திருக்குறளில் மற்ற இரண்டு பால்கள் படித்து விட்டு காமத்துப்பால் மட்டும் படிக்காமல் விட்டு விடும் பலர் உண்டு. இந்த நூல் படித்தால் படித்த அனைவரும் மூன்றாம் பாலான காமத்துப்பாலை விரும்பிப் படிப்பார்கள் என்று உறுதி கூறலாம்.
நூலாசிரியர் துரை. தனபாலன் இலக்கியத் தேனீ பட்டம் பெற்றுள்ளார். பொருத்தமான பட்டம் தான். காமத்துப்பாலில் உள்ள தேனை சேகரித்து வழங்கி உள்ளார். ஓவியா பதிப்பக உரிமையாளர் இனிய நண்பர் மகாகவி மாதஇதழ் ஆசிரியர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரையும், மிக நேர்த்தியான பதிப்பும் நன்று. திரு. எம். முத்துக்கிருஷ்ணன், கவிஞர் சொ.நா. எழிலரது (எ) இராசாமணி ஆகியோரின் அணிந்துரை நன்று.
அவருக்கு வந்த நூலை மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி உதவிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு நன்றி. திருக்குறளுக்கு உரை பலர் எழுதி விட்டனர், எழுதி வருகின்றனர், எழுதுவார்கள், முப்பால் நூலான திருக்குறள் முக்காலமும் பொருந்தும் நூல் என்பதால் முக்காலமும் உரைகள் வரும். பல நூல்களில் உரை படித்து இருந்த போதும் இந்த நூலில் உரையும், திருக்குறளின் நயமும் மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் நூலாசிரியர் இலக்கியத் தேனீ துரை. தனபாலன். திருக்குறளை ஆழ்ந்து படித்தால் மட்டுமே இது போன்ற நயம் எழுத முடியும்.
பொதுவாக கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும். பின்னர் தான் சமுதாய சீர்திருத்தக் கவிதைகள் எழுதுவார்கள். ஆனால் திருக்குறளில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களான அறம், பொருள் இரண்டும் முன்பாகவும், இறுதியாக காமத்துப்பாலும் இருக்கும். இன்றைய காதல் கவிஞர்கள் அனைவருக்கும் முன்னோடி திருவள்ளுவரே, இன்றைய திரைப்படப்பாடல்களில் வரும் காதல் பாடல்களுக்கு மூலம் திருவள்ளுவரின் காமத்துப்பால் தான். அவர் கூறாத எதையும் காதலில் மற்றவர் கூறி விட முடியாது என்பது உண்மை.
பதச்சோறாக நூலில் இருந்து சில வரிகள் இதோ :
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.
(குறள் எண் : 1088)
பொருள் :
போர்களத்திற்கு வந்து என் வலிமையைக் காணாத பகைவரும், வந்து அறிந்தவர் கூறக்கேட்டு அஞ்சுவதற்குக் காரணமான என் பெருவலிமை, ஐயோ! இவளது ஒளி வீசும் நெற்றியின் முன் தோற்று விட்டதே!
நயம் :
ஒரு மாபெரும் வீரன், தன்னைக் களத்தில் சந்திக்காமலேயே வலிமையைக் கேள்வியுற்றுப் பகைவர்கள் அஞ்சத்தகுந்த தன் பேராற்றலானது, ஓர் இளநங்கையின் ஒளி பொருந்திய நெற்றியழகின் முன் அவளது மதிமுகத்தின் முன் தோற்று விட்டதே என்று வருந்திப்புலம்புகிறான். எப்பேர்ப்பட்ட வீரனும், அவனது ஈடில்லாச் செருக்கும், மங்கையரின் அழகின் முன் மண்டியிட்டே தீர வேண்டும் என்று திட்டமாகச் சொல்லுகிறார் திருவள்ளுவர்.
எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ராவின் ஈடில்லா அழகின் முன், சீர்மிகு ரோமாபுரியின் சிங்க நிகர் மன்னன் சீசரும், அடலேறு ஆண்டனியும் அடிபணிந்த வரலாறு இந்த அவனியெல்லாம் அறிந்தது தானே!
இந்த ஒரு திருக்குறளின் உரையும், நயமும் படிக்கும் போதே நம் மனக்கண் முன்னே நாம் நேசிக்கும் பெண்ணோ அல்லது நாம் சந்தித்த காதல்களோ வந்து விடுவார்கள் என்பது உண்மை. எவ்வளவு பெரிய வீரனையும் வீழ்த்தும் ஆற்றல் பேரழகிற்க்கு உண்டு என்பதை திருக்குறளில் உணர்த்திய உணர்வை அவர் பார்த்த பார்வையோடு நின்று விடாமல் அதையும் தாண்டி அந்தக் குறளுக்குப் பொருத்தமாக சிந்தித்து ரோமாபுரி மன்னன் சீசர் கிளியோபாட்ரா இருவரையும் பொருத்திக் காட்டி திருக்குறளின் மேன்மையை உணர்த்திய நூலாசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
காமத்துப்பாலில் உள்ள திருக்குறள்களில் நூலாசிரியருக்கு மனம் கவர்ந்த பெரும்பாலான திருக்குறளை தேர்ந்தெடுத்து இலக்கிய விருந்து வைத்துள்ளார். இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் காதலை மலர்விக்கும் விதமாக திருக்குறள் நயம் நயம்பட எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.
திருக்குறளை வெவ்வேறு கோணத்தில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். திருக்குறளின் நுட்பத்தையும் நன்கு உணர்த்தி உள்ளார். நயத்தைப் படிக்கும் போது நமக்கு தொடர்புடைய திரைப்படப்பாடல்களும் நினைவுக்கு வருகின்றன.
மற்றொரு திருக்குறள் நயம் நூலிலிருந்து உங்கள் ரசனைக்கு இதோ!
பெண்னினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
(குறள் எண் : 1280)
பொருள் :
பெண்கள் தாம் உற்ற காதல் நோயை தம் நெருங்கிய உறவான கணவனிடமும் வாய்விட்டுக் கூறாமல், கண்களால் வெளிப்படுத்தி அதை நீக்குமாறு கண்களாலேயே வேண்டுவது இயல்பான பெண்மைக்கு மேலும் பெண்மை சேர்த்தது போலச் சிறப்பானது.
நயம் :
தாம் உற்ற காம நோயைத் தன் காதல் கணவனிடம் கூட வெளிப்படையாகக் கூறாதிருப்பது பெண்ணின் சிறப்பு எனில், அக் காமநோய் உற்றதைக் குறிப்பால் உணர்த்தி, அதிலிருந்து தம்மைக் காக்குமாறு இருவிழியாலே இரந்து வேண்டுவது, பெண்மைக்கே பெண்மை சேர்க்கும் பெருஞ்சிறப்பு என்று கூறி, குறிப்பறிவுறுத்தலின் சிறப்பினைக் கூறுகிறார் திருவள்ளுவர்.
ஊடல் என்பது உணவில் உப்பு சேர்ப்பது போல அளவோடு இருக்க வேண்டும். ஊடலை, விரைவில் உடைத்து விட வேண்டும். பிறர் பார்வையால் எச்சலான காதலன் மார்பில் காதலி சாய மாட்டேன் என்பது தலைவன் சூடியிருந்த மலர் கண்டு காதலி சந்தேகிப்பது. இப்படி ஊடல், கூடல் என காதலின் அனைத்து பரிமாணங்களையும் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்திய உணர்வை, நயத்தோடு எழுதி, நமக்கும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர், பாராட்டுக்கள்.
திருக்குறளில் இனி காமத்துப்பாலை தவிர்த்து விடாமல் அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றி பெற்றுள்ள நூலாசிரியருக்கும், நூலைப் பதிப்பித்த ஓவியா பதிப்பகத்துக்கும் பாராட்டுகள்.