ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
முனைவர் தி. கல்பனாதேவி
17. திருமணப் பொருத்தங்கள்

மணப்பொருத்தம், கலியாணப் பொருத்தம், திருமணப் பொருத்தம், விவாகப் பொருத்தம் ஆகியவை பதினாறு வகைப்படும். அவை;
1. இராசிப்பொருத்தம்
2. இராசி அதிபதிப் பொருத்தம்
3. இரட்சுப் பொருத்தம்
4. கணப்பொருத்தம்
5. பெண் தீர்க்கப் பொருத்தம்
6. தினப் பொருத்தம்
7. மகேந்திரப் பொருத்தம்
8. யோனிப் பொருத்தம்
9. வசியப் பொருத்தம்
10. வேதைப்பொருத்தம்
11. ஆயுள் பொருத்தம்
12. நட்சத்திரப் பொருத்தம்
13. விருட்சப்பொருத்தம்
14. பச்சிப்பொருத்தம்
15. பஞ்ச பூதப்பொருத்தம்
16. நாடிப்பொருத்தம்
என்பதாகும்.
விவாகத்திற்குரிய பொருத்தம் பத்து. அவை;
1. இராசி
2. இராசித்தலைவர்
3. இரச்சு
4. கணம்
5. திரி தீர்க்கம்
6. தினம்
7. மகேந்திரம்
8. யோனி
9. வசியம்
10. வேதம்.
அக்காலத்தில் திருமணம் செய்வதற்கு மிகுதியான பொருத்தங்கள் இருந்ததையும், பார்த்ததையும் இப்பகுதி அழகாய் பதிவிடுகின்றது.
1. நட்சத்திரப் பொருத்தம்
பெண் நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையை 6 இல் கழித்த மிச்சம். 2, 4, 6, 8 ஆனால் உத்தமம். 1, 5, 9 ஆனால் மத்திமம். 3, 7 ஆனால் அதமம்.
2. ஏக தினப் பொருத்தம்
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், உத்திரட்டாதி, திருவோணம், ரேவதி, இவை 8- ம் ஸ்தீரீ புருஷர்களின் ஒரு நாளாகில் உத்தமம். அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், இவை 8 ம், ஸ்திரீ புருஷர்களின் ஒரு நாளாகில் மத்திமம். இதில் ஸ்திரி புருஷர்கள் நாள் ஒன்றாகி இரண்டாம் ராசிக்குப் பங்குபட்ட நாளாகில் முதல் ராசி நாள் புருஷனும் இரண்டாம் ராசி நாள் பெண்ணுமாகில் பொருந்தும், இது மாறி வரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒரு நாளாகிற் பொருந்தாது.
3. கணப் பொருத்தம்
பெண் நட்சத்திரமும், புருஷனுடைய நட்சத்திரமும் ஒரே கணமானாலும், பெண் மனுஷ கணமும், புருஷன் தேவ கணமானாலும் உத்தமம். பெண் தேவ கணமும் புருஷன் மனுஷ கணமானாலும், இராட்சத கணமானாலும் மத்திமம். பெண் இராட்சத கணமும் புருஷன் தேவ கணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் இராட்சத கணமானாலும் அதமம். பெண் இராட்சத கணமும் புருஷன் மனுஷ கணமுமானால் அதமாதமம். பெண்ணினுடைய நட்சத்திரத்திற்கு 2, 4 ன் மேற் புருஷ நட்சத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியாயிருப்பினும் பெண் இராட்சத கணமானாலும் பொருந்தும்.
4. மாகேந்திரப் பொருத்தம்
பெண் நட்சத்திர முதல் புருஷ நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆனால் விவாகம் செய்யலாம். மணப் பொருத்தத்துள் ஒன்று. அது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் நான்கு, ஏழு, பத்து, பதின்மூன்று, பதினாறு, பத்தொன்பது, இருபத்திரண்டு, இருபத்தைந்து ஆனால் உத்தமம் என்பதாகும்.
5. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் புருஷ நட்சத்திரம் 13-க்கு மேற்பட்டால் விவாகம் செய்யலாம். மங்கை தீர்க்கம் - மங்கை தீர்க்கப் பொருத்தம் என்பர். இது தசப் பொருத்தம் ஆகிய மணப் பொருத்தத்துள் ஒன்று. அது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் பதின்மூன்றுக்கு மேலாய் இருத்தல். மணவாளி நாளுக்கு மணவாளனாள் பதின்மூன்றுக்கு மேற்பட்ட நாளாய் இருத்தல்.
6. பிராணிப் பொருத்தம்
பெண்ணுக்கும், புருஷனுக்கும் ஒரு பிராணி நட்சத்திரமானால் உத்தமம். அதில் ஆண், ஆணாகவும், பெண், பெண்ணாகவும் இருந்தால் அதிக உத்தமம். இதர பிராணி நட்சத்திரமாகிலும் வைரசாதியாகாமற் போனால் விவாகம் செய்து கொள்ளலாம்.
யோனிப்பொருத்தம்
மணப் பொருத்தத்துள் ஒன்று.
விவரம்: யானைக்கு மனிதனும், குதிரைக்கு பசுவும், எருமையும், பசு, எருமை, கடா, மான், நாள் இவைகளுக்குப் புலியும், குரங்குக்கு ஆடும், எலிக்குப் பூனையும், பாம்பும், பாம்புக்குக் கீரியும், ஆடும், புனைக்கு நாயும், புலியும் பகையாகும்.
மானுக்குப் பசுவும், ஆட்டுக்குக் குதிரையும், நாய்க்கு மனிதனும் நட்பாகும்.
இவைகள் அல்லாதவை சமமாகும். சகல யோனிகளுக்கும் குரங்கு நட்பு என்பதுமாகும்.
குறிப்பு: பெண், ஆண்களுக்கு யோனி ஒன்றாயினும், நட்பு யோனியில், இருவருக்கும் பெண் யோனியானாலும், ஆணுக்கு ஆண் யோனி ஆனாலும், பெண்ணுக்குப் பெண் யோனியானாலும் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியானால் மத்திமம். ஆணுக்குப் பெண் யோனியும், பெண்ணுக்கு ஆண் யோனியாயினும், இருவருக்கும் சத்துரு யோனியாயினும் பொருந்தாது என்பதாகும்.
7. இராசிப் பொருத்தம்
பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும், பெண் ராசிக்குப் புருஷன் இராசி 6-க்கு மேற்படினும் உத்தமம். பெண் ராசிக்குப் புருஷன் இராசி 3-ம் 4-ம் இராசி ஆகில் மத்திமம். 2-ம், 5-ம், 6-ம் இராசியாகில் அதமம்.
8. இராசி அதிபதிப் பொருத்தம்
சூரியனுக்குக் குருவும், சந்திரனுக்குக் குருவும் புதனும், செவ்வாய்க்குப் புதனும் சுக்கிரனும் நட்பு மற்றவர்கள் சத்துரு. புதனுக்குச் சூரியனும், குருவுக்குச் செவ்வாயும், சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும், சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சத்துரு, மற்றவர் மித்துரு ஸ்திரீ ராசி அதிபதியும் புருஷ ராசி அதிபதியும் மித்துருவானால் பொருந்தும், சத்துருவானால் பொருந்தாது.
9. வசியப் பொருத்தம்
மேஷத்திற்குச் சிங்கமும் விருச்சிகமும், இடபத்திற்குக் கடகமும் துலாமும், மிதுனத்திற்குக் கன்னியும் கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும், சிங்கத்திற்குத் துலாமும், கன்னிக்கு மிதுனமும் மீனமும், துலாத்திற்கு மகரமும், விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும், தனுவுக்கு மீனமும், மகரத்திற்கு மேடமும், கும்பமும், கும்பத்திற்கு மேடமும், மீனத்திற்கு மகரமும் வசியமாம், இப்படிப் பார்த்து ஸ்திரீயுடைய ராசிக்கு வசியமான ராசி புருஷ ராசியாகில் உத்தமம், புருஷனுடைய இராசிக்கு வசியமான ராசி ஸ்திரீ ராசியாயின் மத்திமம் இருவருடைய இராசியும் இவ்வாறு வாராதிருந்தால் வசியம் பொருந்தாது.
10. விருட்சப் பொருத்தம்
புருஷ நட்சத்திரம் வயிர மரமும் பெண்ணின் நாள் பால் மரமுமாகில் பிள்ளைப் பேறுண்டாம். பெண் வயிர மரமும். புருஷன் பால் மரமுமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும். அர்த்த சேதமுமாம். இருவர் நட்சத்திரமும் பால் மரமாகில் அதிகப் பிள்ளைகளும் பாக்கியமும் உண்டாம்.
11. ஆயுட்பொருத்தம்
பெண்ணுடைய நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம் வரையும், எண்ணின் தொகையையும், புருஷனுடைய நட்சத்திர முதல் பெண்ணினுடைய நட்சத்திரம் வரையும் எண்ணினத் தொகையையும், தனித்தனியே ஏழிற் பெருக்கி 27 க்கீந்த சேரும் பெண்ணினுடைய நட்சத்திரத் தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும். புருஷனுடைய நட்சத்திரத் தொகை குறையில் பொருந்தாது.
12. பஞ்ச பட்சிப் பொருத்தம்
மயிலுக்கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும். காகத்திற்கு ஆந்தையும். வல்லூறுக்கு ஆந்தையும், மயிலும், கோழியும் பகை. இதில் சொல்லப்படாதவை எல்லாம் உறவு. பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரே பட்ஷியானாலும், பகை இல்லாதிருந்தாலும் பட்ஷி பொருந்தும். பகையானால் பொருந்தாது.
13. பஞ்ச பூதப் பொருத்தம்
அசுவினி முதல் 5 - நாள் பிருதுவி - திருவாதிரை முதல் 6 - நாள் அப்பு - உத்திரம் முதல் 6 - நாள் தேயு - கேட்டை முதல் 5 - நாள் வாயு - அவிட்டம் முதல் 5 - நாள் ஆகாய என்றறியப்படும். ஸ்திரீயும், புருஷனும் ஒரே பூதமாயின் உத்தமம். அப்புவும் தேயுவுமாயின் அதமம், மற்றப் பூதங்களாயிருப்பின் மத்திமம்.
14. வேதைப் பொருத்தம்
அசுவினி, மகம், மூலம் தம்மில் பொருந்தாது. பரணிக்குக் கேட்டை, கார்த்திகைக்கு அனுஷம், ரோகணிக்கு விசாகம், மிருகசீரிடத்திற்குச் சோதி, திருவாதிரைக்கு அவிட்டம். புனர்பூசத்திற்குத் திருவோணம், பூசத்திற்கு உத்திராடம், ஆயிலியத்திற்கு பூராடம், பூரத்திற்கு ரேவதி, உத்திரத்திற்கு உத்திரட்டாதி, அஸ்தத்திற்குப் பூரட்டாதி, சித்திரைக்குச் சதயம் பகை. ஆதலால் பொருந்தாது. மேற் சொன்ன நாட்கள் ஒழிய மற்றுள்ள நாட்கள் எல்லாம் பொருந்தும்.
15. இரஜ்ஜீப் பொருத்தம்
மிரு – சித் -அவி இந்த 3 - ம், சிரோ ரஜ்ஜீ, ரோ - திருவோ - அஸ் - சுவா - திருவா - சத இந்த 6 - ம் கண்ட ரஜ்ஜீ, கார் - புன - உத்திரம் - விசா - உத்ரா - பூரட் இந்த 6 - நாபி ரஜ்ஜீ, பா - பூசம் - பூரம், அனு - பூரா - உத்திரட் - இந்த 6 - ம் தொடை ரஜ்ஜீ, அசு - ஆயி - மக - கேட் - மூல - ரே இந்த 6 - ம் பாத ரஜ்ஜீ, வதூவரர்களுடைய நட்சத்திரங்கள் ஒரு ரஜ்ஜீவிலிருந்தால் பொருந்தாவாம்.
16. கோத்திரப் பொருத்தம்
அச்சுவினி முதல் 4 - ம் மரீசியும். மிருகசீரிடம் முதல் 4 - ம் அத்திரியும், ஆயிலியம் முதல் 4 - ம் வசிட்டரும், அத்தம் முதல் 4-ம் அங்கிராவும், அனுஷம் முதல் 4-ம் புலத்தியரும், உத்திராடம் முதல் 3 - ம் புலகரும், சதயம் முதல் 4 - ம் கிருதுவுமாம். ஸ்திரீ புருஷர்கள் ஒரு கோத்திர நட்சத்திரங்களாயின் கோத்திரம் பொருந்தாது. மாறி வரின் பொருந்தும்.
17. வருணப் பொருத்தம்
கடக, விருச்சிக, மீனம் - பிராமண வருணம். மேட, சிங்க, தனுசு - சத்திரிய வருணம், இடபம், கன்னி, மகரம் - வைசிய வருணம். மிதுனம், துலாம், கும்பம் - சூத்திர வருணம். ஸ்திரீ ராசி தாழ்ந்த வருணம், புருஷ ராசி உயர்ந்த வருணமுமாயினும், 2-ம் ஒரு வருணமாயினும் வருணம் பொருந்தும். மாறி வரின் பொருந்தாது.
18. நாடிப் பொருத்தம்
அசு - திருவா - புன - உத்தரம் அஸ் - கேட் - மூல - சத - பூரட். இந்த 9 - நட்சத்திரங்கள் இடை நாடி, பா - மிரு - பூச - பூரம் - சித் - அனு - பூரா - அவிட் - உத்திரட் இந்த 9 நட்சத்திரங்களும் சுழிமுனை நாடி, கார் - ரோ - ஆயி - மக - சுவா - விசா - உத்திரா - திருவோ - ரேவ - இந்த 9-ம் பிங்கலை நாடி, ஸ்திரீ நட்சத்திரமும், புருஷ நட்சத்திரமும், ஒரு நாடியில் இருந்தால் விவாகஞ் செய்யக் கூடாது.
மாறியிருந்தால் உத்தமம். பிராமணருக்கு அதிபதிப் பொருத்தமும், சத்திரியருக்குக் கணப் பொருத்தமும், வைசியருக்கு ஸ்தீரி தீர;க்கப் பொருத்தமும், சூத்திரர், சங்கரசாதி முதலானவர்களுக்கு யோனிப் பொருத்தமும், பிரதானமாக இருத்தல் வேண்டும்.
(கற்பித்தல் தொடரும்...)
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|