மாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (RUBY) என்று பெயர். மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ் கலந்த சிப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும் இக்கற்கள் ஒளி ஊடுருவக் கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாகக் கிடைகிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டது மாணிக்கக் கல்லாகும்.
மாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தைக் கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன.
உயர்தர மாணிக்கங்கள் சாதார வெளிச்சத்தில் ஒரு சிகப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்றன. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றைச் சரியான முறையில் பட்டை தீட்டி, பளபளப்பாக்குவதால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.
மாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூடத் தந்து விடும். மாணிக்கத்தைக் கையில் அணிந்திருக்கும் போது, அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.
யார் மாணிக்கக்கல் அணியலாம்?
சூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும், சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1, 10, 19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்கக் கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.
எந்த மாணிக்கக் கல்லை அணிவது?
மாணிக்கத்தைத் தங்கத்தில் பதித்து உடலில் படும்படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள் இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப் பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம். இந்தக் கல் சிவப்பு நிறத்தில் பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாகக் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்ததாகும். மாணிக்கக் கல்லை அணியும்போது சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.
மாணிக்கக் கல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
* மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம்.
* மாணிக்கக் கல்லைத் தங்கத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், உள்ள உறுதி நட்பு, காதல் பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும். இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது.
* மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயரத்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்கப் பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமையும்.
* ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய நட்சத்திரத்தை பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத்திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.