உலகப் புகழ்பெற்ற மாமேதை ஐன்ஸ்டீன், தன்னுடைய இளம் வயதில் பூனைக்குட்டி ஒன்றை மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்தார்.
அது, ஊரெல்லாம் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில், வெகு நேரம் கழித்து வந்து அவர் அருகில் படுத்துக்கொள்ளும்.
அவருடைய வீட்டுக்குள், கட்டுக்காவல் நிறைய இருந்ததால், பூனை இஷ்டப்படி திரிந்துவிட்டு, படுக்கையில் வந்து படுத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால் அவர் கவலை அடைந்தார்.
தன் அறைக்குள் பூனை வசதியாக நுழைய, அது நுழையக் கூடிய அளவு ஒரு சிறிய துவாரத்தை ஏற்படுத்தி விட்டார்.
அந்த ஏற்பாட்டால் பூனை மகிழ்ந்து போயிற்று.
சில காலம் ஆனவுடன், பூனை ஒரு குட்டிக்குத் தாயானது. ஐன்ஸ்டீன் சிந்திக்கத் துவங்கினார்.
இதுவரை, ஒரே ஒரு பூனையாகத் தம் வீட்டில் சுற்றி வந்த பூனை, தன் இனத்தைப் பெருக்கிக் குட்டி ஒன்றை ஈற்றெடுத்து விட்டது. எனவே, இதற்கு நாம், கூடுதல் வசதி எதையாவது செய்து தர வேண்டும். சின்னக் குட்டிப் பூனைகளுக்கும், ஏதாவது செய்தாக வேண்டும். அவர் கைகள் பரபரத்தன. உடனே அவர், உளியை எடுத்தார். பெரிய பூனை போய் வரும் துவாரத்துக்கு அருகே, சிறிய துவாரம் ஒன்றைச் செய்தார்.
அதைக் கண்ட அவர் தாய், "இது என்ன புதிதாகத் துவாரம்?'' என்று கேட்டார்.
அதற்கு ஐன்ஸ்டீன், “அதுவா... இந்தச் சின்ன பூனை போவதற்கு ஒரு துவாரம் வேண்டாமா?'' என்று கேட்டார்.
"அட அசடே... அந்தப் பெரிய துவாரத்தின் வழியாகவேப் பெரிய பூனை, சின்னப்பூனை இரண்டும் எளிதாகப் போய் வரலாமே, இந்தச் சின்ன விஷயம் கூடவா உனக்குத் தெரியவில்லை?'' என்றார்.
அதைக் கேட்ட பின்புதான் ஐன்ஸ்டீனின் கண்கள் திறந்தன.
"அட, இது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று?'’
தன் நிலையை எண்ணி வெட்கித் தலை குனிந்தார்.
அதன் பிறகு, எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பல வழிகளில் சிந்தித்தார், செயல்பட்டார், உலகப் புகழ் பெற்றார்.