ஜனன சாதகம் இல்லாதவர்கள், பொருள் ஏதேனும் தொலைந்தாலோ அல்லது காணாமல் போனாலோ அவர்களுக்கும் சாதகம் பார்க்கலாம். எவ்வாறெனில், இச்சம்பவம் நிகழ்ந்து அவர்கள் கேட்கும் அல்லது பேசும் நேரம் கணக்கினில் கொண்டு அந்த நேரத்தை இலக்னமாக அன்றைய சூரிய உதயம் கணக்கெடுத்து சனன ஜாதகம் குறிப்பதைப் போல் குறித்து கட்டங்களில் கிரக நிலைகளை அன்றைய கோட்சாரப்படி நிறுவினால் அதன் பலன்கள் துல்லியமான விளைவுகளைத் தரும். அதன் வழி பலன்களைக் கூறலாம்.
அங்கும் கிரகங்களின் ஆட்சி, உச்சம், பகை, நீசம், சேர்க்கை, பார்வை முதலான யாவற்றையும் கணக்கினில் கொண்டு பலன்களைக் குறிப்பிடுதல் வேண்டும்.
ஆரூடம் எனினும் பிரன்னம் எனினும் ஒன்று தான். இதில் பல வகைகள் உள்ளன.
வெற்றிலைப் பிரசன்னம், வெற்றிலைகளை அடுக்கி வைத்துக் கொண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் ஒற்றைக்கு, இரட்டைக்கு எனும் வழி பலன்களைக் கூறுதல், சோழிப்பிரசன்னம் சோழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பலன்களைக் கூறுதல், முறம் பிரசன்னம் முறத்தினை வைத்து இருவர் பிடித்து பலன்களினைக் கூறுதல், சகுனங்கள் அல்லது நிமித்தங்கள் வைத்துப் பிரசன்னம் கூறுதல், பலகறை ஆரூடம் – சோழிகள், சகாதேவர் ஆரூடம் 1 – 108 எண்ணிக்கையினில் ஒன்று சொல்லச் சொல்லி ஆரூடம் சொல்லுதல், நவக்கிரக ஆரூடம் சூரியன் முதல் கேது வரை உள்ள ஆரூடக் கட்டத்தினில் ஏதேனும் ஒரு கிரகத்தைத் தொடச் செய்து பலன் கூறுதல், நட்சத்திர ஆரூடம் அசுவினி முதல் இரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்லச் சொல்லி பலன்களைக்
குறிப்பிடுதல், பஞ்ச பட்சி ஆரூடம் அவரவர் ஜனன நட்சத்திரங்களின் பறவை வழி பலன்களைக் குறிப்பிடுதல், கூப பிரசன்னம் நீர்நிலை அறிதல் முதலானவை யாவும் அடங்கும். மேலும் பல வகைகள் இதில் உள்ளன. எனது சோதிடம் கட்டுரைகள் மற்றும் நுால்களில் பல குறிப்புகள் அமைந்துள்ளன.
ஆரூடம் சொல்லும் போது சொல்பவரின் முகபாவனைகள், உடல் நளினங்கள், வார்த்தைகள், அந்த நேரத்தில் சோதிடரின் நிலை, வீட்டின் சகுனக்குறிகள், இருவரும் அமரும் திசை முதலானவை யாவும் கணக்கினில் வைத்து பலன் குறிப்பிடல் வேண்டும். எந்த நிகழ்வு குறித்ததோ அதன் இலக்ன சாதகம் குறித்து கூற வேண்டும். எப்படி ஒரு சாதகம் குறிக்கின்றோமோ அதைப் போலவே சூரிய உதயம் கணக்கினில் கொண்டு இதையும் குறித்து அந்த கிரகங்களின் வழி பலன்களைக் குறிப்பிடல் வேண்டும்.
எப்போதும் சோதிடருக்கு நேர்மை, நாணயம், ஒழுக்கச்சிந்தனை, இறை பக்தி முதலானவை மிக மிக அவசியம். இவை இருப்பின் வாக்கு வன்மை தானாக அமையும். எனவே கவனமுடன் அனைத்து நிலையிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.
எந்த பிரசன்னம் பார்ப்பதாய் இருப்பினும் இறை பக்தி, வீடு துாய்மையாய் இருத்தல் மிக மிக அவசியம். இதனால் வந்த துன்பங்கள் விலகும். வருகின்ற துன்பங்கள் முதலானவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இது யாவர்க்கும் பார்க்கலாம். பிறந்த நேரம் தெரியவில்லை என்றாலம் கூட தற்கால கோட்சார ஆரூட சாதகத்தின் வழி அவரது நிலையை நாம் எளிதில் அறிந்து அவருக்கு நன்மை, தீமை முதலான
பலன்களைக் குறிப்பிட முடியும். அதே போல் வானியல் தொடர்ந்ததற்கும் கூட நம்மால் பலன்கள் கூற இயலும். எப்படி எனில் சோதிடத்தில் பல நுாற்புலமை மிக மிக அவசியம். ஏன் எனில் அக்காலத்தில் சோதிடம் தொடர்ந்த பாக்கள், நுால்கள் முதலானவை தமிழிலும், வடமொழியிலும் மிகுதியானவை உள்ளன.
மீன் - எங்கே சிக்கல் ஏற்படுகின்றது எனில் உதாரணமாக மீன் எனில் இது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். நீர் வாழ் உயிரி, நட்சத்திரம், இலக்னம், இராசி முதலான பல பொருளில் இடம், தொடர், சொல் பற்றி வரும் ஒரு அழகிய கலைச்சொல். இவை போல் பல சொற்கள் உள்ளன.
பழைய சோதிட பாவில் சேலதில் பொன்னவன் எனில் – இங்கே மீன ராசியில் குரு என்றும், அஸ்தம் மீன் எனில் அஸ்தம் நட்சத்திரம் என்றும், மைம்மீன் – சனி என்றும் மை போன்ற இருளை உடைய கோள் சனி என்றும், கைம்மீன் – கையின் வடிவமைப்பை உடைய அஸ்தம் நட்சத்திரம் எனும் பொருளிலும் உடு மீன் – நட்சத்திரங்கள் என்றும் மகரமீனில் சூரியன் நிற்கில் எனில் மகர ராசியில் சூரியன் எனவும், பல்வேறு விதங்களில் அழகிய கலைச்சொற்களில் அழகிய தமிழ்ப் பாக்களில் இடம் பெற்றுள்ளன.
எனவே கவனமுடன் இடம், பொருள், தொடர் அறிந்து பலன் குறிப்பிடுதல் வேண்டும். இவை போல் பல அழகிய கலைச்சொற்கள் கையாளப் பெற்றுள்ளன.
கால் – பாதம், பாகம், பங்கு, என பொருள் கொண்டு சோதிட வழி பலன் கூறுதல் வேண்டும். மொழிநுாற்புலமை அவசியம். மேலும் அவர்கள் யாவரும் கற்றறிந்தவர்கள் என்றும் கற்காதவர்கள் என்றும் எடை போட்டு விட முடியாது. ஓரளவிற்கு பிழை இல்லாமல் எழுத படிக்கத் தெரிந்தாலும் போதுமானதே. வானியல் அறிவு அமைப்பு உள்ளவர்கள் அதில் பிரகாசிப்பர். சிலருக்கு மட்டுமே சில பிராப்தம். சிலருக்கு கற்க, கற்பிக்க, அனைத்தும் பாண்டித்தியம் ஆக அமைந்து இருக்கும்.
வானியல் அறிவு என்பது இறைவன் நமக்குத் தரும் வரப்பிரசாதம். அது மட்டும் அல்லாமல் அவர் வழி வழி சோதிடராகவோ, வள்ளுவப் பரம்பரையினராகவோ, அல்லது புதியதாய் அப்பாரம்பரியத்தில் ஒருவருக்கு வந்ததாகவும் இருக்கலாம்.
இதற்கெல்லாம் காரணம் பூர்வ புண்ணியப் பலனே! நவக்கிரகங்களின், இறைவனின் ஆசியே! வேறொன்றும் அல்ல. மேலும் கற்கின்ற போதும் அவரவர் நுாற்புலமை அறிவைப் பொறுத்து அவை எழுதப் பெற்றுள்ளன. எனவே பாண்டித்தியம் இருப்பின் மிகவும் நன்மை.
ஒருவர் தமிழ், வடமொழி, சோதிடர், வைத்தியர், அஞ்சல் அலுவலகர், பெட்டிக்கடைக்காரர் யாராக வேண்டுமானாலும் இருப்பவர்க்கு சோதிடப்புலமை அமைந்து இருக்கும். எனவே அவரவர் கல்வி அறிவு தொடர்ந்த நிலையில் சோதிட நுால்கள் எழுதுவதிலும் பலன்கள் கூறுவதிலும் புலமை அமைந்துள்ளன. அவர்கட்கு அவை தெரியாத பட்சத்தில் கற்பதில், பலன்கள் கூறுவதில் சிக்கல்கள் அமைகின்றன.
இதனால் தான் சோதிடர்களில் ஒருமித்த கருத்து அமைவதில்லை. அதற்கு மேலும் இறை ஆசியினால் வாக்கு வன்மை பொறுத்து பலிதம் அமைவதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. இவ்விதம் பிரசன்ன பலன்கள் பார்க்க வேண்டும். கணிதம் கணிப்பதிலும் சரியான நிலையில் கணிக்கவில்லை எனில் தவறான பலன்களைத் தரும்.எனவே சோதிடருக்கு கணித அறிவு மிக மிக அவசியம்.!