பரம்பொருளின் அருளாசியுடன் சரஸ்வதி மற்றும் நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களின் ஆசியுடன், தமிழ் மொழியில் வளர்த்து என்னை ஆளாக்கிய தமிழ்த்தாயின் ஆசியுடன், எனது முதல் சோதிட குருவான எனது தந்தையார் திரு. ப.திருநாவுக்கரசு அவர்களின் ஆசியுடன், என்னை ஈன்ற தாயாரின் ஆசியுடன், எனக்கு சோதிடம் கற்பித்த சோதிட ஆசான்களின் ஆசியுடன், “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” எனும் வாக்கிற்கேற்ப வணங்கி பக்தி சிரத்தையுடன் வானியல் கலையை - சோதியின் இடம் அறிந்து விளக்கும் சோதிட இயலை எனக்குத் தெரிந்த அளவினில் உளமார மன மகிழ்வுடன், எளிய வழியினில் தங்களுக்கு இதன் மூலமாகக் கற்பிக்கின்றேன்.
மறைந்த எனது தந்தையின் ஆசையை நிறைவு செய்யும் வண்ணம் இதனை அவருக்குக் காணிக்கையாக்குகின்றேன். எனது வழிகாட்டி ஐயா எனது ஜோதிட வளர்ச்சிக்கு பெருமளவில் உதவிய முனைவர் திரு இலட்சாராமன் அவர்கட்கும் நன்றி கடன்பட்டுள்ளேன்.
இந்த ஜோதிடம் கற்பிக்கும் தொடரை வெளியிட முன் வந்திருக்கும் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொடரினை எனது பெற்றோருக்குக் காணிக்கையாக்குகின்றேன்.
“கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.” வானியல் என்பது ஓர் அரிய கடல். நாம் அனைத்தும் கற்றோம் என்று சொல்வது “ஓர் திருப்பாற்கடலை பூனை குடித்தற்குச் சமம்”. அது எவ்வாறு இயலாதோ அது போலத்தான்.
முதலில் சோதிடத்தை எளிய வழியில் கற்க, இறைவனின் அருளாசியும், இக்கல்வியின் மீது பய பக்தியும், நினைவுப் பகுதியும் மிக மிக இன்றியமையாதது.
முதலில் சில அடிப்படையான சோதிடச் செய்திகளை நாம் அறிந்து கொள்வோம்.
சோதியின் இடம் அறிந்து கூறுதல் சோதிடம். அதாவது, கிரக ஒளியின் இடம் அறிந்து பலன் கூறுதல் சோதிடம் எனப்படும். சோதிடக்கலை இறைவனால் அருளப் பெற்றது. அரிய கலைகள் யாவும் இறை வழி வந்ததே.
பஞ்ச அங்கங்கள் - சோதிடத்தின் ஐந்து அங்கங்கள். அவை நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம். இவை இல்லை எனில் சோதிடம் இல்லை.
நாள் - கிழமை. வாரம் என்பது கிழமையையும், 7 நாட்கள் கொண்டதையும் குறிக்கும் ஒரு சொல்.
அவை. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.
வாரங்களின் சிறப்புப் பெயர்கள்
1. ஞாயிறு - பானு வாரம்
2. திங்கள் - இந்து வாரம்
3. செவ்வாய் - பவ்ம வாரம்
4. புதன் - சௌமிய வாரம்
5. வியாழன் - குரு வாரம்
6. வௌ்ளி - பிருகு வாரம்
7. சனி - மந்த வாரம், ஸ்திர வாரம்
சுப நாட்கள்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
அசுப நாட்கள்
ஞாயிறு, செவ்வாய், சனி.
நட்சத்திரங்களின் பெயர்கள்
1.அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. உரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22 திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
ஆக 27 நட்சத்திரங்கள் ஆகும். அபிஜித் நட்சத்திரம் என்பது உத்திராடம் 3,4, ம், திருவோணம் 1, 2 ம் ஆகச் சேர்ந்தது. ஆக 28 என்று சாஸ்திரம் கூறுகின்றது.
விம்சோத்திரி திசா கோள்கள்
கீழ்க்காணும் படத்தினைப் பார்க்கவும்
திதிகள்
1. பிரதமை
2. துவிதியை
3. திரிதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. அமாவாசை - பெளர்ணமி.
மேற்காணும் திதிகள் வளர்பிறை - 15, தேய்பிறை - 15 என்று மொத்தம் 30 திதிகளாக இருக்கின்றன.
பட்சம்
1. சுக்கில பட்சம்
2. கிருஷ்ண பட்சம்
சாதக அலங்காரம் பக்கம் 101 - ல் அமாவசை முடிந்து பிரதமை ஆரம்பித்தது முதல் பெளர்ணமி முடிவு வரைக்கும் உள்ள எல்லை வளர்பிறை சுக்கில பட்சம், இது பூர்வ பட்சம் என்றும், இக்காலத்தில் சுபக்கிரகங்களுக்கு பலம் என்றும், பெளர்ணமி முடிந்து பிரதமை ஆரம்பித்தது முதல் அமாவாசை வரைக்கும் உள்ள எல்லை தேய் பிறை கிருஷ்ண பட்சம், இது அமர பட்சம் என்றும் இக்காலத்தில் அசுபக்கிரகங்கள் பலமுடையது என்றும் குறிப்பிடுகின்றன.
யோகம்
யோகங்கள் -27. அவை;
1. விஷ்கம்பம்
2. பிரிதி
3. ஆயுஷ்மான்
4. சவுபாக்கியம்
5. சோபனம்
6. அதிகண்டம்
7. சுகர்மம்
8. திருதி
9. சூலம்
10. கண்டம்
11. விருத்தி
12. துருவம்
13. வியாகாதம்
14. ஹரிஷணம்
15. வச்சிரம்
16. சித்தி
17. வியதீபாதம்
18. வரீயான்
19. பரிகம்
20. சிவம்
21. சித்தம்
22. சாத்தியம்
23. சுபம்
24. சுப்பிரம்
25. பிராமியம்
26. மாகேந்திரம்
27. வைதிருதி
கரணம்
கரணங்கள்: கரணம் கணிதம், பஞ்சாங்கத்தின் ஒன்று.
பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் என பதினொன்று கரணங்கள் உள்ளன.
கரணங்களைத் தமிழில் இப்படிக் குறிப்பிடலாம்.
1. பவம் - சிங்கம்
2. பாலவம் - புலி
3. கௌலவம் - பன்றி
4. தைதுலை - கழுதை
5. கரசை - யானை
6. வணிசை - எருது
7. பத்திரை - கோழி
8. சகுனி - கூகை
9. சதுஷ்பாதம் - நாய்
10. நாவகம் - பாம்பு
11. கிமிஸ்துக்கினம் - புழு
சர (சுப) கரணங்கள்
பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரை ஆகிய ஏழும் சர (சுப) கரணங்கள் என்றழைக்கப்பெறும். சுப காரியங்கள் செய்யலாம்.
ஸ்திர (அசுப) கரணங்கள்
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் ஆகிய நான்கும் ஸ்திர (அசுப) கரணங்கள் என்றழைக்கப் பெறும். இவை அசுபம் நிகழ்த்துவது.
தமிழ் வருடங்கள்
தமிழ் வருடங்களாக அறுபது வருடங்கள் இருக்கின்றன. அவற்றின் பெயர்கள்;
1. பிரபவ, 2. விபவ, 3. சுக்கில, 4. பிரமோதூத, 5. பிரசோற்பத்தி, 6. ஆங்கீரச, 7. ஸ்ரீமுக, 8. பவ, 9. யுவ, 10. தாது, 11. ஈஸ்வர, 12. வெகுதான்ய, 13. பிரமாதி, 14. விக்கிரம, 15. விஷீ, 16. சித்திரபானு, 17. சுபானு, 18. தாரண, 19. பார்த்திப, 20. விய, 21. சர்வஜித்து, 22. சர்வதாரி, 23. விரோதி, 24. விக்குரிதி, 25. கர, 26. நந்தன, 27. விஜய, 28. ஜெய, 29. மன்மத, 30. துன்முகி, 31. ஏவிளம்பி, 32. விளம்பி
33. விகாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36.சுபகிருது, 37. சோபகிருது, 38.குரோதி, 39. விசுவாவசு, 40. பராபவ, 41. பிலவங்க, 42. கீலக, 43. சௌமிய, 44. சாதாரண, 45. விரோதிகிருது, 46. பரிதாபி, 47. பிரமாதீச, 48. ஆனந்த, 49. ராட்சச, 50. நள, 51. பிங்கள, 52. காளயுத்தி, 53. சித்தாத்ரி, 54. ரௌத்ரி, 55. துன்மதி, 56. துந்துபி, 57. ருத்ரோத்காரி, 58. இரத்தாக்ஷி, 59. குரோதன, 60. அட்சய
தமிழ் மாதங்கள்
தமிழ் மாதங்களாக பன்னிரண்டு மாதங்கள் இருக்கிண்றன. அவை;
1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12.பங்குனி.
முப்பது நாட்கள் கொண்டது ஓர் மாதமாகும். பன்னிரெண்டு மாதங்கள் கொண்டது ஓர் வருடம் ஆகும்.
விஷீவத் புண்ணிய காலம்
பகலிரவு சமமாய் உள்ள காலம். இதனை மேட மாதம், துலா மாதம் எனவும் இதனை சித்திரை, ஐப்பசி மாதங்கள் எனவும் கூறுவர் என்று பஞ்சாங்கக் குறிப்பு தெரிவிக்கின்றது.
கிரகங்கள் 9 - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது.
நட்சத்திரங்கள் - 27
இராசிகள் - 12
வீடுகள் - 12
1 இராசி வீடு - 2 ¼ நட்சத்திரம் உடையது. அதாவது, 9 பாதம்.
12 இராசிகள் - 27 நட்சத்திரங்கள், மொத்தம் 108 பாதங்கள்.
சுபக்கிரகங்கள்
குரு, சந்திரன், புதன், சுக்கிரன்.
அசுபக்கிரகங்கள்
சூரியன், இராகு, கேது, சனி, அங்காரகன்.
இராசி வீடுகள் ஜோதிடக் களஞ்சியம் எனும் நூலில் ஏ.எம். பிள்ளை, பக்கம் 12 - இல் ஜாதகத்தில் இலக்கினம் தலையாக ஆரம்பிக்க வேண்டும். கால புருடனின் தலை முதல் கால் வரையில் உள்ள உறுப்புகளை 12 வீடுகளில் அமைந்துள்ள விதம்.
கேந்திரம் - திரிகோணம் - விளக்கம்
“சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி நூல்” - ஜோதிட சிகாமணியின் அனுபந்தம் பகுதியில், வரும் விவரம், பக்கம் 75 - இல்,
இராசி மண்டலமானது 360 பாகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், இவை 12 இராசிக்கும் பிரித்தால், இராசியொன்றுக்கு 30 பாகை என்றும், ஒவ்வொரு பாகைக்கும் 60 நாழிகையாகவும், நாழிகையொன்றுக்கு 60 விநாடியாகவும், பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், சந்திரன் 12 இராசியிலும், 27 நட்சத்திரத்திலும் சுற்றி வருகின்றது என்றும் குறிப்பிடுகின்றது. பக்கம் 92 - இல் இலக்கினத்திற்கு 1 - 4 - 7 - 10 கேந்திரம் என்றும், இலக்கினத்திற்கு 1 - 5 - 9 திரிகோணம் என்றும் உலகில் வழங்கி வருகின்றனர் என்றும், கேந்திரம் என்றால் இலக்கினத்திற்கும், கிரகம் நிற்கும் இடத்திற்கும் இடையில் 60 பாகை இருந்தால் தான் கேந்திரம் என்றும் அப்போது தான் கேந்திர பலனையும் கொடுப்பார் என்றும், பக்கம் 93 - இல் திரிகோணம் என்றால் இலக்கினத்திற்கும், கிரகம் நிற்குமிடத்திற்கும் 90 பாகை இருந்தால் தான் திரிகோணம் என்றும், அப்போது தான் திரிகோண பலனைக் கொடுப்பார் என்றும், கேந்திரங்களில் மங்கள பாவகம் பகுதியில் பக்கம் 477 - இல் இலக்கினத்திற்கு - இலக்கின கேந்திரம், என்றும், இலக்கின முதல் நான்காம் வீட்டிற்கு - சுக கேந்திரம் என்றும், இலக்கின முதல் ஏழாம் வீட்டிற்கு சத்தம கேந்திரம் என்றும், இலக்கின முதல் பத்தாம் வீட்டிற்கு - தசம கேந்திரம் என்றும் பெயராம் என்று குறிப்பிடுகின்றது.

கேந்திரங்கள், திரிகோணங்கள், உதாரணம், துலாம் இலக்கினத்தில் 1 – 4 – 7 - 10 கேந்திரங்கள்,
துலாம் லக்னத்தில் 1 - ஆம் 5 - ஆம் 9 - ஆம் இடங்கள் திரிகோணம் எனப்படும்.
சாதகலங்காரம் பக்கம் 328 - இல் 333 இன் படி திரேக்காணம் என்பது திரிகோணம்: திரி+கோணம் திரி - மூன்று, கோணம் - மூலை, எனவே மூன்று மூலைகள் என்பதே இதன் சிறந்த பொருளாகும் என்றும், திரேக்காணம் என்பது ஜனன இலக்கினத்தை மூன்று பாகமாகப் பங்கிட்டுக் கூறுவது என்றும், முதல் பத்துப் பாகைக்கு மேடம் என்றும் இரண்டாம் பத்துப்பாகைக்கு சிங்கம் என்றும் மூன்றாம் பத்துப்பாகைக்கு தனுசு என்றும் திரிகோண சக்கரத்தைக் கூறுகின்றது என்றும், பக்கம் 336 - இல் திரேக்காணம், திரையகாணம், திரைகாணம் என்பது ஒரு பொருட் கிளவிகள் என்றும் குறிப்பிடுவதால் அறியலாம்.
ஒன்பது கோள்களின் இயக்கங்கள்
1. சூரியன் - ஆத்துமா
2. சந்திரன் - மனது (சித்தம், இருதயம்)
3. செவ்வாய் - சரீர பலம்
4. புதன் - வாக்கு
5. குரு - ஞானசுகம்
6. சுக்கிரன் - காமம்
7. சனி - துக்கம்.
உடம்பிற்குக் காரகன்
1. பிதுர்காரகன் - சூரியன்
2. மாதுர்காரகன் - சந்திரன்
3. பூமிக்காரகன் - செவ்வாய்
4. வித்யாக்காரகன் - புதன்
5. தனக்காரகன் - குரு
6. காமக்காரகன் - சுக்கிரன்
7. கன்மக்காரகன் - சனி
8. ஞானக்காரகன் - இராகு
9. மோட்சக்காரகன் - கேது
இராகு, கேது என்பன நிழல் கிரகங்கள் (அல்லது) சாயாக்கிரகங்கள் (அல்லது) அலிக்கிரகங்கள் எனப்படும்.
பன்னிரு பாவகப்பலன்கள்
முதல் பாவகம்
இலக்கினத்தின் மூலம் 1. சரீரம், 2. சரீரகாந்தி, 3. வடிவம், 4. பெருந்தனம், 5. வயிறு, 6. சிரசு, 7. ஆபரணம், 8. நினைப்பு, 9. மனக்கவலை, 10. அழகு, 11. புகழ், 12. அடையாளம், 13. மகிழ்ச்சி, 14. ஆயுசு ஆகிய இவைகளை அறியலாம்.
இரண்டாம் பாவகம்
இதன் மூலம் 1. அதிஷ்டம், 2. தன விருத்தி, 3. குடும்பம், 4. வலக்கண், 5. கல்வி, 6. பெருஞ்செல்வம், 7. வாக்கு, 8. சாஸ்திரக்கேள்வி, 9. வேகமான நடை, 10. மனம், 11. மறுத்துரைத்தல், 12. பொன், 13. நவரத்தினம் ஆகிய இவைகளை அறியலாம்.
மூன்றாம் பாவகம்
இதன் மூலம் 1. வெற்றி, 2. எண் வகை போகம், 3. ஆள் அடிமை, 4. சங்கீதம், 5. தேகபலம், 6. கனிஷ்ட சகோதரம், 7. காது நோய், 8. கர்ண பூஷணம், 9. போஜன பாத்திரம், 10. பராக்கிரமம், 11. தொழில் விருத்தி, 12. தைரியம் முதலியவைகளை அறியலாம்.
நான்காம் பாவகம்
இதன் மூலம் 1. வித்தை, 2. வாகனம், 3. சுபகாரியம், 4. வியாபாரம், 5. வீடு, 6. வெற்றிக்கீர்த்தி, 7. சுகம், 8. மாதுரு, 9. சுற்றத்தார், 10. புதையல், 11. மாதுரு விபசாரம், 12. சுகந்தம், 13. பால் - பசு - கன்று, 14. ஆலய சேவை, 15. சிநேகிதர் முதலியவைகளை அறியலாம்.
ஐந்தாம் பாவகம்
இதன் மூலம் 1. புத்திர ஒற்றுமை, 2. தந்தையின் தந்தை, 3. சந்ததி, 4. பூர்வ நல்வினை, 5. பிரபந்த உணர்வு, 6. கர்ப்போற்பத்தி, 7. மந்திரோபதேசம், 8. அதர்வன வேதப்பயிற்சி, 9. புக்தி, 10. மனக்கூர்மை முதலிய வகைளை அறியலாம்.
ஆறாம் பாவகம்
இதன் மூலம் 1. அம்மான், 2. நோய், 3. பகைவர், 4. ஆயுத விரணம், 5. தாயாதிகள், 6. கலகம், 7. சரீர வருத்தம், 8. பண நஷ்டம், 9. திருடர் பயம், 10. ஜலகண்டம், 11. ஸ்திரி வியாதி, 12. சர்ப்ப கண்டம், 13. சிறைவாசம் முதலியவைகளை அறியலாம்.
ஏழாம் பாவகம்
இதன் மூலம் 1. விவாக மணம், 2. சிற்றின்பம், 3. வழக்கு, 4. சுற்றம் சூழ்தல், 5. சன்மானம், 6. வியாபாரம், 7. விவாககாலம், 8. மனைவி ஆயுள் முதலியவைகளை அறியலாம்.
எட்டாம் பாவகம்
இதன் மூலம் 1. வாளாயுத காயம், 2. யுத்தம், 3. மலை மீதிருந்து வீழ்தல், 4. மீளா வியாதி, 5. காரிய விக்கினம், 6. நீங்காத விசனம், 7. நீங்காத பல துன்பம், 8. மானக்குறைவு, 9. செலவினால் நஷ்டம், 10. ஆயுள், 11. நீங்காத பகை முதலியவைகளை அறியலாம்.
ஒன்பதாம் பாவகம்
இதன் மூலம் 1. தகப்பன், 2. குல விருத்தி, 3. தருமம், 4. பிதுரார்ச்சிதம், 5. மடாதிக்கம், 6. மேலான தருமம், 7. குளம் வெட்டல், 8. ஆலயத்திருப்பணி, 9. குரு உபதேசம், 10. தண்ணீர்ப்பந்தல், 11. தரும கிணறு வெட்டல், 12. இஷ்ட செல்வம் பெற முதலியவைகளை அறியலாம். (பக்கம் - 76)
பத்தாம் பாவகம்
இதன் மூலம் 1. பல புண்ணியம், 2. இராஜாதிக்கம், 3. நகர ஸ்தாபிதம், 4. காரிய கர்மம், 5. கிருபை. 6. பூஜை வீடு, 7. சிரார்த்தம், 8. தெய்வ வழிபாடு, 9. சதுரங்கபலம், 10. பிரபல கீர்த்தி, 11. மானம், 12. காயகற்பம், 13. வஸ்திரம் முதலியவைகளை அறியலாம்.
பதினொன்றாம் பாவகம்
இதன் மூலம் 1. மூத்த சகோதரம், 2. சேவை செய்வோர்கள், 3. இளைய மனைவி, 4. பொன்வித்தைகள ஆதாயம் கிடைத்தல், 5. பயிர்ச்செய்கை, 6. குதிரை, யானை, 7. தெளிந்த அறிவு, 8. பல்லக்கு, 9. மனத் துக்க நிவர்த்தி, 10. சால்வை, 11. சாஸ்திரதிகாரம், முதலியவைகளை அறியலாம்.
பன்னிரண்டாம் பாவகம்
இதன் மூலம் 1. பாபச்செலவு, 2. பரதேசத் தொழில், 3. பணச்செலவால் பெறும் சுகம், 4. சயனசுகம், 5. வியாச்சியத்தொழில், 6. மறுமைப்பேறு, 7. தனம், 8. புண்ணியம், 9. தியாகம், 10. யாகம் முதலியவைகளை அறியலாம்.
(கற்பித்தல் தொடரும்...)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.