ஒருவரது சாதகத்தின் படி திசாபுத்தி பலன்கள் பார்க்கின்ற போது, நடப்பில் நிகழும் திசை, புத்தி, அந்தரம், சூக்குமம், அதி சூக்குமம், நேரம், நாள், நிமிடம், ஓரை அதற்கும் குறைந்த நேரங்கள் கூட நன்மையை அல்லது தீமையைச் செய்யும்.
எனவே அவசியம் திசை, புத்தி, அந்தரம், நாள் கணிதமும் அதனுடன் இன்றைய கோட்சார கிரக கணிதமும் சேர்த்து இணைத்துப் பார்த்துப் பலன் நிகழுமா? நிகழாதா? என ஆராய்ந்து யோசித்து பின்னரே கூறுதல் வேண்டும்.
ஏனெனில், சில நேரங்களில் ஜனன கோட்சாரம் பலித நிலையில் இருக்கும். ஆனால் கோட்சாரம் உதவி தரும் வகையில் அமையவில்லை எனில் பலன்கள் எதுவும் நிகழாது. அதுபோல் தற்கால கோட்சாரம் பலித நிலையில் இருந்தும், நம் திசை புத்தி ஜனன கோட்சார சாதகம் தகுந்த நிலையில் இல்லாமல் இருந்தால் எந்தவிதப் பலனும் நிகழாது. எனவே, எப்போதும் இரண்டும் தகுதியான பலன் தரும் நிலையில் உள்ளதா? என்பதை ஆராய்ந்து பலன்களைக் குறிப்பிட வேண்டும். ஜனன சாதகம் இல்லாதவர்க்கு பிரசன்ன கோட்சாரத்தின் வழி பலன் கூறுதல் வேண்டும்.
சில நேரங்களில் கிரகங்கள் சோதிடரைச் சோதிக்கும் பொருட்டு, நாள், நிமிடம், நேரம் முதலானவற்றில் இறைவன் அதாவது நவக்கிரகங்கள் சோதிப்பதுண்டு. அனைத்தும் சரியாய் பொருந்தி அமைந்த பட்சத்தில் சில கால தாமதங்களை ஏற்படுத்தும். ஏனெனில், சோதனைகள் பல சோதிடருக்கும் தருவதுண்டு. ஆனாலும் காலதாமதம் ஏற்படினும் நிச்சயம் நிகழும். இதனால் சாமான்ய சாதகம் பார்த்தவர்கள் சில நேரம் தடுமாறுதல் உண்டு. மேலும் சோதிடரைக் குறை கூறுவதும் உண்டு. இதையும் அவர்கள் பொருட்படுத்தக் கூடாது.
எல்லாம் கட்டத்தில் சரியாக இருந்தும், எனக்கு எதுவும் நிகழவில்லை என பிதற்றல் கூடாது. பரிகாரம், பலன், பூசை மேற்கொள்ளும் போதும், நாம் இதனை கருத்தினில், கணக்கினில் கொள்ள வேண்டும்.
எந்த விதக் கோட்சாரமாயினும் ஜனன கோட்சாரம் என்பது பிறப்பு சாதகம். தற்கால கோட்சாரம் இன்றைய கிரக நிலை. இரண்டையும் எப்போதும் சரியாகக் கவனித்துப் பார்த்துப் பலன் கூறுதல் வேண்டும்.
* கோட்சாரக் கிரகங்கள் அனைத்திலும் ஆட்சி, உச்சம், நீசம், பகை முதலான யாவற்றையும் கணக்கினில் கொள்ள வேண்டும்.
* அனைத்துப் பலன்கள் பார்க்கின்ற போதும், வானியல், கால்நடை, விண்ணியல் தொடர்ந்த அனைத்தும் உட்பட யாவற்றிற்கும் தற்காலக் கிரக கோட்சாரத்தின் படி பலன் கூற முடியும்.
* அவற்றிற்கும் இந்தக் கோட்சாரமே தான். அனைத்திலும் கிரகங்களின் அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துப் பலன் கூற வேண்டும்.
* சனி உச்சம், அல்லது ஆட்சி வீடுகள், நட்பு வீடுகள் எனில் மிகுந்த நன்மை. நேர்மை, நாணயம், ஒழுங்கு முறை முதலியன எதிலும் காணப்படும்.
* அதே சமயத்தில் சில கால தாமதங்கள், முறைப்படியான அரசு அங்கீகாரங்கள் ஆகியவை எடுத்துக் கொள்ள கால தாமதம் ஆகும்.
* கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றையும், கனிமப்பொருட்கள் தொடர்புடைய யாவையும் கூட சனியின் நிலையினால் அறியலாம்.
* மூத்தோர், பூர்வீக உறவினர், விடுபட்ட தலைமுறை உறவினர் வகையையும் நாம் இவர் வழி ஆதாயமா? இல்லையா? என்பதனை நாம் அறியலாம்.
* ஆனாலும், மிகுந்த நன்மை விளையும். மழை, பயிர் நிலை, கால்நடைகள், நிலைத்த சொத்து பத்துக்கள் முதலான யாவற்றிலும் நன்மை அமையும்.
* இதைப் போல மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
* குரு ஆட்சி, உச்சம், நட்பு, நல்ல நிலையில் இருப்பின், தங்கத்தின் விலை, குருமார்கள், வணக்கத்திற்குரியோர் உள்ளிட்ட நிலையினை குருவின் வழி நாம் அறிந்து கொள்ளலாம்.
* ஆலயங்களில் பூசை, புனஸ்காரங்கள் உள்ளிட்ட யாவும் மிக மிகச் சிறப்பாய் இனிதே நடைபெறும். நாடு சுபிட்ச நிலையில் தக்க மழைவளம், நற்பெயர், மதிப்புடன் இருக்கும். மதிப்பிற்குரியோர், மதிக்கப் பெறுபவர் சிறப்பிக்கப் பெறுவார்கள்.
இவ்விதம் ஒவ்வொரு கரகங்களின் அசைவிற்கும் மிக மிக அற்புதமான பலன்கள் உள்ளன. அவ்விதம் வழங்கும் போது, நாம் எப்போதும் அந்தக் கோள்கள் நிற்கின்ற நட்சத்திரங்களின் கால்களை நினைவினில் கொள்ள வேண்டும்.
கால் என்பதற்கு பாதம் என்பது ஒரு பொருள். மிகுதியான நுாலறிவு மிக மிக அவசியம். கோள்கள் நட்சத்திரக் கால்களின் வழியே அன்றாடம் விண்ணில் பயணம் செய்து வருகின்றது. எனவே அதன் தன்மைக்கு ஏற்பவேப் பலன்களும் அமையும். இவ்விதம் ஒவ்வொரு கோளும், 27 நட்சத்திரங்களிலும் விண்ணில் 12 இராசிக் கட்டங்களைக் கடந்து சென்று நமக்கு அதன் வழி பலன் தருகின்றது.
எனவேதான், இவற்றை மாத கோள்கள், வருடக் கோள்கள் என்ற அடிப்படையில் இதனைப் பிரித்துள்ளனர். சந்திரன் மட்டுமே தினமும் பயணிக்கின்ற கோள் ஆதலின் தினசரிக்கோள் என்றனர்.
தங்கத்தின் விலையில் அழகிய பல்வேறு வடிவமைப்புக்கள், உள்ளிட்ட வகையாபரணங்கள், விலையில் நாளுக்கு நாள் விலை ஏற்றம், அந்தணர்கட்கு தனி மரியாதை, உயரியோர் கௌரவிக்கப் பெறுதல், வாக்கு கற்பிக்கும் தொழிலில் பல்வேறு வளர்ச்சி, நிலை, மாற்றங்கள் ஆகியன யாவும் மிக மிகச் சிறப்பாய் நிகழும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் அவரவர்களின் காரகத்துவத்தின் படி பல்வேறு பலன்களினையும் மிக மிகத் துல்லியமாய்க் கூற முடியும். ஆழ்ந்த இறை நம்பிக்கை, பக்தி, ஒழுக்கம், வாக்குப்பலிதம், நற்சிந்தனை இருப்பின் இதனைச் சோதிடர்கள் உணரலாம்.
எனவேதான் சனனம், தற்காலம் ஆகிய இரண்டின் கோட்சாரமும் கணக்கினில் பலன் குறிப்பிடுவதற்கு எடுத்துக் கொள்ளப் பெறுகின்றது.