சப்த கிழமைகளான ஞாயிறு முதலாக சனி ஈறாக உள்ளவைகளின் சிறப்புப் பெயர்களைப் பார்த்தோம். வாரம் என்பது 7 நாட்களைக் குறிக்கும். அதே சமயத்தில், ஒவ்வொரு நாளுக்கும் வரும் சிறப்புப் பெயர் வாரம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பஞ்ச அங்கங்களுள் ஒன்றான வாரம், திதி, நட்சத்திரம், யோகம், காரணம் ஆகிய இவைகளுள் வாரம் பற்றிய செய்திகளை நம் முன்னோர்கள் கிழமைகட்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து, எந்தெந்தக் கிழமைகளில், எந்தச் செயல் செய்தால், எந்தப் பலன் கிட்டும் என்பது பற்றியும் பழங்காலத்தே பாடலாகப் பாடியுள்ளார்கள். அவை அன்றும், இன்றும் நடைமுறையில் உள்ளன.
வாரம் என்பது 7 கிழமைகளைக் குறிக்கும் பொதுப்பெயராயும், ஒவ்வொரு கிழமையையும் குறிக்கும் பெயராயும் இந்த ஒரு சொல் விளங்குகின்றது.
ஒவ்வொரு கிழமைகட்கும் ஒரு விசேட பலன் உண்டு. ஒவ்வொருவரும் பிறந்த, ஒவ்வொரு கிழமைகட்கும் பலன்கள் உண்டு. அந்த ஒவ்வொரு நாளின் பகல், இரவு காலங்களின் அந்த நேரத்திற்கும் உரிய பலன்கள் உண்டு.
பகலில் பிறந்தவர்களுக்கு பகல் நேரம், இரவில் பிறந்தவர்களுக்கு இரவு நேரம் நன்மையைத் தருவதாயும் அவர்கட்கு சிறப்பாய் அமையும். மனிதர்கள், நாய், பேய், தெய்வம் முகஸ்துதிக்கு மயங்கும் என்பர். எல்லாவற்றிற்கும் வசியம் அன்பாய் ஈர்த்தல் மிக மிக அவசியம்.எனவே அந்தந்தக் கிழமைகட்கு உரிய இறைவனை நாம் வணங்குவதும் மிகுந்த நன்மையைத் தரும்.
ஞாயிற்றுக் கிழமையில் உத்தியோகம் செய்வதற்கும், திங்கட்கிழமையில் விதை விதைக்கவும், உத்தமம் என்றும், செவ்வாய்க்கிழமையில் போர் செய்ய நன்மை என்றும், புதன் கிழமையில் வித்தியாரம்பம் செய்ய உத்தமம் என்றும், வியாழக்கிழமையில் திருமணம் செய்ய உத்தமம் என்றும், வௌ்ளிக்கிழமையில் மயிர் கழிக்க உத்தமம் என்றும், சனிக்கிழமையில் தவஞ் செய்வதற்கும் உத்தமம் என்றும் பழம் சோதிட நுால்கள் தெரிவிக்கின்றன.
இந்த 7 வாரத்திலும் சொன்ன படி செயல்கள் யாவும் முறைப்படி செய்தால் எடுத்த காரியம் அனைத்தும் மானிடற்கு வெற்றியாய் முடியும் என்றும் தெரிவிக்கின்றது. முறைப்படி பயன்படுத்தினால் பயன் பெறலாம்.
உற்றார், உறவினர், முறையார், நண்பர், சுற்றத்தாரிடத்தும் புதிதாய் விருந்துண்பதற்குரிய நாட்களாக வௌ்ளி, சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகள் இருக்கின்றன. இந்நான்கினையும் பயன்படுத்தினால் எப்போதும் உடலும், உயிரும் போல நேசமும், பாசமும், நட்பும் உடையதாய் இருக்கும்.
வியாழன், ஞாயிறு, செவ்வாய் ஆகிய நாட்களில் விருந்து மேற்கொண்டால், வியாழன் மன வெறுப்பாகி விரோதமாய் இருப்பார்கள் என்றும், ஞாயிறு தீராத பகை ஏற்படும் என்றும், செவ்வாய் பலவிதமான பகை, வீண் வம்பு வழக்குகள் எல்லாம் நேரிட்டுக் கொடுமையும், துன்பமும் ஏற்படும்.
சாதகன் பிறந்த சென்ம வாரம், சென்ம திதி, சென்ம நட்சத்திரங்களில் எண்ணெய் குளியல் செய்தலும், திருமணம் செய்வதும், சிரார்த்தம் திதி கொடுக்கவும் கூடாது என்றும், வியாதி வந்த போது மருந்து உண்ணவும் கூடாது என்றும், முடித்திருத்தம் செய்து கொள்ளவும் கூடாது என்றும், மனையாளுடன் சேரவுமாகாது என்றும், குறிப்பிட்டு அந்த நாட்களில் வியாபாரம் செய்வதற்கும், பூமியில் உழுது விதை விதைப்பதற்கும், விருந்து உண்பதற்கும், தான தருமம் செய்வதற்கும், ஆடை, ஆபரணம் அணிவதற்கும் மிகவும் உத்தமமான நாள் என்றும் தெரிவிக்கின்றது.
மனிதர்கள் ஏதேனும் ஒரு காரியம் செய்தால் பல வித துன்பமும், துயரமும் அடைவர். ஆதலின், அவரவர்கள் பிறந்த சென்ம நட்சத்திரம், சென்ம திதி, சென்ம வாரம் முதலானவைகளை மறவாமல் நினைவினில் நிறுத்தி வைத்துக் கொள்வது நலம் தரும் என்றும் குறிப்பிடுகின்றது.
“ஆள் பாதி ஆடை பாதி” என்பர் ஒவ்வொருவரின் தோற்றத்திற்கும் ஆடையும் ஒரு வித காரணம். அத்தகைய ஆடையினை புதிய ஆடையினை அணியும் நாட்கள் நல்ல நாளாய் இருந்தால் அனைத்து வித நற்பலனுமாய் அமையும். தீய நாளாய் இருந்தால் தீய பலன்கள் ஏற்படும் என்றும், அத்தகைய ஆடை அணிய ஏற்ற, ஆகாத நாட்களாக சனிக்கிழமையில் உடுத்தினால் அழுக்காகும் என்றும், ஞாயிற்றுக்கிழமையில் உடுத்தினால் துன்பம் நேரிடும் என்றும், திங்கட்கிழமையில் உடுத்தினால், எப்போதும் தண்ணீரில் நனைந்து கொண்டே இருக்கும் என்றும், புதன் கிழமையில் உடுத்தினால் சீக்கிரத்தில் கிழிந்து கந்தையாகும் என்றும், செவ்வாய்க்கிழமையில் உடுத்தினால் மன விசாரமுடன் அச்சமாய் இருக்கும் என்றும், ஆதலினால் சனி, ஞாயிறு, திங்கள், புதன், செவ்வாய் ஆகிய நாட்களில் புத்தாடை அணியக்கூடாது என்றும், வியாழக்கிழமையில் புதிய ஆடை உடுத்தினால் எப்பொழுதும் மன மகிழ்வாய் இருக்கும் படியான பல வித நன்மையும் உண்டாகும் என்றும், வௌ்ளிக்கிழமையில் புதிய ஆடை உடுத்தினால் இலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்றும், வியாழன், வௌ்ளியே புத்தாடை அணிய ஏற்ற நாட்கள் என்பதையும் நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்கள் பற்றிய பல செய்திகள் உள்ளன. அவற்றுள், நாம் அடிப்படைச் செய்திகள் பலவற்றை அறிந்து கொள்ள வேண்டும். நாள் - நட்சத்திரம் என்பதையும் குறிக்கும்.
நட்சத்திரங்கள்
விண்ணில் காணப்படும் நட்சத்திரங்கள் பல அவை எப்போதும் பயணித்துக் கொண்டே உள்ளன. சோதிடத்தினுள் கணக்கினில் பலன்கள் தருபவை 28. அவை அசுவினி முதலான ரேவதி முடிய உள்ளவை. மேலும் இவற்றின் விரிவு பற்றி அறிய பல பழம் சோதிட நுால்கள் துணை நிற்கின்றன.
நட்சத்திரங்கள், நாள், நட்சத்திரம் பற்றி தமிழ் அகராதிகள், நிகண்டுகள், பல்வேறு சோதிட நுால்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கும் அசுவினி முதலான நட்சத்திரங்களின் பெயர்களைப் பற்றிய பதிவுகள் பல உள்ளன.
இராசி மண்டலம் மொத்தம் 360 பாகைகள் கொண்டது. அவற்றுள் ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலைகள் கொண்டதாகவும், ஒவ்வோர் இராசி வீட்டிற்கும் இரண்டே கால் நட்சத்திரம் கொண்டும், அதாவது ஒன்பது பாதம் கொண்டும் ஆக 12 இராசிகட்கும் 108 பாதங்களாகவும் அமைந்துள்ளன.
அபிசித்து அபிஜித் எனும் நட்சத்திரம்
உத்திராடம் 3, 4, திருவோணம் 1, 2 பாதங்கள் அபிசித்து நட்சத்திரம் என்றழைக்கப்படும். விசேட குணங்கள் மிகுந்து இருக்கும். வழக்கொழிந்த நட்சத்திரம். இதனுடன் சேர்ந்து 28 எனக் கொள்வர் என்றும் பழம் நுால்கள் தெரிவிக்கின்றன.
அருந்ததி
அருந்ததி, அருந்ததி நட்சத்திரம், உத்திரவகுலி, ஊர்ச்சை, வசிட்டன் பத்தினி, சாலி, வடமீன், வசிட்ட பத்தினி என்பன இவளின் பல்வேறு பெயர்கள்.
பெருநாள்
அச்சுவினி முதலிய நாள், இரேவதி, கொண்டாட்டமான நாள்.
இலகு நாள்
அசுவிணி, அத்தம், பூசம்.
பய நாள்
திருவாதிரை, ஆயிலியம், கேட்டை, மூலம்.
பாடாவாரி நட்சத்திரம்
கெட்ட நட்சத்திரம். அது திருவோணம், பரணி, சதயம், கேட்டை, சோதி, விசாகம், அனுஷம், அன்றியும் அசுபதி, மூலம் ஆகும்.
பாப நட்சத்திரம்
திருவாதிரை, கேட்டை, ஆயிலியம், பரணி கார்த்திகை, முப்பூரம், இந்நாட்களில் சுபகாரியம் செய்யலாகாது. இந்நட்சத்திரங்களுடன் பாவ வாரங்களுற்று இருத்தைகள் கூடில் அவமிருத்து யோகம் எனப்படும். இதில் செய்யும் காரியங்கள் நாசமாம். இந்த யோகங்களின் வியாதி கண்டால் மரணம் நேரும். (விதானமாலை.)
ஆண் நட்சத்திரம் புருட நட்சத்திரம்
அத்தம், புனர்பூசம், பூசம், திருவோணம், அபசித்து, அனுடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, அசுவதி, பரணி, கார்த்திகை, ரோகிணி ஆகிய நட்சத்திரங்கள். ஆணாள் - ஆண் தன்மையுடைய பெருநாள்.
ஆண், பெண், அலி நாட்கள்
பரணி, கார்த்திகை, உரோகிணி, புநர்பூசம், அத்தம், அனுடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி இவை புருட நட்சத்திரங்கள்.
மிருகசீரிடம், சதயம், மூலம் இவை அலி நட்சத்திரங்கள். ஒழிந்த அசுபதி, திருவாதிரை, ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சோதி, விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், இரேவதி, இவை பெண் நாட்களாம்.
கிரகங்களிற் செவ்வாய், வியாழன், ஆதித்தியன் இவை ஆண், சனி, புதன் இவை அலி வௌ்ளி, சந்திரன், இராகு, கேது இவை பெண்ணாம். (விதானமலை.)
பெண் நட்சத்திரம், பெண் நாள்
கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், அஸ்தம், விசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும்.
வல நாளிட நாள்
அச்சுவனி, புனர்பூசம், மூலம், பூட்டாதி முதலாக மும் மூன்று நாள் வலநாள். இவை மேடாதி மீனாந்தமாக எண்ணப்படும். ரோகணி, மகம், விசாகம், திருவோணம் முதலாக மும்மூன்று நாள் இட நாள். இவை விருச்சிக முதல் தனுவந்தமாக எண்ணப்படும் வலநாளுக்கு முந்தின பாதம் உடல், முடிந்த பாதம் உயிர் முடிந்த பாதம் உடல் என்றறியப்படும். (விதானமாலை.)
வலவோட்டு நட்சத்திரம், வலவோட்டு நாள் - அசுபதி, பரணி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், அஸ்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும்.
உச்சநிலை நாள்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் அன்றியும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரமும் ஆகும்.
அலி நாள்
ஆண், பெண் என்னும் வகுப்பு அல்லாத சாதிப்பட்ட நட்சத்திரங்களாகிய மிருகசிரடமுஞ், சதயமும். ஆண், பெண் என்னும் பகுப்பு இல்லாத நட்சத்திரங்களாகிய மிருகசீரிடம், சதயம் என்பனவாம்.
உக்கிர நாள்
பரணி, மகம், பூரம், பூராடம், பூரட்டாதி என்பனவாம். உக்கிரம் - உத்திரம், பாத்திரபதம்.
உத்தரநாள் இடையெழுஞ்சனி, கதிர் நாள், செங்கதிர்நாள், செங்கதிர் பிறந்த நாள், பங்குனி, மானேறு.
காலற்ற நாள்
நட்சத்திரம் காண்க. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.
ஆற்று நட்சத்திரம்
அபிசித்து, ஆயிலியம், உரோகிணி, கேட்டை, சதயம், பரணி, பூரம், விசாகம் என்பனவாம்.
சமுத்திர நட்சத்திரம்
அனுசம், அவிட்டம், கார்த்திகை, மகம்.
சயம் - சர நட்சத்திரம் - இயங்கு நட்சத்திரம்
மிருத்து நட்சத்திரம், மிருத்து நாள் - மிருகசிரம், சித்திரை, அனுஷம், இரேவதி.
சர நட்சத்திரம், சர நாள்
இயங்கு நட்சத்திரம். இவை - சோதி, திருவோணம், புனர்பூசம், அவிட்டம், சதயம் என்பனவாகும்.
மலை நட்சத்திரம்
அஸ்தம், இரேவதி, உத்திராடம், உத்திராட்டாதி, சித்திரை, திருவாதிரை, புனர்பூசம், பூராடம் என்பனவாகும்.
சதாசிவ நாள்
உரோகிணி, பூசம், உத்திரம், அஸ்தம், அனுசம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, இரேவதி.
தலையற்ற நாள்
புனர்பூசம், பூரட்டாதி, விசாகம், விவரம்: காலற்ற நாளில் அறிக. நட்சத்திரங் காண்க.
சுட்க நாள்
நட்சத்திரம் காண்க. வறட்சி நாள், அது அசுபதி, பரணி, கார்த்திகை, திருவாதிரை, மகம், பூரம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
சல நாள்
அஸ்தம், ஆயில்யம், உரோகிணி, கேட்டை, சித்திரை, சோதி, திருவோணம், புனர்பூசம், பூசம், பூராடம், மிருகசீரிடம், விசாகம் என்பனவாகும்.
துரித நாள்
அசுபதி, அஸ்தம், மூலம்.
புருஷ நாள்
ஆண் நட்சத்திரம். அது அசுபதி, பரணி, உரோகிணி, ஆயிலியம், மகம், உத்திரம், சித்திரை, சோதி கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, அன்றியும் இரேவதியும் ஆகும்.
முழுநாள்
அறுபது நாழிகை, அல்லது இருபத்து நான்கு ஓரை, அல்லது இருபத்து நான்கு மணி நேரம் கொண்ட நேரம், இராசிக்குப் பங்குபடா நட்சத்திரம். இது அசுபதி, பரணி, ரோகணி, திருவாதிரை, பூசம், ஆயிலியம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும்.
மேனோக்கம், மேனோக்கு நாள்
மேற்பார்வை. மேனோக்கு நட்சத்திரம், மேனோக்கு நாள் ஆயில்யம், கார்த்திகை, பரணி, பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், மூலம், விசாகம் என்பனவாகும்.
இவ்விதம் வானியல் அறிவியல், அகராதிகள், மற்றும் பழம் சோதிட நுால்கள் பல நட்சத்திரங்கள் பற்றித் தெரிவிக்கின்றன. சோதிடத்தில் பன்னுாற்புலமை மிக மிக அவசியம். அடிப்படைகள் தெரிந்தால் தான் பலன் அறிவதற்கும், கூறுவதற்கும் எளிமையாக இருக்கும்.