பல்வேறு சொதிட நுால்களில் இருந்து அகர வரிசையின் படி, தொகுத்துத் தரப் பெறுகின்றது. மேலும் பல யோகங்கள் உள்ளன.
இராஜயோகம்
1. தரும, கரும அதிபதிகள் கூடி நல்ல ஸ்தானத்தில் நிற்பது.
2. தரும கரும அதிபதி சந்திர கேந்திரம் பெற்று, ஐந்தாம் அதிபன், அல்லது பதினொன்றாம் அதிபன் குருவாய் நிற்பது.
3. ஒன்பதுக்கு உடையவன் ஏறிய அங்கிசாதிபதி குருவோடு கூடி, இரண்டில் நின்று. அவனும் இரண்டு ஒன்பதுக்கு உடையவனாகி நிற்பது.
4. இராகு நின்ற வீட்டோன் உச்ச கோணத்தில் இருக்க. செவ்வாய் வலுவுற்றிருப்பது.
5. நான்குக்கு உடையவன் நின்ற ராசி அதிபதி பத்தில் நிற்க, இலக்கினாதிபதி கூட அல்லது பார்வை பெற்றிருப்பது.
6. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இந்த ஏழு கிரகங்களும் சர ராசியில் நிற்பது.
ஆகியவை இராஜயோகமாகும். இது ஒரு சிறப்பு யோகமாகும்.
இராஜ மந்திரியோகம்
1. ஐந்தோன் கோபுர அங்கிசம், ஏற, குரு இலக்கினத்தில் இருக்க, இலக்கினாதிபனும், ஐந்தோனும் பார்க்க, புதன் நின்ற வீட்டோன் கேந்திரத்தில் இருப்பது.
2. இலக்கினாதிபன் குருவோடு கூடி கேந்திரிக்க, செவ்வாய் பார்க்க, அல்லது சூரியன், செவ்வாய், குரு கூடி நிற்பது.
3. சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் இவர்கள் சேர்ந்தாலும் அல்லது தனித்தனியே பரவி நின்றாலும், சுக்கிரனை சுபர் பார்த்தாலும், அல்லது இரண்டாம் இடம் முதல் எட்டாம் இடம் வரை ஏழு கிரகம் நிற்பது.
4. அசுபதி, புனர்பூசத்தில் சனி இருப்பது, மகம், மிருக சீரிடத்தில் குரு இருப்பது, சித்திரை, பூசத்தில் புதன் இருக்க, மகத்தில் சுக்கிரன் இருப்பது, பரணி, சுவாதி இந்த நட்சத்திரங்களில் பிறந்திருப்பது.
5. பத்தில் சூரியன், செவ்வாய் நிற்பது, மூன்றில் சனி நிற்பது, ஒன்பதில் குருவும், பத்தில் செவ்வாயும், நாலில் சுக்கிரனும் நிற்பது.
ஆகியவை இராஜமந்திரியோகம்.
இரேகாயோகம்
குரு, சுக்கிரன், சூரியன், இலக்கின அதிபன், ஆகியவர்கள் பாவ வருக்கம் ஏறி, நீச மூடம் பெற்றும், நாலுக்கு உடையவர் பாவரோடு கூடி, ஆறு எட்டுப் பன்னிரண்டில் நிற்றலும் ஆகும்.
இலட்சுமி யோகம்
1. பாக்கிய அதிபனும், சுக்கிரனும் ஆட்சி உச்சம். கேந்திரம் திரிகோணம் இவைகளில் நிற்பது.
2. இலக்கின அதிபதி கேந்திரம், மூலத் திரிகோணம், உச்சம் இவைகளில் வலுவுற்று நிற்பது.
3. பாக்கிய அதிபன் நாலில் நிற்க, சுக்கிரன் தேவலோக அங்கத்தில் இருப்பது.
4. பாக்கிய அதிபனோடு சுக்கிரன் கூடி, பாரி சாதாங்கிஷம் பெற்றிருப்பது.
5. பஞ்சம லாப அதிபர் வீடு மாறி நின்று இலக்கின அதிபதி கேந்திர கோணத்தில் இருப்பது.
6. சூரியன் பர்வதாங்கிஷத்தில் இருக்க, கரும அதிபதி வலுக்க, நாலுக்கு உடையவன் உச்சத்தில் இருப்பது.
7. கேந்திரத்திலாவது திரிகோணத்திலாவது செவ்வாய் சுபருடனே கூடி நிற்க, இலக்கின அதிபதி ஒரு பாவியுடனேயாவது கூடி பலத்துடன் நிற்பது.
8. குரு லக்கினத்தில் இருக்க அல்லது பார்க்க சூரியன் உச்சம் பெற, மூன்று அல்லது நான்காம் இடத்தில் சுக்கிரன் நிற்பது.
9. சுக்கிரன் உத்தமாங்கிஷம் பெற்று, ஒன்பதில் சுபர் இருக்க, மூன்றில் உச்சக்கோள் நிற்பது.
10. சந்திரன், குரு, சுக்கிரன் இவர்கள் பர்வதாங்கிஷம், பாரி சாதாங்கிஷம், தேவலோக அங்கிஷம் ஆகிய இவைகளில் எவையேனுமாய் ஆட்சி பெற்று நிற்பது.
11. சூரியன், சுக்கிரன், சிங்காசன அங்கிஷம், தேவலோக அங்கிஷம் ஆகியவைகளில் எதிலாவது இருக்க. சந்திரன் உச்சம் பெற்றிருப்பது.
12. கேந்திர கோணத்தில் மூன்று கோள்கள் இருக்க, நான்கு கோள்கள் மித்துரு பார்வை பெற ,சந்திரனுக்கு முன் பின் சுபக்கிரகம் இருக்க, இலக்கினத்தில் குருவும், ஏழில் சுபக்கிரமும், இரண்டில் புதனும், பன்னிரண்டில் சுக்கிரனும் இருக்க அமைதல்.
13. ஏழு கிரகங்கள் நட்பு. ஆட்சி, உச்சம் கேந்திரமாகிய இவைகளில் இருக்க. கேந்திரத்தில் இருக்கும் இரண்டும் ஒன்பதுக்கு உடையவரை சுக்கிரன் பார்த்த்தல்.
ஆகியவை இலட்சுமி யோகம். இது ஒரு சுப யோகமாகும்.
(குறிப்பு: இவை பல தீபிகை முதலிய பல நூல்களின் கருத்தாகும்)
உபயசரி யோகம்
சூரியனுக்கு இரண்டிலும், பன்னிரண்டிலும் சந்திரன் நீங்கிய மற்ற சுபக்கிரகங்கள் நிற்பதாகும்.
உருசக்யோகம், ருசக்யோகம்
பஞ்சக் கிரகங்கள், ஆட்சி, உச்சம், கேந்திரம் இவைகளில் நிற்றல். இது விசேஷ நல்ல யோகமாகும்.
எக்காள யோகம்
நாலு பத்துக்கு உடையவர்கள் ஒன்றுக்கு ஒன்று நட்பாகக் கேந்திரத்தில் இருக்க. இலக்கின அதிபதி வலுத்திருத்தாலும், நாலுக்கு அதிபன் கேந்திர மூலத் திரிகோணத்தில் உச்சமாக இருந்தாலும், உச்ச அதிபதியுடன் இலக்கின அதிபதி கூடி, உச்சாங்கிஷம் பெற்றிருந்தாலும், ஒன்பதில் பாவரும், சுபரும் கூடி நிற்கப் பத்தில் சனி, சூரியன் கூட இலக்கினம் உபய ராசியாக இருந்தாலும், நாலு எட்டுக்கு உடையோர், கிரகம் மாற அல்லது கூடிக்கேந்திரத்தில் இருந்தாலும், இலக்கின அதிபதி, பாக்கிய அதிபதி இவர்கள் உச்ச மூலத் திரிகோணங்களில் பலத்து இருந்தாலும், சனி வர்க்கோத்தமமாய் உச்சமூலத் திரிகோணங்களில் இருந்தாலும், குரு அல்லது புதன் ஏழில் உச்சம் பெற்றிருந்தாலும், சர ராசி இலக்கினமாகி, குருவினால் பார்க்க, அவர்கள் கேந்திரம் பெற்று, இரவில் செனனமானாலும் அது எக்காள யோகமாகும். இது ஒரு சுப யோகம்.
கட்க யோகம்
1. இலக்கினத்தில் சூரியனும், பாக்கியத்தில் மதி செவ்வாய் கூடி நிற்பது.
2. செவ்வாய் அங்கிசாதிபதி, கேந்திர கோணத்தில் குரு பார்க்க நிற்பது.
3. ஏழில் குருவும், ஒன்பதில் சுக்கிரனும், நாலில் சனியும் இருக்க இலக்கினத்தில் புதன் பாவர்களால் பார்க்கப்படாமலிருப்பது.
4. ஐந்து ஒன்பதுக்கு உடையோர் கூடிக் கேந்திரிக்க லக்கின அதிபதி கேந்திர கோணம் பெற்றல்.
5. நான்கு ஒன்பதுக்கு உடையோர் கூடிக் கேந்திரிக்க, ஒன்று ஏழுக்கு உடையவர் கிரகம் மாறி நிற்க, பாக்கியத்தோன் கேந்திர கோணத்தில் இருத்தல்.
6. கரும அதிபன் நான்கிலும், பாக்கிய அதிபன் சிங்காசனாங்கிசம் பெற்றும், அஷ்டம் அதிபன் உச்சம் பெற்றும் இருப்பது.
ஆகியை கட்க யோகமாகும். இது ஒரு சுப யோகம்.
கதா யோகம்
1. சூரியனாதி, ஏழு கிரகங்கள் இலக்கினத்திலும், நான்கினிலும் இருத்தல்.
2. மேற்படி கிரகங்கள் நான்கிலும், ஏழிலும் இருத்தல்.
3. மேற்படி கிரகங்கள் ஏழிலும் பத்திலும் இருத்தல்.
4. மேற்படி கிரகங்கள் பத்திலும், இலக்கனத்திலும் இருத்தல்.
5. இரண்டில் குரு, சுக்கிரன், சந்திரன் ஆகியோர் கூடி நிற்கப், பாக்கியனால் பார்க்கப் பெறல்.
போன்றவை கதா யோகமாகும். இது ஒரு சுப யோகம்.
கமலயோகம்
ஓர் நல்ல யோகம். இது நான்கு கேந்திரங்களிலும் ஏழு கிரகங்கள் நிற்றலாகும்.
கருடயோகம்
ஓர் நல்ல யோகம். இது வளர்பிறைச் சந்திரன் இருந்த அங்கிசாதிபதி உச்சனாய் இருந்து, பூரணையில் பிறப்பதாகும்.
கர்தாரி யோகம்
செய்யும் நற்காரியங்களுக்கு ஆகாத நாள் இது. இலக்கினத்திற்கு இரண்டு பன்னிரண்டில் பாவிகள் இருத்தல்.
கத்திரியோகம்
இலக்கினத்திற்கு முன் பின் பாபிகள் நிற்கில் கத்திரி யோகமாம்.
கலயோகம்
பரிவர்த்தன யோகத்துள் ஒன்று. அவை; மூன்றுக்கு உடையவன், நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று, ஒன்று, இரண்டு, இவ்விடங்களில் இருக்க, அவ்வீட்டு அதிபர்கள் மூன்றில் நிற்றலாகும்.
களத்திர யோகம்
இராஜ யோகத்தில் காண்க.
இதன் பலன்: வீரம், அழகு, கல்வி, ஆண்மை, புத்திர மித்திர பாக்கியம் இவை அமைந்து வாழ்வது.
காகள யோகம்
ஓர் உப யோகம். இது இலக்கின அதிபதி, சத்தமாதிபதி இவர்களில் எவரேனும் இருந்த இராசிநாதன், கேந்திர கோணம் ஆகியவைகளில் ஆட்சியிலேனும், உச்சத்திலேனும் நிற்றலாகும்.
காந்தர்வ யோகம்
ஐந்துக்கு உடையவன் மூன்றிலேனும், பதினொன்றிலேனும் இருக்க, குருவும், இலக்கின அதிபதியும் கூடி நின்று, சூரியன் உச்சமாயும், சந்திரன் ஒன்பதிலும் நிற்றல்.
காமமாலிகா யோகம்
ஏழாம் இடம் முதல் இலக்கினம் வரை ஏழு கிரகங்கள் நிற்றல், இதன் பலன் இராச யோகம், சுக போகம், பலதாரம், தீர்க்கமான கல்வி, அறிவு விருத்தி, திருப்பணி முதலியன பெறுதல்.
காமினி யோகம்
சந்திரனும், சுக்கிரனும் ஏழில் நிற்க, செவ்வாய் பதினொன்றில் இருக்க, குரு பாக்கியம் அடைய, இலக்கின அதிபதி சுபருடன் கூடி நிற்றலாகும்.
கீர்த்தி மாலிகா யோகம்
பத்தாம் இடம் முதல் நான்காம் இடம் வரை ஏழு கிரகங்கள் நிற்றல். இதன் பலன் கலை வல்லவன். கவிஞன். கோபி. அரசநேசன், உலகப் பிரசித்தியும் பத்து சன பூசிதனுமாகும்.
குரு சந்திர யோகம்
வியாழனும் சந்திரனும் கூடி இருக்கும் யோகம். கடகம், மகரம் இலக்கினமாக இருந்து வியாழனும் சந்திரனும் கூடி இலக்கினத்திலாவது ஏழிலாவது இருக்கும் யோகம். வியாழனும், சந்திரனும் கூடி நிற்றல்.
குரு புகர் சந்திரயோகம்
வியாழன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்றும் ஓர் ராசியில் நிற்பது. வியாழன், சுக்கிரன், சந்திரன், இவர்கள் ஓர் இராசியில் கூடி நிற்றலாகும்.
குரோத யோகம்
இலாப அதிபதி நின்ற திரேக்காண ராசியில். சூரியன் ,செவ்வாய், இராகு, இவர்கள் நிற்றலும், பார்த்தலும் ஆகும்.
கூடயோகம்
சூரியாதி எழுவர், நாலாம் இடம் முதல் பத்தாம் இடம் வரை நிற்பதாகும்.
கூபயோகம்
இராகு நின்ற இராசி அதிபதிக்கு ஐந்திலாவது, ஒன்பதிலாவது சூரியன், செவ்வாய் கூடி நிற்றல்.
கூர்ம யோகம்
1. இரண்டு, மூன்று, பத்து, பதினொன்று ஆகிய இந்த இடங்களில் சுபரும், பாவரும் கூடி நிற்றல்.
2. நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இவ்விடங்களில் சுபரும், பாவரும் கூடி நிற்றல்.
3. ஐந்து, ஆறு, ஏழு ஆகிய இந்த இடங்களில் சுபக்கிரகங்கள் கூடி நிற்க, ஒன்று, மூன்று, ஒன்பது, பதினொன்று ஆகிய இந்த இடங்களில் பாவக்கிரகங்கள் கூடி நிற்றல்.
4. மூன்று, பதினொன்று இவை எதிலேனும் குரு நிற்க சுக்கிரன் ஆட்சியிலாவது, ஐந்திலாவது நிற்க, உயிர் அதிபன் வலுத்து நிற்றல்.
5. இலக்கின அதிபதி ஆட்சியில் இருக்க, பாக்கிய அதிபதி பலத்து நிற்றல்.
6. இலாப அதிபதி ஐந்தில், இருக்க புதன் கேந்திர கோணம் பெற, இலக்கின அதிபதி வலுத்து சுபக்கிரகம் பார்க்கப் பெறுதல்.
7. சர ராசி இலக்கினமாகி இலக்கன அதிபதி வலுத்து, திர ராசியில் இருத்தல்.
8. திர ராசி இலக்கினமாகி, இலக்கின அதிபதி கேந்திர திரிகோணமான சரராசியில் பலத்து நிற்றல்.
போன்றவை கூர்ம யோகமாகும்.
கெச கேசரி யோகம்
இது ஓர் சுப யோகம். இது தனுசில் குருவும், மீனத்தில் சந்திரனும், அல்லது குருவும், சந்திரனும் இணைந்து மீனத்தில் நிற்பதாகும்.
கேசரியோகம்
உதயத்துக்கு நாலில் ஏழிற் சந்திரன் நிற்பது, வியாழனுஞ் சந்திரனுங் கூடி நிற்பது. யோக வகைகளில் ஒன்று. இதில் பரியங்கி யோகம், அமுரிதாரணை சந்திரயோகம் எனப் பலவுண்டு. ஓர் கன்னி யோகம். அவை நாலு, ஏழு இவைகளில் சந்திரன் நின்றாலும் அல்லது சந்திரனுடன் குரு கூடி நின்றாலும், அல்லது குருவிற்குக் கேந்திரத்தில் சந்திரன் நின்றாலும் ஆகும்.
கேதார யோகம்
ஓர் சுப யோகம். இது சூரியனாதி எழுவர் நான்கு இராசியில் நிற்பதாகும்.
கேமுத்திர யோகம்
சந்திரனுக்கு இரண்டு, பன்னிரண்டு ஆகியவைகளில் குசாதி பஞ்சக்கிரகங்கள். அதாவது செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி ஆகியவர்கள் ஒருவர் அல்லது இருவர் இல்லாதிருந்தாலும், அல்லது இருந்து சூரியன் கூடி நின்றாலும் ஆகும்.
சகட யோகம்
குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டு, ஆகிய இவ்விடங்களில் சந்திரன் நிற்பது. இதில் பிறந்த சாதகன் செல்வத்தைச் சிறிது சிறிதாய் இழந்து மீண்டும் அவ்வண்ணமே செல்வத்தை அடைந்து, உலகத்தில் அதிகக் கீர்த்தியும், சில காலம் இன்பமும் சில காலம் துன்பமும் அனுபவிப்பான்.
இராகு கேதுக்கள் நீங்கிய சூரியனாதி ஏழு கிரகமும், இலக்கின கேந்திரம், ஏழாம் கேந்திரம் ஆகிய இவைகளில் நிற்பது. இதில் பிறந்த சாதகன் சகடை, அதாவது வண்டி, இயந்திரம் முதலியவைகளால் தனம் தேடி, நோயினால் பீடிக்கப் பெற்று வாழுவான். வியாழனுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற் சந்திரன் நிற்பது.
சகட பங்க யோகம்
சந்திரனாவது, வியாழனாவது இலக்கினத்திற்குக் கேந்திரத்தில் நிற்பது. இதன் பலன் சகட யோக பலனுக்கு மாறுபட்டவையாகும்.
சக்கர யோகம்
இராச யோகத்துள் ஒன்று. அது பத்தில் இராகு இருக்க, பத்துக்கு அதிபதி இலக்கினத்தில் இருக்க இலக்கின அதிபன் பாக்கியத்தில் இருப்பதாகும்.
சூரியாதி எழுவர், ஒன்று. மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று இவைகளில் நிற்பதாகும்.
சக்தியோகம்
இரு பாம்பு நீங்கிய சூரியாதி எழுவருமே ஏழு, எட்டு, ஒன்பது, பத்து இவைகளில் இருப்பதாகும். இது கெட்ட யோகங்களில் ஒன்று.
சங்கம யோகம்
1. ஐந்தாறுக்கு உடையவர். ஒருவருக்கு ஒருவர் பார்வை பெற, அல்லது கேந்திரத்தில் ஏற, இலக்கின அதிபன் பலம் பெற்றிருத்தல்.
2. ஐந்து ஏழுக்குடையவர் புதனோடு கூடி யாரேனும் உச்சமாய் இருக்க, பாக்கிய அதிபன் சுபனாய் ஆட்சி பெற்றிருத்தல்.
3. பதினொன்றில் குரு இருக்க, ஐந்தில் புதன் இருக்க, இலக்கின அதிபன் வலுத்து நிற்றல்.
4. சந்திரன், சுக்கிரன் இவர்கள் கூடி நட்பு வீட்டில் இருக்க, பாக்கிய அதிபன் செவ்வாயைப் பார்த்தல்.
5. இலக்கின கரும அதிபதி பாக்கியத்தில் இருக்க, பாக்கிய அதிபன் பலம் பெற்றிருத்தல்.
6. மூன்றுக்கு உடையவன் அல்லது ஒரு பாவியாவது நாலாம் இடத்திலிருக்கும் உச்சக் கிரகத்தோடு கூடி இருத்தல்.
போன்றவை சங்கம யோகமாகும்.
சங்க யோகம்
ஓர் சுப யோகம். இது தரும கரும அதிபதிகளோடு, இதர கேந்திர திரிகோண அதிபர்கள் கூடி நிற்றலாகும்.
சசயோகம்
பஞ்சக் கிரகங்கள் ஆட்சி, உச்சம் இவைகளில் கேந்திரித்து நின்றாலும், சனி வலுவுற்று இருந்தாலும் ஆகும்.
சடாயோகம்
இலக்கினத்தில் உச்சன் இருக்க, அதைச் செவ்வாய் பார்க்க, பாக்கிய அதிபதி மூன்றாம் இடத்தில் நிற்பதாகும்.
சண்ட யோகம்
பத்தாம் இடத்தில் சனியும், கரும அதிபதியும் இராகுவுடன் கூடி நிற்பதாகும்.
சந்திரிகா யோகம்
பாக்கிய அதிபன் இருந்த வீட்டுக்கு உடையவன், சுக்கிரன், செவ்வாய் ஆகியவர்களுடன் கூடி ஐந்தாம் இடத்தில் நிற்பதாகும்.
சமுத்திர யோகம்
விசேஷ இராசயோகம். அவை இராகு, கேது, நீங்கிய சூரியனாதி ஏழு கிரகங்கள் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய இவ்விடங்களில் நிற்பது.
சமுத்திரா யோகம்
கரும அதிபன், பாக்கியத்தில் இருக்க, அவ்வீட்டோன் ஏழில் இருக்க, ஏழுக்கு உடையவனும், ஒன்பதுக்கு உடையவனும், வீடு மாறி நிற்பதாகும். இவை - விசேஷ நல்ல யோகம்.
சர்ப்ப யோகம்
சூரியன், செவ்வாய், சனி இவர்கள், மூன்று கேந்திரத்தில் இருக்க, மற்றொரு கேந்திரத்தில் சுபர்கள் இல்லாமல் இருப்பதும், பாக்கிய அதிபதி, மூன்றாம் இடமிருக்க அது குரு பார்வை பெற்றிருந்தாலும், ஒன்பதில் சுக்கிரன் குரு, இலாப அதிபதி இவர்கள் கூடி நிற்க, இவர்களைத் தன அதிபதி பார்த்து நிற்பதுமாகும்.