கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்
பிறப்பு கோட்சாரம், தற்கால கோட்சாரம் இவ்விரண்டினையும் இணைத்துப் பார்த்து இவற்றுடன் திசை, புத்தி, பலன்களையும் இணைத்துப் பலன் காண வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு கிரகமும் அந்தச் சாதகருக்குப் பலன் தரும் அமைப்பினில் உள்ளதா? என்பதனை அலசி ஆராய்ந்து, அதன் பின்னரே நற்பலன், தீய பலன் எனத் தெரிவிக்க வேண்டும். முதலில் கோட்சார பலன்களை அறிவோம். பின்னர் ஒரு உதாரண சாதகத்துடன் இணைத்து பலன் அறிதல் பற்றிக் காண்போம்.
கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்
வான மண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகின்றது. இதனை மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு இராசிகட்கும் முப்பது பாகைகள் வீதம் பிரிக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு இராசியும் இரண்டே கால் நட்சத்திரமும், ஒன்பது பாதங்களும் ஆக இருபத்தியேழு நட்சத்திரங்களும், 108 பாதங்களும் பன்னிரண்டு இராசிகளும் ஆக பெற்று விளங்குகின்றது.
விண்ணில் பயணம் செய்யும் நவ கோள்களைப் பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.
1. கோட்சாரம்
2. நட்சத்திரங்களின் அதிபதி
3. பாவகங்கள்
4. நவகோள்களின் கோட்சார பயண காலம்
5. கோட்சார சுப அசுப பலன் தரும் இடங்கள்
6. கோட்சாரப் பலன்கள் - நற்பலன்கள் - தீய பலன்கள் பட்டியல்
7. நவீன கால சோதிடம் - கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை (K.P.System)
7.1. சான்று : மகரம் இலக்கினம்
7.2. சான்று : மேடம் இலக்கினம்
கோட்சாரம் - கோள் + சாரம்
விண்ணில் கோள்கள் செல்லும் ஒழுங்கு முறை பயணமே கோட்சாரம் எனப்படும். இவ்விதம் நவகோள்களும் விண்ணில் எப்பொழுதும் சஞ்சாரம் செய்கின்றன. இதனையே கோட்சாரம் என்கிறோம். இவ்விதம் சஞ்சாரம் செய்யும் போது அவரவரின் பிறந்த சாதகத்தில் நின்ற அன்றைய கோட்சார கிரக நிலையின் படியும், தற்கால கோட்சார கிரக நிலையின் படியும் கோள்கள் சுப, அசுப பலன்களைத் தருகின்றனர்.
நட்சத்திரங்களின் அதிபதி
இருபத்தியேழு நட்சத்திரங்கள் - சாரம் (கோள்கள்)
அசுவிணி, மகம், மூலம் - கேது
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்
உரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - அங்காரகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு
பூசம், அனுடம், உத்திரட்டாதி - சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்
பாவகங்கள்
இலக்கின பாவகம், தன பாவகம், சகோதர பாவகம், மாதுரு பாவகம், புத்திர பாவகம், உருண உரோக சத்துரு கடன் பாவகம், களத்திர பாவகம், ஆயுள் பாவகம், பிதுர் பாவகம், கரும பாவகம், இலாப பாவகம், விரைய பாவகம் - அயன சயன மோட்ச ஸ்தானம். ஆக பன்னிரண்டு பாவகங்களும் இன்னும் வேறு சில பெயர்களாலும் அழைக்கப் பெறுகின்றன. ஆக இருபத்தியேழு நட்சத்திரங்களும் கேது முதல் புதன் வரையில் கோள்களின் சாரம் பெறுகின்றன. கோள்கள் தாமாக ஒளிர்வதில்லை. ஆதலால் நட்சத்திரங்களினாலேயே ஒளிர்கின்றன. ஆதலினால் பலன்களையும் அவ்விதமே பெற்றுத் தருகின்றனர். அவ்விதம் தரும் போது ஒன்று முதல் பன்னிரண்டு பாவகங்கட்கு ஏற்ப அசுப பலன்களைத் தருகின்றனர்.
நவ கோள்களின் கோட்சார பயணக் காலம்
நவ கோள்களில் ஆண்டுக் கோள்களான குரு ஒரு வருடமும், சனி இரண்டரை வருடமும், இராகு, கேது ஒன்றரை வருடமும், மாத கோள்களான சூரியன், புதன், சுக்கிரன் ஒரு மாதமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், தின கோளான சந்திரன் இரண்டே கால் நாள் வீதமும் ஒவ்வொரு இராசியிலும், இருபத்தியேழு நட்சத்திரங்களிலும் ஆக சஞ்சாரம் செய்து வருகின்றனர்.
கோட்சார சுப அசுப பலன் தரும் இடங்கள்
சுப கோள்களான குரு, சுக்கிரன், வளர் பிறைச் சந்திரன், சுபர்களுடன் கூடிய புதன் ஆகிய இவர்கள் சுப பலன்களை சுப இடங்களில் தருவர். அசுப கோள்களான சனி, செவ்வாய், இராகு, கேது, சூரியன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நற்பலனைத் தருவர். மற்ற இடங்களில் தீமையான பலன்களைத் தருவர். 3, 6, 10, 11 இவ்விடங்களில் வளர்பிறைச் சந்திரன் சுபர்களுடன் கூடிய புதன் தீமையான பலனைத் தருவர். 6, 8, 12 ஆம் இடங்களில் சுபர்கள் நிற்பின் அசுப பலனைத் தருவர். மற்ற இடங்களில் சுபர்கள் அவரவர் சாதகத்திற்கு ஏற்ப, பாவகங்களுக்கு ஏற்ப சுப அசுப பலனைத் தருவர். சுப கோள்கள் 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அந்தந்த பாவகங்கட்கு ஏற்ப சுப பலனைத் தருவார்கள். பாவ கோள்கள் நிற்பின் அசுப பலனைத் தருவர்.
பழங்காலத்தில் கோட்சாரம் பலன் பற்றி பல நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றினுள் சில மாறுபாடுகள் ஆனது காணப் பெறுகின்றது.
1. பெ.சோ.சி.கோ - பெரிய சோதிட சில்லரைக்கோவை
2. சோ.சி.அ - சோதிட சிகாமணி அனுபந்தம்
3. ஊ.இ.சி - ஊர்வசி இரசவாத சிட்கா
4. அ.சா.இ - அனுபோக சாதக இரகசியம்
5. கோ.ப.வி - கோசார பலன் விளக்கம்
6. ந.அ.சோ - நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் - முதற்பாகம்
1. பெ.சோ.சி.கோ, பக். 271 - 272.
2. சோ.சி.அ, பக். 95-96.
3. ஊ.இ.சி, பக். 196-197.
4. அ.சா.இ. பக். 20-24.
5. கோ.ப, பக். 1-36.
6. ந.அ. சோ - முதற்பாகம், ப.87.
பெரிய சோதிட சில்லரைக்கோவை முதலான சோதிட நூல்களின் கோட்சார பலன்கள்
நற்பலன்கள், தீய பலன்கள் பட்டியலாக ஆய்வு நோக்கினில் தரப் பெற்றுள்ளன. அக்கால கட்டத்தில் சந்திரனை மையமாக வைத்து கோட்சார பலன்களானது குறிப்பிடப் பெற்றது. அவற்றனுள் சில சரியானவையாகவும், சில தவறானவையாகவும் இருக்கின்றன. காரணம் சந்திரனை மையப்படுத்துவதே. அனைத்துச் செய்திகளும் ஆய்வு நோக்கினில் அணுகிடல் வேண்டும்.
சான்றாக சூரியனுக்கு நற்பலன் கூறுமிடத்து சோதிட சிகாமணி அனுபந்தம் 3, 6, 10, 11, அனுபோக சாதக இரகசியம், கோட்சார பலன் விளக்கம், நந்தி தேவர் முதல் பாகம், ஒரு மித்த கருத்தும், ஊர்வசி இரசவாத சிட்கா 2, 12 என்ற இடங்களையும், பெரிய சோதிட சில்லரைக் கோவையினில் 2, 3, 6, 10, 11 என்ற இடங்களையும் குறிப்பிடுகின்றது.
திசைகள், சுப திசை, அசுப திசை என எந்த ஒரு கிரகத்தையும் நாம் பொதுவாகக் கூறி விட முடியாது. அவரவர் னன சாதகத்தின் வழியே அவரது பலன்கள் அமையும். எனவே அதை வைத்துத் தான் அந்தக் கிரகங்களைத் தீர்மானிக்க முடியும். எனவே நவ கோள்களும், 27 நட்சத்திரங்களும், 12 இலக்கினங்களும் யாவும் அவரவர்க்கு அமைந்த படி தான் எனவே எதையும் ஆராய்ந்து அலசாமல் தவறாகக் கூறி யாரையும் அச்சுறுத்துதல் கூடாது என்பதை எப்போதும் நினைவினில் கொள்ள வேண்டும்.