மாதா, பிதா, குரு, தெய்வம், விநாயகர் முதன்மையாய் அனைத்துத் தெய்வங்கள், நவக்கிரகங்கள் உட்பட யாவற்றையும் முறையாய் வணங்கி, கலையை கற்பித்த குருவிற்கு முறைப்படி வணக்கம் செலுத்தி பலன் கூற முறையாய் எப்போதும் தவறாமல் கடைப்பிடித்து இதனைத் தொடங்க வேண்டும்.
ஆத்மார்த்தமாய் வணங்கி வரும் சாதகரின் சோதிடக் கட்டங்களை மானசீகமாய் நினைத்து அருள் பலன் சொல்லித் தர வேண்டி பின்னர் அதனைப் பார்த்து பலன் கூறுதல் வேண்டும்.
எப்போதும் கிரகங்களை மற்றும் எவரையும் நிந்தித்தல் கூடாது. பொறுமை மிக மிக அவசியம். பல நேரங்களில் கிரகங்கள் நம்முடன் அதிகமான சோதனைகள் தந்து விளையாடுவது உண்டு. அதிலும் முக்கியமாய் பலன் கூறும் சோதிடருக்கு அதன் உணர்வு பரிபாஷைகள் சத்தியமாய் புரியும்.
எப்போதும் உள்ளன்புடன் சோதிடர்கள் அமைதியாய் இருத்தல் நலம். அப்போது தான் கிரகங்கள் நம் வசப்படும். இல்லை எனில் வாக்குப் பலன் கிடையாது. எனவே மிக மிகக் கவனம் தேவை. கிரகங்கள் சோதிடரைப் பல நேரம் சோதிப்பது உண்டு. அவர்கள் சாமான்ய மனிதரே. இருப்பினும் முறையாய் வணங்குவோர்க்கு கிரக ஆசி பலன் கூடுதலாய், அபரிமிதமாய் பலர் ஆசியுடன் அமையும்.
பலன்கள் கூறும் போது சாதகரின் கட்டங்களில் உள்ள கிரகத்துடன் இணைத்து ஜனன, தற்கால கோட்சாரக் கிரகங்களை மனதினில் கொண்டு மிகக் கவனமாய் திசாபுத்தி பார்த்து நிலையறிந்து பிறகு பலன் உரைத்தல் வேண்டும்.
கிரக ஆசி பொருந்தியவர்கள் பூர்வ புண்ணியம் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். சாதகராய் இருப்பினும், பலன் கேட்க வருபவராய் இருப்பினும் கெடு பலன்கள் மிகக் குறைவாய் இருக்கும்.
ஏன் எனில் இந்த தெய்வீகக் கணிதக்கலையின் மூலம் பலருடைய மானிடர்களின் பிரமதேவன் படைப்பு இரகசியத்தை இவர்கள் அறிந்து அதற்கு பலன் கூற முற்படுவதால் இவர்கட்கு அவர்களின் கன்ம பலன் வந்தணுகாமல் இருப்பதன் அவசியம் கருதியே சோதிட வருமானத்தில் நான்கில் இரு பாகம், ஆலயத்தொண்டு, அனாதை இல்லங்கள் உட்பட்ட 32 அறங்களுள் தம்மால் இயன்ற அறச்செயல்களைச் சோதிடர்கள் தாமே செய்ய வேண்டும். அப்பரிகாரம் சந்ததி வகையினராய் அந்த சோதிடக் குடும்பத்தை தாங்கி நிற்கும். எனவே பரிகாரங்களும், அறத் தவச்செயல்களும் மிக மிக சோதிடருக்கு அவசியம்.
ஒன்பதாம் பாவகம்
ஒருவரின் பிறந்த சாதகத்தில் ஒன்பதாமிடம் பிதிர்பாவகம் கொண்டு தன்னைப் பெற்ற தகப்பனும், வம்சாபி விருத்தியும், அறஞ் செய்தலும், மாட்சிமையைத் தரவல்ல பிதுராச்சித செல்வமும், அனைத்தையும், சோதிட சாஸ்திரத்தை அறிந்தவர்கள் ஒன்பதாம் பாவகத்தினால் மடாலய ஆதிபத்தியமும், மேலான தருமங்களைச் செய்தலும், குளம் உண்டாக்குதலும், மேலான ஆலய திருப்பணிகளைச் செய்தலும், குருவினிடத்தில் தீட்சை உபதேசம் பெறுதலும், தண்ணீர்ப்பந்தல் வைத்தலும், தருமத்திற்காக கிணறு வெட்டி வைத்தலும், இச்சைப்பட்ட செல்வத்தைப் பெற்று வாழ்தல் ஆகிய இவை கிருபை உண்டாக்கும்படி கூறுவார்கள்.
தருமம் - என்பது அறம், சீலம், சுகிர்தம், தானம், புண்ணியம் என்ற பல பெயர்களைப் பெறும். தர்மம் என்ற வடசொல் அது தருமம் என்று வழங்கப்படும். தருமத்திற்கும், தானத்திற்கும் சிறிது பேதம் உண்டு என்றும்,
தானம் - தம் இனத்தார்க்குத் தக்க காரணம் பற்றி ஒன்றை ஈதலை தானம் என்றும், தருமம் - அங்ஙனமின்றி வறியராய் ஏற்றார் அனைவருக்கும் மாற்றாது ஈதலை தருமம் என்றும் சொல்லப்படும். தருமம் என்பது பரோபகாரம் எனப்படும். ஆகவே நாம் நாம் பிறருக்குச் செய்யும் உதவி தருமம் எனப்படுகிறது. நம்மிடத்தில் உள்ள ஒரு பொருளை பிறர்க்குக் கொடுத்து உதவிச் செய்வது தருமம் ஆகும்.
அறம் - என்பதில் அறு - பகுதி, அம் - செயப்படுபொருள் விகுதி. அறம் - பெரியோர்களால் இவை செய்க, இவை தவிர்க்க என்று வரையறுக்கப்பட்டது. இனி பாவத்தை அறுப்பது என்றலும் ஒன்று எனத் தெரிவிக்கின்றதால் அறியலாம்.
1.தகப்பன், 2.குலவிருத்தி, 3.தருமம், 4.பிதுராச்சிதம், 5.மடாதிக்கம், 6.மேலான தருமம், 7.தண்ணீர்ப்பந்தல், 8.தருமத்திற்காக கிணறு வெட்டல், 9.இஷ்ட செல்வம் பெறுதல், 10.வேதம் படித்தல், 11.ஞான வித்தை, 12.குரு கார்ய நிர்வாகம், 13.தீர்த்த யாத்திரை, 14.தெய்வ சிந்தனை, 15.புண்ணிய யாத்திரை, 16.பட்டாபிடேகம், 17.சகோதர சுக துக்கம், 18.வெளியூர்ப் பிரயாணம், 19.தீட்சை பெறுதல், 20. மகான்கள் தரிசனம், 21.சேவை செய்தல், 22.விசுவாசம், 23.ஐசுவர்யம், 24.போகம் இவை அனைத்தையும் ஒன்பதாம் பாவகத்தைக் கொண்டு அறியலாம்.
தருமம் இரண்டு வகைப்படும்.
1. உலகத்தினர் பொருட்டுச் செய்யும் செயல் தருமம்
2. கடவுள் பொருட்டுச் செய்யும் தருமம்.
முதல் தருமம் என்றும், பின்பு பரம புண்ணியம் என்றும் கூறுவதால் உலகத்தினர் பொருட்டுச் செய்யும் செயல் தருமம் எனவும், பின்னையது கடவுள் பொருட்டுச் செய்யும் தருமம் எனவும் கொள்ளப்படும்.
அறம் 32 வகைப்படும்.
1.ஆதுலர்க்குச் சாலை, 2.ஓதுவார்க்கு உணவு 3.அறுசமயத்தார் உண்டி. 4.பசுவுக்கு வாயுறை, 5.சிறைச்சோறு, 6.ஐயம், 7.தின்பண்டம் நல்கல், 8.அறவைச்சோறு, 9.மகப்பெறுவித்தல், 9.மகவு வளர்த்தல், 10.மகப்பால் வார்த்தல். 11.அறவைப்பிணம் சுடல், 13.அறவைத்துரியம், 14.சுண்ணம், 15.நோய் மருந்து, 16.வண்ணார், 17.நாவிதர், 18.கண்ணாடி, 19.காதோலை, 20.கண் மருந்து, 21.தலைக்கெண்ணெய், 22.பெண் போகம், 23.பிறர் துயர் காத்தல், 24.தண்ணீர்ப்பந்தல், 25.மடம், 26.தடம், 27.சோலை, 28.ஆவுறுஞ்சுதறி, 29.விலங்கிற்குணவு, 30.ஏறு விடுத்தல், 31.விலை கொடுத்து உயிர் காத்தல், 32.கன்னிகாதானம் ஆக 32 - ஆகும் எனத் தெரிவிக்கின்றதால் அறியலாம். கீரனுார் நடராசர், சாதக அலங்காரம், பக்.73 - 74. அறச்சாலை - தரும சத்திரம்.
எப்போதும் அதீத பக்தியுடன் அக்கிரகங்களை நேசிக்கும் போது உள்ளுணர்வின் வழி அவை பிரத்தியட்சமாகி பலன் சொல்லித் தரும். அனுபவத்தில், ஆழ்ந்த பக்கியினில் இக்கலையை உணர முடியும்.
பலன்கள் நற்பலன்கள் வரும் போது தைரியத்துடன் மகிழ்வாய் உரைக்கலாம். அதே சமயத்தில் தீய பலன்கள் காட்சி அளிக்கின்ற போது வாக்கினில் சோதிடர் நிதானத்துடன் பலன் கேட்பவரின் சாதக மன நிலை அறிந்து சூட்சமமாய் நாசுக்காய் அவர்கள் பயங்கொள்ளா வண்ணம் அதை எதிர் கொள்ளும் பக்குவமான மன நிலையில் இருக்கும் போது அவர்களின் உளம், மனநலம் அறிந்து பக்குவமாய் உரைத்தல் வேண்டும்.
எனவே சோதிடர் ஒவ்வொருவரும் ஒரு உளவியல், மன நலன் அறிந்தவராய், ஆன்ம பக்குவம் உடையவராய் இருந்து பலன் கூறுதல் நினைவினில் கொள்ள வேண்டும்.
பலன் நிகழ்ந்த பின் சோதிடரை நாடி, மறுபடியும் ஆலோசனையைக் கேட்கும் போதும் அவர்கள் மனங்கொள்ளும் வண்ணம் பலனைக் கவனமாய் உரைத்தல் வேண்டும். ஏன் எனில் மனித மனம் உணர்வுகளின் எல்லைக்கு உட்பட்டது. சோதிடரும் சாமான்ய மனிதரே. ஆனாலும் அபரிமிதமான இக்கலையை இறையாசி, பூர்வ புண்ணியம் பலன் மூலம் இறைவன் அவர்கட்கு வழங்குகின்றான்.
எனவே இறைவன் நமக்கு வழங்கிய இந்த வானியல் கலையை எப்போதும் பணம், பொருள் முதலானவற்றிற்காக சோதிடர்கள் எப்போதும் விலை போகாமல் இருக்க வேண்டும். சத்தியத்தின் வழி நிற்க வேண்டும். பஞ்சாட்சர மந்திரம் முதலான அவரவர்க்குரிய இறை வழிபாட்டினில் சரியான ஆசார அனுட்டானத்தினில் இருத்தல் மிக மிக அவசியம்.
ஏன் எனில் வானியல் கலை இந்து, முஸ்லீம் என சாதி பாகுபாடு இதற்குக் கிடையாது. சூரியன், சந்திரன் உட்பட்ட வான வெளி பரம்பொருள் அனைத்து மதத்தினர்க்கும் சொந்தம். தனியாக அவரவர் சாதிப்பிரிவு என்று வானியலில் கட்டங்கள் கிடையாது.
இதை உணர்ந்தவன், தெரிந்தவன் மதக்கலவரத்தை எப்போதும் ஏற்படுத்த மாட்டார்கள். அனைவர்க்கும் சொந்தமானது தான் வானியல் கலை. பலன்களும் அது போல் அவரவர்க்கும் கட்டங்களின் படியே அமையும். எதிலும் பாரபட்சம் இல்லை.
எனவே, இதனை பய பக்தியுடன் கவனத்தினில் கொள்ளுதல் மிக மிக அவசியம். எல்லோர்க்கும் பலன் கூறும் ஆற்றலோ, கணிக்கும் ஆற்றலோ வந்து விட்டது. சிலருக்கு மட்டும் தான் இந்த உயரிய வானியல் கலையைக் கற்பிக்க, கற்றுக் கொள்ள, கணிக்க, பலன்கள் கூற முதலான பல்லாற்றல்கள் இறையாசியுடன், பிதுர் ஆசிகளும், சோதிடம் பார்க்கும் மக்களின் ஆசியும் கிடைக்கும். எனவே எப்போதும் கவனம் மிகத் தேவை. யார் மனதையும் கூடும் ஆன வரை மனம் நோகடிக்கச் செய்யாமல் இருப்பது நன்மையைத் தரும்.
பலன்கள் கூறும் போது சோதிடத்தை நம்பாதவர்கள், இகழ்பவர்கள், பரிகசிப்பவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறை நம்பிக்கை இல்லாதோர், பக்தி இல்லதோர், நாத்திகவாதிகள், கண்ட இடங்களில் முறையின்றி சோதிடத்தை விளையாட்டாய், பரிகசிப்புடன் கேட்பவர்கள், உரிய தாம்பூல முறைப்படி கேட்காதோர், சாதகம் பார்க்கப் பெறுபவர் இல்லாத நிலையில் வேறு ஒருவரை வைத்துப் பார்த்தல் போன்றவர்கட்கு எப்போதுமே சோதிடம் பார்க்கக் கூடாது. இது போன்ற துாமைகளை விலக்குவது எப்போதும் நன்று. அவர்கள் சோதிடருக்குத் தீங்கு தருபவர்கள். எனவே விலக்குதல் நன்று.
அதே சமயத்தில் பார்க்கும் கிரக பீடை விலகும் விதி உடையவருக்கு மட்டுமே அந்த சோதிடர் தென்படுவார். மற்றவர்கட்கு காலம் அல்லது ஏதேனும் தடை போடும்.
சிலருக்கு சாதகம் பார்க்க சோதிடர் நினைக்கும் போதே பல வித சகுனத் தடைகள், அசம்பாவிதங்கள், சில அசௌகர்யங்களை அந்த சோதிடருக்குக் காட்டும் பட்சத்தில் நல்ல இறை வழிபாட்டுடன் இயன்ற அளவிற்கு முயற்சி செய்தும் தடை ஏற்படின் அந்த சாதகத்தை எடுத்துப் பார்க்காமல் இருப்பது சோதிடருக்கு மிகுந்த நன்மை என்பதையும் உணர வேண்டும்.
சில நேரங்களில் கிரகங்களின் சோதனையில் சாதகருக்கும், சோதிடருக்கும் பலன்கள் தருவதில் சில இடர்ப்பாடுகள், கால தாமதங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். அப்போதும் சோதிடருக்கு நிதானம் தேவை.
சிலருக்கு எப்போதும் லாட்டரி, இழப்பு, விபத்து ஆகியவை நேராது. உரிய காலம் மட்டுமே வந்து செல்லும். அவரவரின் கர்மாவிற்கு ஏற்பவே நாம் செய்யும் புண்ணியப் பலன்கட்கு ஏற்பவே கால பீடைகள், நன்மை ஏற்படும்.
சில ஆண்டுகளா? சில மாதங்களா? சில நாட்களா? ஒரு நாளா? குறிப்பிட்ட மணிநேரமா? நிமிடமா? நொடியா? ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் கர்ம பலன் வினையினை இறைவன் நமக்கு உணர்த்துவான். எனவே நன்மையை எப்போதும் இயன்ற அளவிற்கு செய்தல் நலம் தரும்.
எப்போதும் செலவினங்கள், அதிர்ஷ்டங்கள், விபத்துகள், கண்டங்கள் போன்ற நன்மை, தீமையான பலன்கள் நடைபெறாது. அவை அவற்றிற்கு உரிய சாதகரின் திசா, புத்தி, அந்தரம், சூட்சமம், அதி சூட்சமம், நாள், மணி, நிமிடம், நொடி என உட்பிரிவில் உள்ள கட்டுக்குள்ளே திசா நாதனின் கட்டுக்கடங்கியே ஒவ்வொருவரும் சுப அசுப பலன்களை வாரி வழங்குவார்கள்.
எனவே எதுவும் கிடைக்கவில்லை. அதிகமாய் கிடைத்தது என எதையும் நாம் நினைக்க வேண்டாம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. ஆழ்ந்த இறை பக்தியும், நவக்கிரக வசிய வழிபாடும் எப்போதும் நமக்கு உறுதுணையாய் இருக்கும். எனவேதான் இறைபக்தி மிக அவசியம்.
அப்போது கிரகங்கள் சில சிறிய விபத்துகளையோ, சிறிய இழப்புகளையோ இது போன்ற சிறிய சிரமங்களை கொடுத்து நம்மை விட்டு நம் இறை வழிபாட்டிற்கு நமக்கு ஆசி வழங்கிச் செல்லும். இவற்றை உணரத்தான் முடியும்.
மழை வருவது உறுதி. குடை எடுத்துச் செல்வதும் உறுதி. ஆனால் நாம் நனையாமல் இருப்பது இறை சித்தம். இங்கு கவனிக்க வேண்டியது எல்லோரையும் புயல், காற்று, மழை தாக்குவது இல்லை. குடை கொண்டு சென்றாலும், இல்லை என்றாலும் சரி. தாக்கும் விதி இருப்பின் இது சாத்தியம்.
கிரக பரிகாரங்கள், வழிபாடுகள் அப்படிப்பட்டோருக்கு பயணத்தைத் தடை செய்யும். அல்லது பயணிப்பின் தக்க பாதுகாப்பு அளிக்கும். இதைத்தான் சொன்னேன். உணரத்தான் முடியும்.
தெய்வங்கள், கிரகங்கள் மானுட உருவில் உதவி செய்யும் போது புரியும். இஷ்ட தேவதையை தெய்வத்தை இடைவிடாது வணங்குதல் வேண்டும். இறை நம்பிக்கையுடன் சோதிடம் பார்த்தல், உரிய முறையில் சோதிடர் கூறிய படி பரிகாரம் செய்தல் முதலானவற்றைச் சரியாய்ச் செய்தல் வேண்டும்.