இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாளன்று தேசிய அறிவியல் நாள் (National Science Day) கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல், அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டில், தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பொதுவாக, தேசத்தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள், சிறப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய அறிவியல் நாள் அதிலிருந்து மாறுபடுகிறது. இந்நாள் இந்திய அறிவியலாளரான சர். சி. வி. இராமனைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நாள், சர். சி. வி. இராமன் பிறந்த நாள் அல்லது நினைவு நாளை முன்னிறுத்தவில்லை. சர். சி. வி. இராமன், தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை முன்னிலைப்படுத்துகிறது.
சர். சி. வி. இராமன் தனது புகழ் பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயேக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன், உயரிய விருதான நோபல் பரிசும் (1930) சர். சி. வி. இராமனுக்குக் கிடைக்கச் செய்தது. இந்நிகழ்வின் நினைவாகவும், அறிவியல் என்பது கீழ்நிலை மக்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாக அறிவிக்கச் செய்து கொண்டாடி வருகிறது.
இங்கு நாம் சர். சி. வி. இராமனைப் பற்றியும், அவர் கண்டறிந்த இராமன் விளைவைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் எனும் ஊரில் 1888 ஆம் ஆண்டில் நவம்பர் 7 ஆம் நாளன்று பிறந்த சர். சி. வி. இராமன், விசாகப்பட்டினத்தில் பள்ளிப்படிப்பையும், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பைச் சிறப்பு தகுதியுடனும் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலேத் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு, 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத்துறைத் தலைமை அலுவலராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
சர். சி. வி. இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907 ஆம் ஆண்டில் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். எனினும், பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராகக் கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். 1970 ஆம் ஆண்டில், நவம்பர் 21 ஆம் நாளில் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.
பொருளொன்றின் வழியே ஒற்றை நிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலை நீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர். இதனை, இராமன் சிதறல் [Raman Scattering] என்றும் சொல்வதுண்டு. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும் போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.
இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளியானது,
1. படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
2. முதன்மை வரியை விட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
3. முதன்மை வரியை விடக் குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்
என்று மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை”யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது, வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
* சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச் செல்லப் பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்
* பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்
* வண்ணப்பூச்சுகள் இருகும் போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்
* அணுக்கருக் கழிவுகளைத் தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்
10 முதல் 11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளி வேதியலாளர்கள், ஒளி உயிரியலாளர்களுக்கு லேசர் - இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய அறிவியல் நாளானது, ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கு “வளர்ந்த பாரதத்திற்கான அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்” எனும் கருப்பொருள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.