்தில் சதுர்த்தியும், நவமியும், சட்டியும், அட்டமியும், துவாதசியும், சதுர்த்தசியும், பக்கச்சித்திரை என்று தவிரப்படும் என்பதனை,
”வளர்பிறையுத்தம மற்றைப்பிறைமத்திமமதமந்
தளர்வுறு பொல்லாங்குமென்பர் தடங்கட்டிருவனையா
யளவுறுநான்கொன்பதாறெட்டீராறீரே ழான பக்கம்
விழைவுறு தீப்பக்கச் சித்திரையென்று விதித்தனரே”
எனும் பாடலும் மேலும் பக்கச் சித்திரை என்ற பக்கங்களில் தோடமான நாழிகை, சதுர்த்திக்கு ஒன்பது, நவமிக்கு இருபத்தைந்து, சட்டிக்கு ஒன்பது, அட்டமிக்குப் பதினாலு, துவாதசிக்குப் பத்து, சதுர்த்தசிக்கு ஐந்து இந்த நாழிகைகளைக் கழித்தால் இத்திதிகள் நன்று என்க என்றும், பிரதமை முதலாக நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை என்றடைவே பெயராகப் பதினைந்து பக்கமும் மூன்று பரிவிருத்தியாக என்னப்படும் என்பதனை,
”ஒன்ப திருபத்தைஞ் சொன்பதுபன்னான்கும் பத்துமைந்தும்
வந்திடு நாழிகை சித்திரைக்காதியில் வாட்டநன்றா
நந்தையும்பத்திரைச் செ… யநல்லி நத்தை வளர்ச்சியென்று
குந்தியபக்க முதன்முறை யேமொழி மொய்குழலே”
எனும் பாடலும் அனைத்து மங்கல காரியத்திற்கும், பக்கச்சித்திரை ஒழிந்த திதியும், பூரணையும் நன்றாம் என்றும், பூருவ பக்கத்துப் பிரதமை முதல் பஞ்சமியறுதியும் அபர பக்கத்து ஏகாதசி முதல் அமாவாசையறுதியும் தவிரப்படும் என்பதனை,
”சிறந்தநன் மங்கல காரிய மயாவிற்குஞ்சித்திரைநீத்
தறைந்தபக்கத்துநற்பக்கமிடையுவாநன்றதனி
னிறைந்தபக்கத்து முன்னைஞ்சுந்நிறைவேல் பொருதகண்ணாய்
குறைந்தபக்கத்துக் கடையுற்றவஞ்சுஞ் குணமில்லையே”
எனும் பாடலும் சிலர் சுப கருமங்கட்கு இரண்டு பக்கத்தும், ஒற்றித்த பக்கத்துப் பிரதமையும், பௌரணையும், நவமியும் ஒழிந்த திதிகள் நன்று என்றும், இரட்டித்த திதிகளில் தசமியும், துதிகையும், ஒழிந்தனவும் என்பதனை,
”ஒற்றித்த பக்கத்திலாதியு மந்தமுமொன்பதுமே
குற்றமுடைத்தல்லவைநன் றிரட்டையிற்கூறுமீரைந்
துற்றவிரண்டுநன்றல்லவை தீதொள்ளியவினைக்குச்
சொற்றிலர் கல்விக்குப்பன்மூன்றொடேழையுஞ் சோதிடரே”
எனும் பாடலும் சான்று பகர்கின்றது. பூருவ பக்கத்துப் பஞ்சமியும், அபர பக்கத்து ஏகாதசியும் முக்கியம் என்பர். (நாராயணசுவாமிகள், விதானமாலை மூலமும் உரையும், பாடல் எண்கள். 1 - 5, பக்கங்கள். 16 - 18)
திதி அமுத யோகங்கள்
ஞாயிற்றுக்கிழமையில் பிரதமையும். சஷ்டியும் திங்கட்கிழமையில் துவிதியையும் சப்தமியும், செவ்வாய் கிழமையில் சதுர்த்தசியும், புதன் கிழமையில் அஷ்டமியும், திரிதியையும் திரயோதசியும், வியாழக்கிழமையில் நவமியும், வௌ்ளிக்கிழமையில் ஏகாதசியும், சனிக்கிழமையில் சதுர்த்தசியும் வருவன.
இவ்விதம் இந்த திதிகளைப்பற்றி பழம் சோதிட நுால்கள் சான்றாதாரம் தெரிவிக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.