ஒரு நாள் ஆசிரியர் மாணவர்களிடம், ''ஒரு தந்தைக்கு நான்கு மைந்தர்கள்; அவரது சொத்து 77 ஆயிரம். அவருக்கு முதல் மகனிடம் அளவற்ற பிரியம். சொத்தைப் பகிர்ந்து பிள்ளைகளுக்குத் தர எண்ணினார். மூன்று பிள்ளைகளுக்கு ஆளுக்கு 11 ஆயிரம் தந்தார். மிகுதியை மூத்தவனுக்குக் கொடுத்தார். அப்படியானால் மூத்த பிள்ளைக்கு என்ன வரும் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்.
மாணவர்கள், ''ஐயா, மூத்தவனுக்கு 44 ஆயிரம் வரும்'' என்றார்கள்.
புத்திசாலியான பவசேனன் மட்டும் சும்மா இருந்தான். அவனுக்குக் கணக்குத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நகைத்தனர்.
ஆசிரியர், ''பவசேனா! மூத்தவனுக்கு என்ன வரும்?'' என்று கேட்டார்.
பவசேனன், ''ஐயா, 'நமக்கு அதிகப் பணம் வந்துவிட்டதே' என்று மூத்தவனுக்கு அகங்காரம் வரும். பிள்ளைகளைச் சமமாகப் பார்த்துப் பங்கிடாத தந்தைக்குப் பாவம் வரும்'' என்றான்.
''இந்தச் சரியான விடையை எப்படிக் கண்டுபிடித்தாய்?''
பவசேனன், ''தாங்கள் மூத்தவனுக்கு 'எவ்வளவு வரும்?' என்று கேட்கவில்லை. என்ன வரும் என்றுதானேக் கேட்டீர்கள். அந்தக் கேள்வியிலேயே விடை அடங்கியுள்ளதே!'' என்றான் அந்தச் சுட்டிப்பையன்.