நாம் அனைத்துச் செயல்களும் செய்வதற்கும், அவை நலமாய் விரும்பிய வண்ணம் வெற்றி பெறுவதற்கும், அவை நலமாய் நீடித்த காலம் நல்ல பலன் தருவதற்கும், நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்தை முகூர்த்தம் என்கின்றனர். முகூர்த்தம் என்பதற்கு சுப காலம் தேர்ந்தெடுத்தல் என்று பொருள். இந்த முகூர்த்தத்திற்கு; முகுர்த்தமெடுத்தல் - முகுர்த்தங் குறித்தல். முகிழ்த்தம் - முகூர்த்தம். முகுர்த்தம் - முகூர்த்தம். முகுர்த்த விசேஷம் - முகுர்த்த பலன். முகுர்த்தபலன் - முகுர்த்தநயம் என்று பல்வேறு அகராதிகள் இதற்கு விளக்கம் தருகின்றன.
முகூர்த்தத்திரயம் - உதயம், மத்தியான்னம், அஸ்தமனம்.
பெயர்க்காரணம்
தட்சப்ரஜாபதியின் இரண்டம் புத்திரி முகூர்த்தை. இவள் தர்மன் மனைவி, இவள் சந்ததியார் மௌகூர்த்தியார் எனப்படுவார். தருமன் முகூர்த்தை என்னும் தேவ கணத்திடம் பெற்ற தேவ கூட்டத்தினர். இவர்கள் முகூர்த்த காலாதி தேவதைகள். ஆன்மாக்களில் முகூர்த்தங்களில் செய்யப்படும் தொழிலுக்கு ஏற்பப் பலன் தருபவர். மௌகூர்த்திகன் - முகூர்த்தங் குறிப்பவன் என்கிறது அகராதி.
முகூர்த்தம் கால அளவு
இரண்டு நாழிகை கொண்ட நேரம், சுபவேளை. இரண்டு நாழிகை கொண்ட நேரம், இரண்டரை நாழிகை கொண்டது என்பாரும் உளர். சுபவேளை, நற்காலம், மூன்றே முக்கால் நாழிகை கொண்டதும் ஆகும். அபிசித்து முகூர்த்தம், அபசித்து மூர்த்தம் - எட்டாம் மூர்த்தம் என்று பல்வேறு முகூர்த்தங்கள் இருக்கின்றன.
அபிசித்து முகூர்த்தம்
அபசித்து, ஓரொட்டு நட்சத்திரம், இது உத்திராடத்திற்குப் பின் சோதிட விஷயமாய்ச் சேர்க்கப்படுவது, ஓர் முகூர்த்தம், சந்திர புஷ்ய நட்சத்திரம். இது உத்தராடத்திற்குப் பின் சோதி விஷயமாய்ச் சேர்க்கப்படுவது. ஒரு முகூர்த்தம், ஒட்டு நட்சத்திரம், அது உத்திராடத்திற்குப் பின் சோதி விஷயமாகச் சேர்க்கப்படுவது. அன்றியும் உத்திராடத்தின் முடிவில் பதினைந்து நாழிகையும், திருவோணத்தின் முடிவில் நான்கு நாழிகை, நான்கு வினாடியுமாகும்.
அபிசித் என்பது
1. சந்திரன் தேவிகளில் ஒருத்தி.
2. ஒரு நட்சத்திரம். சந்திரனுக்கு மேல் இலட்சம் யோசனை உயரத்தில் இருப்பது. நட்சத்திரம் காண்க.
ஒரு முகூர்த்தமாவது இரண்டு நாழிகையாகப் பகல் அளவில் ஆதித்தியன் மத்தியமான காலத்தில் எட்டாம் முகூர்த்தம். அதற்கு உத்தமமான அபிசித்து முகூர்த்தம் என்று பெயர். இம்முகூர்த்தம் நுாறாயிரம் குற்றத்தத்தைக் கெடுக்கும். அதாவது கோடி சூரியப்பிரகாசமுள்ள சக்கராயுதகரனாகிய நாராயணமூர்த்தி புயபல பராக்கிரமுடைய இராக்கதரைக் கொல்லுமாறு போல் வலிமை பலன் ஏற்படும் என்பதனை,
“பச்சைப் புரவியொரேழுறு தேரோன் பகலளவி
னுச்சிப்படுங்கன்னனன்றபிசித்தென்பரோங்கொளியோன்
மெச்சப்படுங்குற்ற நுாறாயிரந்தீர்க்கும்வெய்யவாழி
யச்சுதன் றோளரக்கர்க்கொல்லுமாறென வாயிழையே”
(விதானமாலை, பா.எ.72, ப.48)
திவாநிசி முகூர்த்தம்
ஒரு முகூர்த்தமாவது இரண்டு நாழிகை.
பகல் முகூர்த்தம்
உதயம் முதலாக இரௌத்திரம், சர்ப்பம், மைத்திரம், பைதிருகம், வாஸவம், அப்பு, சுவதேவம், அபிசித்து, அயிந்திரம், அக்கினி, நிருதி, வாருணம், அக்கியம், பாக்கியம் என்ற பதினைந்தும் பகல் முகூர்த்தம்.
இரவு முகூர்த்தம்
இரௌத்திரம், அஜேகபாதம், அகிர்ப்புத்தினி, பூஷா, கந்தருவம், இராக்கதம், அக்கினி, பிரசாபத்தியம், சந்திரம், அதிதி, ….. ர்க்கவஸ்பத்தியம், வைஷ்ணவம், ஸாவித்திரி, துவாட்டிரம், வாயவ்வியம் என்ற பதினைந்தும் இரவு முகூர்த்தமாகும். இந்தச் சுப முகூர்த்தங்களில் சுப கன்மங்கள் செய்யப்படும். இவற்றில் அசுவதியைக் கந்தருவம் என்றும், பாணியை இராக்கதம் என்றும் பெயரிட்டார்கள் என்பதை,
“அரன்பாம்பனுடமகம் புட்புனலாடியந்தணன்றே
குரங்கேட்டை வைகாசிமூலஞ்செக்குத்திரம் பூரம்பகற்
கரன்புரட்டாசி முதலெட்டிரு பூசமாயனத்த
முரண்பெறுசித்திரை சோதியென் மூர்த்தமிரவினுக்கே”
(விதானமாலை பா. எ.73, ப.48)
சாமுகூர்த்தம் - அசுப முகூர்த்தம். மிருத்து மூர்த்தம் - சாமூர்த்தம் என்றும் இதனை வழங்குவர்.
சாமூர்த்தம்
யாதொரு மூர்த்தத்திற்கு 5 ஆம் இடத்திற் சநியும், 7 ஆம் இடத்தில் சுக்கிரனும், 10 ஆம் இடத்தில் புதனும், 9 ஆம் இடத்தில் செவ்வாயும், 6, 8 ஆம் இடத்தில் வியாழனும், 12 ஆம் இடத்தில் ஆதித்தியனும், இராகுவும், 6, 8 ஆம் இடங்களில் சந்திரனும், இவற்றில் ஒருவர் இப்படி நிற்கில் மிருத்து முகூர்த்தமாம் என்று தெரிவிக்கின்றது. (விதானமாலை)
“மந்தனைந்திற் புகரேழின் மால்பத்திற் சேயொன்பதினி
லந்தணனா றெட்டிலாதித்தன் ராகுவீரா றதனிற்
சந்திரனாறெட்டிற் சாருமுகூர்த்தஞ் சாமூர்த்தமென்றே
மந்திரி நுான்முறை வல்லவரோதினர் வாணுதலே”
(விதானமலை, பா.எ.91, ப.54)
சுப முகூர்த்தம்
இது நல்ல வேளை. நன்முகூர்த்தம். சுபக்கிரகங்கள் 11, 2, 5, 9 ஆகிய இவ்விடங்களிலும், கேந்திரத்தானத்தும் நிற்பின் சுப முகூர்த்தமாம். பாபக்கிரகங்கள் 3, 6, 11 ஆகிய இவ்விடங்களில் நிற்கின் நல்ல முகூர்த்தமாம். சுக்கிரன் 7 ஆம் இடம் ஒழியக் கொள்ளப்படும் என்பதை,
“நல்லகோள் பன்னொன் றிரண்டைந் தொடன்பதுமாற் கண்டத்துஞ்,
செல்லுறுநன்மைசிறப்புடைத்தாமூகூர்த்தந்தீ யகோட்கள்,
புல்லுறுமூன்றாறிற் பன்னொன்றினின் றிடினன் றுபுகர்,
கொல்லி தருமொழியாய் குற்றமே யெனக்கூறினரே”
(விதானமாலை, பா.எ.111, ப.61)
இவ்விதம் நாம் அறிந்து அதன் வழி பயன் பெறுவோம்