இராசி மற்றும் இராசிகளின் பெயர்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
தமிழ் அகராதிகள், நிகண்டுகள், பல்வேறு சோதிட நுால்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கும் இராசி மற்றும் இராசிகளின் பெயர்கள் ஆகியவற்றினைப் பற்றிக் காண்போம்.
இராசிகளின் பெயர்
மேடவிராசியின் பெயர்
வருடை, யுதடகர், மறிமை, கொறியென
விரியுமாட்டின்பெயர் மேடவிராசி.
இடபராசியின் பெயர்
பாறல், புல்லம், பாண்டில், பசுமூரி
ஏறு முதல்வந்தன இடபராசி.
மிதுனத்தின் பெயர்
பாடவை, யாடவை, இரட்டை, சயமகள்
மேவுமியாழ்ப்பல்பெயர் தண்டேமிதுனம்.
கர்க்கடகத்தின் பெயர்
அலவன், அள்ளி, குளிர்ஞெண்டார்மதி
கள்வன் என்றிவை கர்க்கடகப்பெயரே.
சிங்கத்தின் பெயர்
அரிமா, புலியை, ஆனனம், யாளி
தெரியிற்புலிசீயப்பல்பெயர்சிங்கம்.
கன்னியின் பெயர்
பெண்மைப்பெயரே கன்னிக்குமாகும்.
துலாத்தின் பெயர்
நிறையே, கட்டளை, வாணிகன், இறுப்பான்
துலையே, கோலெனத் துலாப்பெயர் பெறுமே.
விருச்சிகத்தின் பெயர்
தெருக்கால், பறப்பன், தேளே, விருச்சிகம்
நலமென்பெயரும் தேளின்மேற்றே.
தனுவின் பெயர்
சாபங், காண்டீபந் தனுவின் பெயரே.
மகரத்தின் பெயர்
மானே, கலைசுறா மகரப்பெயரே.
கும்பத்தின் பெயர்
குடமே, சாடி பெயரே கும்பம்.
மீனத்தின் பெயர்
மீனம், மீனின் புலபெயர்பெறுமே.
பன்னிரு இராசிகளின் பெயர்களினை இந்த நிகண்டு நுால் இவ்விதம் குறிப்பிடுகின்றது. (திவாகர முனிவர், சேந்தன், திவாகரம், பக், 19 - 21)
சோதிட சிந்தாமணி நுால் தரும் பழம்பாடல்
வருடைமையாடுதகர்கொறியுதளே
மறியுடனெட்டுமேடம்
மாடவிடைபுல்லம்பாறல்சேநந்திமாப்பசு
பாண்டிலேகுண்டை
நரைவிடையேறுபதினொன்றுமிடபம்நத்
சயமகள்தண்டுவிழவு
நட்புறுமிரட்டைபாடவல்யாழ்பாடவை
மிதுனத்தின்பேரேழாம்
அருமதிநள்ளிருளிக்கள்வன்சேக்கையல
வனண்டேழுங்கர்க்கடகம்
ஆளியேபரிமாபுலியையானன
னான்கன்றியும்புவிசிங்கத்தின்பேர்
மருவுமாஞ்சிங்கராசிபெண்பொதுப்போவனையு
மக்கன்னியிராசி
வனிகன்சீர்நிறைகோல்கட்டளைதராசு
வருந்துலைதுாக்கென்பேர்துலாமாம்.
பறப்பன்தேள்தெறுக்கால்விருச்சிகங்காண்டி
பங்கொடுமாந்துரோனஞ்சா
பஞ்சிலைபன்றுவிற்பெயரெல்லாம்
பகருவர்தனுவிராசிக்கே
சுறாக்கலைதைமான்பங்குக்கிராகஞ்
சொலுமைந்துமகரவிராசி
சுயகுடங்குடங்கர்சாடிகரீரந்தோற்று
நாற்பெயர்கும்பமாகும்
சிறப்புயர்சலசஞ்சலசாமயிலைமச்ச
நாற்பெயர்செழுமீனம்
செப்புமீதன்றியவ்வவ்விராசித்திரிப்
பரியாயமும்பொருந்தும்
இறப்பொடுபிறப்புமிம்மைக்கண்வென்ற
வென்குருவீரப்பநாமன்
இருசரணிறைஞ்சிக்கிரகநாயகர்
பேரியம்புவானிசைந்தனமென்றே.
பன்னிரு இராசிகளின் பெயர்களினை இந்த நுால் இவ்விதம் குறிப்பிடுகின்றது. (சோதிட சிந்தாமணி, பா.எ.7 - 8, பக.111 - 112)
இராசிகளின் பொது - இராசிகளின் பொதுப் பெயர்
இடம், இராசி, இல், இல்லம், ஓரை, பவனம், வீடு, மத்தியானம், கூட்டம், மேஷம் முதலிய வீடு, சந்திரன் நிற்கும் ராசி, ஜென்ம லக்கினம். இணக்கம், ஒழுங்கு, குவிதல், இனம், பொருத்தம், கிரகங்கள் சஞ்சரிக்கும் இடம்.
இராசிகளின் பெயர்
மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பனவாம்.
ஆண் ராசி
ஒற்றை ராசி, ஓசை இராசி, ஆண் ராசி என்பர். இவை மேஷம், மிதுனம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் ஆக ஆறும் புருஷ ராசி என்பனவாம். இது பன்னிரு ராசிகளையும், ஓசை, உக்மமாகப் பிரிக்கப் பெற்றது.
பெண் ராசி
உக்ம ராசி, இரட்டை ராசி, பெண் ராசி என்பர். விவரம் இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் என்பனவாம் அன்றியும், மிதுனத்திற்கும் பெயர்.
உடல் உதயராசி - மீனம்.
ஆடி - உருத்திராட நாள், கரக்கடகமாதம், ஓர் மாதம். உத்திராட நாள், கர்க்கடக மாதம், காற்று.
உள் ராசி - திர ராசி நான்கு. இவை, இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்பவைகளாகும்.
ஏறு இடபராசி, சிங்கம். அசுபதி, இடபராசி, இடபவிராசி, சங்கு, இடி.
ஏறும் இராசி - மகரம் முதல் மிதுனம் வரையிலும் உள்ள ஆறு ராசிகள்.
இரங்குமிராசி - கடகம் முதல் முதல் தனுசு வீறாகவுள்ள ராசி. கடகம் முதல் தனுசு உள்ள ஆறு ராசிகளாம்.
நிற்கும் ராசி - கன்னி, தனுசு, மிதுனம், மீனம்.
நாற்கால் இராசி - மேஷம், ரிஷபம், சிங்கம், தனுசு ஆக 4.
நடக்கும் ராசி - சரராசி நான்கும் ஆகும். இது மே‘ம், கடகம், துலாம், மகரம்.
நடுராசி - இடை ராசி. நடிராசி - இடையிராசி.
நீர்க்கீழ் - உதயத்திற்கு நாலாமிராசி.
பசு - இடப ராசி, ஆன், இடபவிராசி. எருது, ஆடு.
பரக்கும் ராசி, பறக்கும் ராசி - மகரம், மீனும், இது மேற்பார்வை உள்ளது.
பறப்பன - விருச்சிக ராசி, தேள், விருச்சிகம்.
கால் உதய ராசி - மேஷம், இடபம், கடகம், தனுசு, மகரம், இவை இரா வலிமை உள்ளன.
பிரட்டோதயராசி - மேஷம், இடபம், கடகம், தனுசு, மகரம்.
சலராசி - நீர் ராசி
கடல் நீர் முதலியவற்றிற்கு அதிகாரம் அல்லது காரக ஆதிபத்தியம் பெற்ற இராசி. இது கடகம், கும்பம், மகரம், மீனம், விருச்சிகம் என்னும் ஐந்து ராசிகளுமாகும். அன்றியும் இடபமும், துலாம், ஆகியவைகள் சேர்ந்து ஏழு ராசிகளுமாகும் என்னும் நூல்களும் உள்ளன.
குறிப்பு: முற்கூறியவைகளில் கடகம், மீனம் இவ்விரண்டும் முழுச் சலராசி என்றும், கும்பம், மகரம். இவ்விரண்டும் முக்கால் சல ராசி என்றும் துலாம் அரைச் சல ராசி என்றும் இடபம், விருச்சிகம் காற்சல ராசி என்பாரும் உளர்.
மூல ராசி - ஸ்திர ராசி நான்கு. அது இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்பனவாகும்.
சரராசி - கற்கடகம், துலாம், மகரம், மேடம்.
சர்ப்ப ராசி - சருப்ப ராசி. சூரியன், சாரம்.
திர ராசி, திர லக்கினம் - இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம்.
துற்பல ராசி - சரராசி நான்குமாகும். இது மேஷம், கடகம், துலாம், மகரம் என்பனவாகும்.
சுட்க ராசி - மிதுனம், சிங்கம், கன்னி.
சீவ ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.
சலசரம் - மீன ராசி, மீன்.
சிரபிருட்டோதய ராசி - மீனம்.
தாதுராசி - மேஷம், கடகம், துலாம், மகரம்.
தறிக்கால் ராசி
சூரியனுக்கு - கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு. மகரம், கும்பம், கடகம், இவைகளின் மூன்றாங்காலும், கடகம், சிங்கம், இவைகளின் முதல் காலும், மிதுனத்தில் நாலாம் காலும் ஆகும்.
தலை உதயராசி
மிதுனம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் என்பனவாகும். இவைகள் பகல் வலிமை உள்ளது.
பங்குக்கிரகம், பங்குக்கிராகம் - மகரராசி.
பலகால் ராசி - கடகம், விருச்சிகம்.
தட்சணாயணம்
சூரியன், தெற்கில் சஞ்சரிக்கும் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்னும் ஆறு மாத காலம் பயணம். சூரியன் மூவகை வீதியில் ஒன்று. தட்சிணபதம் - தெட்சண வீதி, தென்பக்கம். தட்சிணா திசை - தெற்கு. தட்சிணாசை - தெற்கு.
தட்சணாங்க ராசி
கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு இந்த ஆறு ராசிகளும் ஆகும்.
உத்திராயணம்
சூரியன், வடக்கில் சஞ்சரிக்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்னும் ஆறு மாத காலம் பயணம். அவை உத்திராயணம் - வடக்கு. சூரியனின் வடக்கு வழிப்பயணம்.
உத்திராயண ராசி
மகரம், கும்பம், மீனம், மேடம், ரிடபம், மிதுனம் ஆகிய ராசிகள் ஆகும்.
மேடத்தின் பெயர்
உதன், யாடு, ஆடு, அசம், அருணம், உடு, ஒருவு, துருவை, துள்ளல், புருவை, வெறி, செம்மறி, மோத்தை, உதள், கொச்சை, ஏழகம், வற்காலி, பள்ளை, வௌ்ளை, வருடை, மேடம், மேசம், உதள், கடா, மை, மறி, காறி, சாகம், தகர், மேழகம், கொறி, மேஷராசி, மேடராசி, சிங்கராசிகொறி, கொண்டல், யாடு, ஆட்டுக்கடா மொத்தை, மரி, முல்லை, கொச்சை, மைகாலி ஆகியன ஆகும்.
இடபத்தின் பெயர்
ஆன், இடபம், இடப ராசி, இருள், உக்கம், ஏறு, குண்டை, சே, நந்தி, நரை, பசு. பாண்டில், பாறல், புல்லம், பூணி, பெற்றம், மாடு, மூரி, விடை, இறால், இடவம்: இரால், காளை, கோபதி, கோராசன், கோவிருஷம், புல்வாய், தாவுரி, தூரி, தூரியம், எருது, நந்தி, நூபம், விருடன், விருடம், செ ஆகியன ஆகும்.
(மதுரை.அக.) ஆண்டு. எருது, இருது இளவேனில் எரிகதிர் இடபத்து. (மணிமே.11,40.) மேற்படும் இடபம், கும்பம் (சிவஞா.காஞ்சிப்பு. இட்ட.20.) 1.எருது. 2.பொலி எருது. 3.நந்தி. இராசி வட்டத்தில் இரண்டாம் இராசி, இடபராசி, இடபம் கன்னி மகரம் ஓரை. (பன்னிரு பா.94.)
மிதுனத்தின் பெயர்
இரட்டை, சயமகன், சயமகள், தண்டு, பாடவன், பாடவள், பாடவை, யாழி, யாழ், விழவு, விழைவு, மிதுனராசி, கின்னரம், மிதுனம், வீணை, ஆடவை, சிவிகை தாரம், சண்டு, கவுஞ்சன் ஆகியன ஆகும்.
ஓரிராசி. ஸ்திரிபுமானாகிய இரட்டைப்பேறு. ருசிப்பிரசாபதிக்கு ஆவுதியிடம் பிறந்தவர்.
கடகத்தின் பெயர்
அலவன், களவன், கள்வன், குளிர், சேக்கை, ஞெண்டு, நண்டு, நள்ளி, மதி, கடகம். கடகராசி, கடகன், கர்க்கடகம் - ஓரி ராசி, கர்க்கடகராசி, கார்வன், கற்கடகம், கற்கு, இரட்டைக்கை, ஆர்மதி, வானம் கடக உருவம், நளிவிடம், தேள், கொண்டல், அனி, சொக்கை, நீர், கார் ஆகியன ஆகும்.
சிம்மத்தின் பெயர்
துவிரதாந்தகம், சிங்கம், கண்டீரவம், ஐயானனம், சிங்க ராசி. கசரிபு, அரிமா, ஆளி, புலி, கோளரி, கொடும்புலி, சிங்கவிராசி, சீயம், சிம்மம், அரி, அறுகு, கண்டீரவம், காளி, கேசரி, தெரிமா, நகாயுதம், நகரயுதம், பஞ்சாசியம், பஞ்சானனம், மடங்கல், மாபுலி, மிருகபதி, மிருகராசன், முடங்குளை, வடபுலி, வயப்புலி, வயப்போத்து, வயமா, விலங்கரசு, விருகாராதி, விருகாரி, ஓரிராசி, சிம்மராசி, கேசி, கோவிலங்கம், தீத்தம், தீத்தபிங்கலம், சிற்றில், கொன், மாகெடுவன் இன்னும் சிங்கத்தின் பெயர் எல்லாம் பொருந்தும் ஆகியன ஆகும்.
கன்னியின் பெயர்
கன்னி, மாது, கோதை, கன்னியாராசி, கன்னி ராசி, கௌரிகை, தீதை, தையல், பெண், தெரிவை, செண், சேடியை, பாதேயம், கன்னியிராசி, நிலம், ஓரிராசி, பெண்டிர் - கன்னியா ராசி, வரதை இன்னும் பெண்ணின் பொதுப்பெயர் எல்லாம் பொருந்தும் ஆகியன ஆகும்.
துலாத்தின் பெயர்
கட்டளை, கோல், சீர், தராசு. துலை, தூக்கு, நிரை, வணிர், வணிகன், துலாம். ஏற்றக்கோல் - துலாக்கொடி. ஏற்றமரம், ஏற்றம், துலா, கட்டளை, துலாம் ராசி, தடம், துலாராசி, ஞெமன்கோல், தண்டு, தராசுக்கோல், சமானம், நிறைகோல், துலா - ஒன்றற்குச் சரியாய் தன்மை, கைமரம், பண்டிக்கோல், பாகம், துலாதாரம், நிறை, கா, தராசுத்துலா, தௌலம் - துலாக்கோல், நிறுப்பான், நிறுப்பவன், பாரம், நிறையறிகருவி, கொல், வாணிபன், துாக்கல், நிரை, செட்டி ஆகியன ஆகும்.
விருச்சிகத்தின் பெயர்
தெருக்கால், தெறுக்கால், பறப்பன், விருச்சிகம், தேர், விடம் - தேள், தேளி, தேள், துட்டன், தெறுக்கான், நளி, அனுட்டநாள், அனுடநாள், விருச்சிகராசி, விருச்சிக உருவம், அவிட்டம், நீர், துட்டன் ஆகியன ஆகும்.
தனுசின் பெயர்
காண்டீபம், கொடுமரம், சாபம், சிலை, துரோணம், தனுசு, மூல நாள், வில், தனுசு ராசி, தனுவிராசி, கோதண்டம், தனு, ஓரி ராசி, திருமாலாயுதம், தனுர், தனுகாண்டன், காண்டீபம், கார்முகம் ஆகியன ஆகும்.
மகரத்தின் பெயர்
கலை, சுறா, சுறவு, தை, பங்கு, கிராகம், மான், மகரம், ஏறு, கலை, களி, தகர், மகர மீன், மகரராசி, மகர மச்சம் - மகரமீன், மானேறு, மீனேறு, மகரமீன், மான் தலை, கேது, புல்வாய், சுரா ஆகியன ஆகும்.
கும்பத்தின் பெயர்
கரீரம், குடங்கர், குடம், சாடி, கூன், சால், கலசம், சட்டுவம், கும்பம். கும்பராசி. இடங்கர், கும்பவிராசி. கும்ப உருவம், ஓரி ராசி, கலசம், கும்ப கலசம் - சடங்கு ஸ்தாபன குடகலசம், கும்பி, கும்பை, கும்பாரம், கொப்பரி, கொப்பரை ஆகியன ஆகும்.
மீனத்தின் பெயர்
சலசலம், சலசரம், மச்சம், மயிலை, மீனம், மீன், கயல், சேல், கண்டை முதலிய மீன் பெயர்கள் யாவும் பொருந்தும். மச்சம் - மீன ராசி, மீனவிராசி ஆகியன ஆகும். பன்னிரண்டாவது இராசி.
இவ்வாறு கிரகத்தின் பெயர் நிகண்டு என சகாதேவர் அருளிச் செய்த நவ நாடிகளில் ஒன்றாகிய சோதிட சந்திர நாடி முதலிய பழம் நுால்களில் இப்பெயர்கள் அக்காலத்தில் பழந்தமிழில் பதிவாகி உள்ளமையால் அதன் வழி பயனினை நாம் அறியலாம்.
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|