ஐக்கிய நாடுகள் (United Nations) அவைக்கான உலகளாவிய முன்முயற்சிகளைக் கொண்டிருக்கும் நிலையான வளர்ச்சித் தீர்வுகளுக்கான வலையம் (Sustainable Development Solutions Network) எனும் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலக மகிழ்ச்சி நாளில் (மார்ச் 20) உலக மகிழ்ச்சி அறிக்கையினை (World Happiness Report) வெளியிட்டு வருகிறது.
உலகம் முழுவதுமுள்ள 143 நாடுகளில் இந்த அமைப்பு, இளம் வயதினர் (The Young), கீழ் நடுத்தர வயதினர் (Lower Middle), உயர் நடுத்தர வயதினர் (Upper Middle), வயதானவர் (The Old) எனும் நான்கு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, அதனைக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து வயதினருக்கான மகிழ்ச்சி அறிக்கையினைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில் அனைத்து வயதினருக்குமான மகிழ்ச்சிப் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் டென்மார்க் 2-வது இடத்திலும், ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், சுவீடன் 4-வது இடத்திலும், இஸ்ரேல் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நெதர்லாந்து (6), நார்வே (7), லக்சம்பர்க் (8), சுவிட்சர்லாந்து (9), ஆஸ்திரேலியா (10), நியூசிலாந்து (11), கோஸ்டா ரிகா (12), குவைத் (13), ஆஸ்திரியா (14), கனடா (15), பெல்ஜியம் (16), அயர்லாந்து (17), செக்சியா (18), லித்துவானியா (19), ஐக்கிய ராஜ்ஜியம் (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 126-வது இடத்திலிருக்கிறது.
இளம் வயதினருக்கான (The Young) பிரிவில், லித்துவானியா முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் இஸ்ரேல் 2-வது இடத்திலும், செர்பியா 3-வது இட்த்திலும், ஐஸ்லாந்து 4-வது இடத்திலும், டென்மார்க் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, லக்சம்பர்க் (6), பின்லாந்து (7), ரோமானியா (8), நெதர்லாந்து (9), செக்சியா (10), கோஸ்டா ரிகா (11), ஆஸ்திரியா (12), சுவிட்சர்லாந்து (13), குரோசியா (14), சுலோவேனியா (15), குவைத் (16), எல் சல்வடார் (17), சுவீடன் (18), ஆஸ்திரேலியா (19), நார்வே (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலிருக்கிறது.
கீழ் நடுத்தர வயதினர் (Lower Middle) பிரிவில், பின்லாந்து முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் இஸ்ரேல் 2-வது இடத்திலும், டென்மார்க் 3-வது இடத்திலும், ஐஸ்லாந்து 4-வது இடத்திலும், நெதர்லாந்து 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நார்வே (6), லித்துவானியா (7), சுவீடன் (8), சுவிட்சர்லாந்து (9), சுலோவேனியா (10), லக்சமபர்க் (11), செக்சியா (12), பெல்ஜியம் (13), ஆஸ்திரேலியா (14), கோஸ்டா ரிகா (15), ஜெர்மனி (16), ஆஸ்திரியா (17), நியூசிலாந்து (18), மெக்சிகோ (19), குவைத் (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலிருக்கிறது.
உயர் நடுத்தர வயதினர் (Upper Middle) பிரிவில், பின்லாந்து முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் ஐஸ்லாந்து 2-வது இடத்திலும், சுவீடன் 3-வது இடத்திலும், டென்மார்க் 4-வது இடத்திலும், நெதர்லாந்து 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நார்வே (6), இஸ்ரேல் (7), லக்சம்பர்க் (8), குவைத் (9), ஆஸ்திரேலியா (10), சுவிட்சர்லாந்து (11), கனடா (12), நியூசிலாந்து (13), சவூதி அரேபியா (14), பெல்ஜியம் (15), ஐக்கிய அரபு அமீரகம் (16), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (17), ஆஸ்திரியா (18), ஐக்கிய ராஜ்ஜியம் (19), லித்துவானியா (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 121-வது இடத்திலிருக்கிறது.
வயதானவர் (The Old) பிரிவில், டென்மார்க் முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் பின்லாந்து 2-வது இடத்திலும், நார்வே 3-வது இடத்திலும், சுவீடன் 4-வது இடத்திலும், ஐஸ்லாந்து 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நியூசிலாந்து (6), நெதர்லாந்து (7), கனடா (8), ஆஸ்திரேலியா (9), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (10), ஐக்கிய அரபு அமீரகம் (11), லக்சம்பர்க் (12), குவைத் (13), சுவிட்சர்லாந்து (14), ஆஸ்திரியா (15), அயர்லாந்து (16), கோஸ்டா ரிகா (17), இஸ்ரேல் (18), பெல்ஜியம் (19), ஐக்கிய ராஜ்ஜியம் (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 121-வது இடத்திலிருக்கிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் 143 நாடுகளில் இளம் வயதினர் பிரிவில் 105 நாடுகளிலும், வயதானவர்கள் பிரிவில் 23 நாடுகளிலும், உயர் நடுத்தர வயதினர் பிரிவில் 10 நாடுகளிலும், கீழ் நடுத்தர வயதினர் பிரிவில் 5 நாடுகளிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, வயதானவர்கள் பிரிவில் 71 நாடுகளிலும், உயர் நடுத்தர வயதினர் பிரிவில் 35 நாடுகளிலும், கீழ் நடுத்தர வயதினர் பிரிவில் 30 நாடுகளிலும் இளம் வயதினர் பிரிவில் 7 நாடுகளிலும் குறைந்த மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இளம் வயதுப் பிரிவினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கீழ் நடுத்தர வயதுப் பிரிவினர் குறைந்த மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கையில் நான்கு வயதுப் பிரிவினர்களிலும் இந்தியா பெற்றிருக்கும் இடம், இந்தியர்களுக்கு எந்த வயதினருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக அமையவில்லை என்பதுதான் உண்மை.