திருவள்ளுவர் ஆண்டு என்பது தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, கி.பி. 2023 ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி. 2055 ஆம் ஆண்டு ஆகும்.
திருவள்ளுவர் திருநாள்
சமயம் சாராத திருவள்ளுவரை, தமிழின் மிகச்சிறந்த வரலாற்று ஆளுமையாக முன் வைப்பதில் தமிழறிஞர்கள் ஒருமித்த முடிவெடுத்தனர். அதன் பயனாக அவரை முன்னிறுத்தி "திருவள்ளுவர் திருநாள்" என்னும் விழாவினைத் தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, காழி சிவகண்ணுசாமிப் பிள்ளை, பத்மஸ்ரீ வ. சுப்பையா ஆகியோர் முயற்சியில் "திருவள்ளுவர் திருநாட் கழகம்" எனும் கழகமொன்று அமைக்கப்பட்டு, தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றூம் பிற வெளி நாடுகளில் அதைக் கொண்டாடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. திருவள்ளுவர் பிறந்த தினமான வைகாசி அனுசத்தை மையமாக வைத்து, 1935 ஆம் ஆண்டு மே 17,18 ஆகிய தேதிகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகள், தெ.பொ.மீ, திரு.வி.க முதலான ஏராளமான தமிழறிஞர் முன்னிலையில் திருவள்ளுவர் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகத் தொடங்கிய நிலையில், ஈழத்தமிழ் அறிஞர் கா. பொ. இரத்தினம் 1954 ஆம் ஆண்டில் எடுத்த முயற்சிகளின் பயனாக, தமிழகத்திலும் இலங்கை, மியன்மார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், திருவள்ளுவர் திருநாள் மீண்டும் கொண்டாடப்பட்டது. வைகாசி அனுசமான 22 மே 1959 ஆம் நாளிலும் இது இடம் பெற்றதை அறியமுடிகின்றது.
தை மாதத் திருவள்ளுவர் திருநாள்
தைப்பொங்கலை நீண்ட நாளாகவே 'தமிழர் திருநாள்' என்று போற்றும் வழக்கம், தமிழர் மத்தியில் உண்டு. தமிழர் திருநாள் தைப்பொங்கல் என்பதால், அன்றேத் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் சொன்னவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம். இதை முன்மொழிந்து 1954 ஆம் ஆண்டில், அவர் திருச்சி வானொலி நிலையத்துக்கும், கா.பொ.இரத்தினத்துக்கும் எழுதிய கடிதத்துக்கு, கா.பொ.இரத்தினம் கடும் கண்டனம் தெரிவித்தார். வைகாசி அனுசம் ஆண்டுக்காண்டு மாறுபடலாம் என்பதால் 1966 ஆம் ஆண்டில், ஜூன் இரண்டாம் நாளை ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடுவதற்கான அரச விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு, 1971இல் தை முதலாம் தேதிக்கு மாற்றப்பட்டது.
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியோரில் சோமசுந்தர பாரதியார், கி. ஆ.பெ. விசுவநாதம் எனும் இருவர் மட்டும் முதன்மை பெறுகின்றனர். தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத் தொடர்கள் பயன்பட்டுள்ளன. சக ஆண்டு, விக்கிரம ஆண்டு, கலி ஆண்டு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் பண்டு தொட்டே கொல்லம் நாட்காட்டி பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயேத் தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது.
மறைமலையடிகள் ஏற்கனவே திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பொ.ஊ.மு. 31 என்று கணித்திருந்தார். சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், கலைஞர் கருணாநிதி, வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடி வந்த கா.பொ.இரத்தினம் உட்பட பெரும்பாலான தமிழறிஞர்கள் சித்திரைப் புத்தாண்டு ஆரியர் திணித்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தைத்திருநாளிலேயே ஆரம்பமான திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அந்நாளில் "திருவள்ளுவர் ஆண்டு" எனும் ஆண்டுத் தொடரை அறிமுகப்படுத்தியது. 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு, தமிழ் நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு, 1981 ஆம் ஆண்டில் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அதை அனைத்து அரச ஆவணங்களிலும், அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையை ஒன்றைப் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, அரசு செயல்பாடுகளில் திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தும் வழக்கம் தொடர்ந்தது.
தமிழ்ப் புத்தாண்டு
தைத் திருநாளே தமிழர் புத்தாண்டு என்ற குரல் 2000 ஆண்டில் மிக வலுவாக எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்கள், தை புத்தாண்டு என்று பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலையடிகள் முதலான நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் முன்மொழிந்தார்கள் என்று ஆதாரம் சொன்னார்கள். பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று. தமிழறிஞர்கள் ஒன்றுகூடிப் பரவலான ஆதரவு தெரிவித்தது, 1935 ஆம் ஆண்டிலும், 1954 ஆம் ஆண்டிலும் இரு முறை இடம் பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம்.
தமிழக அரசின் அரசாணையுடன் 2008 ஆம் ஆண்டில் தைப்புத்தாண்டு அதிகராப்பூர்வமாகக் கொண்டு வரப்பபட்டது. அதனைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஜெ. ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு, 2012 ஆம் ஆண்டு முதல் சித்திரை முதல் நாளேத் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றியது.