ஒருவரது சாதகத்தினைப் பார்த்து ஆராய்ந்து சோதிட விதிகளின் படி கணித்தும், சிந்தித்தும் பலன் கூற வேண்டும். யோசிக்காமல் பலன் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவரது ஜனனச் சாதகத்தில் அதாவது பிறப்பு சாதகத்தில் இராசி கட்டத்தில் உள்ள கிரக நிலைகளையும், அம்சத்தில் அவை எந்த பாதத்தில் உள்ளன? எந்த வீடுகள், என்பதனையும் முதலில் கவனத்தினில் கொண்டு தான் பலன் கூற வேண்டும். மேலும், ஆட்சி, உச்சம், பகை, நீசம், சமம் இன்ன பிறவற்றையும் கவனத்தினில் கொள்ள வேண்டும். மேலும் எப்போதும் தற்காலக் கோசாரம், சாதகருடைய திசை, புத்தி பலன் இன்ன பிறவற்றையும் கவனத்தினில் கொண்டு பலன் சொல்ல வேண்டும்.
கணியன், சோதிடன், குறி சொல்பவன் மேலும் வேறு வேறு பெயர்களிலும் இவர்களை அழைத்துள்ளனர். கணிப்பது யார் வேண்டுமானாலும் கணிக்கலாம். கணிதக்கலையில் பிழை இல்லாமல் கணிக்க வேண்டும். ஆனால் பலன் கூறும்போது, வெகு நிதானத்துடன் கூறுதல் வெண்டும். ஏன் எனில் சாதகருக்கும் வாக்கு பிரசித்தம் பலிதம் இருந்தால் தான் எதுவும் சாத்தியம். மேலும் எப்போதும் நேர்மை, சத்தியம், இறை வழிபாடு முதலிய நற்குணங்கள் நிரம்பி இருத்தல் மிக மிக அவசியம். பலன் கூறுபவருக்கு மிக மிக அவசியம். பல நேரங்களில் இது சோதிடரைக் காக்கும் கவசம்.
சிலர் தட்சணையின்றிச் சோதிடம் பார்த்துக் கொள்வர். அது மிக மிகத் தவறுடையது. தட்சணை மிக மிக அவசியம். நியாயமான தட்சணைகள் பெற வேண்டும். அக்காலத்தில் சோதிடர்களுக்கென நிலம், உணவு, உரியச் சன்மானம், விருதுகள் வழங்கப் பெற்றன என்பதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், சங்க இலக்கியம் இன்ன பிறவும் சான்றாதாரம் பகர்கின்றது. அவர்கட்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர்கள் கேட்காமலேயே அவர்களின் தேவை கருதி உணவு, உறைவிடம், நிலம், தானியம் இன்ன பிறவும் பெருமதிப்புடன் வழங்கப்பெற்றன.
அதே சமயத்தில், சோதிடர் தான் பெறுகின்ற தட்சணையில் நான்கில் ஒரு பாகம் இறைவனுக்கும், இரண்டாம் பாகம் அநாதைக்கும், மூன்றாம் பாகம் கால்நடைகட்கும், நான்காம் பாகம் தனக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை யாவும் 32 அறத்தின் வழி அமையும். எனவே பரிகாரங்கள் சோதிடர் சொல்கின்ற போது சாதகரின் வசதி நிலையைக் கருத்தினில் கொண்டுதான் பலன் கூற வேண்டும். வசதி இல்லாதவராய் ஏழை எளியோராய் இருக்கும் பட்சத்தில் சோதிடர் தாமாகவே தன்னால் இயன்ற அளவு இலவசமாகவே அவருக்குச் சோதிட ஆலோசனை உதவி செய்பவராய் இருக்க வேண்டும். அந்த மன நிலையினையும், தயாள குணமும் கொண்டு சோதிடர் இருத்தல் மிக மிக அவசியம். பரிகாரங்களைச் சோதிடர் கூறிய படி முறையாய் செய்தல் வேண்டும்.
முக்கியமாய் பொருளாசைக் கொண்டு அவர்கள் மன நிலை விருப்பம் போல் பலன் கூறக் கூடாது. உள்ளதை உள்ளபடியே உண்மையாய், நேர்மையாய் நாசுக்காய் இலை மறைக் காய் மறை போல் அசுபப் பலன்களைத் தெரிவிக்க வேண்டும். நற்பலன்களை நல்ல மகிழ்வுடன் மிக அழகாய்ச் சொல்லலாம். மேலும் பலன் கேட்பவரின் மனநிலை எப்போதும் அறிந்து கவனத்தில் பலன் சொல்ல
வேண்டும். ஏன் எனில் முரடனாக இருந்தால் சோதிடனுக்கு ஆபத்து.
அதே சமயத்தில் அப்படிப்பட்டவர்களையும் நாம் வெறுக்கக் கூடாது. ஏன் எனில் எந்த ஒரு கிரகமும் சோதிடனும் பல்வேறு வடிவில் திருவிளையாடல் செய்யும். கிரகத்தைப் புரிந்து கொண்டவர்கள் அமைதியாய் அக்கிரகத்தை எப்பொழுதும் வழிபட்டு நிற்பின் வழி விட்டு விலகி ஆசீர்வாதம் செய்யும். அனுபவங்கள் இந்தக் கலையில் நமக்கு நல்ல பெயரினை அதாவது சோதிடருக்குத் தரும்.
காலம் தான் பதில் சொல்லும்.நாம் உண்மையான சோதிடரா? இல்லை பணம் முதலியவற்றிற்கு விலை போனவரா? என்று எனவே பல காலம் காத்திருக்க அந்த நற்பெயர்கள் உண்மையான சோதிடரைத் தேடித் தானாகவே அமையும்.
பார்வை பலன் ஜனன கோசாரம், தற்கால கோசாரம் இரண்டையும் ஒப்பிட்டு, பின்னர் அவற்றின் பார்வையையும் ஒப்பிட்டுத் தான் நிதானித்து பலன் கூற வேண்டும். பகை கால்கள், அசுபர் சேர்க்கை முதலானவை நன்மை செய்யாது. அதுவும் கூட ஆட்சி, உச்சமா? முதலானவைகளை ஆராய்ந்து யோசித்துப் பலன் கூற வேண்டும். சுயத் திசை சுயப் புத்தி எனில் ஸ்தம்பித்த நிலை கவனம் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் எந்த ஒரு திசையும் துவங்குகின்ற போது எவ்விதம் செல்கின்றதோ? அதையும் கவனிக்க வேண்டும். நன்மையா? தீமையா? அதே வேகத்திலேயே செல்லும். எது நடந்தாலும் நேர்மையின் வழி நிற்பவர்க்குப் பலத்த சோதனைகள் வந்தாலும் இறுதியில் நன்மையும், வெற்றியும் அமையும். பலன் கூறுவதில் வயதினை முக்கியமாய் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூட்சுமம் அறிந்து அதற்கேற்ப பலன் சொல்ல வேண்டும். உதாரணமாக ஒருவரது சாதகத்தில் ஏழாமிடத்தை குரு பார்வையிடுகின்றது எனில் அவர் எந்த வீட்டாதிபத்யம் பெற்றுள்ளார்? ஏன் எனில் சூரியன், சந்திரன் தவிர ஏனைய கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் எனவே அந்த வீடு சாதகமா? பாதகமா? சரமா? ஸ்திரமா? உபயமா? முதலான பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டும்.
சிலருக்கு யாவும் நற்பலன்கள் கட்டத்திலிருந்தும் ஒன்றுமே நடைபெறாது? சிலருக்குப் பரிகாரம் எது செய்தாலும் பலிதம் இல்லையே? என்பார்கள். பலரும் கேட்கும் கேள்வி பார்த்தால் திருமணம், குழந்தை, வீடு, தொழில், வருமானம், சிலருக்கு அரசியல் தொடர்ந்த இன்ன பிற. அவரவர் தேவையை அவரவர் கேட்பர். சுருக்கமாகச் சொன்னால் நமக்கு விதிக்கப்பட்ட தேவைகளை நாம் கேட்போம்.
அதே போல் கிரகம் நீசம் என்று நினைத்து விடக்கூடாது. உச்சம் என்றும் வேறு காரணம் கொண்டும் பலன்களை வாயினில் மகிழ்வாய் அள்ளி சொல்லி விடக்கூடாது. ஏன் என்றால் அங்கே எல்லா பலன்களும் மாறி மாறி நடைபெறும். எனவே எப்போதும் நிதானம் தேவை. மேலும் ஒருவருக்குப் பலன் கூறும் போது நன்மையாய் அது முடிந்து விட்டால் பரவாயில்லை. அசுபமானது ஏற்படின் சோதிடரைக் கறித்துக் கொட்டுவார். உண்மையில் சோதிடரும் ஒரு சாமானியமானவரே. நல்லொழுக்கம், இறை பலன் முதலியவற்றினால் அவருக்கு நன்மை ஏற்படும்.