தனது முப்பத்து ஆறாம் வயதிலேயேப் பன்மொழிப் புலவர் எனும் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம். தெ. பொ. மீ என்று சுருக்கமாகவும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட இவர், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பல மொழிகளை அறிந்தவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 1901 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் நாள் பொன்னுசாமி கிராமணியார் என்பவருக்கு மகனாகப் பிறந்த இவருக்கு, அவருடைய தந்தை, தமிழ் மீதும், தமிழறிஞர்கள் மீதும் கொண்டிருந்த பற்றினால், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு வைத்தார்.
1920 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், 1922 ஆம் ஆண்டில் பி.எல். பட்டமும் பெற்றார். 1923 ஆம் ஆண்டில் எம்.ஏ. பட்டம் பெற்று வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.
1924 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டில் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். தமிழ் இலக்கிய, இலக்கண ஆர்வத்தால் 1934 ஆம் ஆண்டுக்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941 ஆம் ஆண்டில் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.
இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1944 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை அங்குப் பணியாற்றினார். மீண்டும் 1958 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்க வைத்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்ற காலத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராகப் பொறுப்பேற்றார். 1974 ஆம் ஆண்டு முதல் ஆழ்நிலை தியான தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார். இவருக்குத் தருமபுர ஆதீனம் "பல்கலைச் செல்வர்" என்ற விருதினையும், குன்றக்குடி ஆதீனம் "பன்மொழிப் புலவர்" என்ற விருதினையும் அளித்து சிறப்பித்தனர். 'குருதேவர்', 'நடமாடும் பல்கலைக்கழகம்', 'பெருந்தமிழ்மணி' போன்ற விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மபூஷன் விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டன.
"தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்" எனச் சங்கநாதமிட்ட முதல் சான்றோர் இவர்தான். தன்னலம் கருதாத மாமனிதர் தெ.பொ.மீ. இவரது எழுத்துகள் தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் பெருமையும் புகழும் சேர்த்தன. தமிழ் படித்தவர்கள் தமிழ்மொழியை மட்டுமேக் கற்க முடியும், பிற மொழிகள் அவர்களுக்கு வராது என்பதை மாற்றி, மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டு வந்து, அதை வளர வைத்த முதல் முன்னோடி இவர். தமிழ்மொழியின் மரபு சிதையாமல், மாண்பு குறையாமல், மாசு நேராமல் நவீனப்படுத்தி உலகை ஏற்றுக் கொள்ளச் செய்த தமிழ்த்தொண்டர் இவர்.
"தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன், அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில்தான் சிறப்புப் பெறுகிறது" என்பது இவரின் கருத்தாக இருந்தது. செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணி குறித்து இவர், "ஏராளமாகத் தமிழில் படைக்கப்பட்டுள்ள படைப்புகள், பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படாமையால் பரவலாக அறிஞருலக ஆய்வுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன" என்று செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டியப் பணியை நினைவூட்டினார்.
ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இவரது நூல்கள் காட்டுகின்றன. இதனால் இவர் "மின்வெட்டுப் பேராசிரியர்" என்றேப் பிறரால் அழைக்கப்பட்டார். இலக்கியத் துறையில் இருட்டாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால், திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர். திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர். "ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமெனில், பிற மொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும், சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது" என்று சொல்பவர்.
உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ அவர்கள், யுனெஸ்கோவின் "கூரியர்" என்னும் இதழ்க் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1980 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27 ஆம் நாளில் இவரது 79 வது வயதில் மறைந்த தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களது நினைவைப் போற்றும் வகையில், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 1996 ஆம் ஆண்டில் ‘டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளை’ நிறுவப்பட்டு, அதன் வழியாக பல்வேறு சொற்பொழிவுகள் நடத்தப் பெறுவதுடன், அச்சொற்பொழிவுகளில் பெரும்பான்மையான சொற்பொழிவுகள் நூலாக்கம் செய்யப் பெற்று வெளியிடப் பெற்று வருகின்றன.