தரிசனம் என்பது பார்வை, பார்த்தல் எனப் பொருள்படும். சாயா புருஷ தரிசனம், சூரிய சந்திர கோதரிசனம், சந்திர தரிசன பலன் ஆகியவற்றின் பலன்களைக் காண்போம்.
சங்கியை
சூரியன் தேவி. விஸ்வகர்மன் பெண். இவள் சூரியனது வெப்பத்தைப் பொறாது தன் சாயையில் ஒருத்தியை நியமித்து வைத்து விட்டுத் தந்தையிடம் செல்லத் தந்தை மறுத்தது கண்டு இவள் பெட்டை குதிரை உருவம் கொண்டு தவத்திற்குச் சென்றாள். பின்பு, சூரியன் தனது தேவியைக் காணாது மாமனாரிடம் வந்து இருக்குமிடம் அறிந்து, ஆண் குதிரை உருவாய் அவளைப் பின் தொடர்ந்தான். இந்தக் குதிரையின் மூக்கின் தொளையின் வழி ஒழுகிய ரேதசில் அஸ்வனி தேவர் பிறந்தனர். இவர்கட்குச் சஞ்ஞாதேவி எனவும் பெயர்.
சூரியன் துவட்டாவின் குமரியாகிய சஞ்ஞிகையை மணக்க அவள் சூரியனது வெப்பம் பொறாமல் தனது சாயையில் ஒரு பெண்ணை உருவாக்கி அங்கே விட்டுவிட்டு அங்கிருந்து நீங்கினாள். அவளின் பெயர் சாயாதேவி. சந்தியாவின் நிழல் வடிவம் ஆகையால் அவள் அப்பெயர் பெற்றாள். (சாயா எனில் நிழல் என்பது பொருள்). அந்தப் பெண்ணிடம் சூரியனுக்குச் சாவர்ணிமநு, சனி, பத்திரை எனும் பெண் ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
சாயா புருஷ தரிசனம்
தன் நிழலால் ஆயுள் அறிவது. அது சூரியனையாவது, சந்திரனையாவது தன் பின்புறமாக விட்டு சித்த சுத்தியாய் தனது சாயையைப் பூமியில் பார்த்து அவ்வகையாகவே ஆகாயத்தில் நோக்க அவ்வுருவம் ஆகாயத்தில் தோன்றும். இவ்வுருவம் தலையில்லாது தோன்றுமானால் ஆறு மாதத்தில் மரணம் என்பது ஆகும். பகலிற் சூரியனையாவது, இரவிற் சந்திரனையாவது தனக்குப் பின் புறமாக்கி மந்திர செபத்தாற் தனது சாயையைப் பூமியிற் பார்த்துச் சிறிது நேரத்தில் அவ்வகையே ஆகாயத்திற் பார்க்க அவ்வுரு ஆகாயத்தில் தோன்றும். இவ்வுரு சிரமில்லாது தோன்றின் ஆறு மாதத்தில் இறப்பான்.
சூரிய சந்திர கோதரிசனம்
பிள்ளை பிறந்த மூன்றாம் மாதத்திலே, அனுகூலமான சுபதினத்திலே பிள்ளைக்குச் சூரியனைக் காட்ட வேண்டும். பிள்ளை பிறந்த நான்காம் மாதத்திலே அன்னப்பிராசனத்திற்கு நிச்சயித்திருக்கிற சுப மூகூர்த்தத்திலே சுப்பிரமணிய சுவாமியையும், சந்திரனையும் பூசித்துச் சந்திர தரிசனமும், கோதரிசனமும் செய்யும் ஒரு சடங்கு.
சந்திர தரிசன பலன்
சந்திரமான வகையால் பங்குனி, சித்திரை, மாதங்களில் பிறை தெற்கு உயரும், மாசி, வைகாசியில் ஒத்து நிற்கும், அல்லாத மாதங்களில் வடக்கு உயரும், இவ்வகை ஒழிந்து விபரீதமாய் வரின் தேசத்திற்குத் தீமை உண்டாம். அசுவினி முதல் மூன்று நாட்களில் பூர்வ பட்ச பிரதமை வரின் அடைவே தானிய விலை ஏற்றமும் சமமும் குறைவுமாம்.