வானியலில் சக்கரங்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
வானியலில் விளங்கக் கூடிய இன்றியமையாத சில சக்கரங்களாக, கலப்பைச்சக்கரம், ஆரூடச்சக்கரம், கவிப்பு, கோமுத்திரிச் சக்கரம், வேதைச்சக்கரம், கால சக்கரப்படலம், ஆதரிசச்சக்கரம், கன்னிகா சக்கரம் - பலன்கள், கூபச்சக்கரபலன், சகாதேவர் ஆரூடசக்கரம், சாதக அலங்காரம் குறிப்பிடும் சாயாக்கிரகங்களின் ஆட்சி உச்சச் சக்கரம் ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பற்றிக் காண்போம்.
கலப்பைச்சக்கரம்
இது உழவுத்தொழில் செய்வதற்குப் பயன்படுத்தப் பெற்றது.
விதானமாலை இந்த சக்கரம் குறித்து கலப்பைப் போல வரைந்து ஏர் முடியின் நடுவின் ஆதித்தியன் நின்ற நாளை வைத்து வலமாக எண்ணி இதனுடன் மூன்று நாளும் நுகத்தில் ஆறு நாளும் ஆகாது. மேழியில் இரண்டு நாளும் பின்னணியின் மூன்று நாளும் கொளுவின் மூன்று நாளும் மத்திமம். ஏர்க்கான் நடுவில் பத்து நாளும் உத்தமம் என்றும்,
“இரவிநிலைத் திடுநாண்முன் பின்மூன்றுமிருநுகத்தில்
விரவிடுமா றுமுழறீதுமேழியிலோ ரிரண்டும்
பரவுபின்னாணிபடைவாயிலா றும்பலன் மத்திமந்
திரமுறுமேர்க்கானடு வீரைந்தாகுந் தினமினிதே”
எனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்.4, பக்கம். 126)
ஆரூடச்சக்கரம்
இது ஆரூடம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பெற்றது.
விதானமாலை உதயாரூடக் கவிப்புப்படலத்தில் இந்தச் சக்கரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. ஒத்த நிலத்திலே கிழக்கு நோக்கி இருந்து சதுரமாக ஒரு வட்டத்தை வரைந்து அதிலே கிழக்கும் வடக்குமாக நான்கு இரேகை கீறிப் பார்க்க 25 அறையாம். இதில் வட கீழ் மூலை அறையை விட்டு இதன் தென் திக்கில் அறை மேடம். இதன் தென் மேலையறை இடபம். இதன் தென்கீழ் மூலையறை மிதுனம். இதன் மேல் மூலையறை கர்க்கடகம். இதன் வடமேல் மூலையறை சிங்கம். இதன் தென்மேல் மூலையறை கன்னி. இதன் வடமேல் மூலையறை துலாம். இதன் வடகீழ் மூலையறை விருக்கிகம். இதன் வடமேல் மூலையறை தனு. இதன் வடகீழ் மூலையறை மகரம். இதன் தென்கீழ் மூலையறை கும்பம். இதன் வடகீழ் மூலையறை மீனம். இப்படிச் சேர மும்மூன்று ராசியும் அடுப்புக்கூட்டம் போலக் காணப்படும். இச்சக்கரத்தின் நடுவில் வீதியில் கீழ்த்தலை அறையிலே ஆதித்தியன், இப்படிச் சுற்றும் புறம்பும் வீதியில் அக்கினி மூலையில் செவ்வாய், தெற்கு வீதியில் வியாழன், நிருதி மூலையில் புதன், மேற்கு வீதியில் சுக்கிரன், வாயு மூலையில் சனி, வடக்கு வீதியில் சந்திரன், ஈசான மூலையில் இராகு இப்படிப் பன்னிரண்டு ராசியும் எட்டுக்கோளும் நிறுத்தி நடுவில் அறை பிரமத்தானத்துக்கு இருப்பதாகவும், இதற்கு ஈசானத்துப் பரிவேடம், இதற்கு அக்கினித் துாமம், இதற்கு நிருதியில் இந்திரதனு, இதற்கு வாயு நுட்பம், இப்படி 25 அறையும் 25 கோளுக்கு இடமாக நியமிக்கப்பட்டது ஆரூடச்சக்கரம் என்று அழைக்கப்பெறும்.
“வடக்குக்கிழக்குறநான் கோர் வட்டத்துளெட்டான திக்கிற்
கிடத்தரு மாடாதியேந் தவடுப்பொக்குமெண்டிக்கினிற்
சுடர்க்கதிர்சேய்பொன் புதன் சுக்கிரன் சனி சோமனரா
வடற்பரிவேடம் புகைவினுட்பம் வீதியாரூடமே”
எனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்.3, பக்கம்.73)
கவிப்பு
ஆரூடம் கேட்க வந்தவன் ஒரு காரியம் கேட்க வந்தவன் உற்ற திசையை அறிந்து அந்தந்தத் திக்கிற்கு அடைந்த ஆரூட இராசி முதலாக ஆதித்தியன் சரிக்கின்ற வீதியளவும் எண்ணினத் தொகையை உதய ராசி முதலாகக் கழித்துக் கொண்டு உற்ற இராசிக்கவிப்பாம். இப்படி உதயத்தால் சென்ற காலமும், ஆரூடத்தான் நிகழ் காலமும், கவிப்பால் வருங் காலமும் சொல்லப்படும். சொல்லும் இடத்து இம்மூன்று இராசியினும் கேந்திரத்திரி கோணங்களினுஞ் சுபக்கிரகம் நிற்றல் நோக்குதல் செய்யில் அந்த இராசி வகையான் காலங்கள் நன்று என்றும், தீக்கோள் ஆகில் அக்காரியம் தீது என்றும் சொல்லப்படும்.
“எய்திய வாரூடமா தியிரவிதன் வீதியந்தஞ்
செய்த தொகையையுதயாதிநீக்கச்செழுங்கவிப்பாம்
வெய்துறு கோளிங்குறில் விதியல்லக்காலங்கண்மூன்றிற்
பெய்துரை நற்கோளிவற் றுறினன்றென்பர் பெய்வளையே”
எனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்.4, பக்கம்.74)
கோமுத்திரிச்சக்கரம்
இது மகளிர் மகப்பேறு குறித்துப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பெற்றது.
மேலும் இந்நுால் மகளிர் வினைப்படலம் பகுதியில் தென் வடக்காக ஐந்து ரேகையும் கீழ் மேலாக எட்டு ரேகையும் கீற 28 அறையாம். இதில் வடகீழ் மூலையறை முதலாக நலமே ஆறாம் அறையில் சோதியை வைத்து அடைவே சுற்றிலே பதினெட்டு அளவாக எண்ணுவது. எண்ணும் இடத்து உத்திராடம், அபிசித்து, திருவோணம் என்று எண்ணுவது. பின்பு உரோகிணியை வைத்த அறைக்குக் கீழாக மிருகசீரிடத்தை வைத்து வடக்கிலறை நாலிலும் எண்ணி இதன் கீழாக ஆயிலியத்தை வைத்துத் தெற்கடையவாறு அறையிரும் ஆறு நாள் வைப்பது கோமுத்திரி சக்கரம் என்று அழைக்கப்பெறும்.
“வடக்குற வைந்துங் கிழக்குறவெட்டுமிகேரைத்து
விடைக்கிறை திக்கினுக்காறின் விளக்குவைத் தீரொன்பானா
ளடைத்த கீண்மான்றலை நான்கிடக் கீழராவாதி யாறுங்
கொடுத்து வலத்துறக் கொள்வ கோமுத்திரி சக்கரமே”
என்றும், மேலும் முன்பு சமைத்த அச்சக்கரத்திலே கோமுத்திரிச்சக்கரத்தை அகத்திலே கிடத்தி இவ்விடத்து அனுகூலமான நாளுறையிடத்திலே பிள்ளை பெறுதற்கு இடம், இருக்கும். டம், கிடக்கும் இடம், உண்ணும் இடம் முதலியவைகளைத் தன்னுடைய நாளுக்கு அனுகூலமாக அமைக்கப்படும்.
“இவ்வகை யில்லத் திசையுறு கோட்டகத்தெய்துநாளிற்
செவ்விய நாணிலை பிள்ளைப்பெறுதற்கிடந்திருவே
யெவ்வகையா னுமிருக்கை சயனமினி தருந்து
மவ்விடந் தன்னாட்கனு கூலமாக வமைக்க நன்றே”
எனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்கள்.5,6, பக்கங்கள்.105, 106)
வேதைச்சக்கரம்
இந்த சக்கரம் குறித்து கீழ் மேல் ஐந்தும், தென்வடக்கில் ஐந்துமாக ரேகையைக் கீறி கோணங்களினுமுற இரண்டு இரண்டு ரேகை கீற இருபத்தெட்டு கயிறாம். இதில் வடகிழக்கிலே கோணமான கயிற்றுக்குத் தெற்கில் செவ்விதான ரேகையின் கீழ்த்தலையிலே உரோகிணியை வைத்து பிரதக்கணமாக எண்ணுவது. எண்ணும் இடத்து உத்திராடம், அபிசித்து, திருவோணம் என்று எண்ணுவது வேதைச்சக்கரம் என்று அழைக்கப்பெறும்.
வேதைச்சக்கர நிஷீத்தம்
இந்த வேதைச்சக்கரத்து நிறுத்தின நாளில் ரேவதியின் தலையிலே யாதானுமொரு கோள் நின்றதாகில் அந்நாள் சுபக்காரியங்களுக்கு ஆகாது. சுபக்கோள் நின்றதாகில் செய்த காரியம் அழியும். பாபக்கோள் நின்றதாகில் செய்த காரியமும், செய்தவரும் அழிவர் என்று சொல்லப்படும். மங்கலம் என்றதனால் திருமணத்திற்குப் பார்க்க வேண்டும் என்பாரும் உளர்.
“எண்ணிய கோணின் றநாளின் கயிற்றுக்கெ திருறுநா
ணண்ணியவேதை யெனற்கோனின் வேதைமா நாளதனிற்
பண்ணிடுமங்கலம் பாறிடுமென்பவக் கோளின்வேதை
கண்ணுறிற் செய்வினை தன்னொடு தானுங் கழிவுறுமே”
எனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல். 58, பக்கங்கள். 43 - 44)
காலசக்கரப்படலம்
மேலும் இந்த சக்கரக் குறித்து சக்கரத் தேராகிய ஒரு வட்டத்தை இட்டு இதன் நடுவே கீழ் மேல் இரண்டின் ரேகையுந் தென் வடபால் இரண்டு ரேகையும் மூலைகளில் ஒவ்வொரு ரேகையுமாகக் கீறிற் பன்னிரண்டு கதிராய் 21 சக்கரமாம். இதிலே நேர்கிழக்கு, நேர்தெற்கு, நேர்மேற்கு, நேர் வடக்கு ஆகிய இவற்றிலே நிற்கும் இராசியாவன இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம். இதற்கு வலத்து இராசியாவன மேடம், கர்க்கடகம், துலாம், மகரம் என்ற நான்கு இராசியாம். இதற்கு நாற்கோணத்து இராசியாவன மிதுனம், கன்னி, தனு, மீனம். இப்படிக் கீறி நிறுத்தினது காலச்சக்ரமாம் என்பதைப் பின்வரும் பாடல்;
“அறைந்தனர் சக்கரத் தாழியும் பன்னிரண்டாருமாக்கிச்
சிறந்தகீழ் பாற் கொறிகுண்டை தென்பாற்குளிர் சிங்கம் மேல்பாற்
குறைந்த துலை தேள்வடபாற்கலை குடங்கோண நான்கும்
பிறந்தனமீன் றடிபெண்வில் லெனக்காலச் சக்கரமே”
என்று விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல். 1, பக்கம்.79)
ஆதரிசச்சக்கரம்
சுகர்நாடி என்னும் சோதிட சிகாமணி எனும் நுால் இந்த சக்கரம் குறித்து;
“ஆதரிசச் சக்கரத்தை யறையக்கேளா
யன்பான விலக்கின நட்சத்திரம் பின்னும்
பாதமதைப் புடமதனால் கண்டதாதிப்
பாதமதை யம்பத்தஞ்சாகப் பார்த்துச்
சாதகமாய வரவர் களிந்தந்தப் பாதந்
தான்முதலா யைம்பத்தஞ்சாம் பாதத்தைக்
கோதறவே யடைந்து வகைகூற வேண்டுங்
குறிப்புடனே விரிப்பரிந்து கூறுவாயே”
என்று பாடல் தெரிவிக்கின்றது. (இராமசாமிப்பிள்ளை, சோதிடசிகாமணி, பாடல் 876, பக்கம், 339)
கன்னிகா சக்கரம் - பலன்கள்
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி எனும் நுால் இந்த சக்கரம் குறித்து சிவதாரத்தில் இலட்சுமிப்பிரதம் இந்தக்கிரகம் (கோள்) கன்னிகா காலச்சக்கரம் மூன்று லிங்கம் கணக்கெழுதி அதற்குக் குறுக்கே ரேகை நான்கு கீறி அடிவரையில் அசுவிணி நட்சத்திரம் முதல் 27 நட்சத்திரங்களையும் மூன்று இலக்கத்திற்கும் எழுதவும்.
இதில் காலற்ற நாள் கார் - உத்ரம் - உத்திராடம், உடலற்ற நாள் - மிருக - சித் - அவிட்டம், தலையற்ற நாள் - புனர் - விசாகம் - பூரட்டாதி.
இந்தச்சக்கரத்தை எண்ணிப்பார்க்க ஊர்த்தமுகம் எந்தக் குறுக்கு ரேகையில் சந்திரன் இருக்கின்றானோ அந்த ரேகையில் சூரியன் இருந்தால் அக்கினி பயம். அங்காரகன் இருந்தால் மிருத்தியு பயம். புதன் இருந்தால் ரோகப்பிரதம். பிரகஸ்பதி இருந்தால் தானிய குற்றம். சுக்கிரன் இருந்தால் கலகம். சனி இருந்தால் சோர (திருடன்) பயம். ராகு இருந்தால் உடல் பீடை. கேது இருந்தால் பிணம். இந்தக்கோள் கன்னிகாசக்கரத்தை எண்ணிக் கொண்டு வருகின்ற நட்சத்திரத்தில் ஊர்த்த முகமாய் இருக்கின்ற நட்சத்திரத்தில் ஸ்தம்பப் பிரதிட்டை செய்தால் உத்தமம். இறங்கி வருகின்ற நட்சத்திரம் அதோமுகமாய் இருக்கின்ற நட்சத்திரத்தில் ஸ்தம்பப் பிரதிட்டை செய்யலாகாது. ரோகிணி - பூசம் - திருவாதிரை - திருவோணம் - அவிட்டம் - சதயம் - உத்திரம் - உத்திராடம் - உத்திரட்டாதி இந்த ஒன்பதும் ஊர்த்தமுக நட்சத்திரம். ஆகையால் ஸ்தம்பப்பிரதிட்டை செய்யலாம். துவசம், மெத்தை, பசுத்தொழுவம், கோபுரம் ஆகிய இவை கட்டலாம்.
திரிமுக நட்சத்திரத்தில் சுவர் வைக்கலாம். பசு, ஆடு, மாடு, குதிரை ஆகிய இவை வாங்கலாம்.
ரேவதி, அஸ்தம், புனர்பூசம், சித்திரை, சுவாதி, அசுவிணி, மிருகசீரிடம், அனுஷம், கேட்டை ஆகிய இந்த நட்சத்திரம் ஒன்பதும் சுவர் வைக்கவும், யானை, குதிரை, ஆடு, மாடு ஆகிய இவை வாங்கவும் உத்தமம்.
அதோமுக நட்சத்திரத்தில் கிணறு, குளம், ஏரி ஆகிய இவை எடுக்கலாம். விசாகம், மூலம், ஆயில்யம், கார்த்திகை, பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், பரணி ஆகிய இந்த ஒன்பது நட்சத்திரமும் அதோமுகம் ஆனதால் கிணறு, குளம், ஏரிக்கால், அகழி, சுரங்கம், கணக்கு, அப்பியாசம், களஞ்சியம் ஆகிய இவை செய்யலாம். தனம் புதைக்கலாம். சங்கு ஸ்தாபனம் செய்யலாம். ஸ்தம்பப்பிரதிட்டை செய்ய முதல் சாமம் உத்தமம். இரண்டாம் சாமம் மகிழ்ச்சி. மூன்றாம் சாமம் அதமம். நான்காம் சாமம் சந்தியாகாலம். இரவுக்காலங்களிலும் கூடாது என்று தெரிவிக்கின்றது. (வீராசாமி, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, பக்கம்.62 -63)
கூபச்சக்கரபலன்
பார்க்க:
சகாதேவர் ஆரூடசக்கரம்
இந்தச் சக்கரம் குறித்து பெரிய சோதிட சில்லரைக்கோவை நுால் உலகில் வாழும் மனிதர்கள் தங்களது மனக்குறைகள் தவிர்வதற்கு ஜோதிடர் முன்பாக வந்து தாங்கள் நினைத்த காரியத்தின் நிலையைச் சொல்வீர் என்று தாம்பூலம், தட்சணை கொடுத்தாரானால் மேடம், ரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக 12 இராசி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆக ஒன்பது கோள்கள் ஆகிய இவைகளை பெருக்க முறையே 108 எண்கள். அதாவது 1 - முதல் 108 எண்கள் உள்ள கட்ட அமைப்பிலான சக்கரம். ஆக இவ்விதம் அமையும் சக்கரத்திற்கு சகாதேவர் ஆரூடச்சக்கரம் என்று பெயர். இந்தச் சக்கர எண்ணில் ஆரூடம் பார்ப்பவர் தொடும் எண்ணினைக் கொண்டு பாடலுடன் பலன் பார்க்கப்பெற்றது. பரிகாரமும் குறிப்பிடப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கின்றது. (பக்கம். 308)
சாதகஅலங்காரம் குறிப்பிடும் சாயாக்கிரகங்களின் ஆட்சி உச்சச் சக்கரம் அட்டவணை (பக்கம். 350) கீழே:
இவ்விதம் சக்கரங்களின் பலன்கள் பார்க்கப்பெறுகின்றது.