பணக்காரன் ஒருவன் இருந்தான்.
ஆனால், அவன் மகாகருமி. அவன் அறிவுரை பெறுவதற்காகத் துறவி ஒருவரிடம் வந்தான்.
துறவியார் அவனைக் கண்ணாடி ஜன்னல் அருகே அழைத்துச் சென்றார்.
“இது வழியாக வெளியே பார். என்ன நடக்கிறது, சொல்'' என்றார்.
"அங்கும் இங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாய்ச் சென்று கொண்டிருக்கிறார்கள்'' என்றான் கருமி.
''அப்படியா?'' என்ற துறவி அவனை முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.
"இந்தக் கண்ணாடியில் பார், என்ன தெரிகிறது சொல்?'' என்றார்.
''என் உருவம் மட்டும்தான் தெரிகிறது'' என்றான் கருமி.
"இரண்டும் கண்ணாடிதான். ஒன்றின் வழியாகப் பிறர் உருவத்தைப் பார்க்க முடிந்தது. இன்னொன்றில் நம் உருவத்தைத்தான் பார்க்க முடிந்தது. ஏன்?'' என்று கேட்டார் துறவி.
கருமியால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.
துறவி சொன்னார்- “பிற பொருள்களைக் காட்டும் இயல்புடைய கண்ணாடியில் ஒரு பக்கத்தில் வெள்ளியைத் தடவி விட்டால் அது பார்க்கிறவர் உருவத்தைத்தான் காட்டும். அதுபோல் சிறிதளவு பொருள் நம்மிடம் சேர்ந்துவிட்டாலும் நாம் தன்னலம் உடையவர்களாகிவிடுவோம். புரிகிறதா?" என்றார்.
இதைக் கேட்ட கருமி, ''நான் இனிப் பிறருக்கும் பயன்படும் வகையில் என் செல்வத்தைச் செலவழிப்பேன்'' என்று கூறி விடைபெற்றான்.