நிர்வாணி, நிர்வாணி நிலை, யோகினி - யோகினி வடிவம், யோகினிகள், யோகினி அறிதல், யோகினி திசை - யோகினி வரும் திசை, நித்த யோகினி நிலை ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.
நிர்வாணி - அமங்கலை, யோகினிக்கும் பெயர்.
நிர்வாணி நிலை
ஞாயிறு, வியாழன் - தென்கிழக்கு, திங்கள், வௌ்ளி - தென்மேற்கு, செவ்வாய், சனி - வடமேற்கு, புதன் - வடகிழக்கு. இவள் பின் நிற்கும் திக்கில் பயணத்திற்கு நன்று. எதிர் நிற்கும் திசையின் நேரில் போகலாகாது. ஞாயிறு, வியாழம் - தென் கிழக்கு, திங்கள், வௌ்ளி - தென் மேற்கு செவ்வாய், சனி - வட மேற்கு புதன் - வடகிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் நன்று, முதற் பக்கந் தீது இவள் நிற்குந் திசையில் போகல் ஆகாது.
யோகினி - யோகினி வடிவம்
காளி, சன்மினி, சூர்மகள், நிர்வாணி, இவள் நிர்வாணமும், விரித்த தலையும், தேகத்தில் வெண்ணீறும், சங்காபரணம் முதலிய அமங்கலமும், இரத்த நிறமும் உடையவள். ஒரு பெண் தேவதை. இவள் நிர்வாணி. விரிந்த கேசமும், தேகம் முழுவதும் வெண்ணீற்றுப் பூச்சும், மங்கல ஆபரணம் இன்றிச் சங்காபரணமும், கையில் வெறித்த கபாலமும், தீரா அமங்கலான சிவந்த வர்ணமும் உடையவள்.
யோகினி வடிவமாவது நிருவாணமும், விரிந்த கேசமும், சருவாங்கமும், வெண்ணீற்றுப்பூச்சும் மங்கலாபரணமின்றிச் சங்காபரணமும், கையில் வெறிய கபாலமும், தீராத மங்கலமான சிவந்த வருணம் உடைய யோகினி ஆனவள் முன்னும், இடப்புறமும் ஆகாது. பின்னும் வலப்புறமும் நன்று என்று தெரிவிக்கின்றது. ஆகாயம், பூமி, மத்திமம்.
“நக்கம்விரித்ததலைவெள்ளை பூசிநாணாரமின்றி
யக்கையணிந்து வெற்றோடேந்தியாறாவமங்கலியாஞ்
செக்கர்நிறத்தொருசேயிழையோகினிதீயள்முன்னும்
பக்கத்திடத்தும்வலத்துடன்பின்னும் பலந்தருமே”
(விதானமாலை, செ.43, ப.176)
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
யோகினிகள்
ஒரு வித மயக்கும் சக்திகள். இவர்கள் 64 கோடியர். இவர்களைச் சங்கரித்தனர். அவர்களுள் சிலர் காளியிடம் ஏவல் செய்து இருக்கின்றனர். அவர்கள் 64 - திவ்ய யோகி, மகாயோகி, சித்தயோகி, கணேஸ்வரி, பிரோதாசிபிகினி, காள ராத்திரி, நிசாசரி, ஜங்காரி, ஊர்த்துவ வேதாளி, பிசாசி, பூதடாமரி, ஊர்த்துவகேசி, விரூபாட்சி, சுஷ்காங்கி, நரபோஜனி, ராட்சசி, கோர ரக்தாட்சி, விஸ்வரூபி, பயங்கரி, வீரகௌமாரி, கீசண்டி, வராகி, முண்டதாரணி, பிராமரி, ருத்ர வேதாளி, பீஷ்கரி, திரிபுராந்தகி, பைரவி, துவம்சனி, குரோதி, துர்முகி, பிரேத வாகினி, கட்வாங்கி, தீர்க்கலம் போஷ்டி, மாலினி, மந்திர யோகினி, காலாக்னி, கிறாமணி, சக்ரி, கங்காளி, புவனேஸ்வரி, பட்காரி, வீரபத்ரேசி, துாம்ராட்சி, கலகப்பிரியை, கண்டகி, நாடகி, மாரி, எம துாதி, கராளினி, கௌசிகி, மர்த்தனி, எட்சி, ரோமஜங்கி, பிரஹாரிணி, சகஸ்ராட்சசி, காமலோலா, காகதமிஷ்டரி, அதோமுகி, துார்ஷசடி, விகடி, கோரி, கபாலி, விஷ்லங்கினி ஆகியோர் ஆவர்.
யோகினி அறிதல்
சுக்ல பட்சம் பிரதமை, ஏகாதசி, கிருஷ்ண பட்சம் சஷ்டி - கிழக்கு. சுக்கில பட்சம் திருதிகை, திரயோதசி, கிருஷ்ண பட்சம் அஷ்டமி ஆக்கினேயம். சுக்கில பட்சம் பஞ்சமி, பௌர்ணமி, கிருஷ்ணபட்சம் தசமி - தெற்கு. சுக்கில பட்சம் - சதுர்த்தி, சதுர்த்தசி, கிருஷ்ண பட்சம் நவமி - நிருதி. சுக்கில பட்சம் சஷ்டி. கிருஷ்ணபட்சம் பிரதமை, ஏகாதசி - மேற்கு. சுக்கிலபட்சம் சப்தமி, கிருஷ்ணபட்சம் துதியை, துவாதசி - வாயு, சுக்கில பட்சம் துதியை, துவாதசி, கிருஷ்ணபட்சம் சப்தமி - வடக்கு. சுக்கில பட்சம் அஷ்டமி, கிருஷ்ண பட்சம் திருதியை, திரயோதசி - ஈசான்யம். சுக்கில பட்சம் நவமி, கிருஷ்ணபட்சம் சதுர்த்தி, சதுர்த்தசி - ஆகாயம். சுக்கில பட்சம் தசமி, கிருஷ்ண பட்சம் பஞ்சமி, அமாவாசை - பாதாளம். இந்த யோகினியைப் பின் புறத்தில் வைத்துப் பிரயாணஞ் செய்ய நன்று. சுக்கில பட்சம் பிரதமை முதல் இஷ்ட தின திதி வரையில் எண்ணி வந்த தொகையைப் பத்தால் வகுத்த மிச்சம் 1 - க்குக் கிழக்கு, 2 - க்கு வடக்கு, 3 - க்கு தென்தெற்கு, 4 - க்கு தென்மேற்கு, 5 - க்கு தெற்கு, 6 - க்கு மேற்கு, 7 - க்கு வடமேற்கு, 8 - க்குக் வடகிழக்கு, 9 - க்கு ஆகாசம், 10 - க்குப் பூமி, வழக்கு, சூது, யுத்தம், யாத்திரை இவற்றிற்கு யோகினி பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
யோகினி திசை - யோகினி வரும் திசை
யோகினி தேவதையா நடப்பது. யோகினி நிற்கும் திசை. விவரம்: பூர்வ பட்சத்திற்கு பிரதமை முதல் மேற்படி பூரணை வரை முறையே கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு ஆகிய இத்திசைகளில் நிற்கும்.
அமர பட்சத்திற்கு பிரதமை முதல் மேற்படி அமாவாசை வரை முறையே மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி ஆகிய இத்திசைகளில் நிற்கும் என்பதாகும். மேற்கூறிய இரு பட்சத் திதிகளுக்கு உரிய எந்தத் திக்கில் யோகினி நிற்கின்றதோ, அந்தத் திக்கிற்கு எதிராகவும், வலப்பக்கமும், பிரயாணம் செய்யலாகாது.
யோகினி வரும் திசை
இது குறித்து விதானமாலை எனும் நுால் இந்திரன், குபேரன், அக்கினி, நிருதி, யமன், வருணன், வாயு, ஈசானன், ஆகாயம், பூமி என்னும் பத்துத் திக்குமடைவே பூருவ பக்கத்துப் பிரதமை முதல் தசமியந்தம் யோகினி வரும். பின்பு ஏகாதசி முதல் அபர பக்கப் பஞ்சமி அந்தம் இப்படியே வரும். பின்பு சஷ்டி முதல் இப்படியே வரும். சூது, வழக்கு, யுத்தம், யாத்திரை இவற்றிற்குத் திதி வாரநாட் பிரதானமல்ல. யோகினி பிரதானம் என்றும் குறிப்பிடுகின்றது.
“கொடிகரி துாமநாய் சீயங்கொடு விடைவாயுவீச
னெடுவிண்ணிரயமெனுமடைவேநிறைபக்கத்தாதி
யடைவின் வருமென்பயோகினியாந்திதிவாரநாளும்
வடுவென்பர்சூதுவழக்கொடுபோர்வழிபோதற்குமே”
(விதானமாலை, செ.42, ப.176)
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
சூ. உ எனும் நுால் யோகினி குறித்து பிரதமையும், நவமியும் கிழக்கே நிற்கும். ஏகாதசியும், திரிதிகையும் தென்கிழக்கே நிற்கும். திரயோதசியும், பஞ்சமியும் தெற்கே நிற்கும். துவாதசியும், சதுர்த்தசியும் தென்மேற்கே நிற்கும். சதுர்த்தசியும், சட்டியும் மேற்கே நிற்கும். உவாவும், சப்தமியும் வடமேற்கே நிற்கும். தசமியும், திரிதிகையும் வடக்கே நிற்கும். அட்டமி வடகிழக்கே நிற்கும். இவள் முன்னும், இடமும் தீயவள். பின்னும் வலமும் நல்லது என்று தெரிவிக்கின்றது.
“கருதுமுதல் பட்சமுடன் நவமிகிழக் காகும்
களிப்புடைய பதினொன்று மூன்றும்தென் கிழக்காம்
தெரியிலொரு பதிமூன்றும் அஞ்சும் தெற்காம்
செப்பரிய பனிரெண்டும் நான்கும் தென்மேல்
மருவுபதி நான்காறு மேற்கு வாவேழ்
வடமேற்காம் தசமியுடன் இரண்டும்வடக் காகும்
உரியவிரு நான்குவட கிழக்கே உண்ணும்
யோகினிமுன் இடம்தீய ஒழிந்ததிசை நன்றே”
(சூ.உ, செ.56, ப.25)
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
நித்த யோகினி நிலை
பகலை 8 பங்காக்கி 1 வது பங்கில் கிழக்கிலும், 2 வது வடமேற்கிலும், 3 வது தெற்கிலும், 4 வது வடக்கிலும், 5 வது மேற்கிலும், 6 தென்கிழக்கிலும், 7 வது வடக்கிலும், 8 வது தென் மேற்கிலும் நிற்கும். யாத்திரைக்கு இந்த யோகினி பின் பக்கமும், இடப் பக்கமுமாக இருத்தல் வேண்டும். இதனைப் பார்க்கும் இடத்துக் கிழக்கை முதலாகக் கொண்டு பார்க்க வேண்டும்.
இவ்விதம் யோகினி அறிதல் நலம்.