சடங்குகள் தமிழர் வாழ்வினில் இன்றியமையாதது. பழங்காலத்திலும், இன்றும் இவை இம்முறையிலேயேப் பின்பற்றப் பெறுகின்றன.
திருமாங்கலி, சப்தபதி, சிராவணம், நாகப்பிரதிட்டை குழந்தைப்பேறு சடங்கு, கர்ப்பாதானம், கர்ப்பாதானத்திற்குரிய நாள்கள், புங்ஸவனம் - பும்சவனம், சீமந்தம் - முதுகு நீரிடுகை, சாதகன்மம் - புத்திர தரிசனம் செய்வது - ஜாதகர்மம், விதானமாலை, மைந்தர் வினைப்படலம் தரும் செய்திகள், பஞ்சாயுதம் - (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு) நாமகரணம் - பெயர் சூட்டுதல், தொட்டிலேற்றல், பால் பருகுதல், கன்னவேதை - கன்னவேதை - காது குத்துவது, சூரியவலோகனம், சூரிய சந்திர கோதரிசனம், நிஷ்கரமணம், சந்திர கோதரிசனம், சந்தி மிதித்தல், அன்னப்பிராசனம் - அமுது ஊட்டுதல், ஆண்டு நிறைவு, சௌளம் அல்லது சூடாகரணம் - காது குத்துதல், அட்சாரம்பம் - அட்சரம் - எழுத்து, கல்வி பயிற்றுவித்தல் ஆரம்பம், வித்தியாரம்பம், உபநயனம் - பூணூற் கலியாணம் - உபநயனச் சடங்கு, நால் வருணத்தார்க்குரிய மாதங்கள், உரிய நட்சத்திரங்கள், திதிகள் நிலை, கிரகங்கள் நிலை, நட்சத்திரங்கள் நிலை, வேதாரம்பம் - காண்டோபக்கிரமணம் - வேதாத்தியயனம் ஆரம்பிக்கும் கிரியை, உபாகன்மம், சமாவர்த்தனம் - பிரமசாரி விரதத்தை முடித்தல், கிருகப்பிரவேசம் - புதிய இல்லம் குடி புகுதல், நவபூஷணம் - ஒன்பது இரத்தினங்கள் - ஆண்கள், பெண்கள் அணிதல், நவவஸ்திரம் பூண - ஒன்பது ஆடைகள் - ஆண்கள், பெண்கள் அணிதல், உபதேசம், சதாபிஷேகம், சோடகம் - பதினாறு. சோடசகிரியையாவன, சிராத்தம் - சிரார்த்தம், அகராதி தரும் செய்திகள், பிதுர்க்கள், மகாலய அமாவாசை, மஹாமகம், மஹோதயம், மகோதயம் ஆகிய சடங்குகள் குறித்தவற்றினைப் பற்றிக் காண்போம்.
திருமாங்கலி
திங்கள், புதன், வியாழன், வௌ்ளி - வாரங்களும், பிரதமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தசி, பூரணை, அமாவாசியை ஒழிந்த திதிகளும், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரத்திரயம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், விருடபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் இராசிகளும், எட்டாமிடம் சுத்தமுமாக ஸ்திரீ புருடர்களுக்கு - பெண், ஆண்களுக்கு நன்மையான நட்சத்திரங்களிலேத் திருமாங்கலியத்திற்குப் பொன் உருக்க நன்று.
சப்தபதி
கல்யாணத்தின் முந்திய நாளில் நடத்தும் சடங்கு. இது மணப்பெண்ணின் கையைப் கணவன் பிடித்துக் கொண்டு இருவருமாக விவாக்னியை ஏழு முறை வலம் வந்து நீ என்னுடன் 7 அடிகள் நடந்து வந்தமையால் நாம் இருவரும் தோழர்களானோம் எனும் கருத்துள்ள மந்திரத்தைக் கூறுவது. (தைத்திரீயம்)
சிராவணம்
ஆவணி மாதம், திருவோணம் நட்சத்திரம். ஆவணி மாதத்துத் திருவோண நட்சத்திரத்து அனுட்டிக்கும் ஒரு வைதிக காரியம். ஆவணி மாதத்துத் திருவோணம், நட்சத்திரத்திலே இரு பிறப்பாளர் மூவராலும் அநுட்டிக்கப்படுவதாகிய ஒரு வைதிக் கிரியை. அது பதினான்கு வித்தைகளையும் சிரவணஞ் செய்யத் தொடங்குதற்குரிய கிரியை.
நாகப்பிரதிட்டை குழந்தைப்பேறு சடங்கு
நாக விக்கிரப் பிரதிட்டை. ஒரு கருங்கல்லில் ஒரு படம், இரு படம் உள்ளனவாகப் பாம்புகள் எழுதி அச்சிலையை முதனாள் நீரில் இருக்கச் செய்து அச்சிலையை அன்றிரவு தம்பதிகள் உப்பில்லா விரதம் இருந்து மறு நாள் பாம்பு சிலைக்குப் பூசை முதலியன செய்து அரச மரத்தினடியில் அதற்குரிய விதிப்படி அதனை நிறுவி, வலம் வந்து வணங்கி, உறவினர்களுடன் அந்தணர்களுக்கு உணவு அளிப்பதால் குழந்தைப் பேற்றினைப் பெறுவர் என்றும், பெண் குழந்தைகளேப் பிறக்கும் நிலையும் மாறி ஆணாகப் பிறக்கும்.
கர்ப்பாதானம்
இது பிண்டோற்பத்தி செய்தற் பொருட்டு விவாகமான பெண் பூத்த நாள் நான்கிற்கு மேல் பதினாறு நாள்களுக்குள் செய்யும் கிரியையாம்.
விதானமாலை இருதுவான நாள் முதல் 4 நாளும் கற்பாதானம் செய்தல் ஆகாது. அப்படிச் செய்தால் முதல் நாள் கணவனுக்கும், 2 ஆம்நாள் பெண்ணுக்கும், 3 ஆம் நாள் கர்ப்பத்துக்கும், 4 ஆம் நாள் பிறந்த புத்திரனுக்கும் துன்பம் உண்டாகும். ஆகையால் கர்ப்பாதானம் செய்தல் ஆகாது. நீராடிச் சுத்தமான 5 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் அளவும் இச்சடங்கு செய்யப்படும் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.99)
கர்ப்பாதானத்திற்குரிய நாள்கள்
திருவோணம், அத்தம், அனுஷம், இரேவதி, சோதி, சதயம், உத்திரத்திரயம், உரோகிணி, மூலம் இவை உத்தமம். சித்திரை, மிருகசீரிடம், அசுவிணி, அவிட்டம், புநர்பூசம், பூசம் இவை மத்திமம். பக்கச்சித்திரை ஒழிந்த திதிகளிலே கர்க்கடகம், மிதுனம், மீனம், துலாம், இடபம், தனுசு, சிங்கம், கன்னி இவை உதயமாக இந்தச் சடங்கு செய்யலாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2, பக்கம்.100)
ஏனைய இராசிகளுதயமும் பகலும் தவிர்க்கப்படும். உதயமும் 8 ஆம் இடம் சுத்தமாக ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இந்த கிழமைகளின் இரவு அமாவாசி, பூரணை இவை ஒழிந்த நாட்களில் இந்தச் சடங்கு செய்யலாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 3, பக்கம்.100)
ஆதித்தியனும், சந்திரனும், செவ்வாயும், சுக்கிரனும் தத்தம் அம்சங்களில் நிற்க, வியாழன் இலக்கினத்திற்கு 5, 9 ஆகிய இவ்விடங்களில் நிற்கக் கர்ப்பாதானம் செய்தால் அந்தக் கர்ப்பம் முழுமையாக வளர்ந்து ஆண் பிள்ளையாகப் பிறக்கும். இந்த யோக மலடியான திரியிடத்தில் பயன்படாது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 4, பக்கம்.100)
புங்ஸவனம் - பும்சவனம்
ஆதித்திய கெதியான 3 ஆம் மாதத்தில் திருவோணத்தில் ஆதல் பூசத்தில் ஆதல் சுபயோகமான தினத்திலே சந்திரோதயத்துச் சுக்கிரன் பார்வை உண்டாக கர்க்கடகங் கன்னி மிதுனம் ஒழிந்த இராசி உதயங்களில் அட்டம சுத்தி உண்டாகப் புங்சவனஞ் செய்யலாம். (விதானமாலை, பாடல் 1, பக்கம்.104)
இது பிண்டம் அசைவு அடைதற்கு முன்பே இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் தரித்த கரு ஆண் மகவாக வேண்டிச் செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம்.
இது கர்ப்பிணிகள் ஆண் சிசு பெறும்படி செய்யுங் கிரியை. கர்ப்பம் வியக்தமாவதற்கு முன் முதல் மாசத்தில் பூசம் நட்சத்திரத்தில் பொன், வௌ்ளி, இரும்பு இவை முதலியவற்றால் சிறு புருட உருச்செய்து அக்னியிற் சிவக்கக் காய்ச்சி நான்கு பலம் பாலில் தோய்த்து அப்பாலைக் கர்ப்பிணிக்கு அருத்துவது. வெளுத்த தண்டோடு கூடிய நாயுருவி வேர், ஜீவகம், ரிடபகம், முள் ஐவனம் இவைகளை அரைத்துத் தண்ணீரிற் கலக்கி அருந்தச் செய்யுங் கிரியை.
சீமந்தம் - முதுகு நீரிடுகை
இது நாலாம் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் வரையில் அவரவர் மரபின் வழக்கப்படி செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம்.
கருப்பம் தரித்த ஆறாம் மாதம் உச்சி வகிர்ந்து, செய்யும் ஓர் சடங்கு. முதுகு நீரிடுகை. முது நீர்ச்சடங்கு - சீமந்தச் சடங்கு. முதுகு நீர்ச்சடங்கு - சீமந்தச் சடங்கு.
கருப்பதான முதலிய கருமம் பதினாறில் ஒன்று. அஃதாவது ஆறாம் மாதத்திலாவது, எட்டாம் மாதத்திலாவது, கருப்பத்தில் இருக்கின்ற சிசுவின் ஆயுள் விருத்தியின் பொருட்டு மனைவியின் தலைமயிர் வகிர்தலைக் குறித்துக் கணவன் செய்வதோர் சடங்கு.
விதானமாலை ஆதித்திய கெதியால் வந்த 4 ஆம் மாதம், 6 ஆம் மாதம், 8 ஆம் மாதத்திலே புநர்பூசம், பூசம், இரேவதி, திருவோணம், உரோகிணி, உத்திரத்திரையம், அத்தம், மிருகசீரிடம் ஆகிய இந்நாட்களிலே விரிச்சிகம், சிங்கம் ஒழிந்த இராசிகளில் அட்டம சுத்தி உண்டாக முன் சொன்ன பஞ்சாங்க யோகம் நன்றாகயிருக்கச் சீமந்தம் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2, ப. 105)
சாதகன்மம் - புத்திரதரிசனம் செய்வது - ஜாதகர்மம்
குழந்தை பிறந்து நீராடினவுடன் கொப்பூழ்க் கொடி அறுப்பதற்கு முன் செய்ய வேண்டிய கிரியையாம். அதாவது, புதல்வன் பிறந்த மாத்திரத்தில் தந்தை தரித்திருக்கின்ற வஸ்திரத்தோடு ஸ்நானஞ் செய்து பொன், வௌ்ளி தானியங்களைத் தானஞ் செய்த பின் பொன், தேன், நெய் சேர்த்திழைத்துச் சிசுவுக்குச் செவ்வெண்ணெய் புகட்டுதலுடன் பிதுர்க்களுக்கு இரண்ய சிரார்த்தஞ் செய்தலாம்.
சாதகப்படலம் புத்திரன் பூமிகேதன்னான போதே தந்தையானவன் வடதிசையில் சென்று ஸ்நானம் - குளியல் செய்து வந்து தற்காலத்துச் சுபலக்கினத்திலே சாதகன்மம் செய்து தங்கள் வம்சத்தவர்கள் கூட விருந்து எள்ளும், நெல்லும், பொன்னும், பசுவும், கன்றும், நல்ல பூமியும், வஸ்திரமும் - துணியும் சுத்த பிராமணருக்குத் தானம் செய்து புத்திர தரிசனம் செய்வது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.106)
பஞ்சாயுதம் (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு)
பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் பிள்ளையைச் சுத்த நீரினிலே முழுக்காட்டிச் சுபக்கோள் உதயமாகப் பஞ்சாயுத சூத்திரத்தை நாபி அளவாகத் தரித்துத் தெய்வம், அந்தணர் வாழ்த்து மந்திரத்தினாலே பூத பிசாசு வராதபடி காவல் செய்துக் காப்புத் தரித்துப் பின் (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு) இதனைக் கட்டும் சடங்கு செய்வர் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.114)
நாமகரணம் - பெயர் சூட்டுதல்
இது பிறந்த மகவுக்கு 10 அல்லது 12, 16 வது நாள்களில் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும். அட்சரங்களை முதலாகக் கொண்டு பெயரிடுவதாம். அல்லது பாட்டன் முதலானார் பெயரை இடுவதாம்.
பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12-ம் நாளும், ஷத்திரியருக்கு 16-ம் நாளும், வைசியருக்கு 21-ம் நாளும், சூத்திரருக்கு 31-ம் நாளும் நாமகரணம் செய்ய வேண்டும். இந்த நாட் கழிந்தால் சுப தினங்களிலே ஸ்திரி ராசிகள் உதயமாக லக்கினம் 5-ம் இடம், 8-ம் இடம் சுத்தமாகப் பூர்வான்னத்திலே நாமகரணஞ் செய்ய வேண்டும்.
பிள்ளை பிறந்த பத்தாம் நாள் முதல் பன்னிரண்டாம் நாள் ஆதல் கிருகசுத்தி செய்துச் சுபக்கோள் உதயமாக நாமகரணஞ் செய்தல் - அதாவது பெயர் சூட்டுதல். இந்நாள் கழிந்தால் மிருகசீரிடம், சோதி, அவிட்டம், அத்தம், மகம், திருவோணம், சதயம், அனுஷம், உத்திரத்திரயம், புநர்பூசம், பூசம், உரோகிணி, மூலம், திருவாதிரை ஆகிய இந்த நாட்களிலே முன் சொன்னபடியேப் பஞ்சாங்க யோகம் நன்றாக திரராசி உதயமாக நாமகரணஞ் செய்வது. ஷத்திரயர் - 16 நாள். வைசியர் - 22 நாள். சூத்திரர் - 31 நாள் ஆகிய நாளில் பெயரிடுவது. இவ்விதம் செய்யும் இடத்து முன் சொன்ன நாளின் திர இலக்கினத்திலே 8 ஆம் இடமும், 5 ஆம் சுத்தமாக, சுபக்கோள் 7 ஆம் இடத்தாதல் நட்பாட்சி உச்சத்துச் சுபாங்கிசங்களிலேயாதல் நின்று திப்பப் பெயரிட்டால் நன்மை உண்டாகும். பகை நீசத்து நின்று திப்பப் பெயரிட்டால் தரித்திரமாதல், வியாதியாதல் உண்டாகும். பட்டப் பெயரிடுமிடத்தும் இந்நாளிலே இந்த யோகத்திலே கொள்வதும், நீசத்துக் கொள்ளாது ஒழிவதும் பெறப்படும் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2 - 3, பக்கம்.115)
தொட்டிலேற்றல்
பிள்ளை பிறந்த 10 - ம் நாள், 12 - ம் நாள், 14 ம் நாள், 32 -ம் நாளாதல் சுபக்கிரகம் உதயமாகப் பஞ்சாங்கயோகம் நன்றாக ஊர்த்துவ முகராசி நட்சத்திரங்களிலே பிள்ளையைத் தொட்டில் ஏற்ற வேண்டும்.
பிள்ளை பூமிகேதனனான 10, 12, 16, 32 ஆகிய இந்நாட்களிலே சுபக்கிரகம் உதயமாக ஊர்த்துவ முக இராசி நட்சத்திரங்களில் பஞ்சாங்கயோகம் நன்றாகப் பிள்ளையைத் தொட்டிலில் ஏற்றுவது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 4, பக்கம்.115)
பால் பருகுதல்
பிள்ளை பிறந்த முப்பத்தோராம் நாள் சந்திரனையும், பூமாதேவியையும் அர்ச்சனை - வழிபாடு செய்து சுபக்கோள் உதயமாகச் சங்கினில் பால் வார்த்துப் பருகச் செய்தல்.
மேலும் 31 ஆம் நாள் கழிந்தால் அத்தம், மகம், உரோகிணி, உத்திரத்திரயம், புநர்பூசம், பூசம், திருவோணம், சித்திரை, சோதி, அசுவதி, மிருகசீரிடம், சதயம், அவிட்டம், இரேவதி, அனுஷம் ஆகிய இந்த நாட்களிலே ஞாயிறு, செவ்வாய், சனி ஒழிந்த வாரங்களில் நல்ல திதிகளிலேயே யோகினி எதிரில் நிற்காதிருக்க மீனம், விருச்சிகம் ஒழிந்த ராசிகளில் குழந்தைக்கு சங்கில் பால் வார்த்துப் பருகுதல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 5 - 6, பக்கம்.116)
கன்னவேதை - காது குத்துவது
பிள்ளை பிறந்த பன்னிரண்டாம் நாள் ஆதல், பதினாறாம் நாள் ஆதல், சாவணமாதவகையால் ஆறாம் மாதம், எட்டாம் மாதங்களிலே புநர்பூசம், பூசம், மிருகசீரிடம், சித்திரை, திருவாதிரை, திருவோணம், உத்திரத்திரயம், அத்தம், இரேவதி, அவிட்டம் ஆகிய இந்நாட்களில் சிங்கம், விரிச்சிகம், கும்பம் ஒழிந்த இராசிகளிலே பஞ்சாங்கயோகம் நன்றாகக் காது குத்துவது.
ஒரு வாரத்தில் பகலிலே இரண்டு நாளும், இரண்டு திதியும் வந்தால் அந்நாள் தவிரப்படும். அட்டம சுத்தி உண்டாக ஆபரணத்தாலேப் பஞ்சாங்கயோகம் நன்றாக ஊர்த்துவ முகமான இராசியும் நாளும் உத்தமமாகக் கொண்டு கன்ன வேதனம் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 7 - 8, பக்கம்.116 - 117)
சூரியவலோகனம்
அதாவது மூன்றாம் மாதத்தில் குழந்தை சூரியனைத் தரிசிக்கச் செய்தல்.