இலக்கினங்களின் வகைகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
இலக்கினத்தோன்
சுகர்நாடி நுால் இலக்கினத்தோன் எந்த இராசியில் உதிக்கிறதோ அந்த இராசிக்குரிய கிரகம் என்று அழைக்கப்பெறுகின்றான் என்று தெரிவிக்கின்றது. (சுகர்நாடி.ப.119.)
இலக்கினம்
இலக்கினம் என்பது உயிர். இராசி என்பது உடல். அவரவர் சாதகத்திற்கும் இலக்கினம் என்பது மிகவும் இன்றியமையாதது. கிழக்குத் தொடுவானத்தின் சூரியன் கணக்கினை ஒட்டி, குழந்தை பிறந்த நேரத்தின் உதயமாகின்ற வீடே இலக்கினம் என்று அழைக்கப் பெறுகின்றது. ”எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது போல் பன்னிரு இராசிகளில் உதயமான இலக்கினமே அந்தச் சாதகருக்கு இன்றியமையாதது ஆகும்.
அபிதான சிந்தாமணி எனும் நுால் பின்வரும் செய்திகளைத் தெரிவிக்கின்றது.
இலக்கினம் என்பதன் வேறு பெயர்களாக இராசிகளினுதயம், முகூர்த்தம். இராசி, உதயம், ஓரை, நல்லியம், ஜென்மம், தேகம், முகூர்த்தம், ரூபம், சிரசு, மலை, வர்த்தமான ஜென்மம் என்பதாகும். இராசிகளுடைய உதயத்திற்குப் பெயர். இராசியின் உதயம். இராசிகளின் உதயம். நச்சி ஓர் இலக்கினத்தில் நல் அபிடேகம் செய்வான். (திருவாமாத்.பு.உத்தர.8,20.) நீ பிறந்த சுப யோக இலக்கினம் (அழ.கலம்.1,3 தாழிகை) நாள் யோகம் ---- இலக்கினம் விளங்க (மேழிவி.347.) 2.மங்கல முகூர்த்தம். முச்சடை யேட்சி கொண்டு இலக்கினம் எய்தில் (இ,கு.முடி. சூ.63.) திருமணஞ் செய்வதற்குச் சோதிடர் நல்ல இலக்கினங் குறித்துள்ளார். (நாட்.வ.)
இலக்கின பலன்
பிரதமார்த்தந்துத் தோன்றின இலக்கினம் துலா, மிதுனம், கும்பம், மகரம். சிங்கமானாற் போகவதியாம். தனு, விரிச்சிகம், மேடம், மீனம், திருவிலியாம். இடபம், கர்க்கடகம், பரதாரமாம். கன்னியாகின் அருந்ததி போன்ற கற்பம். (விதானமாலை) என்று அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது.
இலக்கின வகைகள் - பன்னிரண்டு லக்னம்
இலக்கினத்தின் பகுப்புகள், இவை பன்னிரண்டு வகைப்படும். அவை;
1. ஜென்மலக்கினம்
2. ஓராலக்கினம்
3. கடிகாலக்கினம்
4. ஆருடலக்கினம்
5. நட்சத்திரம் லக்கினம்
6. காரகலக்கினம்
7. ஆதெரிசன லக்கினம்
8. ஆயுர்லக்கினம்
9. திரேக்காணலக்கினம்
10. அங்கிசலக்கினம்
11. நவாங்கிச லக்கினம்
12. பாவ லக்கினம்
என்பனவாம்.
சென்ம லக்கினம்
உதய லக்கனம். இதை அறியும் வகை - உதய லக்கினம் காணும் விவரம்: குறிப்பு - பங்குனி மாதம் பதினைந்தாம் தேதி பகல் முப்பது நாழிகைக்கு ஒரு குழந்தை சனனமானால் சென்ம லக்கினம் காண வேண்டிய விவரம்.
மேற்படி மாதத்திற்குரிய மீன ராசியின் மொத்த நாழிகை, நாலே காலில், அந்த மாதத்துக்கு முப்பது தேதியானதால் பதினைந்தாம் தேதியின் உதய காலத்தில் பாக்கியாய் இருந்த விகடிகை நூற்று முப்பத்தாறு, தேதி ஒன்றுக்கு எட்டரை விகடிகை வீதமாய் மேற்படி ராசியில் சூரியன் நடந்து வருவதால் பதினைந்தாம் தேதி பகல் முப்பது நாழிகைக்கும், அரைத் தேதிக்கும் உள்ள வீதமாய்க் கடந்த விகடிகை நாலே கால், இதை மேற்கண்ட விகடிகை நூற்று முப்பத்தாறில் கழித்து வந்த மிச்ச விகடிகை நூற்று முப்பத்தொன்றே முக்கால். இதையும், இது முதல் மேடம் நாலே கால், ரிடபம் நாலே முக்கால், மிதுனம் ஐந்தே கால், கடகம் ஐந்தரை, சிம்மம் ஐந்தே கால், இவ்வாறு இராசிகளின் தொகைகளையும் ஒன்று சேர்க்க வந்த நாழிகை இருபத்தேழு. விநாடி பதினொன்றே முக்காலுக்கு மேல், கன்னி லக்கினம் நாழிகை ஐந்துடன் சேர்க்க, வந்த நாழிகை முப்பத்திரண்டு, விநாடி பதினொன்றே முக்கால் வரைக்கும் கன்னியா லக்கினம்.
இதில் குழந்தை ஜனனமான நாழிகை முப்பதைக் கழித்து வந்த மிச்ச நாழிகை. இரண்டு வினாடி பதினொன்றே முக்காலும், மேற்படி லக்கினத்தில் செல்லானது போக பாக்கியாகும். ஜனனமான நாழிகை கன்னி ராசியில் ஒட்டினபடியால், கன்னியே சென்ம லக்கினம் என்பதாகும்.
துவாதச லக்கினம்
துவாதச அங்கிசம், துவாதச அம்சம் - தசவர்க்கத்துள் ஒன்று. அது ஒரு இராசியைப் பன்னிரண்டாய்ப் பகிர்தல்.
துவாதச லக்ன விவரம்
1. ஜன்ம லக்கினம்
இது அந்தந்த மாத ராசியின் நாழிகையை மேற்படி மாதத் தேதியின் ஈவின் வகைக் கழித்து மிச்சம் நின்ற நாழிகையைச் சனன காலம் வரை எண்ணிக் கண்ட நாழிகையில் வருவது ஜன்ம லக்கினமாம்.
2. ஓரா லக்கினம்
உதய முதல் ஜனன காலம் வரை யெண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் ராசி 1- க்கு 27 நாழிகையாகக் கழித்துக் கண்டது லக்கினமாம், இதனை ஆண் ராசிக்கு வலமாகவும், பெண் ராசிக்கு இடமாகவும் பார்த்துக் கொள்ளவும்.
3. கடிகா லக்கினம்
இது உதய முதல் சனனம் வரை எண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் இராசி ஒன்றிற்கு நாழிகை ஒன்றாகத் தள்ளிக் கண்டது லக்கினமாம். இதனையும் ஆண், பெண்ணிற்கு வலமிடமாகக் கொள்க.
4. ஆரூட லக்கினம்
இது லக்ன முதல் லக்னாதிபதி நின்ற இராசி வரை எண்ணிக் கண்ட லக்னாதிபதி நின்ற இராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். அவன் லக்னத்திலும் 7 லிலும் இருந்தால் ஆரூட லக்கினமாம்.
5. நட்சத்திர லக்கினம்
இது ஜன்ம நட்சத்திரத்தில் சனனம் வரையிற் சென்ற நாழிகையை இராசி 1க்கு 5 நாழிகையாகத் தள்ளிக் கண்ட லக்னமாம். அச்வநி, மகம், மூலத்திற்கு இடமாகவும் மற்றவைகளுக்கு வலமாகவும் சனன லக்கினம் முதல் எண்ணிக் கொள்ளவும்.
6. காரக லக்கினம்
இது உதயாதி ஜன்மம் வரை சென்ற நாழிகையை ராசி 1க்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகையை எந்தக் கிரக ஸ்புடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கிரகமிருக்கிற ராசி முதலாக எண்ணிக் கண்ட லக்கினமாம்.
7. ஆதெரிச லக்கினம்
இது ஜன்ம லக்னத்திற்கு ஏழாவது லக்கினம்.
8. ஆயுர் லக்கினம்
இது உதயாதி சென்ற நாழிகையை இராசி ஒன்றுக்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகையைச் சந்திரனின்ற அங்கிச லக்ன முதலாக எண்ணிக் கண்ட லக்கினமாம்.
9. திரேக்காண லக்கினம்
இஃது லக்கினத்தை மூன்று கூறிட்டுச் சரத்திற்கு 1-5-9 ஆகவும், ஸ்திரத்திற்கு 9-1-5 ஆகவும், உபயத்திற்கு 5-9-1 ஆகவும் எண்ணிக் கண்ட லக்கினமாம்.
10. அம்ச லக்கினம்
இது முன் சொன்ன காரக கிரகத்தின் த்வதாம்ச லக்கினமாம்.
11. நவாம்ச லக்கினம்
இஃது லக்னத்தை ஒன்பது பங்காக்கி எத்தனையாம் பங்கில் ஜன்மமோ அதை அந்த இராசி திரிகோண சர ராசியாக எண்ணிக் கண்ட லக்கினமாம்.
12. பாவ லக்கினம்
இது உதயாதி ஜன்மம் வரை சென்ற நாழிகைகளை இராசி 1-க்கு, 5 நாழிகையாகத் தள்ளிக் கண்ட தொகையை மேடம் முதலாக எண்ணிக் கண்ட லக்கினமாம்.
நன்றி: அபிதானசிந்தாமணி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.