தமிழன் உணவு முறை
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
உணவின் தன்மை - உணவாதி வகைகள், பாக பாத்திரங்களுக்கு உரிய கருவிகள் - அன்னம் - சோறு - சாதம் சமைக்கும் இலட்சணம், அந்த எண் வகைத் தோடங்கள் - இவ்வகை அன்னமும், பலகாரங்களும். சமைக்கும் அரிசியாவன நெல், நெல்லின் வகைகள், நெல்லின் பல வகுப்புகள், அன்னம், அன்னம் புசிக்கத்தகாத இடங்கள், சோற்றில் எண் வகைத் தோடங்கள், பஞ்சான்னம், சித்திரான்ன வகை, சாதவகை, போஜனக்கிரமம் - ஆசாரக்கோவைத் தெரிவிக்கும் செய்தி, போஜனம் - புசிக்கும் திக்கு - உணவு உண்ணும் திசை, போஜன விதி - உணவு உண்ணும் விதி, போஜனஞ் செய்யும் பாத்திரம் - உணவு செய்யும் பாத்திரம், நீரருந்தும் வகை, உண்கல வகைகள், கறிமா, கறிவகை, அபத்திய பதார்த்தங்கள், பத்திய பதார்த்த வகை, பத்தியம், சிற்றுண்டி வகைகள், சாப்பிடத்தகாத பொருள்கள், பால்வகை குணங்கள், தயிர் - தயிர் வகை, நெய் ஆகியன பற்றி இங்கு காண்போம்.
தமிழன் உணவு முறையினில் கட்டமைப்பு உடையவன். அறுசுவை உணவினை விருப்பத்துடன் உண்பவன்.
அபிதான சிந்தாமணி தரும் கருத்துக்கள்
உணவின் தன்மை - உணவாதி வகைகள் - பாக சாலை முதலியவற்றில் சமைக்கும் உணவு, உயிர்களின் பசி முதலிய பிணிகளை நீக்கித் தேகத்தை ஆரோக்கியமாகச் செய்வதாம். இது கிரியா பேதங்களால் பல வகைப்படும். இது நாவிற்கு இனிமை தந்து மனத்தைச் சுகப்படுத்தும். இதனைச் சித்தஞ் செய்வதற்கு ஏற்ற கருவிகளின் வகையும், இதனைச் சித்தஞ் செய்வதற்குப் பாக சாலையின் முறையும் ஆவன. 32 அடி நீளமும், 8 அடி அகலம் உள்ளதாய் மேலில் புகை முதலியன செல்வதற்கும், அக்நிக்கு உதவியாகிய காற்று இயங்குவதற்கும், புகைக் கூண்டு, பலகணிகள், நீர்த்தாரைகளைப் பெற்றதாய்ச் சுத்தமுள்ளதாய் ஒரு பெரிய அறை இருக்க வேண்டும். இவ்வறைக்கு அக்னித் திசையிலாவது இந்திர திசையிலாவது பரணி, கிருத்திகை முதலிய நட்சத்திரங்களில் பசுவின் வால் போல் செங்கல்லினாலாவது, களி மண்ணிலாவது அடுப்பு நிருமித்தல் வேண்டும். அவ்வடுப்பின் இரு புறத்திலேனும் ஒரு புறத்திலேனும் மீயடுப்பு, கிளையடுப்பு, புடையடுப்பு இருத்தல் வேண்டும். அடுப்பின் அடிப்புறத்தில் சாதம் வடிப்பதற்குக் கஞ்சி நீர்க் குழியும், ஏனைப் பதார்த்த பண்டங்களை அமைத்தற்குச் சிறு குழிகளையும் வைக்க வேண்டியது. இவ்வகைச் செப்பம் செய்த அடுக்களையை நாள் தோறும் மெழுகிக் கோலமிட்டு மலரிட்டு, இட்ட தேவதைகளையும், நவக்கிரகங்களையும், கிரக தேவதைகளையும், பூசித்து அடுப்பில் அக்னியைப் பதித்தல் வேண்டும். இவ்வடுக்களைக்கு வேண்டிய உப கரணங்களில் அக்கினியை அல்லது தீபத்தை அக்கிநித் திசையிலும், யமன் திசையில் விறகையும், வருண திசையில் நீர்க்குடத்தையும், வாயு திசையில் விசிறி முதலியவற்றையும், நிருதி திசையில் முறம், துடைப்பம் முதலியவற்றையும், குபேர திசையில் தானியம், காய்கறி முதலிய பொருள்களையும், ஈசானியத் திசையில் உரல், அம்மி, உலக்கை முதலியவற்றையும், அமைத்தல் வேண்டும். வலது பக்கத்தில் பாக பாத்திரங்கள் அமைந்து இருக்க வேண்டும். இவ்வகை அமைந்த பாக சாலையில் சமைப்போன் அரோகியாய்த் தேக புஷ்டி உள்ளவனாய், பதார்த்த இலட்சணம் அறிந்தவனாய், நற்குலத்து உதித்தவனாய் உள்ளவன், தான் ஸ்நானம் செய்து அரையில் சிறு துண்டும், மேல் சிறு துண்டும், உடையவனாய்ச் சிகையை நன்றாய்த் தட்டி உதறி அவிழா மூடி இட்டு நகங்களை நன்றாய்ச் சுத்தி செய்து கை கால் அலம்பி அடுக்களையில் பிரவேசித்துச் சுத்த பாத்திரங்களாகிய பாக பாத்திரங்களை உபயோகப் படுத்த வேண்டும்.
பாக பாத்திரங்களுக்கு உரிய கருவிகள்
அகப்பை, கரண்டி, உரல், முறம், சல்லடை, அம்மி, குழவி, மரக்குழவி, இருப்பு வாணா, சில்லிக் கரண்டி, அரிவாள்மணை முதலியன. பித்தளைப் பாத்திரங்கள் இருக்கின் ஈயம் பூசப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.
அன்னம் - சோறு - சாதம் சமைக்கும் இலட்சணம்
செம்மையாகக் குத்தித் தவிடு போக்கிய அரிசியை உமி, கல் முதலிய இல்லாமல் பல முறை அலம்பி, அதன் குற்றங்கள் நீக்கும் அளவும், அரித்துப் பின் தூய்மையை உடையது என அறிந்து அரிசியிலும் மூன்று பாகம் கொள்ளத்தக்க அளவுள்ள பாத்திரத்தில் வைத்த உலையில் அரிசியை ஒருமிக்கப் பெய்து அடிக்கடி துழாவிப் பதத்தில் பாலாவது, நெய்யாவது சிறிது விட்டுத் துழாவி வடிபதத்தில் வடிதட்டால் அடிகுழிக்கு மேலிட்டு வடித்து விடல் வேண்டும். வடித்த சாதத்தில் கஞ்சி இருந்தால் ரோகத்தை விளைக்கும். ஆதலின் அக்கஞ்சிச் சுவறச் சிறிது நெருப்பை வெளியில் தள்ளி அதன் மீது சாத பாத்திரத்தை வடியும் மட்டும் வைத்தல் தகுதியாம். இவ்வகை சமைக்காத அன்னம் எண்வகைக் குற்றங்களுக்கு உள்ளாகி உண்பவனை ரோகியாக்கும்.
எண் வகைத் தோடங்கள்
அஸ்திரீதம், பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷ்மிதம், தக்தம், வீரூபம், அநர்த்துஜம், என்பவனாம். இவற்றுள் அஸ்திரீதம், கஞ்சி சுற்றிக் கொண்ட அன்னம். இதைப் புசிப்போர்க்கு ஆமயம் முதலிய ரோகங்கள் உண்டாம். பிச்சளம், அளிந்த அன்னம் இதைப் புசிப்போர்க்குக் குன்மாதி ரோகங்கள் உண்டாம். அசுசி, புழு, மயிர் சேர்ந்த அன்னம் இதைப் புசிப்போர்க்கு வாய் நீர் ஒழுகல் உண்டாம். குவதிகம், நருக்கரிசி பட்ட அன்னம் இதைப் புசிப்போர்க்கு அஜீரண ரோகம் உண்டாகும். சுஷ்மிதம், சிறிது வெந்தும் வேகாத அன்னம் இதைப் புசிப்போர்க்கு இரத்த பீடனம் உண்டாகும். துக்தமாவது காந்தின அன்னம் இதைப் புசிப்போர்க்கு இந்திரிய நாசம் உண்டாகும். விரூபம் விறைத்த அன்னம் இதைப் புசிப்போர்க்கு ஆயுள் குறைபாடு உண்டாகும். அனர்த்துஜம், பழஞ்சாதம் இதைப் புசிப்போர்க்கு அதி நித்திரை சீதாதி ரோகங்கள் உண்டாகும்.
இவ்வகை அன்னமும், பலகாரங்களும். சமைக்கும் அரிசியாவன
ஈர்க்குச் சம்பா, புழுகு சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, மல்லிகைச் சம்பா, குண்டு சம்பா, இலுப்பைப்பூச் சம்பா, மணிச்சம்பா, வளைதடிச் சம்பா. கோரைச் சம்பா, குறுஞ்சம்பா. மிளகுச்சம்பா, சீரகச் சம்பா, காளான் சம்பா, மைச் சம்பா, கோடைச் சம்பா, காடைச்சம்பா, குன்றுமணிச்சம்பா, அன்னமழகி அரிசி, கார் அரிசி, மணக்கத்தை அரிசி, வாலான். கறுங்குறுவை, சவ்வரிசி, மூங்கிலரிசி, கோதுமையரிசி, கம்பரிசி, சாமையரிசி, தினையரிசி, சோளஅரிசி, வரகரிசி, கேழ்வரகரிசி இவையன்றிக் கேடிலிச்சம்பா, கலிங்கஞ் சம்பா, கன்கம் சம்பா, கலப்புச் சம்பா, கம்பஞ்சம்பா, காடைக்கழுத்தன் சம்பா, கோடன் சம்பா, பாசடைச்சம்பா, சன்ன சம்பா, சின்னச் சம்பா, சிறுமணிச் சம்பா, சுரைக்காய்ச் சம்பா, சுகுதாச் சம்பா. சேம்பாளைச் சம்பா. சொரியஞ் சம்பா, திருவரங்கஞ்சம்பா, துய்ய மல்லிகைச் சம்பா, பாலாஞ் சம்பா, பெருஞ்சம்பா, பேய் வள்ளைச் சம்பா, பைகோச்சம்பா. மங்கஞ்சம்பா, மணல் வாரிச்சம்பா, மலைக்குலிக்கிச் சம்பா, மாவாம்பைச்சம்பா, முனை வௌ்ளைச்சம்பா, கார்த்திகைக்கார், முட்டைக்கார், சித்திரைக்கார், கருமோசனம், வௌ்ளை மோசனம், வால் மோசனம், பொச்சாரி, அருஞ்சாதி, இரங்கமாட்டான், ஈசுரக்கோவை, பிச்சவாரி, செம்பாளை, கல்லுண்டையரிசி, புட்டரிசி. குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்கவரிசி முதலிய பலவாம். இவற்றால் பல விதமாகிய சுத்த அன்னங்கள், சித்திரான்னங்கள், பலகாரங்கள் செய்து இலைக்கறிகள், காய்கள், பிஞ்சுகள், கனிகள், பயிறுகள் முதலியவற்றை ஐங்காயமிட்டுச் சமைத்த துணையுடன் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தின உடலிற்கு நோய்கள் வாராது. (அபிதான சிந்தாமணி ப. 280)
நெல்
புல் வகையில் சேர்ந்த பயிர், இது உலகிலுள்ள எறும்பு முதல் யானை ஈறாகவுள்ள எல்லாப் பிராணிகளுக்கும் ஆகாரமாக உள்ளது. இது நன்செய், புன்செய் நிலங்களில் விளையும் பயிர், இவ்வகை நெற்கள் உருவ வேறுபாட்டினும், உரிசை வேறுபாட்டினும் பல வகைப்படும். இந்நெல் வகை இந்தியாவில் 300க்கு மேற்பட்ட வேறுபடுள்ளன என்பர். ஜப்பானியர், இதில் 4000 வகைகளுக்கு மேற்பட்டிருக்கிறது என்பர். இவற்றின் நிறம் பொன்மை, வெண்மை. இந்தியாவில் பூர்வம் பெரும்பாலார் உழவைக் கொண்டே எல்லாச் செல்வங்களையும் பெற்றனர். அரசனும் உழவரிடம் பெற்ற செல்வத்தாலேயே அரசாண்டு வந்தான். வேற்று நாட்டவரும் இந்நாட்டின் வளங்கண்டே இந்நாட்டிற் படையெடுத்து வந்தனர். அத்தகைய பெருஞ்செல்வத்தைத் தந்த நெல் தற்காலம் உழவர் தாழ்வடைந்ததால் குறைவுபட்டது. அதற்குக் காரணம் நம் நாட்டு எரு முதலிய அயல் நாடு சேருதலாம். இவ்வகை பெருமை பெற்ற நெல்லின் வகை மிகுதி.
நெல்லின் வகைகள்
கார் நெல், மணக்கத்தை நெல், வாலான், கருங்குறுவை, ஈர்க்குச்சம்பா, புழுகுச் சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்லுண்டைச்சம்பா, குண்டுச்சம்பா, மல்லிகைச்சம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச்சம்பா, வளை தடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச்சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகிச் சம்பா, புட்டரிசி நெல் முதலிய பல உண்டு.
நெல்லின் பல வகுப்புகள்
நமது நாட்டில் விளைவிக்கும் நெல்லில் 1. கார், 2. சம்பா, 3. குறுவை, 4. அன்னதானம், 5. அறுபதாங்கோடை, 6. மிளகி, 7. செம்மிளகி, 8. சீரகச்சம்பா, 9. சிறுமணிச்சம்பா, 10. சின்னசம்பா, 11. பெரியசம்பா, 12. வாடைச்சம்பா, 13. ஊசிச்சம்பா, 14. இலுப்பைச்சம்பா, 15. மல்லிகைச்சம்பா, 16. கம்பன் சம்பா, 17. கைவளைச்சம்பா, 18. குங்குமச்சம்பா, 19. குண்டுச்சம்பா, 20. கோடைச்சம்பா, 21. ஈர்க்குச்சம்பா, 22. புனுகுச்சம்பா, 23. துய்யமல்லிச்சம்பா, 24. மோரன்சம்பா, 25. பாலன்சம்பா, 26. சீவன் சம்பா, 27. செம்லிப்பிரியன், 28. பிசானம், 29. மலைகுலுக்கி, 30. மடுவிழுங்கி, 31. காடைக்கழுத்தன், 32. செம்பாளை, 33. பூம்பாளை, 34. முட்டைக்கார், 35. கடப்புக்கார், 36. வௌ்ளைக்கார், 37. மோசனம், 38. மணக்கத்தை, 39. பிச்சைவாரி, 40. ஈசற்கோவை, 41. இறங்குமேட்டான், 42. தென்னெல், 43. வெண்ணெல், 44. அருஞ்சோதி, 45. பொங்கையோச்சாலி, 46. பொன்பம்பி, 47. புளங்கல், 48. பெங்காளம், 49. பர்மான், 50. பைகோசம்பா முதலான அநேக ஜாதிகளும் இருக்கின்றன. (அபிதான சிந்தாமணி பக்.1208 -1209)
அன்னம்
எந்தக் காரணத்தால் அன்னத்தின் வழியாகப் பிரம்ம விஞ்ஞானம் உண்டாகின்றதோ அந்தக் காரணத்தால் அன்னத்தை நிந்திக்கக் கூடாது. பிரத்வி ஆகாசங்களிரண்டும். ஆபோஜ்யோதிகள் இரண்டும், அன்னமும் பிராணமும் போல் ஒன்றில் ஒன்று இருத்தலலால் அன்ன ஸ்வரூபமாகவும், ஒன்றுக்கொன்று ஆதாரமாதல் பற்றி அன்னாதமாகும் பிராண ஸ்வரூபமாகவம் இருக்கின்றன. இவ்வாறு சரீரப் பிராணங்களிரண்டினையும் அன்னான்னாதங்களாகத் தெரிந்து கொள்வபன் அன்ன அன்னாத ஸ்வரூபனாய்ப் புத்ரதி சந்தான நிறைவாலும் கவாச்வாதி பசு சம்பத்தாலும், பிரம்ம தேஜசாலும், உலகத்திற் புகழாலும் மிக்க உயர்ந்தவனாகிறான். அன்னத்தைப் பல வகையிலும் சம்பாதித்தல் வேண்டும். அச்சம்பாதித்த அன்னத்தை அன்னார்த்திகளுக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு எந்த வயதுகளில் கொடுக்கிறானோ அந்த வயதுகளில் அது அவனுக்கு உதவுகிறது. இது பிரம்மதேவரின் ஸ்ருஷ்டி ஞானத்தை உண்டு பண்ணக் கூடிய எல்லா ஸாதனங்களுக்கும் பாவனங்களான எல்லா (யக்ஞங்கள்) - வேள்விகளுக்கும் சாதனமானது. இதன் பெருமை அன்ன பூர்ணோபநிஷத்தும், தைத்திரியோப நிஷத்தும் காண்க.
அன்னம் ஒன்றுக்கு நாழிகை 6. அது பூர்வான்னம், பரான்னம், மத்தியான்னம், அபரான்மை, சாயான்னம் ஆக. 5.
அன்னம் புசிக்கத் தகாத இடங்கள்
மதம் பிடித்தவன், கோபி, நோயாளி, சிசுஹத்தி செய்தவன் இவர்கள் பாரார்த்த அன்னத்தினையும், மயிர், புழு விழுந்த அன்னத்தினையும், மாதவிடாய் ஆனவளுக்கு இட்டு மிகுந்த அன்னத்தினையும், காக்கை, நாய் இவைகள் தீண்டிய அன்னத்தினையும், பசுவினால் மோக்கப்பட்ட அன்னம், தருமசத்திரத்தில் அதிதிக்காகச் சமைத்த அன்னம், சாமானிய ஜனங்களைக் கூட்டிப் போடும் அன்னம், வேசியின் அன்னம், பெரியோர்களுக்கு விருப்பமாகாத அன்னம், திருடன், பாடகன் இவர்களின் அன்னம், வட்டியினால் பிழைக்கிறவன், தீட்சிதன், கிருபணன், காவலில் வைக்கப்பட்டவன், இவர்களின் அன்னம், முரிந்த பால் சேர்ந்த அன்னம், சூத்திரனுக்கு இட்டு மிகுந்த அன்னம், வைத்தியன், வேட்டைக்காரன், கொடுமை உள்ளவன், எச்சிற்பொறுக்கி, அனுலோக சாதியான், அரசன் இவர்களின் அன்னம், பிரசவித்தவளுக்குச் சமைத்த அன்னம், பந்தியில் ஒருவன் எழுந்த பின் போடப்படும் அன்னம், தீட்டுக்காரன் அன்னம், தேவாராதனை செய்யாத அன்னம், கணவன் பிள்ளையின்றி ஸ்திரியால் சமைக்கப்பட்ட அன்னம், சத்துருவின் அன்னம், பதிதன் அன்னம், தும்மினவன் எச்சிற்பட்ட அன்னம், கோளன், பொய்ச் சான்று உரைப்பான், எக்யபலனை விற்பான், நட்டுவன், தோணிக்காரன், செய்ந்நன்றி மறந்தவன், கருமான், செம்படவன், கூத்தாடி தட்டான், பிரம்பு வேலை செய்பவன், கத்தி முதலிய ஆயுதம் விற்பவன், வேட்டைக்காக நாய் வளர்ப்பவன், கள் விற்பவன், வண்ணான், துணிக்குச் சாயம் போடுகிறவன், காதகன் இவர்களது அன்னம், கள்ள புருடனை உடையாளது அன்னம், இறந்த தீட்டுள்ளான் அன்னம், தன் மனத்துக்குச் சகியாதவன் அன்னம், இவைகளைப் புசிக்கக் கூடாது. (அபிதான சிந்தாமணி, பக்.136 - 137)
சோற்றில் எண் வகைத் தோடங்கள்
அஸ்திரிதம், பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷ்மிதம், தக்தம், விரூபம், அநுர்த்தசம். 1. அஸ்திரிதம் - கஞ்சி சுற்றிக் கொண்ட அன்னம். இதை உண்டால் ஆமய ரோகம் உண்டாகும். 2. பிச்சளம் - அளிந்த அன்னம். இதை உண்டால் குன்ம ரோகம் உண்டாகும். 3. அசுசி - புழு, மயிர் கூடிய அன்னம். இதை உண்டால் வாயில் நீர் ஒழுகல் உண்டாகும். 4. குவதிதம் - நருக்கரிசி பட்ட அன்னம். இதை உண்டால் அஜீரணம் ரோகம் உண்டாகும். 5. சுஷ்மிதம் - சிறிது வெந்தும் மிக வேகாததுமான அன்னம். இதனால் இரத்த பீடனரோகம் உண்டாகும். 6. தத்தம் - காந்தின அன்னம். இதை உண்டால் இந்திரிய நாசம் உண்டாகும். 7. விரூபம் - விறைத்த அன்னம். இதை உண்டால் ஆயுள் குறைபாடு. 8. அநர்த்துசம் - பழைய சாதம் இதை உண்டால் சீதாதி ரோகங்கள் உண்டாகும். (அபிதான சிந்தாமணி, ப.925)
தொடரும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.