தோடங்கள் அவற்றின் விளைவுகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
குழந்தைகட்கு வரும் தோடங்கள் - அதிருட்டி, அதிருட்டி பூதனா கிரக தோடம், அர்ச்சகாகிரகம், அற்புதாக்கிரகம், அன்னியவோடாலிகா கிரகம், பாலக்கிரக தோடம், பாலக்கிரகோற்பத்தி, பால ரோகம், பாலாரிஷ்டம், தோடங்கள் - 7, தோடங்கள் - 9, 1.நாய் முள் தோடம், 2.எச்சில் தோடம், 3.குளிச தோடம், 4.தூர ஸ்திரீ பரிச தோடம், 5.சையோக புருட பரிச தோடம், 6.சையோக ஸ்திரீ பரிச தோடம், 7.அளி தோடம், 8.குளித்தவள் எடுத்த தோடம், 9.தேரை தோடம், கந்தகிரக தோடம், காணாப்புள் தோடம், பட்சி தோடம், பஞ்சக் கிரகம், பஞ்சக் கோள், பஞ்சக் கோள் நின்ற தோடம், பஞ்சார்க்க தோடம், அந்தகராசித்தோடபவாதம், அநல நட்சத்திரம், சம திருட்டி தோடமும் அபவாதமும், தெத்த சுவாலா தூம தோடம், கேந்திராதிபத்திய தோஷம், கிரகணங்கள் கிரகண தோடம், சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தைகள், விஷமாதம் தோஷம், விட்டி தோடம் ஆகிய தோடங்கள் பற்றிக் காண்போம்.
தோடம் - தோஷம். குற்றம். இவை எவ்விதம் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிக் காண்போம்.
குழந்தைகட்கு வரும் தோடங்கள்
அதிருட்டி
இது குழந்தைகளுக்கு வரும் ஒரு வகை பூதனாக்கிரக தோடம். அதிட்டி பூதனை என்னும் தோடத்தால் வரும் பாலாரிட்ட தோடம் ஆகும்.
அதிருட்டி பூதனா கிரக தோடம்
அதிருட்டி பூதனை என்னும் பெண் பேயினாற் குழந்தைகளுக்கு வருந் தோடம். இது அற்பப் பார்வை, வாந்தி, சுரம், இருமல், மல பேதம், தேகம் நிறமாறுதல், தேகத்திற் துரக்கந்தம் கவிச்சு வீசுதல், அல்லது அசங்கிய நாற்றம், இளைத்தல், சொற்ப நித்திரை, உதடு நோவு, தினவு, விக்கல், பயம், முலைப்பாலிலசங்கியம், ஈனத்தொனி, நடுக்கம் முதலிய குணங்களை உண்டாக்கும்.
அர்ச்சகாகிரகம்
ஒரு வகைத் தோட நோய், இது குழந்தை பிறந்த பதினோராவது நாள், பதினோராவது மாதம், பதினோராவது வருடம், இவைகளில் குழந்தையை அல்லது தாயைப் பீடிக்கும் ஒரு பெண் கிரகத்தால் வரும் பாலாரிட்ட தோடம் ஆகும்.
அற்புதாக்கிரகம்
ஒரு வகை பாலாரிட்ட கிரக தோட நோய். இது குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாள், அல்லது பன்னிரண்டாம் மாதம் அல்லது பன்னிரண்டாம் வருடம், குழந்தைக்கு அல்லது தாய்க்கு வரும் பீடையாகும். அற்புதா கிரகம் - ஒரு வகை நோய். அது குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாளிலாவது பன்னிரண்டாம் மாதத்திலாவது பன்னிரண்டாம் வருடத்திலாவது குழந்தைக்கு அல்லது தாய்க்கு வருவது.
அன்னியவோடாலிகா கிரகம்
பலரைத் தொடருகின்ற பன்னிரண்டு பெண் கிரகங்களுள் ஒன்று, அது குழந்தை பிறந்த எட்டாம் நாளிலாவது, எட்டாம் மாதத்திலாவது, எட்டாம் வருடத்திலாவது சிசுவை அல்லது தாயைப் பிடிக்கும், அப்போது அன்னத் துவேஷம், அடிக்கடி நாவை நீட்டுதல், இளைத்தல், நோவு, சதா வழுகை, கண் மூடல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும். பாலாரிட்ட தோடத்தோடு பாலரைத் தொடரும் பன்னிரு பெண் கிரகங்களில் ஒன்று. இது குழந்தை பிறந்த எட்டாம் நாள், எட்டாம் மாதம், எட்டாவது வருடம், இவை எதிலாவது குழந்தையை, அல்லது தாயைப் பீடிப்பதாம்.
பாலக்கிரக தோடம்
குழந்தைகளுக்கு பாலாரிட்ட தோடங்கள். அது கந்தம், விசாகம், மே‘ம், ஸ்வானம், பிதுர் என்னும் ஐந்து ஆண் கிரகங்களும், சகுனி, பூதனா, சீதபூதனா, முகமண்டலிகா, ரேவதி, கட்கரேவதி என்னும் ஏழு பெண் கிரகங்களும். குழந்தைகள் அசுத்த மாதர்கள் பாலைக் குடித்த காலத்தும், மலசலத்தாள் அசுத்தமாகக் கிடக்கும் காலத்தும், நித்திரா நித்திரை காலத்தும், பருவகாலத்தும், வருட மாதஞ் சந்திகாலத்தும், பட்சி, பூனை, ஆந்தை, கரடி, முதலியவைகளைப் போல் மேற்படி கிரகங்களின் தோடம் பற்றி நிற்பதாகும்.
இவை அன்றி - நந்தனா, சுகந்தனா முகமண்டலிகா, பிடாலிகா, சகுனி. சுட்கரேவதி, அந்நியவோடலிகா, மதபேதனா, ரேவதி, அர்ச்சகா, அற்புதா முதலியனவாகவும் உண்டாகும்.
பாலகிரக தோடம்
இது புருடக்ரகம், பெண்கிரகம் எனப் பிரிவுபடும். பால சுப்ரமண்யருக்கு ஏவல் செய்திருந்து அவராக்னையால் அசுசியடைந்த மாதரின் பாலுண்ணும் சிசுக்களை வருத்துவது. இவற்றால் தோடம் உண்டாமிடத்து அமுதகவசம், விகாரரூபம், கொட்டாவி, வாயில் நுரை, நெஞ்சில் குறு குறுப்பு, உண்டாம். அப்பூதங்களால் ஆன தோடங்களாவன. 1.கந்த கிரகதோடம், 2.விசாக கிரகதோடம், 3.மேட கிரகதோடம், 4.சுவான கிரகதோடம் 5. பிதுர் கிரகதோடம், 6.சகுனி கிரகதோடம், 7.பூதனா கிரகதோடம், 8.சீதபூதனா கிரகதோடம், 9.அதிர்ஷ்டி பூதனா கிரக தோடம், 10.முகமண்டலிகா கிரக தோடம், 11.ரேவதி கிரதோடம், 12.சுட்கரேவதி கிரகதோடம் என்பனவாம். பின்னும் சிலர் 1.நந்தனாகிரகம், 2.சுநந்தனாகிரகம், 3.பூதானாகிரகம், 4.முகமண்டலிகாகிரகம், 5.பிடாலிகாகிரகம், 6.சகுனிகிரகம், 7.சுட்கரேவதிகிரகம், 8.அந்நிய வோடலிகாகிரகம், 9. மதபேதனாகிரகம், 10.ரேவதி கிரகம், 11.அர்ச்சகாகிரகம், 12.அற்புதாக்கிரகம் என்பர். பூர்வத்தில் சிவபெருமானால் படைக்கப்பட்ட இவ்வைந்து புருட கிரகங்களும், அவ்வேழு பெண் கிரகங்களும் குழந்தையாகிய குமரகடவுளுக்கு ஏவல் செய்திருந்து சிவாக்கினைப்படி அன்னாதி பலி, ரத்த, கந்த, அட்சதை, இவைகளை விரும்பிப் பூலோகத்து வந்த அதிதிபிட்சை, பிதுர்விரதம், தேவபூஜை, அக்னிகார்யம், முதலியவற்றைத் தவிர்த்து அசுசி மாதர், அமங்கலமாதர், முதலியவரின் பாலைக் குடிக்கிற சிசுக்களின் ஆரோக்கியம், சுகம், வயது முதலியவற்றின் பாதியை அபகupக்கச் சிசுக்கல் அழுங்காலத்தும் மலசலத்தால் அஷ்யமாகக் கிடக்கும் காலத்தும் நித்ரா நித்திரை காலத்தும், பருவ காலத்தும், வருட மாத சந்தி காலத்தும், கரடி, ஆந்தை, பூனை, பட்ஷி முதலியவைகளைப் போலும், முன்பு சேநாதிபத்யத்தைப் பெற்ற கந்தகிரகம் ஆதியான 12 கிரகங்களும் குழந்தைகளைப் பிடித்து வருத்தும்.
பாலக்கிரகோற்பத்தி
பூர்வம் சிவபிரான் குமாரமூர்த்தியைக் காக்கும் பொருட்டு ஸ்கந்தகரஹம் புரு விசாசுகிரஹம் மேடக்கிரஹம், ச்வக்ரஹம், பித்ருக்ரஹம் எனும் 5.கிரஹங்களையும் சகுனி, பூதனை, சீதபூதனை, அதிருட்டி பூதனை முகமண்டலிகை, ரேவதி, சுட்கரேவதி எனும் 7.பெண் கிரகங்களையும் சிருட்டித்தனர். இவை 12.கிரகங்களும் காமரூபிகளாய்ச் சென்று குமாரக் கடவுளைக் காத்து வந்தன.
பால ரோகம்
ஷீராலஜ ரோகம் - திரிதோடத்தால் கெடுதி அடைந்ததாயின் பாலை உண்ட சிசுவிற்கு உண்டாகும் ரோகம். பாலன் - ஏழு வயதிற்கு உட்பட்டவன். பாலன், ஏழு வயதிற்கு உட்பட்டவன்.
பாலாரிஷ்டம்
பாலக்கிரக தோடத்தாலும், நவக்கிரக் தோடத்தாலும் வரும் அரிஷ்ட தோடங்கள். விவரம்:
1. இலக்கினத்தில், சனியும், நாலாம் இடத்தில் செவ்வாயும், ஏழாம் இடத்தில் சூரியனும் இருந்தாலும்,
2. இலக்கினத்தில் இராகு, கேதுக்களும், நாலில் செவ்வாயும், ஏழில் சூரியனும் இருந்தாலும்,
3. இலக்கினத்தில் அல்லது ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இவ்விடங்களில் அமரபட்சத்துச் சந்திரன் பாவிகளுடன் கூடி நின்றாலும்,
4. இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாயும், எட்டாம் இடத்தில் சூரியனும் இருந்தாலும்,
5. இலக்கினத்தில் சூரியன், சனி கூடி இருக்கச் செவ்வாய் பார;த்தாலும்,
6. இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி இருந்தாலும்,
7. இலக்கினத்திற்கு நாலாம் இடத்தில் செவ்வாயும், எட்டாம் இடத்தில் ராகுவும், பன்னிரண்டாம் இடத்தில் சனியும் இருந்தாலும்,
8. இலக்கினத்திற்கு எட்டு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்களில் சூரியன், தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், சனி ஆகிய இவர்கள் இருந்தாலும்,
9. இலக்கினத்திற்கு நாலு, எட்டு ஆகிய இடங்களில் பாபக் கிரகங்கள் இருந்தாலும்,
10. இலக்கினத்திற்கு ஐந்து, எட்டு, ஒன்பது, பன்னிரண்டு ஆகிய இவ்விடங்களில் சூரியன், அமரபட்சத்துச் சந்திரன், இவர்கள் கூடியாவது தனித்தனியாகவாவது இருந்தாலும்,
11.இலக்கினத்திற்கு ஆறு, ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இவ்விடங்களில் தேய்பிறைச் சந்திரன் பாவர்களுடன் கூடி இருந்தாலும்,
12. இலக்கினத்திற்கு ஐந்தில், பத்தில் சனி இருந்தாலும், சிசுவுக்கு அரிஷ்டமாகும்.
13. இலக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் சந்திரனும், அதற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய், சனி ஆகியவர்கள் இருந்தாலும்,
14. இலக்கினத்தில் சந்திரனும், நாலு, ஏழு, எட்டு ஆகிய இவ்விடங்களில் பாவிகள் இருந்தாலும்,
15.இலக்கினத்திற்கு இரு புறமும் பாவிகள் இருந்தாலும், தாய்க்கும், சிசுவுக்கும் அரிட்டமாகும்.
16.இலக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் சூரியன் இருக்க, ஏழாம் இடத்தில் செவ்வாய், சனி ஆகிய இவர்கள் இருக்க, பிதாவுக்கும், சிசுவுக்கும் அரிட்டமாகும்.
17.சந்திர ராசி, இலக்கினம் இவைகளில் பாவர்கள் இருந்தாலும், சிசுவுக்கு அரிட்டமாகும்.
முன் கூறிய அரிட்ட தோடங்கள் சுபக்கிரகம் இருக்க அல்லது பார்க்க நீங்கும்.
குறிப்பு: ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரை பாலாரிட்டம். பதின்மூன்று முதல் இருபது வயது வரை கௌமார அரிட்டமாகக் கொள்க.
தோடங்கள்
1. அபத்திய தோடம், ஸ்திரீ சங்கம தோடம், விஷம தோடம், விஷம சீதள தோடம், ரக்தசிக்வக தோடம், பீதசிக்வக தோடம், கிருஷ்ண சக்வக தோடம்.
இது குழந்தைகளுக்கு உண்டாகும் தோடங்கள். இது (9) வகை.
1. நாய் முள் தோடம்
இது வாயில் முட்போல் எழும்புதல் பாலுண்ணாமை அள்ளு, கபம், கால் வலி, சுரம் உண்டாகும்.
2. எச்சில் தோடம்
எச்சில் தோஷ்ம் - பாலாரிட்ட தோடத்துள் ஒன்று. இதனால் மயக்கம், சுரம், பேதி, சீறியழல் உண்டாம்.
3. குளிச தோடம்
இது கருப்பம் வேண்டின ஸ்திரி குளிசம் கட்டிக் கொள்ளுகையில் எதிர;ந்த குழந்தைகளுக்கு உச்சி பள்ளம் விழல், கண் குழிதல், அதிசுரம், இளைப்பு, பேதி உண்டாம்.
4. தூர ஸ்திரீ பரிச தோடம்
தேஇளைப்பு, பாலெதிரெடுத்தல், பேதி, கண்ணிற் பீளை இதற்கு முட்டுத் தோடம் எனப் பெயர்.
5. சையோக புருட பரிச தோடம்
கண்குழி விழல், உடம்பு பசத்தல், சீறியழல், பாலெதிரெடுத்தல், இதை விஷ தோடம் என்பர்.
6. சையோக ஸ்திரீ பரிச தோடம்
நெஞ்சு வறட்சி, கண் குழிதல், வெளிறல், பால் குடியாமை, நித்திரையின்மை முதலிய உண்டாம்.
7. அளி தோடம்
பாலெடுத்தல், நெஞ்சடைப்பு, தேக நாற்றம் உண்டாம்.
8. குளித்தவள் எடுத்த தோடம்
பாலெடுத்தல், உச்சி பள்ளம், வாயுவால் முதலிய உண்டாம்.
9. தேரை தோடம்
இது தேரைகள் குழந்தைகளின் மேல் வீழ்ந்து பீச்சுவதால் உண்டாவது. கால் கைகள் சூம்பல், மாறு நிறம், வாட்டம், பாலுண்ணாமை, முதலிய குணங்களை உண்டாக்கும்.
கந்தகிரக தோடம்
பாலாரிட்ட தோடத்துள் ஒன்று.
காணாப்புள் தோடம்
குழந்தைகளுக்கு வரும் பாலாரிட்ட தோடத்துள் ஒன்று.
பட்சி தோடம்
குழந்தைகளுக்கு வரும் பறவைத் தோடம்.
இவை யாவும் குழந்தைகட்கு வரும் தோடங்கள் ஆகும்.
பஞ்சக் கிரகம், பஞ்சக் கோள்
ஐந்து கிரகம். அவை செவ்வாய், புதன், வியாழன், வௌ்ளி, சனி.
பஞ்சக் கோள் நின்ற தோடம்
சூரியன் நின்ற நட்சத்திரத்துக்கு ஏழாம் நட்சத்திரம் உற்பாதம் எனவும், பத்தாம் நட்சத்திரம் தாரகம் எனவும், பதினைந்தாம் நட்சத்திரம் பிரமதண்டம் எனவும், இருபத்தொன்றாம் நட்சத்திரம் காலம் எனவும் பெயராகும்.
செவ்வாய்க்கு ஏழாம் நட்சத்திரம் சூலம் எனவும், பதினைந்தாம் நட்சத்திரம் கண்டம் எனவும், பதினைந்தாம் நட்சத்திரம் கண்டம் எனவும், இருபத்தொன்றாம் நட்சத்திரம் காலன் எனவும் பெயராகும்.
அன்றியும் பத்துச் சக்கரம் என்றும், பதினைந்து காலம் என்று சொல்லும் நூல்களும் உள்ளன.
புதனுக்கு எட்டு, பதினெட்டு, இருபத்து நான்கு ஆகிய நட்சத்திரங்கள் கண்டம் என்பதாகும்.
குருவுக்கு ஏழு, ஒன்பது ஆகிய நட்சத்திரங்கள் கொடுமையாகும்.
சுக்கிரனுக்கு ஏழு, ஒன்பது ஆகிய நட்சத்திரங்கள் கொடுமையாகும்.
சனிக்கு ஐந்து, ஆறு, பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய நட்சத்திரங்கள் பந்தம் என்பதாகும்.
இராகு - கேதுக்களுக்கு ஏழாம் நட்சத்திரம் பரிகம் எனவும் பெயராகும். இவை சுப காரியங்களுக்கு விலக்கப் பெற்றிருக்கிறது.
பஞ்சார்க்க தோடம்
ஐந்தருக்கத்தால் வரும் தோடம். இந்திரதனுவிலே 17 பாகையைக் கூட்ட சுத்த ரவி புடமாம். இந்தப் புடங்களை நாட் பார்க்கும் படியே பார்த்துற்ற நாளும், சந்திரனும் ஒரு நாளாக நின்றதாகில் பஞ்சார்க்க தோடமாம். இதில் சுபகன்மங்கள் தவிரப்படும். இப்படியே இலக்னத்தையும் தவிரப்படும். இலக்னமாவது, உற்ற நாளுடைய இராசி. சந்திரன் இடபம், கர்க்கடகத்திலும், ரவி, சிங்க மேடத்திலும், ரவி, சந்திரன் உபசய தானத்து நிற்பினும் பஞ்சார்க்கம் ஞாயிற்றுக்கிழமையில் வரினும் அந்தத் தோடம் இல்லை. (விதான மாலை.)
பஞ்சார்க்கம்
ஐந்தருக்கம். அவை இந்திர வில், கேது, தூமம், பரிவேடம், விதிபாதம் என்பனவாகும்.
அந்தகராசித்தோடபவாதம்
உதய ராசிக்கு உபசயத்தானத்திலே சந்திரன் சுபாங்கிசகனாய் நிற்பினும், அன்றி இடப கர்க்கர்கடகத்திலே நிற்பினும், அன்றிச் சுபாங்கிசகனாய் நின்ற சந்திரன் 4ம் இடமாதல் 2ம் இடமாதல் நிற்பினுஞ் சொல்லப்பட்ட அந்தக ராசித் தோடம் இல்லை. (விதானமாலை.)
அநல நட்சத்திரம்
செவ்வாய் நின்ற நட்சத்திரத்திற்கு, ஏழு, பதினான்கு, பதினாறு, இருபத்தைந்தாம் நட்சத்திரங்களாக வருவது, இது தோடம் உள்ளதாகும்.
சம திருட்டி தோடமும் அபவாதமும்
விடியற்காலத்தில் சுக்ரன் கிழக்கே உதிக்க, அந்தக் காலத்தில் குரு மேற்கே அஸ்தமிக்கச் சம திருட்டி தோடம் உண்டாம். அக்காலத்துச் சுபக்கருமங்கள் தவிரப்படும். இருவரில் ஒருவர் வேறொரு கிரகத்துடன் கூடி நிற்பினும், இருவருக்கு நடுப்பட்ட இராசிகளில் சுபக்கிரகங்கள் நிற்பினும் சம திருட்டி என்கிற தோடம் இல்லை. சுக்ரன் மேற்கே நிற்க வியாழனிவனுக்கு 7 - ஆம், இடத்துக்குக் கிழக்கே நிற்பினும் சம திருட்டி தோடமாகாது. (விதான.)
தெத்த சுவாலா தூம தோடம்
பாபக் கிரகங்கணின்று கழிந்த நாளும், நின்ற நாளும், நிற்கப் புகுகிற நாளும், தெத்த சுவாலா தூம நாள் என்று பெயர். இந்நாட்களில் சுபங்கள் கூடா. இந்நாட்களுடன் கூடிச் சந்திரன், சுக்ரன் கடந்து போதல், உடனிற்றல், நோக்குதல் செய்யின் நன்றாம். (விதான.)
கேந்திர ஸ்தானம் - இடம் நான்கு மூலைகள்
இதற்கு விஷ்ணு ஸ்தானம் என்று பெயர்.
ரிஷிபானந்தர், அதிஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நுாலில் கேந்திரஸ்தானம் என்பது 1, 4, 7, 10 ஆகியவையாகும். இவை அதிக வலுவுள்ள ஸ்தானங்கள். இதை லக்னத்திலிருந்து எண்ண வேண்டும். லக்னம், 4, 7, 10 ஆகிய கான்கு வீடுகளாகும். பொதுவாக கேந்திரமும், கேந்திராதிபதிகளும், கேந்திரத்தில் இருப்பவர்களும் ஜாதகருக்கு நன்மை செய்ய வல்லவர்கள் என்பர். (ரிஷிபானந்தர், அதிஷ்ட ஜோதிடக் களஞ்சியம் பக்.27)
கேந்திராதிபத்திய தோஷம்
சுபக் கிரகங்கள் கேந்திர ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்ற 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதிகளாகவரின் அதை கேந்திராபத்திய தோஷம் என்பது சோதிட வழக்கு. பாபக் கிரகங்களுக்கு இவ்விதி பொருந்தாது. இவ்வாறு கேந்திராதித்திய தோஷம் பெற்ற சுபக் கிரகங்கள் நற்பலனைத் தராது. கேந்திர ஸ்தானத்தில் சுபக்கிரகம் இருந்தாலும் நற்பலன் கிடைக்காது. இதை அவரவர் லக்ன அடிப்படையில் தான் முடிவு செய்து கூற வேண்டும். இருக்கும் இராசியில் (அ) சந்திர பலன் வரும் இராசியில் சுப நிகழ்ச்சியை நடத்துவது தான் உகந்ததாகும். சுந்திர பலன் இல்லாத அதாவது வராத இராசியில் சுப நிகழ்ச்சிகளை நடத்துதல் உகந்ததல்ல.
கிரகணங்கள் கிரகண தோடம்
சூரிய சந்திரனுடன் ராகு கேது சேர்ந்தாலோ அல்லது சூரியனும் சந்திரனும் சப்தமாக சஞ்சரிக்கும் போது ராகு கேது சேர்ந்தாலோ சூரிய அல்லது சந்திர கிரகணம் தோன்றும்.
கிரகணங்கள் குறித்து ரிஷிபானந்தர் அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நுாலில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சேர்ந்தாலோ அல்லது சூரியனும் சந்திரனும் சப்தமமாக சஞ்சரிக்கும் போது ராகு கேது சேர்ந்தாலோ சூரிய அல்லது சந்திர கிரகணம் தோன்றும் என்றும், சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தைகள் குறித்தும் குறிப்பிடுகின்றார்.
சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தைகள்
சூரிய கிரகணம் நிகழும் காலத்தில் சூரியனும் சந்திரனும் ஜென்ம லக்னத்தில் இருக்க பிறந்த குழந்தையின் ஆயுள்பாவம் குறைந்தே இருக்கும். அவ்வாறின்றி நீண்ட ஆயுள் பெற்றிருக்குமானால் நிராதவற்ற நிலையும், வாழ்க்கையில் சொல்லொண்ணா சோதனை வேதனைகளுக்கு ஆளாக நேரும். தீராத வியாதிக்குள்ளாகும். அடிக்கடி செத்துப் பிழைக்கும் நிலை இருக்கும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.19)
விஷமாதம் தோஷம்
ஒரு மாதத்தில் பௌர்ணமியோ, அமாவாசையோ வரவில்லை என்றால் அது விஷ மாதம். சுப காரியங்கள் புரிய ஏற்ற மாதமல்ல. இருப்பினும் சித்திரை, வைகாசி மாதத்திற்கு இத்தோஷமில்லை என்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.24)
விட்டி தோடம்
சுப காரியங்களுக்கு விலக்கப் பெற்ற நாள். அவை பூருவ பட்ச சதுர்த்தசியில் ஐந்தாம் சாமம் மேற்கிலும், அட்டமியில் இரண்டாம் சாமம் தென்கிழக்கிலும், ஏகாதசியில் ஏழாம் சாமம் வடக்கிலும், பூரணையில் நாலாம் சாமம் தென் மேற்கிலும், அமர பட்சத் திருதிகையில் ஆறாம் சாமம் வட மேற்கிலும், சப்தமியில் மூன்றாம் சாமம் தெற்கிலும், தசமியில் எட்டாம் சாமம் வடக்கிலும், சதுர்த்தசியில் முதல் சாமம் கிழக்கிலும் விட்டி உண்ணும் காலமாகும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.