உலகின் அனைத்து ஞானத்தையும் (அறிவையும்) முழுமையாகக் கற்று, நாட்டைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமென்ற ஆசை ஓர் அரசனுக்கு உண்டானது.
அதனால், அவன் நாட்டின் எல்லா அறிஞர்களையும் அழைத்து, ‘‘நீங்கள் உலகின் எல்லா ஞானத்தையும் புத்தகங்களாகத் தொகுத்துக் கொண்டு வாருங்கள்’’ என்று கட்டளையிட்டான்.
அறிஞர்கள் நாடெங்கும் பயணித்து, முப்பது வருடங்கள் கழித்து, தாங்கள் எழுதிய பல புத்தகங்களைக் கொண்டு வந்தனர்.
அரசன் அதற்குள் நாட்டின் பணிகளில் மூழ்கியிருந்தான். அதனால் அவனுக்கு அத்தனை நூல்களையும் படிக்க நேரமில்லை.
அதனால் அவன் அறிஞர்களிடம், ‘‘இவற்றை எல்லாம் சுருக்கமாக எழுதிக் கொண்டு வாருங்கள்’’ என்று கட்டளையிட்டான்.
மறுபடியும் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.
அறிஞர்கள் அனைத்து ஞானத்தையும் பத்தில் ஒரு பங்காகச் சுருக்கிக் கொண்டு வந்தனர்.
ஆனால் இப்போது அரசன் மேலும் பரபரப்பாக இருந்தான்.
புத்தகங்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும்படி மறுபடியும் ஆணையிட்டான்.
அடுத்தப் பத்து வருடங்களில் அறிஞர்கள் மறுபடியும் பத்து மடங்கு சுருக்கமாக எழுதிக் கொண்டு வந்தனர்.
அதற்குள் அரசன் கிழவனாகியிருந்தான்.
கடைசியில் அனைத்து ஞானத்தையும் ஒரேப் புத்தகத்தில் வடிக்கும்படி உத்தரவிட்டான்.
ஆயிற்று, ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒரே புத்தகத்தில் ஞானம் அனைத்தையும் வடித்தாயிற்று.
ஆனால், இப்போது அரசன் மரணத்தின் வாசற்படியில் இருந்தான்.
அப்போது அரசனிடம் ஒரு புத்தகம் படிக்கக் கூட போதுமான நேரம் இருக்கவில்லை!