வயல் முழுதும் நெற்கதிர்கள் விளைந்து தலைசாய்த்து நின்றன. அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன.
ஒரு எலி வயலில் கதிர்களை அறுத்து நெல்மணிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தது. அதனால் கதிர்களை மிக விரைவாக அறுக்க முடிந்த போதும், நெல்மணிகளை விரைவாகச் சேகரிக்க முடியவில்லை. இதை ஒரு காகம் பார்த்துக் கொண்டிருந்தது.
“எலியாரே உம்மால் கதிர்களை விரைவாக வெட்ட முடிகிறது. என்னால் பறக்க முடியுமாதலால் விரைவாக அவற்றைச் சேகரிக்க முடியும் இருவரும் சேர்ந்து வேலை செய்வோம். பின்னர் தானியங்களை பிரித்துத்துக் கொள்வோம்” என்றது அந்தக் காகம்.
அந்த உடன்படிக்கைக்கு எலியும் ஒத்துக்கொண்டது.
இருவரும் சேர்ந்து அறுவடை வரை வேலை செய்து அதிகளவிலான நெல்மணிகளைச் சேகரித்துக் கொண்டன.
அதன் பிறகு, நெல்மணிகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும் . பிரிக்கும் போது இருவருக்குமிடையே சண்டை மூண்டது.
எலி, “நானே நெல் மணிகளை அறுக்க யோசனை செய்தேன். எனவே, எனது யோசனைக்கு மதிப்பளித்து அதிக நெல்மணிகளை எனக்குத் தர வேண்டும்” என வாதாடியது.
காகமோ, “நானே விரைவாக நெல் மணிகளைச் சேகரிக்கும் யோசனையைக் கூறியதால் எனக்குச் சரி சமமாக நெல்மணிகளைத் தர வேண்டும்” என வாதாடியது.
அவர்களது சண்டையைப் பாம்பு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. அது அவர்கள் சண்டையில் தனக்கு ஏதாவது ஆதாயம் கிட்டும் என நம்பியது.
அவர்களிடம் சென்ற அந்தப் பாம்பு, தான் மத்தியஸ்தம் செய்வதாக வாக்களித்தது.
இருவரது யோசனையும், இருவரது உழைப்பும் இணைந்ததால்தான் இவ்வளவு நெல் மணிகளையும் சேகரிக்க முடிந்தது என்பதை விளக்கிக் கூறியது.
பாம்பின் வாக்கு சாமார்த்தியத்தில் காகமும் எலியும் மயங்கின.
இருவருக்குமேச் சம அளவில் தானியங்களைத் தானே பிரித்துத் தருவதாகக் கூறியது.
சொன்னபடியே பாம்பும் இருவருக்கும் தானியங்களைச் சம அளவில் பகிர்ந்து கொடுத்தது. இதனால் காகமும் பாம்பும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன், பாம்பின் மீது நன்றியுடையனவாகவும் விளங்கின.
எல்லாவற்றுக்கும் மேலாகப் பாம்பின் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டன.
காகமும் எலியும் வேலை செய்த களைப்பு தீர ஓய்வெடுக்க விரும்பின. இந்தச் சந்தர்ப்பத்தைப் பாம்பு பயன்படுத்திக் கொள்ள விரும்பியது.
“நண்பர்களே நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள். இங்கே படுத்துச் சற்று ஓய்வெடுங்கள். வேறு விலங்குகள் உங்கள் தானியங்களை களவாடிச் செல்லாமல் காவலும் இருங்கள் நான் கொஞ்சம் கொஞ்சமாக இருவரது வீடுகளிலும் இந்தத் தானியங்களைக் கொண்டு சேர்க்கிறேன்”
அதைக் கேட்ட காகமும் எலியும் பாம்பின் யோசனையை வரவேற்றதுடன் அதனை வெகுவாகப் பாரட்டவும் செய்தன.
பாம்பு காகத்தின் கூட்டுக்கு தானியங்களக் கவ்வியபடி சென்றது. அங்கேக் கூட்டில் காகத்தின் குஞ்சுகள் தாயின் வருகைக்காகப் பசியுடன் காத்திருந்தன. பாம்பு தானியத்தைக் கூட்டில் வைத்துவிட்டுக் காகக் குஞ்சுகளை உண்ணத் தொடங்கியது.
எல்லாக் குஞ்சுகளையும் தின்ற போதும் அதன் வயிறு நிரம்பவில்லை.
திரும்பிவந்து எலியின் வளைக்குத் தானியங்களை எடுத்துச் சென்றது.
அங்கு எலிக்குஞ்சுகள் தாயின் வருகைக்காகக் காத்திருந்தன, வளையில் தானியத்தை வைத்துவிட்டு அங்கிருந்த எலிக்குஞ்சுகள் அனைத்தையும் பாம்பு தின்றது. வயிறு நிரம்பிய பாம்பு, அதன் வீடு திரும்பியது.
எலியும் காகமும் மிகுதித் தானியங்களை எடுத்துச் செல்லப் பாம்பு வரும் என வெகுநேரம் காத்திருந்தன. பாம்பு வரவேயில்லை.
சந்தேகம் தோன்றத் தமது வீட்டுக்கு விரைந்து சென்றன.
அங்கேத் தமது குழந்தைகளைக் காணாது பேரதிர்ச்சியடைந்தன, தாம் பாம்பினால் வஞ்சிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து பெருந்துயர் அடைந்தன.